முதுமை இரங்கத்தக்கதல்ல ; ‘முதுமையும் ஒரு வாழ்வுரிமையே,’என்கிற கம்பீரமான நம்பிக்கையோடு நடை போடுவோர் எத்தனை பேர் ?
முதியோர் இல்லங்கள் : பழுதான பார்வையை மாற்றுக!!!
சு.பொ.அகத்தியலிங்கம் .
“ இது ஒரு மனிதகாட்சி சாலை
‘ பால்குடித்த மிருகங்கள்’
எப்போதாவது
வந்துபோகும் இடம் ”
-இப்படி ஒரு புதுக்கவிதை சீறும் . படிக்கும் நமக்கும் கோபம் வரும் .
’பூமியில் ஒரு நரகம் முதியோர் இல்லம்’ என்றும் ; ‘முதியோர் இல்லங்கள் வேகமாய் பரவிவரும் கரையான்கள்’ என்றும் கவிஞர்கள் ஆவேசப்படும் போது நாம் உயரிய பண்பாட்டைத் தொலைத்துவிட்ட வெட்க உணர்வு மேலிடும் . ஆயினும் இது ஒரு பக்கத்தை மட்டுமே சுட்டுகிறது.
யதார்த்தத்தை அறிவு பூர்வமாகவும் நடைமுறைக்கு சாத்தியமான வகையிலும் பார்க்க உணர்ச்சி மிகப்பெரும் தடைகல்லாகிவிடும் . அதன் ஆகச்சிறந்த உதாரணமே முதியோர் இல்லம் குறித்த நம் புரிதலும் அணுகுமுறையும்.
அறுபது வயதைத் தாண்டி விட்ட முதியோர்கள் எண்ணிக்கை உலகம் முழுவதும் சுமார் 85 கோடியைத் தாண்டிவிட்டது . 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகம் முந்நூறு கோடி முதியவர்களைக் கொண்டதாக இருக்கும் . மருத்துவ உலகில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் சராசரி வயது கூடிக்கொண்டே போகிறது . ஆகவே 60 வயதைக் கடந்தவர்கள் மட்டுமல்ல 70 ஐக் கடந்தவர்கள் , 80 ஐக் கடந்தவர்கள் விகிதமும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்தியாவில் சுமார் 10 கோடிப்பேர் நான் உட்பட 60 வயதைத் தாண்டியவராக உள்ளனர் . இதில் 70 வயதைக் கடந்தவர்கள் சுமார் 3.6 கோடியாகவும் , 80 வயதைக் கடந்தவர் சுமார் 90 லட்சமாகவும் உள்ளனர் . தற்போதைய இந்திய சராசரி வயது ஆண்களுக்கு 68.8 பெண்களுக்கு 68.9 ஆக உள்ளது . 2014 ல் நாம் போட்ட கணக்கு.
“இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது . இன்னும் பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் பெருகி 60 வயதைக் கடந்தவர் 13.3 கோடியாகவும் , 70 வயதைக் கடந்தவர் 5.1 கோடியாகவும் , 80 வயதைக் கடந்தவர் 3.2 கோடியாகவும் உயருமாம் ; 2026 ல் மொத்த முதியோர் எண்ணிக்கை இந்தியாவில் சுமார் 18 கோடி ஆகலாமாம் . 2051 ல் இதுவே இன்றைவிட மூன்றுமடங்காகிவிடக்கூடுமாம் . அதாவது இன்னும் கால் நூற்றாண்டில் இந்திய மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் முதியோராக இருப்பர்.”
இந்த புள்ளி விவரங்களை மிரட்டுவதற்காகப் பதியவில்லை ; சமூகத்தின் முன் உள்ள சவாலை கூர்மையாக விசால மனப்பாண்மையோடு பார்க்க வேண்டும் என்பதற்காவவே எடுத்துக் காட்டுகிறோம்.
தமிழ்நாட்டிலும் சுமார் 60 லட்சம் முதியோர்கள் தற்போது இருக்கின்றனர் . இதில் முறையான பென்ஷன் பெறுவோர் , முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் ,எந்த ஆதாரப் பிடிப்பும் அற்றோர் என எல்லோரும் இதில் அடக்கம் . இந்த எண்ணிக்கை வேகமாக உயரும் .ஆனால்……
முதுமை இரங்கத்தக்கதல்ல முதுமையும் ஒரு வாழ்வுரிமையே என்கிற கம்பீரமான நம்பிக்கையோடு நடை போடுவோர் எத்தனை பேர் ?
முதுமையிலும் வர்க்கமும் வர்ணமும் சாதியும் அதனதன் முகத்தைக் காட்டுகிறதே . அதனதன் இயல்புக்கேற்ப முதுமையின் சுமையும் வலியும் கூடிக்கொண்டே போகிறதே. பரந்த சமூகக் கண்ணோட்டமின்றி முதுமையின் சிக்கல்களுக்கு எளிய தீர்வொன்றுமில்ல. முதியோர் இல்லங்களும்தான்.
முதியோர் இல்லம் மட்டும்தான் நமக்கு அவமானமாகத் தெரிகிறதோ! கொஞ்சம் நிதானமாக கீழ்க்கண்ட கேள்விகளை அசை போட்டுப்பாருங்கள் ..
- முதியோர் ஓய்வூதியம் பெறுகிறவர்களில் எத்தனை பேருக்கு உரிய இருப்பிடம் உள்ளது? மாதம் ரூ 1000 / கொடுத்துவிட்டால் போதுமா?பிரச்சனை தீர்ந்ததா?
- முதியோர்களின் நோய்க்கென சிறப்பு மருத்துவர் எத்தனை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ளனர் ? வட்ட / வட்டார மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர் உண்டா? மூட்டுவலி, சர்க்கரை, இரத்தக்கொதிப்பு என முதியோர்களின் நோய்க்கு தனி கவனிப்பு உண்டா ?
- கர்நாடக மாநிலத்தில் முதியோருக்கு தனி அடையாள அட்டை [சீனியர் சிட்டிசன் கார்டு] உண்டு; இதன் மூலம் பஸ்ஸில் பயணச் சலுகை உண்டு ரயிலைப் போல. ஆனால் மோடிஷா அரசு முதியோர் பயணச் சலுகைகளைக்கூட கொரானாவை சாக்கிட்டு பறித்துவிட்டது .
- படியேறமுடியாத முதியவர்களுக்கான நடை மேடை எல்லா இடத்திலும் உண்டா ? சாலையை நிதானமாகக் கடக்க வழிவகை உண்டா ? தனிவரிசை உண்டா?
- இப்படி அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கு பதில் இல்லை. இது ஒரு புறம். மறுபுறம் முதியோர் இல்லங்களை எதிர்மறையாய் பார்க்கலாமா ?
- கூட்டுக்குடும்பம் தான் முதியோருக்கு உரிய பாதுகாப்பும் கவுரவமும் என நீட்டி முழக்குவது கேட்க நன்றாக இருக்கும்.
கள்ளக்கணக்கு குருமூர்த்தி சொல்கிறான், “ பென்ஷன் ஓய்வூதியம் என்பது மேற்கத்திய நாடுகளின் சீரழிந்த சிந்தனையாம். கூட்டுக் குடும்பமும் பெற்றோரைப் பாதுகாக்கும் பிள்ளைகளுமே இந்திய பாரம்பரியமாம். புத்திர பாக்கியத்தை வலியுறுத்துவது அதற்குத்தானாம். புத்திரர் இல்லாதவர் கோயில்கள், ஆசிரமங்களைச் சரணடைய வேண்டுமாம்.”
மோடிஷா ஆட்சி ஓய்வூதியத்தை ஒழித்துக் கட்ட பின்னுகிற ஆன்மீக பண்பாட்டு வலையல்லவா இது ?
கூட்டுக் குடும்பமும் பெற்ற பிள்ளைகளின் கவனிப்பும் பெற்றோருக்கு இன்பமே. ஆயின் இன்றைய சமூக யதார்த்தம் அதற்கு உதவுவதாய் இல்லையே !
- இன்றைய பொருளாதார நெருக்கடியில் கூட்டுக்குடும்பம் நடத்தும் அளவு சற்று வசதியான வீட்டை வாடகைக்கு எடுப்பது எத்தனை பேரால் சாத்தியம் ? இட நெருக்கடியும் –பொருளாதார நெருக்கடியும் உறவுகளில் விரிசலை உருவாக்குகிறது என்பதன்றோ யதார்த்தம்?
- தனிக்குடும்பம் நடத்துவதே சிரமம் அதில் பெற்றோரை கூடவே வைத்துக் காப்பாற்றும் வாய்ப்பும் வசதியும் இல்லாதவர்கள் என்ன செய்வது ? இதனை இயல்பாகப் பார்ப்பதா ?குழந்தைகள் பெற்றோரை மதிக்கவில்லை என்கிற விதி விலக்கான நிகழ்வை பொதுப்போக்காகக் கூறலாமோ?
- வசதியான வேலையும் கை நிறையச் சம்பளமும் கிடைக்கப் பெற்றவர்கள் தொழில் நிமித்தம் இடம் விட்டு இடம் ஓடிக்கொண்டிருக்க வேண்டியவர்களாயும் – நாடு விட்டு நாடு பறந்து கொண்டிருக்க வேண்டியவர்களாயும் உள்ள சூழலில் ; அதுவும் வேகமான பொருளாதார நெருக்கடியில் வேலைக்கும் வாழ்க்கைக்கும் உத்திரவாதமான நிலை இல்லாத போது ; காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள ஓட வேண்டிய கட்டாயத்திலிருக்கும் இன்றைய இளைஞர்கள் பெற்றோருக்காக பணம் நிறைய செலவு பண்ண இயலும், ஆனால் உடன் இருந்து பார்க்க இயலுமா ? இந்த நடை முறைச் சிக்கலில் இருந்து விடுபட தரமான முதியோர் இல்லங்களைத் தேடுவது எப்படிப் பிழையாகும?
பெற்றோர்களின் உணர்வைப் பிள்ளைகள் புரிந்து கொள்வதும் ; தம் கடமையை உணர்ந்து செயல்படுவதும் மிக அவசியத் தேவை . அது போல் மாறியுள்ள சூழலைப் புரிந்து பிடிவாதங்களைத் தளர்த்தி பிள்ளைகளோடு இணைந்து வாழ பெற்றோரும் முயலவேண்டும் . இது இருவழிப் பாதை . இப்படி இருவரும் மனம் ஒத்து நல்ல பாதுகாப்பான குடும்பச்சூழலை உருவாக்குவதுக்கே முன்னுரிமை தரவேண்டும் .அதற்காக உரக்கப் பேசுவோம் . இதில் மாற்றுக் கருத்தே இல்லை . இத்தகைய இணக்கமான சூழல் நூற்றுக்கு 75 பேருக்கு அமையப் பெற்றாலே அது பெரும் வெற்றி .ஆயின் சரிபாதிக்கே அமையாது என்பதே உண்மை மிகவும் தாரளமாய்க் கணக்கிட்டாலும் அப்போதும் 25 விழுக்காடு முதியோருக்கு முதியோர் இல்லங்கள் நிச்சயம் தேவைப்படுமே !அதுவே பெரும் எண்ணிக்கையாகுமே !அதனை யோசிக்க வேண்டாமா ?
ஆக . முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் தொடங்கி – பென்ஷன் பெறும் அரசு ஊழியர் – இனி பென்ஷனே கிடைக்காமல் போகிற ஊழியர்கள் , வசதியான குடும்பத்தில் உள்ளோர் வரை கணிசமான முதியோர்களுக்கு இல்லங்கள் தேவை.

தற்போது இந்தியா முழுவதும் சுமார் 750 முதியோர் இல்லங்களே உள்ளன என்பதும் ; அரசு சார்ந்த இல்லங்கள் மிகக்குறைவு என்பதும் ; தொண்டு நிறுவனங்கள் நடத்தும் இல்லங்களே ஓரளவு தேவையின் மிகச் சிறிய பகுதியை நிறைவு செய்கிறது என்பதும் உறுத்தும் உண்மை அல்லவா ?
தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு இரண்டு முதியோர் இல்லங்கள் திறக்கப்படும் என்கிற ஜெயலலிதா காலத்து அறிவிப்பு வெறும் கண்துடைப்பானதன்றி அமுலாகவில்லையே !
வட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம் அரசு உதவியோடு உருவாக்கப்படும் என்கிற கொள்கை குறிப்பு ஆழக்குழி தோண்டி புதைக்கப் பட்டுவிட்டதேன் ?
பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பல்கிப் பெருகியுள்ள சூழலில் ; அரசு கணிசமான நிதி உதவிதருவதாக அறிவித்த பின்னும் முதியோர் இல்லங்கள் நடத்த தன்னார்வத் தொண்டு பொங்கி வழியாதது ஏன் ?
இந்த வெற்றிடத்தில் வெறும் லாப நோக்கோடு எந்திரகதியாய் இயங்கும்\தனியார் முதியோர் இல்லங்கள் பெருகுகிறதே ; இதற்கு மாற்று என்ன ?
முதியோருக்குத் தேவை படுத்துக் கிடக்க ஒரு கட்டிலும் , வேளாவேளைக்கு சாப்பாடும் மட்டுமே என்கிற வறட்டுப் புரிதலோடு முதியோர் இல்லங்களைப் பார்க்கும் பழுதான பார்வையை முழுதாகத் தலை முழுகப்படவேண்டும்.
முதியோர் நம்மிடம் உயிர் யாசகம் கேட்கவில்லை. கவுரவமான வாழ்க்கை அவர்களின் அடிப்படை மனித உரிமை .
முதியோர் இல்லங்கள் நல்ல சுற்றுச் சூழலோடு அமையவேண்டும் . நல்ல படுக்கை , சத்தான அவரவருக்குத் தேவையான உணவு , சரியான மருத்துவ உதவி ,சுயதேவையை நிறைவு செய்யும் காய்கறித் தோட்டம் [ இதனை முதியோர்களே பராமரிக்கலாம் ] பொழுதுபோக்க உரிய வாய்ப்புகள் , உலாவப் பூங்கா ,நூலகம் , கணினி , நடைபயிற்சிக்கு தோதான இடம் , முதியோர்களின் ஆற்றலை , ஈடுபாட்டை பகுத்தறிந்து பயன்படுத்த ஊக்குவிக்க தக்க வழிகாட்டல் , மொத்தத்தில் முதியோர் இல்லங்கள் தென்றல் அரவணைக்கும் பூங்காக்களாக மாற வேண்டும் என்பது கனவல்ல . தொலை நோக்கு திட்டம் .படிப்படியாக இந்தத் திக்கில் நடை போட வேண்டும் .
முதியோர் இல்லங்கள் அருகிலிருக்கும் பள்ளி /பூங்கா இவற்றை தத்தெடுத்து பரமரிக்க / குழந்தைகளுக்கு டூயூசன் கற்றுக்கொடுக்க என ஆக்கபூர்வமாக சேவை செய்யலாம் . முதியோரின் அனுபவமும் திறமையும் தொண்டாக விருப்ப பங்களிப்பாக மாற்றலாம்.
ஒரு சர்வாதிகாரி எல்லாருடைய கோரிக்கைகளையும் நிராகரித்து வந்தான். அவனே சிறைத்துறையை சீர் திருத்த வேண்டும் என்கிறபோது நூறு விழுக்காடு ஏற்று செயல்படுத்தினானாம் . காரணம் நாளை தனக்குத் தேவைப்படலாம் என்கிற சுயநலம்தான்
அது எப்படியோ இன்னும் கால் நூற்றாண்டுக்குப் பின் மொத்த மக்கள் தொகையில் மூண்றில் ஒரு பகுதி முதியோராகவே இருப்பர் . எனவே சகலரும் கவலைப்பட வேண்டிய விஷயம் இது . இன்றைய இளைஞர் நாளைய முதியோரே! முதியோர் இல்லங்கள் சாபக்கேடல்ல தவிர்க்க முடியாத சமூகத்தேவை என்பதுணர்க !
[ 31-10-2014 அன்று தீக்கதிரில் எழுதிய கட்டுரையில் தேவையான சிறு சிறு மாற்றங்கள் செய்துள்ளேன் .இன்றைய சூழலில் மேலும் ஒன்றை இணைக்க விழைகிறேன். இந்த ஆண்டு மார்ச் 24 அன்று நான் எழுதிய இக்கவிதை தனிப்பட்ட உணர்வல்ல. இந்திய சராசரி வயதான 67.8ஐ கடந்துவிட்ட நெருங்கிவிட்ட தோழர்கள் பலரோடு பேசியதின் பொது உணர்வு)
“கொடிது கொடிது
முதுமையும் தனிமையும்
அதனினும் கொடிது
அடைபட்டுக் கிடத்தல்.
கடமைகள் முடிந்தது
கவலையும் குறைவு
வாழ்ந்தது போதும்
எந்த நொடியிலும்
புறப்படத் தயார்!
எமது மரணம் மற்றவர்
சுமை குறைக்கும்
வெற்றிடம் ஏதும்
நிச்சயம் இல்லை!
ஆனாலும் இந்த
கொரனா மரணம்
வேண்டவே வேண்டாம்.
சாவுக்கு யாரும் வரமுடியாது
என்கிற மன உறுத்தலா?
போகும்போது பரபரப்பான
சாவுப்பட்டியலில் இன்னொன்று
என்றாகிவிடக் கூடாது என்பதலா?
செத்தபின்பு
கொண்டாடினால் என்ன?
குப்பையில் தூக்கி எறிந்தாலென்ன?
செத்தவனுக்கு எல்லாம் ஒன்றுதான்.
சாவைக் கண்டு அஞ்சவில்லை
சாவை அரவணைக்கத்
தயாராகவே இருக்கிறேன்.
பலருக்கு நோய் தொற்ற
கொரானா வாகனமாய்
சாகவிரும்பவில்லை!
சரரிதானே! தோழா!
சிலநாள் எம் தனிமை
அர்த்தமுள்ளதாய் இருக்கட்டும்!
தனிமை இனிதானது
கொரானா உபயம்.”
சுபொஅ.

