ஒளியின் சுருக்கமான வரலாறு – நூல் அறிமுகம்
ஒளி என்பது துகளா? அலையா? என்னும் கருத்து முதல், நிறம் என்றால் என்ன? சிவி ராமனின் ஆய்வு என பல சிறப்பான கோட்பாடுகளை விளக்குகிறது இந்நூல். ‘இருட்டறை இதிகாசம்’ என்னும் இயலில் உள்ள சோதனைகள் எல்லாம் நமது வீட்டிலேயே பெரிய செலவு இல்லாமல் எளிதில் செய்து பார்க்கக்கூடிய சோதனைகள் தான். இந்நூல் வெறுமனே படிக்க மட்டுமல்ல, நாமே சுயமாக அறிவியல் ஆய்வுகளையும் செய்து பார்க்கவும் தூண்டுகிறது.
மொத்தம் 12 கட்டுரைகள். அனைத்தும் ஒளியைப் பற்றியது
மாணவர்கள் படிக்கும் பாடங்களில் அமையப் பெறாத பல இன்றியமையாத அம்சங்கள் இதில் காணப்படுவது தான் இந்த நூலின் சிறப்பு.
வானவில்லை பற்றிய கட்டுரையில் வானவில் ஏன் வட்டமாக தோன்றுகிறது? அது ஏன் சூரியனுக்கு எதிர் திசையில் அமைகிறது? மேகங்கள் குறுக்கே நிற்கிற பொழுது ஏன் வானவில் தோன்றுவதில்லை? வானவில்லையே கருப்பு கூலிங் கிளாஸ் கொண்டு பார்க்கக் கூடாது? என்பது குறித்து எல்லாம் இந்த கட்டுரையில் மிகச் சிறப்பு கூறப்பட்டுள்ளது.
கூலிங் கிளாஸ் அல்லது கருப்பு கண்ணாடி சூரிய ஒளியின் புற ஊதா கதிர்களிடமிருந்து நமது கண்களை பாதுகாப்பதோடு நின்றுவிடவில்லை. ஒளி குறித்த ஒரு காவியமே அதற்குள் உண்டு. எதிரொலித்தல் ஒளிவிலகள் குறிப்பிட்ட விளைவு என பல ஒளி பண்புகளை ஒரு கருப்பு கண்ணாடி விளக்கிவிடும். அதில் போலரைஷேஷன் என நாம் ஆங்கிலத்தில் அழைக்கும் தளவிளைவு முறையிலான கருப்பு கண்ணாடி தனி ரகம்.
வைரம் மின்னுவதற்கான காரணத்தையும் விளக்குகிறார் வைரத்தின் எந்த ஒரு பக்கத்தின் வழியே 24 டிகிரிக்கும் அதிகமான கோணத்தில் ஒளிக்கதிர் செல்லும் போது மட்டுமே முழுதாக எதிரொளிப்பு ஏற்படும். இதற்காக தகுந்த அளவில் வைரத்தை முகவெட்டு செய்கிறார்கள். இதற்கு பட்டை தீட்டுதல் என பெயரிட்டு இருக்கிறார்கள். ஒளி இன்றி வைரம் ஜொலிக்காது.
ஆம்புலன்ஸ் வண்டியில் “ஆம்புலன்ஸ்”என்று ஏன் இடவலமாக எழுதி இருக்கிறார்கள்? சமதள கண்ணாடியின் வழியே பார்க்கிறபொழுது பிம்பங்கள் எப்படி தெரிகிறது? பிம்பங்கள் ஏன் இடவல மாற்றம் அடைகிறது? என்பது குறித்து எல்லாம் எளிய ஆய்வுகள் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒளியானது நேர்கோட்டில் செல்கிறது என்பதற்கான தாலமி என்பவரது எளிய சோதனையை நாமும் செய்யுமாறு அருமையாக வழிமுறைகளை கூறியிருக்கிறார் ஆசிரியர்.
மின்மினிகளுக்கு ஒளி வீசும் தன்மை எப்படி வந்தது? எந்த பொருட்கள் ஒளியை உற்பத்தி செய்கின்றன?. அந்த ஒளியை பயன்படுத்தி மின்மினிப்பூச்சியின் வாழ்க்கை நிலை எவ்வாறு இருக்கிறது? என்கிற அற்புதமான ஒரு கேள்வியை முன்னிறுத்தி ஒரு கட்டுரையை வரைந்திருக்கிறார்.
சர்வதேச ஒளி ஆண்டின் கதாநாயகன் “அல் ஹசன்” பற்றி அற்புதமான ஒரு தகவலை கொடுத்திருக்கிறார். இளம் வயதில் தீவிர தேடல் மூலம் மதங்களை விட அறிவியலே உண்மை பொருளை விளங்க உதவும் என கண்டறிந்தார். இயற்கையே மதம் என உளறி அடிக்கடி மதச் சட்ட அரசால் கண்டிக்கப்பட்டவர். அல் ஹசன் ஆழமான அறிவியல் சோதனைகள் மூலம் பல அறிய கண்டுபிடிப்பு சாதனங்களை கண்டறிகிறார் . ஆனால் பேரரசர் இவருடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்க மறுத்து அவருக்கு மரண தண்டனையும் வழங்கப்படுகிறது. 1021 வரை அவர் வீட்டுக் காவலில்தான் வைக்கப்பட்டு இருந்தார். பலவகை ஒளியால் ஆய்வுகளை மேற்கொள்ள அவருக்கு அப்படி ஒரு வாழ்க்கை மிகவும் வசதியாக போனது. இறுதியாக அடுத்த 20 வருடங்கள் கல்வியாளராக ஆய்வாளராக தன் கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் வெற்றி கண்டு 1040 இல் காலமானார்
சில பொருட்கள் ஒளிர்கின்றன. சில பொருட்கள் ஒளிர்வதில்லை. ஒளிர்தல் ஏன் நிகழ்கிறது? எந்தெந்த வகையில் நிகழ்கிறது என்கிற ஆய்வு அடங்கிய ஒரு கட்டுரையும் இதில் அடங்கியுள்ளது.
ஒரு பொருள் ஏன் பச்சையாக இருக்க வேண்டும்? இலைகளை அறுத்து பச்சை நிறத்தை வெளியே எடுக்க வராதா? ஆனால் உதிர்ந்த இலை காய காய பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தை அடைந்துவிடுவதேன்? எதை எரித்தாலும் புகை வெளியேறியதோடு இறுதியில் கருப்பாக சாம்பல் மிஞ்சுவது ஏன்? பச்சை பொருளுக்கு பச்சை சாம்பலும் மஞ்சள் பூவுக்கு மஞ்சள் சாம்பல் வராதது ஏன்? எப்போதும் எல்லா பொருட்களின் எரித்த சாம்பலிலும் கருப்பாகவே இருப்பது ஏன்? என்கிற வினாவுக்கான விடையையும் ஒரு கட்டுரையில் சொல்லி இருக்கிறார்.
ஒளியின் பல்வேறு பரிமாணங்களை அருமையான வினாக்களோடு அந்த வினாக்களின் விடைகளோடு சிறார்களுக்கு ஏற்றவாறு எளிமையான வார்த்தைகள் அடங்கிய கட்டுரையாக இந்நூல் மிளிர்கிறது. சிறார்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் நன்கு பயன்படக்கூடிய நூல்.
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர்: ஒளியின் சுருக்கமான வரலாறு
நூல் ஆசிரியர் : ஆயிஷா நடராசன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
வகைமை: சிறார் அறிவியல் கட்டுரைகள்
விலை: 95/
பக்கங்கள்: 104
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/oliyin-surukamana-varalaru/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சகுவரதன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.