ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக் காணும் போது மட்டும் ஏன் மற்றவர்களை அழைத்துக் காண்பிக்கிறோம் என்ற கேள்விக்கணையோடு தொடங்கி, வானவில்லுக்காக 62 நாடுகள் பயணித்து பல்வேறு இடங்களில் தெரிந்த வானவில்களை புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் குவித்து வைத்திருக்கும் வால்டர் லெவினை நம் கண்முன் நிறுத்தி, அப்பிரமாண்டம் விலகுவதற்குள் புத்தகத்தின் பாதி பக்கங்களை ஆசிரியர் நம்மைக் கடக்கச் செய்கிறார்.
ஆங்காங்கே பரிசோதனைக்குள் செல்லும் புத்தகத்தின் பக்கங்கள், அதன் ஆழம் அதிகமாகும்போது, வரலாற்றின் பக்கம் செல்வதும். தேவைப்படும் இடத்தில் அறிவியல் விளக்கங்கள் மற்றும் அதற்குரிய படங்கள் என நீண்டு, நம்மை எங்கேயும் சோர்வடைய விடுவதில்லை. ஒரு கைப்பேசி அழைப்பை ஏற்று விட்டு மறுபடியும் வந்து ‘ எந்தப் பக்கத்தில் விட்டோம் ‘ என்ற தேடுதலே தேவை இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் நிச்சயம் ஒரு பக்கம் போல் இன்னொரு பக்கம் இல்லை என்பதை வாசகர்கள் படிக்கும் போது உணரவார்கள்.
ஒருவேளை எனக்கு அறிவியல் பின்புலம் இல்லை என்று நீங்கள் எண்ணினால், ‘ ஏன் இது சிவப்பாகத் தெரிகிறது? ஏன் சாலையில் நீர் இருப்பது போல் தெரிகிறது? குறிப்பாக மின்மினிப் பூச்சி மட்டும் ஏன் மின்னுகிறது என்ற சராசரி ஆர்வலராக இருந்தால் மட்டும் போதும், புத்தகம் எளிதாகப் புரிந்து விடும்.
ஒளி சார்ந்த எந்த அறிவியல் அறிஞர்களையும் விட்டு விடக் கூடாது என்பதில் ஆசிரியர் முடிவாக இருந்திருப்பார் போலும், வழிநெடுக அறிவியலாளர்களின் பெயர்கள் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் அவர்கள் யாவரும் அவசியம் சொல்லப்பட வேண்டியவர்களே என்பதை அவர்களின் கண்டுபிடிப்புகள் உறுதிபடுத்துகின்றன. குறிப்பாக அதிகம் வெளிச்சம் பாய்ச்சப்படாத ‘ சர்வதேச ஒளி ஆண்டின் கதாநாயகன் ‘ அல் கய்தம் பற்றி சிலாகிக்கும் போது புத்தகம் இன்னும் கூடுதலாக ஒளிர்கிறது.
இவற்றையெல்லாம் கடந்து, இங்கு சொல்லப்பட வேண்டிய முக்கியமான விஷயம் யாதெனில், ஆசிரியர் அதிகமதிகம் வகுப்பறையை மேற்கோள் காட்டுவதேயாகும்.
இதெல்லாம் ‘ சிலபஸ் ‘ இல் இல்லை என்று ஒதுங்கிக் கொள்ளும் இன்றைய வகுப்பறைகளில், கடந்த காலகட்டங்களில் எவ்வாறெல்லாம் வகுப்பறைகள் செய்முறை கூடங்களாக இருந்துள்ளன, அதில் ஆசிரியர்களும் மாணவர்களும் எவ்வாறெல்லாம் புளகாங்கிதம் அடைந்தார்கள் என்று சொல்லுமிடத்தில் இப்படி ஒரு வகுப்பறை நமக்கு கிட்டவில்லையே என்ற ஏக்கம் ஏற்படாமலில்லை. மாணவர்களுக்கு மத்தியில் குறைந்து வரும் அறிவியல் மீதான காதலுக்கு ‘ தன்னெழுச்சியான ‘ இது போன்ற செய்முறை வகுப்புகள் இல்லாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
புத்தகத்தின் இறுதிப்பகுதிகளுக்குள் கோபர்நிக்கஸ், கெப்ளர், கலிலியோ மற்றும் நியூட்டன் போன்ற ஐரோப்பிய அறிஞர்களைப் பற்றி பேசும் இடங்களில், இயல்பாகவே ‘ ஒளியின் வரலாறு ‘ கொஞ்சம் ‘ வலியின் வரலாறாக மாறுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை..
இதில் ஒரு வாசகனாக எனக்குப் பிடித்தது என்னவெனில், எல்லோரும் ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு பதில் கிடைத்தது தான். அறிவியலாளர் அவிசென்னா நண்பர்களை இரவு விருந்துக்கு அழைக்கிறார். அதில் கலந்து கொண்டவர்களுக்கு மிகப்பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. அவரின் அறையில் விளக்குகள் இல்லை.
மாறாக சுவற்றில் மின்மினிப் பூச்சிகள் பரவி இருந்தன. சுவற்றில் மின்மினிப் பூச்சிகளைக் கவர ஏதோ ஒரு வேதிபொருளை தேய்த்து வைத்திருந்திருக்கிறார். அதன் காரணமாக மின்மினிப்பூச்சிகள் வந்து ஒட்டிக் கொண்டன. அறை முழுவதும் வெளிச்சமாக இருந்துள்ளது. விருந்துக்கு வந்தவர்கள் மெய்சிலிர்க்க நிண்டார்கள் என்று விவரிக்கும் சமயத்தில்….
இன்றைய நவீன இரவு உணவகங்கள் தமது வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு முயற்சிகளை அலங்காரத்திற்காக செய்து வருகின்றன. அவர்கள் அவிசென்னாவின் இந்த முயற்சியையும் செய்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது. நகரங்களில் வாய்ப்பில்லை. ஊட்டி மற்றும் நீலகிரி போன்ற சுற்றுலா தலங்களில் முயற்சி செய்யலாம். அங்கே மின்மினிகள் அதிகம். அவ்வளவு ஏன்? தேனீ போல் வளர்ப்பு முறையில் கூட வளர்க்கலாம். அவிசென்னாவும் அவ்வாறு செய்திருக்க வாய்ப்புண்டு.
ஒளியை பார்க்க முடியும். உணர முடியுமா? என்றால், இருண்ட அறையில் நீங்கள் சில மணித்துளிகள் இருந்து விட்டு, வெளிச்சத்திற்கு வரும்போது உங்கள் கண்கள் கூசுமே, அது போல இப்புத்தகத்திலிருந்து வெளி வந்ததும் எப்போதும் உங்களுடன் இருக்கும் ஒளியை நீங்கள் புதுமையாக உணரத் தொடங்குவீர்கள். ஒளியை உணர வெளிச்சம் மட்டுமல்ல, இருளும் அவசியம் என்று சொல்லிச் செல்கிறது ‘ ஒளியின் சுருக்கமான வரலாறு ‘ என்ற இப்புத்தகம்.
புத்தகத்தின் பெயர் : ஒளியின் சுருக்கமான வரலாறு
ஆசிரியர்: ஆயிஷா இரா. நடராசன்
பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை: 100/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/oliyin-surukamana-varalaru/
பேரா. P. கலீல் அஹமது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

