உலகறிந்த அணுவியல் துறையின் பாதுகாப்பு விஞ்ஞானி பலராமமூர்த்தி (K. Balaramamoorthy)
தொடர் 97: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
அணு சோதனை என்றாலே அது பேரழிவின் தொடக்கமாக அமைந்து விடுகிறது. ஆனால் உலகஅளவில் எவ்வகையான ஆபத்தையும் விளைவிக்காத NON-DESTRUCTIVE TESTING என்னும் பரு பொருட்களின் அணு தர சீர்மையை அறிமுகம் செய்த பெருமைக்குரியவர் இந்திய விஞ்ஞானி டாக்டர் பலராமமூர்த்தி. பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த அர்ப்பணிப்பு மிக்க 40 ஆண்டு கால உழைப்புக்குச் சொந்தக்காரர். தற்போது சர்வதேச அணு ஆற்றல் முகமையின் ஆலோசகராக உள்ளார்.
இந்திய அணுசக்தி துறை என்பது பிரபல விஞ்ஞானியான ஹோமி ஜஹாங்கிர் பாபா அவர்களின் தொலைநோக்கு அறிவியல் சிந்தனைகளாலும் உலக அமைதி குறித்த ஜவகர்லால் நேருவினுடைய வழிகாட்டுதலின் பேரிலும் ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டுமே அணுசக்தியை பயன்படுத்துதல் என்னும் நிலைப்பாட்டோடு தொடங்கப்பட்டது ஆகும். தொடக்கத்தில் 1950களில் நமக்கு அணு உலைகளை கட்ட அமைப்பதோ அல்லது அணு விஞ்ஞானத்தைப் பற்றியோ பெரும்பாலும் அயல்நாடுகளின் கருவிகளை நம்பி இருக்க வேண்டிய ஒரு சூழல் இருந்தது. ஹோமி பாபாவோடு இணைந்து செயல்பட்ட ஆரம்ப விஞ்ஞானிகளான டாக்டர் பிரம்ம பிரகாஷ், டாக்டர் என். கொண்டல ராவ் போன்றவர்கள் தங்களை வல்லுனர்களாக சுய கட்டமைப்பின் மூலம், வாசிப்பின் மூலம், தேடல் மூலம் உருவாக்கிக் கொண்டவர்கள் ஆவார்கள்.
இத்தகைய வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் தான் டாக்டர் விஞ்ஞானி பலராமமூர்த்தி (K. Balaramamoorthy). இந்தியாவினுடைய அணு உலைகளின் தர கட்டுப்பாட்டு மற்றும் தரக் காப்புறுதி கவன கண்காணிப்புத் துறையின் ஆரம்ப கால வல்லுனர்களில் ஒருவர். இவர் 1933ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். ஆந்திராவில் குண்டூர் என்னும் ஊரில் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை முடித்தார். கல்லூரியில் முதுகலை அறிவியல் பட்டபடிப்பில் வேதியியல், இயற்பியல் என்னும் கலவை துறையை கையில் எடுத்தார். பிறகு பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஜாம்ஷெட்பூரில் உள்ள இரும்பு உருக்கு தொழிற்சாலையில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவ்விதம் பணி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட அணுசக்தி துறையின் உலோகவியல் பிரிவில் கவனம் செலுத்தும் வாய்ப்பை பெற்றார். அவருக்கு மிகவும் பிடித்தமான துறை உலோகவியல் துறை ஆகும்.
இந்தியாவில் முதன்முதலாக ஆய்வுக்காக வடிவமைக்கப்பட்ட CIRUS என்கிற அணு உலை அணு எரிபொருள் யுரேனியம் கற்றைகளுக்கு பெரும்பாலும் அயல் நாடுகளை நம்பி இருந்த ஒரு காலகட்டம் இருந்தது. இந்திய அணுசக்தித் துறையின் ஒரு மைல் கல்லாக 1957ஆம் ஆண்டிலேயே பலராமமூர்த்தி அவர்கள் ஹோமி பாபா அவர்களை நேரில் சந்தித்து உள்நாட்டிலேயே அவற்றை உருவாக்க முடியும் என்பதற்கான ஒரு ஆய்வு திட்டத்தை முன்வைத்தார். இந்தியா மாதிரியான மிகவும் பின் தங்கிய மக்கள் வசிக்கும் நாட்டில் சுயமாக அணு உலைகளை கட்டமைப்பதும் அவற்றை பாதுகாப்பாக நடத்துவதுவும் இயலாத விஷயம் என்று உலகம் நம்பிய ஒரு காலத்தில், CIRUS மட்டுமல்ல வணிக அளவில் ராஜஸ்தான் கொட்டார் நகரில் அமைக்கப்பட்ட அணு உலைகளுக்கும் சேர்த்து 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட அணு எரிபொருள் கற்றைகளை உற்பத்தி செய்து உருவாக்கி கொடுத்த பெருமை பல ராமமூர்த்தியை சேரும். அப்போது அவர் 23 வயதே நிரம்பிய இளைஞர்ராக இருந்தார்.
பல ராமமூர்த்தியின் ஆய்வுகள் அணு உலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பானவை ஆகும். இதற்காக அவர் மூன்று முக்கிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கி இருக்கிறார். அதற்காக உலக அளவில் அவர் அங்கீகாரமும் பெருமையும் பெற்று திகழ்பவர். அமெரிக்காவிலுள்ள ஆர்கான் தேசிய ஆய்வகத்திலும், கனடாவில் உள்ள அணுசக்தித் துறை ஆய்வகங்களுக்கும் இந்தியாவில் இருந்து அவர் வரவழைக்கப்பட்டு அங்கிருக்கும் பாதுகாப்பு நிலைமைகளை பரிசோதித்து அறிவிக்குமாறு அவருடைய உதவியை அவர்கள் நாடினார்கள் என்றால் எந்த அளவிற்கு அந்த விஷயத்தில் அவர் வல்லுனராக இருந்திருக்க வேண்டும் என்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
உலோகவியல் மற்றும் அணு எரிபொருள் பிரிவில் அவர் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் உலகவியல் துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்ட ஆண்டுகளில் அங்கு மி-கடத்தி உலோகக்கலவை வடிவ நினைவு உலோகக் கலவை என்கின்ற இரு விஷயங்களை அறிமுகம் செய்தார். அதில் வடிவ நினைவு உலோகக் கலவை ஒரு அற்புதமான கண்டுபிடிப்பாகும். இது ஒரு மெமரி மெட்டல், அதாவது உலோகவியலில் வடிவ நினைவு கலவை என்பது குளிர்விக்கப்படும் பொழுது அதனுடைய கலவை தன்மையை இழந்து சிதைக்கப்படுகிறது. ஆனால் திரும்ப சூடாக்கும் பொழுது சிதைக்கப்படும் அதற்கு முன் இருந்த வடிவத்துக்கு தானாகவே திரும்புகிறது..!
இது தன்னுடைய நினைவில் வைத்திருக்கும் வடிவ அமைப்பை பெற்றுக்கொண்டு மிக சிறப்பாக நாம் விரும்புகின்ற வடிவத்துக்கெல்லாம் சென்று பிறகு தன்னை மறு கட்டமைப்பு செய்து கொண்டு பழையபடி ஆரம்பத்தில் நாம் வைத்திருந்த நிலைக்கு திரும்புகிறது. உதாரணமாக ஒரு கம்பியை சுருள் ஸ்ப்ரிங் வடிவத்தை நாம் ஆரம்பத்தில் நினைவில் வழங்கினால் திரும்ப அது சுருள் ஸ்ப்ரிங் வடிவத்தை எல்லா வேலைகளும் முடிந்த பிறகு அடைந்து விடுகின்றது. இத்தகைய வடிவ நினைவு உலகக் கலவைகளால் செய்யப்பட்ட உதிரிப்பாகங்கள் ஹைட்ரோலிக், நியூமைடிக்மாட்டோ, ஆக்சுவேட்டர்கள் என்று அழைக்கப்படுகின்ற மிக முக்கியமான அம்சங்களை இந்தியாவினுடைய அணு உலைகளில் இணைக்கப்பட்ட பொழுது நம் அணு உலைகளினுடைய ஆற்றல் மட்டுமல்ல பாதுகாப்பும் பன்முறை மேம்படுத்தப்பட்டது. SHARE MEMORY EFFECT என்கிற அறிவியல் விளைவு விஞ்ஞானி பலராமமூர்த்தி (K. Balaramamoorthy) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அணு உலை குளிர்விப்பில் பயன்படுகின்றன முக்கிய அம்சமாக திகழ்கிறது.
டாக்டர் பல ராமமூர்த்தி வடிவ நினைவு உலோகக் கலவையோடு அழிவற்ற அணு சோதனை என்று அழைக்கப்படும் NON DESTRUCTIVE TESTING என்ன முக்கிய விஷயத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தவராவார். NDT என்பது ஒரு பொருள் அல்லது அமைப்பின் பண்புகளை சேதமடையாமல் மதிப்பீடு செய்ய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பயன்படுத்தப்படும் பகுப்பாய்வு நுட்பங்களின் தொகுப்பு ஆகும். இதனை அணு சோதனைக்கு பயன்படுத்துகின்றன பொழுது எவ்வகையான பின்விளைவுமின்றி பாதுகாப்பாக நம்மால் சோதனைகளை எடுத்துச் செல்ல முடியும். அழிவில்லாத தேர்வு, அழிவில்லாத ஆய்வு, அழிவில்லாத மதிப்பீடு ஆகிய சொற்களைக் கொண்டு இதனை விவரிக்கிறார்கள். ஆய்வு செய்யப்படுகின்ற ஒரு கருவி அல்லது அணுஉலையை NDT நிரந்தரமாக மாற்றாததால் இது மிகவும் மதிப்புமிக்க தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இது தயாரிப்பு மதிப்பீடு சரி செய்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் பெரிய பொருள் செலவையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது அத்தோடு சூழலியல் குறித்த சிக்கல்களை இல்லாமல் செய்கிறது.
விஞ்ஞானி பலராமமூர்த்தி (K. Balaramamoorthy) அவர்களின் அடுத்த முக்கிய பங்களிப்பு நம்முடைய சமையல் எரிவாயு எல்பிஜி சிலிண்டர் சம்பந்தமானது ஆகும். இந்தியாவில் கிடைக்கும் சமையல் எரிவாயு எல்பிஜி சிலிண்டர் ஒரு காலத்தில் எந்த வகையான பாதுகாப்பும் இன்றி பலருடைய உயிரைக் காவு வாங்கியதாக இருந்தது. நம்முடைய இந்தியாவினுடைய கோடிக்கணக்கான இல்லங்களில் இன்று உணவு தயாரிப்பில் உதவக்கூடிய லீக்குஃபைட் பெட்ரோலியம் காஸ் (LPG) அடைத்து வீடுகளுக்கு வழங்கப்படுகின்ற கொள்கலன்கள் அதாவது சிலிண்டர்கள் ஒரு காலகட்டத்தில் அதிக வெடிப்புத் தன்மை கொண்டவையாக இருந்து பல விபத்துகளை ஏற்படுத்தி பல சமையல் பெண்களின் உயிருக்கு ஆபத்தாக இருந்ததை நாம் அறிவோம். வரதட்சணை கொடுமைக்காக ஒரு பெண்ணை வேண்டுமென்றே எரித்துவிட்டு சிலிண்டர் மீது பழிபோட்டு வந்த ஒரு காலம் இருந்தது. இன்று எஎல்பிஜி சிலிண்டர் வெடித்துவிட்டது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். என்ன காரணம்?
இந்த ஆபத்தை முற்றிலும் தகர்த்து கார்பன் ஸ்டீல் எனும் உலோக கலவையை வழங்கி அதன் மூலம் நம்முடைய எல்பிஜி சிலிண்டர்களை உருவாக்கும் முறையை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் தான் டாக்டர் பலராமமூர்த்தி. இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினுடைய.. எல்பிஜி சிலிண்டர் பாதுகாப்பு மேம்பாடு என்னும் துறையில் ஒரு ஆலோசகராக அவர் இணைக்கப்பட்டார். எல்பிஜி சிலிண்டர் சுவரின் தடிமன்.. ஒரு சிலிண்டரை வடிவமைக்கும் பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய அம்சம் என்பதை அவர் முன்மொழிந்தார் எல்பிஜி சிலிண்டரின் சுவரின் தடிமத்தை பாதிக்கும் காரணிகள் என்று அவர் சில முக்கிய விஷயங்களை முன்மொழிந்தார்.. சிலிண்டர் சோதனை அழுத்தம், எல்பிஜி சிலிண்டர் குவிமாடத்தின் வடிவம், குவிமாட முனை விட்டம் என்பதற்கும் அதன் உயரத்திற்குமான விகிதாச்சாரம்.. சிலிண்டரின் வெளிப்புற விட்டம், ஆகியவற்றுக்கிடையே ஒரு பொது சமன்பாட்டை முன்வைத்து நம்முடைய சமையல் சிலிண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்த விஞ்ஞானிதான் டாக்டர் பலராமமூர்த்தி. இன்று உலகின் பல நாடுகளில் இவருடைய சமன்பாடு அதற்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் அணு உலைகளில் விஞ்ஞானி பலராமமூர்த்தி (K. Balaramamoorthy) அறிமுகம் செய்த பாதுகாப்பு உறுதி அளிப்பு NFC என்று அழைக்கப்படுகிறது. NEVER FAIL IN COMMITMENTS என்று இதனைக் குறிப்பிடுவர். ஹைதராபாத்தில் உள்ள எரிபொருள் உலகத்தினுடைய தலைமை நிர்வாக அதிகாரியாக இவர் இருந்த காலத்தில் NFC அறிமுகம் செய்யப்பட்டது. இதனடிப்படையில் யுரேனியம் தனிமத்தை சீர்படுத்தி தயாரித்த எரிபொருள் வில்லைகளையும் அவற்றுக்கான கவச குழாய்கள் மற்றும் அணு உலை உள்கட்டுமான தளவாடங்களையும் 100% தர ஆய்வுக்கு உட்படுத்துகின்ற ஒரு புதிய முறையை அவர் அறிமுகம் செய்தார்.
இந்தியாவின் அணுசக்தி துறை அணு உலைகளின் தரக் காப்புறுதிக்கான பிரிவின் பாதுகாப்பு ஆலோசனை குழுவின் தலைவராக இவரை நியமித்தது. அது மட்டுமின்றி இன்று சர்வதேச அணு உலை பாதுகாப்பு தர சான்றிதழ் வழங்குகின்றன குழுக்களில் டாக்டர் பல ராமமூர்த்தி இடம் பெற்றிருக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் பப்ளிக் என்டர்பரைஸ் எதுவும் பொதுத்துறை நிறுவனத்தின் தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார்.
அணுவியல் விஞ்ஞானி பலராமமூர்த்தி பல்வேறு விருதுகளின் சொந்தக்காரர். VASVIK தொழில் கூட ஆய்வுகள் விருது ஆந்திர பிரதேச அரசினுடைய சிறந்த உலோகவியல் பொறியாளர் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர். 2013 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அணுசக்தி துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருதை டாக்டர் பல ராமமூர்த்தி அவர்களுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
கட்டுரையாளர்:
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் அறிந்த இந்திய ஒட்டுண்ணியியல் நிபுணர் வீணா டாண்டன் (Parasitologist Veena Tandon)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
NON-DESTRUCTIVE TESTING என்னும் பரு பொருட்களின் அணு தர சீர்மையை அறிமுகம் செய்த பெருமைக்குரியவர் இந்திய விஞ்ஞானி டாக்டர் பலராமமூர்த்தி அவர்கள்.
ஸ்டீல் எனும் உலோக கலவையை வழங்கி அதன் மூலம் நம்முடைய எல்பிஜி சிலிண்டர்களை உருவாக்கும் முறையை இந்தியாவில் அறிமுகம் செய்த பெருமதிப்புக்குரிய டாக்டர் பலராமமூர்த்தி அவர்களின் பங்கு அளப்பரியது. இந்திய பெண்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் பாதுகாப்பு வழங்கிய பெருமகனாரை, நம் இந்திய விஞ்ஞானியை போற்றுவோம்.
(அக்கால கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சிலிண்டர் மாற்றித்தரும் எல்லா ஆண்களுக்கும் ஒருவித பயம் இருக்கும்😁)
இந்திய விஞ்ஞானி பலராமமூர்த்தி அவர்களை அறிமுகம் செய்து சிறப்பாக எழுதிய முனைவர் ஆயிஷா நடராசன் ஐயா அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நன்றி சார் 🙏
1945 ல் உலகில் அணு ஆராய்சி மேற்கொண்டிருந்த நாடுகள் மூன்றே: அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்யா. அப்போதே டாக்டர் ஹோமி J பாபா அவர்களின் அயராத முயற்சியால் பம்பாய் டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கபட்டு உலகின் நான்காவது அணுயியல் ஆராய்ச்சி நாடாக விளங்கியது இந்தியா. அணுசக்தித் துறையில் மேலை நாடுகள் செயல் தந்திர ஆயுதங்கள் தயாரிப்பு நோக்கில் முன்னேறிக்கொண்டிருந்த போது, பாபா அவர்கள் ஆக்கசக்திக்கு பயன் படுத்தினால் நாடு வளமடையும் என்ற தீர்க தரிசனம் கொண்டு செய்யலாற்றினார். பிரதமர் நேரு அவர்களுடன் நேரில் பேசி, இந்திய அறிவியலாலாளர்களுக்கு மேல்நாட்டில் கிடைக்கக்கூடிய வசதிகளைத் தோற்றுவித்தார். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்த விஞ்ஞானிகள் பலரும் தங்கள் துறையில் முன்னோடிகளாகத் திகழ்ந்ததில் ஆச்சரியமில்லை. உலோகவியல் துறையில் பட்டம்பெற்று அணுஉலை எரிபொருள் தரக்கட்டுப்பட்டுத் துறையை நிறுவிய திருமிகு பலராம மூர்த்தி அவர்களும் ஒரு முன்னோடி விஞ்ஞானி. இதை அறிவியல் எழுத்தாளர்களில் ஒரு முன்னோடியான ஆயிஷா நடராசன் அவர்களின் எழில் மிகு சொல்லோவியம் சுவாரசியமாக விளக்குகின்றது.
Pingback: இந்திய கணினியியல் விஞ்ஞானி சங்கர் குமார் பால்