O2 Booths in India (Breathing Technologies of DRDO Scientists) Article by Scientist V. Dillibabu. Book Day is Branch Of Bharathi Puthakalayam.



– ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

உலகின் 213 நாடுகளில் மக்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா இரண்டாம் அலையில் உலகின் இரண்டாவது அதிகம் பாதிப்புக்குள்ளான நாடாக இந்தியா நோயின் கடுமையைச் சந்தித்து வருகிறது. தேசத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்களில் ஒன்று ஆக்சிஜன். உலக நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உதவிக் கரங்கள் நீள்கின்றன. ஆக்சிஜன் சுமக்கும் விமானங்களும் ரயில்களும் தலைப்புச் செய்திகளாய் பேசப்படுகின்றன. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய தேசத்தில், ஆக்சிஜனுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் உணரப்படுகிறது. இந்தச் சூழலில், காற்றிலிருந்து ஆக்சிஜன் பிரிக்கும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது டி.ஆர்.டி.ஓ.

Pune: PMC gets 13 ventilators from PM CARES Fund – Punekar News

டி.ஆர்.டி.ஓ:

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையில் இயங்கும் ஆராய்ச்சி நிறுவனம் ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்’ (Defence Research and Development Organisation – DRDO). அக்னி, பிரமோஸ், மிஷன் சக்தி உள்ளிட்ட ஏவுகணைகள், அர்ஜுன் போர் வாகனம், தேஜஸ் போர் விமானம் போன்ற டி.ஆர்.டி.ஓ வின் போர்க்கருவிகள் பொதுவெளியில் பிரபலமானவை. தரைப்படை, கடற்படை, விமானப்படை, துணை ராணுவப்படைகள் இவற்றிற்குத் தேவையான பாதுகாப்பு கருவிகளையும் ஆயுதங்களை வடிவமைத்து உருவாக்கி தேச பாதுகாப்புப் பணியில், சீருடையில்லா வீரர்களாகச் சேவையாற்றுகிறார்கள் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள்.

அடிப்படை அறிவியல், பொறியியல், மருத்துவம், கணிதம், தகவல் தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் இயங்கினாலும், ராணுவ தொழில்நுட்பங்களில் ஈடுபட்டிருப்பதால் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகளின் பெரும்பாலான படைப்புகள் பொதுவெளியில் பதிவு செய்யப்படுவதில்லை. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் டி.ஆர்.டி.ஓ, இன்றளவில் ஐம்பதிற்கும் அதிகமான ஆய்வுக்கூடங்களில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம் டி.ஆர்.டி.ஓ வின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ ஆராய்ச்சி:

டி.ஆர்.டி.ஓ என்றாலே போர் ஆயுதங்கள் என்ற பிம்பம் பொதுப்புத்தியில் இருக்கிறது. ராணுவத்துக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில் துவங்கி அவர்களுக்கான உணவு, கவச உடைகள், மருந்துப்பொருட்கள், மனநல ஆலோசனைகள் என ராணுவ விஞ்ஞானிகளின் பங்கு மிக அதிகம். நம் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காகப் பல உடலியல் தொடர்பான ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள்.

பனிமலையில் அதி உயரங்களில் காவல் பணியிலிருக்கும் ராணுவ வீரர்களும், அதை விட அதிக உயரங்களில் பறக்கும் போர் விமானிகளும் சுவாசப் பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். இதனால், இவர்களின் நல்வாழ்விற்காக ராணுவ விஞ்ஞானிகள் பல சுவாசத் தொழில்நுட்பப் படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.

DRDO to set up 500 Medical Oxygen Plants within three months under PM CARES Fund

மருத்துவ ஆக்சிஜன் நிலையம்:

போர்விமானங்கள் ஏறக்குறைய 12 கி.மீ உயரத்தில் பறக்கின்றன. பூமியிலிருந்து உயரம் அதிகரிக்க அதிகரிக்கக் காற்றின் அடர்த்தி குறையும். இதனால் போர் விமானிக்குக் கட்டாயம் ஆக்சிஜன் சுவாசம் தரப்பட வேண்டும். இதனால் போர் விமானங்களில் திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்ட உருளைகள் பொருத்தப்பட்டு சுவாசக்கவசம்

மூலம் விமானிக்குத் தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்படும். திரவ ஆக்சிஜன் உருளைகள் எடை அதிகமாக இருக்கும். திரவ ஆக்சிஜனை உருளைகளைச் சுமந்து செல்வதற்குப் பதில் விமானத்திலேயே ஆக்சிஜன் தயாரித்தால் என்ன? இந்த யோசனையின் விளைவாக, காற்றிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் கருவியை வடிவமைத்தனர் ராணுவ விஞ்ஞானிகள். இந்தக்கருவி, காற்றிலிருந்து நைட்ரஜனை சியோலைட் (ziolite) வடிகட்டி மூலம் பிரித்தெடுத்து, 93% ஆக்சிஜன் உள்ள காற்றை விமானிக்குத் தரும். அழுத்த அலைவு பரப்பு ஈர்ப்பு (Pressure Swing Adsorption-PSA) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது இக்கருவி. இந்தியாவின் ‘தேஜஸ்’ போர் விமானத்தில் இந்த ஆக்சிஜன் பிரித்தெடுக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

ரயில் தொடர்பும், ஆக்சிஜன் லாரி பயணமும் சாத்தியப்படாத பனி மலையில், ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்புவதற்காக அடிக்கடி அடிவாரத்து நகரங்களுக்குக் கொண்டு செல்வதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம். இதனால் போர் விமானிகளுக்காக ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கிய ‘விமான மருத்துவ ஆக்சிஜன் உருவாக்கு கருவி’ (On Board Medical Oxygen Generator), சில மாறுதல்களோடு பனி மலையில் பணியிலிருக்கும் ராணுவ வீரர்களின் உபயோகத்துக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தில், ராணுவ முகாம்களில் காற்றிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் மருத்துவ ஆக்சிஜன் நிலையங்களை (Medical Oxygen Plant-MOP) டி.ஆர்.டி.ஓ அமைத்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆக்சிஜன் சாவடிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழில்நுட்பம் தான் தற்போது கரோனா பெருந்தொற்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அல்லல்படும் மக்களின் உயிர் காக்கப் பயன்படுத்தப்படுகிறது. நிமிடத்துக்கு 1000 லிட்டர் ஆக்சிஜனை உருவாக்கும் இந்த ஆக்சிஜன் நிலையம், 190 நோயாளிகளுக்கு நிமிடத்துக்கு 5 லிட்டர் ஆக்சிஜனை தொடர்ந்து தரக்கூடியது. பெங்களூருவிலுள்ள டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ், கோயம்புத்தூரிலுள்ள ட்ரைடண்ட் நியுமாடிக்ஸ், டேராடூனிலுள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றின் துணையோடு 500 ஆக்சிஜன் சாவடிகளைப் பல மாநிலங்களில் அமைக்கும் பணியில் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் தற்போது ஈடுபட்டிருக்கிறது டி.ஆர்.டி.ஓ.

தானியங்கி ஆக்சிஜன் கட்டுப்பாட்டுக் கருவி:

ராணுவ வீரர்களுக்கு ஆக்சிஜன் வாயு அளிக்கும் போது அவர்களது ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவை சோதித்து அதற்கேற்ப ஆக்சிஜனின் அளவை கூட்டவோ குறைக்கவோ வேண்டும். இதைச் செய்ய மருத்துவரோ செவிலியரோ ராணுவ வீரரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதிலும் புதுமை செய்தனர் நமது ராணுவ விஞ்ஞானிகள். ராணுவ வீரரின் ரத்த ஆக்சிஜன் அளவை (SPO2) தொடர்ந்து கண்காணித்து தானியங்கி முறையில் ஆக்சிஜனின் அளவை கட்டுப்படுத்தும் ‘ஆக்சி கேர்’ (Oxycare) என்ற கட்டுப்பாட்டுக் கருவியை உருவாக்கினர்.

ஆக்சி கேர் கருவி தற்போது கரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவரோ செவிலியரோ அருகிருந்து கவனிக்க அவசியமில்லாமல் ஆக்சி கேர் கருவி, மக்களின் உயிர்காக்கும் கருவியாக உருவெடுத்துள்ளது. இக்கருவியில் உள்ள மறுசுவாசமில்லா (Non Rebreather) மூச்சு கவசம் ஏறக்குறைய 40 சதவீத ஆக்சிஜன் வீணாவதைத் தடுக்கிறது. பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்த மத்திய அரசின் உத்தரவின் பேரில் ஓன்றரை லட்சம் ஆக்சிகேர் கருவிகளை தற்போது டி.ஆர்.டி.ஓ தயாரித்து வருகிறது.

DRDO develops SpO2 based supplemental oxygen delivery system, Government News, ET Government

செயற்கை சுவாசக் கருவி:

தீவிர சுவாச குறைபாடுகளால் பாதிக்கப்படும் ராணுவ வீரர்களுக்காக டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கை சுவாசக்கருவி (வெண்டிலேடர்) ஒரு முக்கிய உள்நாட்டுத் தொழில்நுட்பப் படைப்பு. கரோனாவின் முதல் அலையில் செயற்கை சுவாசக்கருவி தட்டுப்பாட்டினால், தீவிர நுரையீரல் பாதிப்புக்குள்ளான கரோனா நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இக்கட்டத்தில் கைகொடுத்தது டி.ஆர்.டி.ஓ வின் வெண்டிலேடர். பெங்களூருவிலுள்ள பாரத் மின்னணு நிறுவனம், மைசூரிலுள்ள ஸ்கேன்ரே மற்றும் பல சிறிய தொழில் நிறுவனங்களின் துணையோடு 30,000 வெண்டிலேடர் கருவிகள் ஏறக்குறைய 4 மாதங்களில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டன. தற்போது நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வெண்டிலேடர் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழில் சூழலமைப்பு தேசத்தில் ஏற்பட்டுள்ளது என்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய செய்தி.

இந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி கருவிகளை வடிவமைத்தது, பெங்களூருவில் உள்ள ‘பாதுகாப்பு உயிரி பொறியியல் மற்றும் மின் மருத்துவ ஆய்வகம் (Defence Bioengineering and Electromedical Laboratory -DEBEL). வழக்கமாக டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் என்றாலே பொறியியல் அல்லது அறிவியல் படித்தவர்கள் என்ற எண்ணம் உண்டு. ஆனால் மருத்துவர்கள், விலங்கியல் மருத்துவர்களும் விஞ்ஞானிகளாக ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டிருப்பது பலரும் அறியாத சுவாரசியம். ‘எனது மூளை உங்கள் வலியை போக்கட்டும்’ (Let my brain relieve your pain) என்ற அடிநாதத்தோடு அப்துல் கலாம் அவர்கள் உருவாக்கிய உயிரி மருத்துவ தொழில்நுட்பச் சங்கம் (Society for Biomedical Technology) இந்த சுவாசக் கருவிகளின் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளது.

ஆராய்ச்சி – உற்பத்தி:

புதுமையான யோசனைகள் ஆய்வகங்களில் மூல முன்மாதிரிகளாக (Prototypes) உருவாகி பின்னர் தொழிற்சாலைகள் மூலம் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும், தொழிற்சாலைகள் வளரும், வேலை வாய்ப்புகள் பெருகும், இதனால் பொருளாதாரம் செழிக்கும். இறக்குமதிகளுக்குக் காத்திராமல் தொழில் நுட்பத்துறையில் நாட்டின் தற்சார்பு வலுப்பெறும். இந்த திசையில், டி.ஆர்.டி.ஓ வின் சுவாசக் கருவிகள் இந்தியத் தொழில்துறை மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களின் அத்தியாவசிய பயன்பாட்டுக்கு வருவது ஒரு மைல்கல் முயற்சியாகும்.

கரோனாவின் கோரப் பிடியிலிருந்து குடிமக்களைக் காக்கும் இரண்டாம் விடுதலைப் போரில், நமது ராணுவ விஞ்ஞானிகள் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் முக்கிய பங்களிப்புகளுக்காக அவர்களை வாழ்த்துவோம். மேலும் பல தொழில்நுட்பப் படைப்புகளைப் படைத்தளித்து தேசம் பயனுற வாழ அவர்களின் முயற்சிகள் தொடரட்டும்.

கொப்புளிக்கும் அறிவும் ஆற்றலும் கொண்ட நம் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் இம்முயற்சிகள் உத்வேகம் அளிப்பதாக.

உள்ளுக்குள் உழல்கின்ற
கற்பனைகள் உயிர்பெறுக!
சொல்லுக்கு சிக்காத
சொப்பனங்கள் மெய்ப்படுக!

(கட்டுரையாளர் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி. தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற இயக்குனர்)



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *