சார்லஸ் டார்வின் உருவாக்கிய உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை அழகிய வண்ணப் படங்களுடன் குழந்தைகள் விரும்பும் வண்ணம் உருவாக்கியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த சபினா ராதேவ். இவர் அடிப்படையில் கிராபிக் டிசைனர் மற்றும் மூலக்கூறு உயிரியாளர். உயிரினங்கள் மேல் வியப்பும், ஆர்வமும் உருவாகவும், அதன் வழியாக உயிரினங்களின் தோற்றத்தை குழந்தைகள் புரிந்து கொள்ளவும் ஆகச் சிறந்த புத்தகம் இது..காபி மேசைப் புத்தகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதலில் புத்தகத்தின் படங்களை உற்று நோக்க வேண்டும், பின்பு அதன் அருகிலுள்ள 2 அல்லது 3 வரிகளை வாசித்தால் மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
எட்டு வயதிலேயே டார்வினுக்குத் தாவரங்களின் பெயர்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம், சிப்பிகள் , முத்திரைகள், கடித உறைகள், காசுகள், தாதுப்பொருட்கள் சேகரிப்பு என இயற்கைவாதியாகவும் பழங்கலை ஆர்வலராகவும் மாற ஆர்வத்துடன் காணப்பட்டார்.
அது பின்னால் அவருக்கு கிடைத்த பீகிள் பயணம் வழியாக மேம்பட்டு உயிரினங்களின் தோற்றம் உருவாவதற்கான வழியாக அமைந்தது.
காலபாகோஸ் தீவில் இருந்து பெட்டி பெட்டியாக கொண்டு வந்த சான்றுகள், அங்கு பார்த்த ஃபின்ச் குருவிகள் பற்றிய குழப்பம் ஆகியவை, ஒரே மாதிரியான சூழலில் வாழ்பவை பின் ஏன் வித்தியாசமாக காட்சியளிக்க வேண்டும் என்ற கேள்விகளை உருவாக்கியது. அங்கு பார்த்த வித்தியாசமான ஆமைகள் அங்குள்ள வண்டுகள், உடும்புகள், எலும்புகள் ஆகியவற்றால் கப்பலில் ஒரு வகையான குழப்பத்துடன் லண்டன் திரும்பினார்.
பின்பு அதற்கான குறிப்புகளை எழுதுவதற்காக நீண்ட நேரம் உழைத்தார்.
புகழ் பெற்ற மண்ணியல் அறிஞர் சார்லஸ் லையல்யுடன் தொடர்பு ஏற்பட்டது. ஹென்ஸ்லோ என்ற தாவரவியலாளருடனும் ஏற்பட்ட தொடர்பு அதன் வழியே அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்டின் புத்தகத்தை வாசிக்கச் செய்தது.
பின்பு அதனை வெளியிட நேரம் வந்தது. அக்காலங்களில் கிருத்துவ நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. அவர்கள் உலகின் உள்ள ஜீவராசிகளும், தாவரங்களும் அப்படியே கடவுளின் படைப்பு என்று நம்பினர். அது மட்டுமல்ல உலகம் படைக்கப்பட்டு ஆறு நாட்களில் திட்டமிடுபவரால் (கடவுள்) ஒரே முறையாகவும், இறுதியாகவும் வடிவமைக்கப்பட்டது. இது தான் விதிவிலக்காக அன்றைய நம்பிக்கை. டார்வினது நூல் இக்கருத்துக்களைத் தகர்த்தெறிகின்றது. இரக்கம் கொண்ட, அக்கறையுடைய கடவுளை காட்சியிலிருந்து நீக்குகிறது. அதுதான் இயற்கை தேர்வுக் கொள்கை. படைப்புக் கொள்கையை முதலில் எதிர்த்து கேட்டவர்கள் டார்வினுடைய பாட்டனார் ஏராமஸ் டார்வின். மற்றவர் இயற்கையாளர் டி லாமார்க்.
இறுதியாக வெளியிடப்பட்ட போது கோட்பாட்டின் அடிப்படையான செய்தி மிக எளிமையாக இருந்தது. பரிணாம வளர்ச்சி உறுதியாக நடந்து இருக்கிறது என்பதே அது.
வேடிக்கையான நிகழ்வு ஒன்று ஆக்ஸ்ஃபோர்டின் பிஷப் கேட்டார் டார்வின் பாட்டனார் வழியிலா? பாட்டி வழியிலா? அல்லது குரங்கிலிருந்து வந்தவரா என்று?
இயற்கை தேர்வில் குரங்கு இருந்தால் நாம் அதனை மறுக்க முடியுமா என்ன? பரிணாம வளர்ச்சியின் இயங்கு சக்தி இயற்கைத் தேர்வு தானே!