ராபர்ட் அலெக்சாண்டர் முன்டெல் (Robert Alexander Mundell) அக்டோபர் 24, 1932இல் பிறந்து ஏப்ரல் 4, 2021இல் மறைந்த கனடா நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். அவர் 1999இல் பணவியல் இயக்கம் மற்றும் உகந்த செலாவணி (optimum currency) பற்றிய தனது ஆய்வுப் பணிக்காகப் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். முன்டெல் Father of the Euro (யூரோவின் தந்தை) என்று பிரபலமாக அறியப்படுகிறார், மேலும் உகந்த செலாவணிப் பகுதிகள் மற்றும் செலாவணிப் பரிமாற்றம் குறித்த அவருடைய பணிக்காக அங்கீகரிக்கப்படுகிறார். அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் கீழ் அமெரிக்கா உட்பட பல்வேறு அரசாங்கங்களுக்கு முன்டெல் பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பணி செல்வந்தர்களுக்கான வரிகளைக் குறைக்கும் கொள்கைகளுக்கு அறிவுசார் அடித்தளத்தை வழங்கியது, இது supply-side economomics (அளிப்பு சார்ந்த பொருளாதாரம்) என்று அழைக்கப்படும் ஒரு இயக்கமாகும். இந்தப் பொருளாதாரம் 1980களில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற இடங்களில் செல்வாக்கு மிக்கதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக, முன்டெல், Father of Reaganomics (ரீகனோமிக்ஸின் தந்தை) என்றும் அழைக்கப்படுகிறார்.
முன்டெல், 1960களின் முற்பகுதியில், பன்னாட்டுப் பண நிதியத்தின் ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்தபோது, செலாவணி மாற்று விகிதங்கள் மற்றும் பணவியல் கொள்கைகளில் அவற்றின் விளைவு குறித்த தனது முக்கிய பொருளாதார பகுப்பாய்வைத் தொடங்கினார். 1961ஆம் ஆண்டில், தொழிலாளர் மற்றும் வர்த்தகத்தின் சுதந்திரமான இயக்கம் இருக்கும் ஒரு பொருளாதாரப் பகுதியில் அல்லது உகந்த செலாவணி பகுதியில் ஒற்றை செலாவணி சாத்தியமானதாக இருக்கும் என்ற கோட்பாட்டை அவர் முன்வைத்தார். செலாவணி மாற்றில், மிதக்கும் மாற்று விகிதங்களின் விளைவை ஆய்வு செய்த முதல் பொருளாதார அறிஞராக முன்டெல் திகழ்கிறார். முன்டெல் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் மூலதன இயக்கங்களை முந்தைய மூடிய பொருளாதார மாதிரிகளில் அறிமுகப்படுத்தினார். ஒரு நாட்டின் செலாவணி மாற்று விகிதம், மூலதனச் சந்தைகளில் அந்த நாட்டின் செலாவணியை வைத்திருக்க மக்களின் விருப்பத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்றமுடிவினை அவர் எட்டினார்.
ஜனவரி 1, 1999 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் 15 உறுப்பினர்களில் 11 நாடுகள் ஏற்றுக்கொண்ட ஒற்றை செலாவணியான யூரோவை உருவாக்குவதில் முன்டெலின் புரட்சிகரமான கோட்பாடுகள் முக்கிய பங்கு வகித்தன. 1970களின் முற்பகுதியிலேயே, பணவீக்கத்தைக் குறைக்க இறுக்கமான பணத்தைப் பயன்படுத்துவதையும், உண்மையான பொருளாதாரம் வளரத் தூண்டும் சலுகைகளை வழங்க வரி விகிதங்களைக் குறைப்பதையும் முன்டெலின் ஆதரித்தார். 1961ஆம் ஆண்டில் முன்டெல் உகந்த செலாவணிப் பகுதிகள் பற்றிய தனது கோட்பாட்டை முன்வைத்தார். அவர் அளிப்பு சார்பு பொருளாதாரத்தின் நிறுவனருள் ஒருவர் ஆவார், மேலும் பன்னாட்டுச் செலாவணி அமைப்பின் வரலாறு மற்றும் பேரியல் பொருளாதாரத்தின் வரலாறு ஆகியவற்றிலும் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்.
செலாவணி விகிதங்கள் “மிதக்கும்” (float) போது மற்றும் முதலீட்டு மூலதனம் எல்லைகளைத் தாண்டி சுதந்திரமாக நகர முடியும் போது, பணவியல் கொள்கை பொருளாதார உற்பத்தியைப் பாதிக்கிறது, அதேசமயம் நிதிக் கொள்கை அதைப் பாதிக்காது என்பதை முன்டெல் ஒரு கணித மாதிரியைப் பயன்படுத்தி நிரூபித்தார். வெவ்வேறு இலக்குகளை அடைய ஒரு அரசாங்கம் நிதி மற்றும் பணவியல் கொள்கையைப் பயன்படுத்தலாம் என்று முன்டெல் வாதிட்டார். ஸ்காட்டிஷ் பொருளாதார வல்லுநர் மார்கஸ் ஃப்ளெமிங், அதே நேரத்தில் இதேபோன்ற கருத்தைக் கொண்டிருந்தார். எனவே இந்த மாதிரி “முன்டெல்-ஃப்ளெமிங் மாதிரி” என்று அறியப்படுகிறது.
ஆதாரம்: www.britannica.com; www.nobelprize.org; www.hetwebsite.net; www.economics.ca; www.thecanadianencyclopedia.ca
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

