அக்டோபர் 17 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆர்.கே. சண்முகம் செட்டி (Economist R.K.Shanmukham Chetty Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 17 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆர்.கே. சண்முகம் செட்டி – முனைவர் பு. அன்பழகன்

ஆர்.கே. சண்முகம் செட்டி (R.K.Shanmukham Chetty) அக்டோபர் 17, 1892இல் பிறந்து மே 5, 1953இல் மறைந்த இந்திய நாட்டினைச் சார்ந்த வழக்கறிஞர், பொருளாதார அறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராகப் பணியாற்றினார். சண்முகம் செட்டி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார் மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றார். சண்முகம் செட்டி, தனது அரசியல் வாழ்க்கையை இந்தியத் தேசிய காங்கிரஸில் தொடங்கினார், பின்னர் நீதிக் கட்சிக்கு மாறினார். 1931ஆம் ஆண்டில், “தீண்டத்தகாத சமூகத்தினருக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்க” மத்திய சட்டமன்றத்தில் ஒரு மசோதாவைச் சண்முகம் செட்டி அறிமுகப்படுத்தினார். அவர் 1935 மற்றும் 1941க்கு இடையில் கொச்சி சமஸ்தானத்தின் திவானாக பணியாற்றினார். தனது பதவிக் காலத்தில், சண்முகம் செட்டி பல நிர்வாக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார் மற்றும் கொச்சி துறைமுகத்தின் வளர்ச்சிக்கு உழைத்தார், இது மாநிலத்தின் பொருளாதார செழிப்புக்கு வழிவகுத்தது. 1944ஆம் ஆண்டில், அவர் அமெரிக்காவில் பிரெட்டன் வூட்ஸ் உலக பணவியல் மாநாட்டில் கலந்து கொண்டார். பொருளாதார, நிர்வாக மற்றும் சமூக சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அவர் உலகம் முழுவதும் பயணம் செய்தார். அரசியலமைப்பு சபையில், சண்முகம் செட்டி நிதி கூட்டாட்சி பிரச்சினைகளில் தலையிட்டார்.

பொருளாதாரத்தில் சண்முகம் செட்டி பெற்றிருந்த நிபுணத்துவம் காரணமாக, ஜவஹர்லால் நேருவின் விருப்பத்திற்கு மாறாக, இந்தியாவின் முதல் சுதந்திர அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பணியாற்ற, மகாத்மா காந்தியால் சண்முகம் செட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சண்முகம் செட்டி இந்தியாவின் முதல் நிதியமைச்சர் (1947-1949) மற்றும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட மூன்று காங்கிரஸ் அல்லாத நபர்களில் ஒருவராக அவர் இருந்தார். 1947 நவம்பர் 26 அன்று, இந்தியாவின் முதல் சுதந்திர பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். வரி ஏய்ப்பு விசாரணைகளிலிருந்து ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்கும் ஒரு ஊழலில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதால், சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் அவர் இந்தியாவின் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சண்முகம் செட்டி, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் (ICCI) நிறுவனர் மற்றும் தலைவராகவும், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டார். முக்கிய வர்த்தக மற்றும் வணிக அமைப்புகளின் வளர்ச்சிக்குச் சண்முகம் செட்டி குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்தார். 1951இல், அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அவர் 1953இல் தனது 61 வயதில் மறைந்தார்.

ஆதாரம்: www.constitutionofindia.net; www.dnaindia.com; www.iloveindia.com; www.peoplepill.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *