வால்ட் விட்மேன் ரோஸ்டோவ் (Walt Whitman Rostow) அக்டோபர் 7, 1916இல் பிறந்து பிப்ரவரி 13, 2003இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர், அரசியல் கோட்பாட்டாளர், பொருளாதார வரலாற்றாசிரியர், நவீன வளர்ச்சிப் பொருளாதாரத்தின் முன்னோடி மற்றும் சமூக விஞ்ஞானி ஆவார். அமெரிக்க ஜனாதிபதிகளான ஜான் எஃப். கென்னடி மற்றும் லிண்டன் பி. ஜான்சன் ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசகராக பணியாற்றினார், மேலும் வியட்நாம் போர் தொடர்பான அமெரிக்கக் கொள்கையை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது, ரோஸ்டோ வாஷிங்டனில் உள்ள Office of Strategic Service இல் அதிகாரியாக பணியாற்றினார். போருக்குப் பிறகு அவர் கல்வித்துறையில் அவரது நாட்டம் திரும்பியது. 1950 முதல் 1961 வரை புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொருளாதார வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றினார். ரோஸ்டோவ் 1961 முதல் 1966 வரை அமெரிக்க வெளியுறவுத்துறையின் கொள்கை திட்டமிடல் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.
Rostow’s Theory of Development (ரோஸ்டோவின் வளர்ச்சிக் கோட்பாடு)
பொருளாதார வளர்ச்சியின் முக்கிய மாதிரிகளில் ஒன்றான ரோஸ்டோவியன் பொருளாதார வளர்ச்சி முன்னெடுத்து தொடங்கும் நிலை (take-off stage) மாதிரியை ரோஸ்டோ உருவாக்கினார். அனைத்து வளரும் நாடுகளும் ஐந்து தனித்துவமான நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்று ரோஸ்டோ குறிப்பிடுகிறார்: (1) Tranditional Society (பாரம்பரிய சமூகம்) – சேமிப்பு அல்லது முதலீடு இல்லாமல் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டிருத்தல், (2) Preconditions for take-off (முன்னோக்கி எழுவதற்கான முந்தைய நிலை) – வேளாண்மை இயந்திரமயமாக்கப்படுவது, உபரிகள் வெளிப்படும், சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5% ஆக வளரத் தொடங்குகிறது, (3) Take-off (முன்னோக்கி எழுதல்) – உற்பத்தி வளர்கிறது, அரசியல் நிறுவனங்கள் உருவாகின்றன, சேமிப்பு விகிதங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 முதல் 15% வரை அதிகரிப்பது (4) Drive to maturity (முதிர்ச்சியை நோக்கி நகர்தல்) – சேமிப்பானது 10 லிருந்து 20% நிலையுடையது, வளர்ச்சியானது மற்ற துறைகளுக்குப் பரவுதல், தொழில்நுட்ப முன்னேற்றம் அடைதல், அதிகரிக்கும் பன்முகத்தன்மை, (5) Age of Mass consumption (பெருமளவிற்கான நுகர்வு காலகட்டம்) – நுகர்வால் இயக்கப்படும் உற்பத்தி, மூன்றாம் நிலைத் துறையான சேவைத்துறைக்கான மாற்றத்தின் தொடக்கம்). முன்னெடுத்து எழுவதிலிருந்து முதிர்ச்சி வரை (அதாவது மூன்றாம் நிலையிலிருந்து நான்காம் நிலைக்கு) நாற்பது முதல் அறுபது ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ரோஸ்டோ கருதினார்.
அனைத்து நாடுகளும் பொருளாதார வளர்ச்சியின் ஐந்து நிலைகளைக் கடந்து செல்ல முடியும் என்றும், இது அமெரிக்க போன்று அதிக மக்கள் நுகர்வு நிலையில் உச்சத்தை அடையும் என்றும் ரோஸ்டோ குறிப்பிட்டார். 1983இல் ரோஸ்டோவிடம் செய்யப்பட்ட நேர்காணலில், இந்தியாவின் பொருளாதாரம் இப்போது முன்னெடுத்து எழுதலுக்கு அடுத்த நிலையில் (Post – takeoff) உள்ளது என்று குறிப்பிட்டார். தொழில்நுட்ப முதிர்ச்சிக்கான உந்துதல் காரணமாக, அவரது கோட்பாட்டின் படி, இன்னும் மூன்று அல்லது நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு அதிக அளவில் மக்கள் நுகர்வில் உச்சத்தை அடையும் என்றார். ரோஸ்டோவின் கூற்றுப்படி, கம்யூனிசம் ஒரு மாற்றத்தின் நோய் (disease of the transition), நவீனமயமாக்கல் செயல்பாட்டில் கம்யூனிஸ்ட்டுகள் “துப்புரவுப் பணியாளர்களின்” பாத்திரத்தை வகிக்கின்றனர் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், அத்தகைய இயக்கங்களை அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் முதலாளித்துவ சார்பு இராணுவப் படைகளை “மாற்றத்தின் ஒரு முக்கிய முகம்” என்று விவரித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
(1938): Investment and the Great Depression, Econ History Review
(1950): The Terms of Trade in Theory and Practice, Econ History Review
(1951): The Historical Analysis of Terms of Trade, Econ History Review
(1952): The Pricess of Economic Growth
(1956): The Take-off into Self-Sustained Growth
(1959): The Stages of Economic Growth, Econ History Review
(1960): The Stages of Economic Growth: A non-communist manifesto
(1971): Politics and the Stages of Growth
(1978): The World Economy: History and Prospect
ஆதாரம்
www.digitalarchive.wilsoncenter.org ; www.kids.britannica.com; www.hetwebsite.net; www.developingeconomics.org; www.link.springer.com; www.indiatoday.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

