நூல் அறிமுகம்: நுகத்தடி(நாவல்) – ப.சிவகாமி

நூல் அறிமுகம்: நுகத்தடி(நாவல்) – ப.சிவகாமி



இதுவரை ஏராளமான நாவல்களைப் படித்து இருக்கும் நமக்குள் இந்நாவல் ஒரு புது பிரளயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதன் பாதிப்பிலிருந்து மீண்டுவர நமக்கு வெகுநாட்கள் ஆகலாம். படிக்கும் ஒவ்வொருவருக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் மீது செலுத்தப்படும் அதிகாரத்தின், ஆணவத்தின், அகம்பாவத்தின் பலமுனைத்  தாக்குதல்களையே இந்நாவல் பேசுகிறது.

அது என்னஒடுக்கப்பட்ட  மக்களுக்கு என்றே    ஒதுக்கப்பட்டப் பணியா  துப்புரவுப்பணி?

கேட்க நாதியில்லை என்பதற்காக ஒருத்திக்குக் கொலைப் பாதகத்தைவிடவும் கொடுமையான பாதகத்தைச் செய்யலாமா?

காவல்துறையா அல்லது ஏழைகளின் கற்பையும் உயிரையும் களவாடும் துறையா?

காவல்துறையா அல்லது பணம்படைத்தவர்களின் ஏவல் துறையா?

இப்படியாகச் சில கேள்விகள் விஸ்வரூபமாக நமக்குள் தேங்கி நிற்கிறது இந்நாவலைப் படித்து முடிக்கும்பொழுது!

கல்வி என்றாலே கெட்ட வார்த்தையாக நினைக்கும் காலனிவாசிகள் மத்தியில் முத்துப்பேச்சியும், முத்தையனும் தன்பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். முத்தையனுக்கு குடிப்பதற்குப் பணம்தரும் காலனிவாசிகள் அவன் பிள்ளைகள் படிப்பதற்கு உதவ மறுக்கிறார்கள். அவன் குடும்பத்தையே பொறாமையோடுப் பார்க்கிறார்கள். அவர்களோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளாத உள்ளிருப்புத் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள் என்பதெல்லாம் நீண்ட நெடுங்காலமாக புரையோடிப்போன நம் சமூகத்தின் பாழ்பட்ட நிலையையே நமக்குப் பறைசாற்றுகிறது.

10 ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் மலக்கிணற்றைத் தூய்மைப்படுத்தும் அந்த மனிதர்களின் அவலத்தை…… அப்பப்பப்பா! மலம் அள்ளிப்பிழைக்கும்  முத்தையனை  பொய்ப்பழியை ஏற்கச்சொல்லி அவனை அடித்தேக்கொல்லும் காவல்துறை தான்தப்பிக்க பிணத்தின் வாயில் மலத்தை ஊற்றி…. செய்யும் செட்டப் எல்லாம் கொடுமையின் உச்சம்!



பிள்ளைக்குப்  புத்தகம் வாங்குவதற்கென மலநீர் தலை முகம் வாய் என ஒழுக ஒழுக மலக்கூடையைச் சுமந்து பொதுக்கழிப்பறையைச் சுத்தம்செய்து கிடைக்கும் 30 ரூபாய் கூலியை. ‘ வட்டியைக்கொடு அல்லது நீ வா என்றழைக்கும் வட்டிக்காரனிடம் விட்டெறியும் முத்துப்பேச்சி….

தொட்டிலில் எச்சில் இலைகளை அள்ளிச் சுத்தம்செய்யும் குமாரின் தலையில் எச்சில்இலை விழுவதும், அதிலிருந்து சட்னி அவன் தலையில் வழிவதும் சட்டென்று சுதாரித்து அவன் எழுவதற்குள் அவன் தலையில் உமிழப்படும் சளியும்….

முத்தன், உச்சிக்கன்னி ஆகியோர் தியேட்டர் பால்கனி மற்றும் கழிவறைத்தூய்மையின்போது கண்டு அருவருக்கும் கேவலங்களும்….. என நாவல் முழுவதும் தூய்மைப் பணியாளர்களின் இரங்கத்தக்க வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர்!

முத்தையனும் முத்துப்பேச்சியும் இறந்தபிறகு குடும்பத்தைச் சுமக்க படிப்பறிவே தேவையற்றத் துப்புரவுப்பணிக்குச் செல்கிறாள் சந்திரா. அங்கு தன் கற்பைக்காக்க ஓடத்துவங்கும் அவள்மீது திருட்டுப்பழிச் சுமத்தப்பட்டு காவல்துறையினரால் கொடுமைப் படுத்தப்படுகிறாள்.

திருட்டுப்பொருட்களை எல்லாம் தாமேசுருட்டிக்கொள்ளும் காவல்துறை பழியைப்போட ஆட்கள் தேவைப்படும் போதெல்லாம் அப்பாவிப் பெண்களைப்பிடித்து…. அவர்கள் ஒத்துக்கொள்ளும்வரை அவர்களது உறுப்பில் தடியால் குத்திக் குதறி செய்யும் அக்கிரமங்கள் அநியாயங்கள் அட்டூழியங்கள்….! படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறது நமக்கு! கண்ணீர் பொங்குகிறது!  இக்கொடுமைகளை எல்லாம் செய்பவன் மனிதன்தானா? காவல்துறையில் மனிதர்களைத்தான் பணியமர்த்துகிறதா அரசு? என்ற சந்தேகம் நமக்குள் எழுகிறது.

வாழவழியின்றி எண்ணற்றோர் மாண்டுபோகும் இப்புவியில்தான், நான்வாழ யாரை வேண்டுமானாலும் கொன்றுகுவிக்கத் தயங்கமாட்டேன் என்று எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்த முன்னாள் அமைச்சர் பர்வதம்மாள் இன்னும் வாழவேத்துவங்காத இளம்பிஞ்சு, சந்திராவிடம் இருந்து களவாடப்பட்ட கிட்னியால் புதுப்பொலிவாகிறாள்.

முதல்வகுப்பு கைதிகளுக்கு, அதாவது பெரியமனிதர்களுக்கு(!) பீடி சிகரெட் கஞ்சா அபின் சாராயம் பிராந்தி விஸ்கி கோழி ஆடு மாடு நண்டு நத்தை என அனைத்தும் சப்ளை அவது மட்டுமன்றி அவர்களது உடல் திணவு எடுக்கும்பொழுதெல்லாம் விசாரணைக் கைதிகளில் இளம் பெண்கள் கட்டாயப்படுத்தி கற்பழிக்கபடுவதெல்லாம் சிறைவார்டன் அனுமதியுடனே செவ்வனே நடக்கும் சிறைத்துறையில்மனுவோடு கரன்சிகளை சேர்த்துக் கொடுப்பவர்களுக்குத்தான் அதுவும் கரன்சியின் மதிப்பிற்கேற்பவே சிறைக்கைதிகளைப் பார்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.



தொழிலாளர், பாட்டாளர், நலிந்தோர், விளிம்புநிலை மனிதர்களின் பிரதிநிதிகள் மூன்று நாட்களாக முயன்றும் விசாரணைக் கைதிகளைப் பார்க்கமுடியவில்லை.

தொழிலாளி வர்க்கத்தை எப்படி முதலாளி வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோன்று அவர்களுக்குத் தலைமைதாங்கும் மக்கள்பிரதிநிதிகளையும் முதலாளித்துவத்துக்குப்பிடிக்காது.

இதுவே ஆளும்கட்சியைச் சார்ந்தவராகவோ அல்லது ஏற்கனவே ஆண்டக்கட்சியை சார்ந்தவராகவோ இருந்தால் ஒரு வார்டு உறுப்பினர்கூட நிர்வாகத்தை மீறிச்செயல்படமுடியும் என்பதை இந்நாவல் நமக்குத் தெற்றெனத் தெரிவிக்கிறது.

ஒரு சட்டம் இயற்றுவது, அது மக்களுக்கு உகந்ததாகவும் அது அவர்கள் நலன்காப்பதாகவும் இருந்தால் மட்டுமே இயற்றப்படவேண்டும். அப்படி இயற்றப்பட்ட சட்டம் நாளடைவில் மக்களுக்கு எதிராக இருக்குமானால் அச்சட்டத்தை அரசு திரும்பப்பெறுவதில் எந்தபாகுபாடும் இருக்கக்கூடாது என்றுதான் அண்ணல் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி நேருவிடம் கொடுத்துள்ளார்.

நேருவின் அரசோ, தனக்குச்  சாதகமானதாக அல்லது மக்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்படியாக அச்சட்டத்தைப் பிரித்து அமல்படுத்தி அதை மீறுவோர்மீது கடுமையான தண்டனைகொடுத்து துவம்சம் செய்கிறது என்று அரசு போராட்டக்காரர்களின்மீது செலுத்தும் அடக்குமுறையை ஆதங்கத்தோடு கண்டிக்கிறார் நாவலாசிரியர்.



குற்றம்செய்த போலீஸ்காரர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்ன தண்டனை? அடுத்தவன் பொண்டாட்டியை அனுபவித்த அவன்குறியை அறுத்துவிட்டதா? இல்லை. தற்காலிகப் பணிநீக்கம். இதுதான் அரசின் உயர்ந்தபட்ச தண்டனை!

பாதிக்கப்பட்ட பெண்களின் கற்புக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம்வைத்து வழங்க உத்தரவிட்டார் முதல்வர்.

முடிந்தன எல்லாம் முடிந்தன!என்று விரக்தியும் வேதனையும் கலந்தே நாவலை முடிக்கிறார் ஆசிரியர்.

எழுத்தாளன்  என்பவன் சமூகத்தின் மனசாட்சி. அவன் ஒருபோதும் பொய் சொல்லமாட்டான். சொல்லவும் கூடாது. எழுது. உண்மைகளை எழுது. கற்பனைக்காவியம் பாடாதே. கற்பனைக்  காவியங்கள்தான் ஜாதியாக மதமாக மனிதனைப்பிரித்து வைத்திருக்கிறது. அழகியல்பற்றி சிந்திக்கும்போதும் எழுதும்போதும் சுகமாகத்தான் இருக்கும். ஆனால் நாம் வானம்பாடிகளல்ல. ஊர்க்குருவிகளை வல்லூறுகள் துரத்தித் துரத்தி வேட்டையாடின. ஆழ்ந்து  சுவாசித்துப்பார்! துடிக்கத்துடிக்க நம் சகோதரிகளின் மர்ம உறுப்புக்களைச் சிதறடித்ததால் அதில்வழியும் குருதியின் நெடியை உணரமுடியும். என்றும் சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்ட நாசமாக்கப்பட்ட தங்களின் வலிகளையே எழுது என்றும் சந்திரா குமாரிடம் கூறுவதன் மூலமாக எழுத்தாளர்களின் சமுதாயக் கடமைகளையும் இந்நாவலின் உண்மைத்தன்மையையும் நாம் உணரமுடியும்.

மணந்தோம் பெற்றோம் சேர்த்தோம் மடிந்தோம் என்ற சராசரி மனிதனாய் வாழ்க்கையைக் கடந்துவிடாதே!. நம்வாழ்வின் சுவடுகள் காலம்தோறும் கவனிக்கப்பட வேண்டும் என்று எங்கே தன்லட்சியத்தை கைவிட்டு விடுவானோ என்ற அக்கறையில் சாதிமறுப்பு மணம்புரிந்துகொண்ட குமாருக்கு அவன் நண்பன் கணேசபாண்டியன் எழுதும் கடிதம் குமாருக்கு மட்டுமானதன்று..!

நூல்நுகத்தடி(நாவல்)

ஆசிரியர்திரு. பாண்டிய கண்ணன்

         நன்றிகளுடன்,

திருமதி. ப.சிவகாமி, புதுவை.



Show 2 Comments

2 Comments

  1. Sivam

    அருமை. நூலின் சாரத்தை பிழிந்தெடுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

  2. Saraswathi

    👌👌நாவலைப்படிக்கத் தூண்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *