மலேசியாவிற்குப் பலமுறை சென்ற அனுபவங்களை அவ்வப்போது எழுதிய சுப்ரபாரதிமணீயன் இங்கு அவற்றைத் தொகுத்திருக்கிறார்.

கோலாலம்பூர் வீதிகளில் தமிழ்ப் பெண்களைக் கூட புடவையில் காண்பது அரிதாகவே இருக்கிறது என்று நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன். முதல் பாரா முழுவதும் பெண்களின் ஆடைகளையேக் காண்பதிலேயே செலவிடுகிறார்.

முதல் அத்தியாயம் மலேசியா பற்றிய சிறு சிறு செய்திளை நம் முன் கொட்டுகிறது. ராம்லீ என்ற நடிகர், 2 ஜி ஊழல் கோடீஸ்வரர் ஆனந்த கிருஸ்ணன், பொதுத் தேர்தல், டத்தோ… என்றிப்படி.

பத்து மலை முருகனும் பெரியாரும் என்ற இரண்டாவது அத்தியாயத்தில் தன்னை கடவுள் மறுப்பாளன் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார் ஆசிரியர். தமிழர்கள் சீனம், ஆங்கில மொழிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க விரும்புவதால் தமிழ் பள்ளிகள் பலவீனமடைந்து வருவதாக பதிவு செய்கிறார்.பல இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் அதிகம் இருப்பதையும் இப்போது அவற்ற்ன் எண்னிக்கை குறைந்து வருவதையும் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்தியாவில் கல்வி ஏழைகளுக்கு எட்டாத கனி. அங்கு அது எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கும் பழம்.

மலேசியாவில் பெரியார் சிலையைப் பார்க்க கோலாலம்பூரிலிருந்து 250 கி.மீ. நிபோங் போக வேண்டும் என்று தெரிவிக்கிறார். பெரியார் சிலையைப் பார்க்கப் போகிறார். பத்துமலை முருகன் ஆசி கிடைக்காததால் வாகன நெரிசலில் சிக்கி வழியில் தென்பட்ட புத்தர் கோவிலில் இறங்கி இளைப்பாறுகிறார். அங்கு ஒரு குலுக்குச் சீட்டு எடுத்து ஆரூடம் பார்க்கிறார் ஆசிரியர்.

ஒரு முறை மலேசியாவில் ரப்பர் தோட்டப் பகுதிக்குச் சென்றார் பெரியார். அவருடைய சாமியார் தோற்றத்தைப் பார்த்த தமிழ்ப் பெண்ணொருத்தி, ‘என் மகளுக்குப் பிள்ளை இல்லை. நீங்க ஆசீர்வாதம் செய்யுங்க!’ என்றாளாம். பெரியார் நாகம்மையைக் காட்டி, ‘இவங்க என் சம்சாரம். இவங்களுக்கும் குழந்தை இல்லை. டாக்டரை நம்புங்க!’ என்று சொல்லி அனுப்பினாராம்.

மலேசியா முஸ்லீம் நாடு. கடவுள் மறுப்பிற்கு சட்டத்தில் இடமில்லை. அதன் சட்டம் ‘கப்பர் சாயான்’ என்கிறது. இதற்கு ‘கடவுள் மேல் நம்பிக்கை வை!’ என்று பொருள் என்ற செய்தியை அறிகிறோம்.

மூன்றாம் அத்தியாயத்தில் ஆசிரியர் இந்நூலை இவ்வாறு அறிமுகம் செய்கிறார்- “2012ல்  மலேசிய எழுத்தாளர் சங்கம் நாவல் பட்டறை ஒன்றை நடத்த என்னை அழைத்திருந்தது. அதன் பின் மலேசிய அனுபவம், படித்த மலேசிய எழுத்தார்களின் நூல்கள், சந்தித்த எழுத்தாளர்கள் பற்றி 25 கட்டுரைகள் எழுதி அதனை ஓ…மலேசியா என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன்”.”

இந்நூலில் ஆசிரியரின் அவரின் மலேசியா பின்னணியில் எழுதப்பட்ட   மாலு நாவலுக்கு வந்த இரண்டு விமரிசனங்கள் ஒரு அத்தியாயம் முழுக்க இடம் பிடித்துள்ளன. முழுக்க மலேசியாவின் பின்னணியில் அவர் எழுதி வந்திருக்கும் சமீபத்திய நாவல்  கடவுச்சீட்டு என்பதுவும் குறிப்பிடத்தக்கது.



மலேஷிய தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் பயண அனுபவத் தொகுப்புகள் பற்றி ஒரு அத்தியாயம் உள்ளது. இது மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத்தை அளிக்கிறது. 1875ல் வெளிவந்த சிங்கி வர்த்தமானி என்ற இதழில் இஸ்லாமிய சமயத்திற்கு எதிர்மறையான கட்டுரை வெளியிட்ட காரணத்தால் தமிழ் மலர் நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற பதிவும் உள்ளது.

ஷட்டில் லைஃப் என்ற  மலேசியத் திரைப்படம் பற்றி ஒரு அத்தியாயம் உள்ளது.நல்ல அறிமுகம்

லங்காட் நதிக்கரையில்….. எழுதிய மலேசிய எழுத்தாளர் ரங்கசாமியை சந்தித்த விவரத்தை ஒரு அத்தியாயத்தில் சுவைபடச் சொல்கிறார். இவர் சென்ற போது அவர் மக்கள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

நெத்திலி மீன்களும் சுறாக்களும்.. என்ற அத்தியாயத்தில் மலேசியாவில் மலாய் மொழி எழுத்தாளர்கள் தங்களை நெத்திலி மீன்கள் என்று வர்ணித்துக் கொள்கிறார்கள் என்ற செய்தி வருகிறது. எழுத்தாளர் ரெ. கார்த்திகேயனின் நூல்களுக்கு இரண்டு அத்தியாயங்கள் ஒதுக்கி உள்ளார்.

98 பக்கங்கள் கொண்ட இந்நூலில் ‘படித்ததில் பிடித்தது…மலேசிய நூல்களிலிருந்து…’ என்ற அத்தியாயம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மலேசிய நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி என்று தெரிவிக்கிறார். பத்து மலை முருகன் கோவிலின் கும்பாபிஷேகத்தை கும்பவிசேகம் என்ற சொல்லால் குறிக்கிறார். அதே போல் ஐந்து என்ற சொல்லை அய்ந்து என்று எழுதுகிறார்

மலேசிய எழுத்தாளர் எஸ்.பி. பாமாவின் நூல்களை இரண்டு அத்தியாயங்களும் எழுத்தாளர் சீ. அருணின் நூல்களை ஒரு அத்தியாயமும் பேசுகின்றன.

மொத்தத்தில் ஒரு தேர்ந்த எழுத்தாளர் வெளி நாட்டைப் பார்க்கும் கண்ணோட்டம் இந்நூல். தொடக்க அத்தியாயங்கள் ஆசிரியரின் டைரிக் குறிப்புகளாகத் தென்பட்டாலும் பின்னர் தீவிர இலக்கிய ஆய்வாக முடிகிறது. மலேசிய இலக்கியத்தை அறிய ஆர்வமுள்ளோருக்கு ஒரு திறவு கோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஓ...மலேசியா!- Dinamani

ஓ..மலேசியா 

சுப்ரபாரதிமணியன்.  

(  ரூ 130 , பழனியப்பா பிரதர்ஸ் சென்னை வெளியீடு )

விமர்சனம் : ராஜி ரகுநாதன், ஹைதராபாத்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *