நூலாசிரியருடைய ஆசிரியர் திரு. ஸ்டாலின் ராஜாங்கத்துடன் சேர்ந்து நந்தன் பற்றிய கள ஆய்வுக்கு சென்ற போது பௌத்தம் நம் பண்பாட்டு நம்பிக்கைகள் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றி ஓரளவு புரிந்து கொண்டதாகவும், அதன் பின்அயோத்திதாசரை ஊன்றி வாசித்ததே.. ஓணம் பண்டிகை பற்றிய தேடலுக்கு காரணம் என்கிறார் நூல் ஆசிரியர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியர் மேற்கொண்ட கள ஆய்விலும் மக்கள் உடனான நேரடி உரையாடலிலும் கிடைத்த செய்திகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திரு ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள்” நாம் கதைகளால் வீழ்த்தப்பட்டவர்கள் “என்ற தலைப்பில் முன்னுரை தந்துள்ளார். அதை வாசிக்கும் போதே இந்த நூலின் உள்ளடக்கம் என்ன என்பது முழுவதுமாக தெரிந்து விடுகிறது. அவரது முன்னுரைபடி இந்த நூல் “இது ஒரு பௌத்த பூமி… இங்கிருக்கும் பலவும் பௌத்தத்தால் …பௌத்த தொடர்பால் உருவானவை அல்லது முறைப்படுத்தப்பட்டவை” என்னும் கருதுகோள் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது .இதற்காக ஆசிரியர் மக்களிடையே பழக்கத்தில் உள்ள பண்பாட்டு நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார். பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் ஆய்வு வழியை பின்பற்றி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் கூறலாம்.
பண்டிகைகள், திருவிழாக்களுக்கு இந்து மதம் கூறும் காரணங்கள், பெயர்கள், நிகழ்வுகள் விலா வாரியாக இந்த நூலில் மையமாக விளக்கப்பட்டுள்ளது .இங்கு எல்லாமே கதையாகி, பின் வெகு மக்களுடைய வரலாறு ஆகிறது என சுட்டுகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். இதை எதிர்த்து மாற்று கதையாடடல்களை உருவாக்கினால்தான் மேற்கண்ட பாதிப்புகளை எதிர்கொள்ள முடியும் என்றும் வழிகாட்டுகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். அயோத்திதாசர் பெயர்களை உடைத்து’உள்மெய்’ வாசிப்பு செய்தது கூறப்படுகிறது. இறந்தவரை நாகரீகமான முறையில் அடக்கம் செய்ய தொடங்கிய போது மனித நாகரிகம் தோன்றி விட்டது என்று கூறலாம். மரணம் நிகழ்ந்த நாளை நினைவு கூர்ந்து அந்நாளில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான குறியீடுகளும்… சடங்குகளும் பௌத்த பண்பாட்டை மையமாகக் கொண்டது என்கிறது இந்த நூல். இறந்தோரில்வீரர் ,வைத்தியர், நெறிமுறைப்படுத்தும் தலைவர் ,துறவிகள் என இருப்போரை வழிபட ஆரம்பித்தனர் .அவர்கள் நினைவாக கல் நடுவது தொடங்கப்பட்டது. இறந்தவனே சிவன்.. நடப்பட்ட கல் சிவலிங்கம் என புதிய பார்வை கூறப்படுகிறது.
சைவப் பெருங்கோயில்கள் பலவும் இறந்த துறவிகளின் சமாதிகள் மீது கட்டப்பட்டவை என்றும் நூல் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு சிலை வைத்தல்.. அதற்காக கல்லை எடுத்து வருதல்… அதற்கு சடங்குகள் செய்தல் குறிப்பிடப்படுகின்றன. வீடுகளில் நடு வீடு என்பது நீத்தாரை நினைவு படுத்தும் இடமாக உள்ளது. ஆண்டின் குறிப்பிட்ட நாட்களில் …பண்டிகைகளில் நீத்தாரை நினைவு கூர்வது என்பது பண்பாடாக உள்ளது. குறிப்பாக தை அமாவாசை, மாசி அமாவாசை ,புரட்டாசி அமாவாசை, தீபாவளி , போதி(கி) முதலியன.சித்ரா பௌர்ணமி, வைகாசி பௌர்ணமி ,கார்த்திகை பௌர்ணமி போன்றவை புத்தரின் பிறப்பு -ஞானம் -இறப்பு என்பதை குறிப்பிடும் நாட்களாகும். நரக அசுரன் (நரகாசுரன்) இறந்த நாளை தீபாவளி பண்டிகையாக தமிழகத்திலும், அதற்கு நிகராக கேரளத்தில் அங்கு மாபலி சக்கரவர்த்தி இறந்த நாள் ஓணம் திருநாளாகவும்நினைவு கூரப்படுகிறது .இரண்டு பண்டிகைகளும் விஷ்ணு அவதாரம் எடுத்து அழித்ததை கூறுகிறது .நரகாசுரனை மக்கள் வெறுக்கும் அதே நேரத்தில் ஓணம் பண்டிகையில் மாபலி மன்னன் தன் வீட்டிற்கு வருவதாக மக்கள் ஆவலோடு எதிர்பார்ப்பதை பார்க்கலாம்.
‘சிரவண’ என்ற சொல் கேரளத்திலும் தமிழகத்திலும் எந்தெந்த தருணத்தில், எந்தெந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன என பட்டியலிடப்படுகிறது. ஓணம் நாளில் தமிழக கோயில்கள் சிலவற்றில் சிரவணவிரதம் ,சிரவண தீபம் என்ற நீத்தார் நினைவு கூரல் நடைபெறுகிறது. சிரவண என்பது திருவோணம் என திரிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறது நூல். மொழி கடந்து பண்பாடு மக்களை இணைப்பதாக கூறுகிறது. கேரள ஓணம் பண்டிகை தமிழகத்தில் தொடங்கி அதன் பொது இணைப்பாக பௌத்தம் இருப்பதாக இந்த நூலில் எழுத்தாளப்படும் ஆய்வுக் கருத்துக்கள் குறிப்பிடுகின்றன.
சடங்குகள், நம்பிக்கைகள் தொடங்கிய பிறகுதான் சமயம் தோன்ற ஆரம்பித்தது. மக்களை சமூகமாக மாற்றுவதிலும் ஒழுங்கு படுத்துவதிலும் பௌத்தம் அடிப்படையாக இருந்தது.” போலச் செய்தல்” என்ற அடிப்படையில் பௌத்த மத கருத்துக்கள் வைதிக மதத்தால் திரித்து உள்வாங்கப்பட்டன.
கேரளாவில் ஓணம் பண்டிகை மதம் கடந்து ஒட்டுமொத்த கேரளாவின் அடையாளமாக… அறுவடை திருவிழாவாக உள்ளது. இப்படி தமிழகத்தில் தொடங்கி.. மொழி கடந்து.. சமயம் கடந்து அது பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டது எனினும் இந்து மதத்தின் வைணவ மரபு சார்ந்து அறியப்படுகிறது. இப்படி ஓணம் பண்டிகையின் அடிப்படையில் பௌத்தம் இருக்கிறது என அறிமுகப் பகுதியில் குறிப்பிடுகிறார் ஆசிரியர் .ஆசிரியரின் கூற்றுப்படி பண்டித அயோத்திதாசரின் ‘உள்மெய்’ என்ற நிலைப்பாட்டு ஆய்வு முறைப்படி கையாண்டு கோயில்கள் ,பெயர்கள், சடங்குகள், வழிபாடுகள் ஆகியவற்றில் பொதிந்துள்ள அர்த்தத்தை கண்டு, அதன் சமகாலத்தை சார்ந்துள்ள நிலையான ஓணம் பற்றி இந்த நூல் தருகிறது. மாதிரிக்காக தமிழகத்தில் சில கோயில்களில் ஆசிரியர் கள
ஆய்வை மேற்கொண்டதை விவரிக்கிறார்.
ஓணம் பண்டிகையின் கதை: மாவலி என்ற மன்னனிடம் திருமால் வாமன அவதாரம் எடுத்து மூன்று அடி மண் கேட்கிறார். அதில் முதல் அடி பூமியாகவும், இரண்டாவது அடி விண்ணாகவும், மூன்றாவது அடி மன்னனின் தலை மீதும் வைக்கப்பட்டு அவன் பாதாளத்தில் விழுகிறான். அப்போது மாவலி மன்னன் கேட்ட வரத்தின் அடிப்படையில் பாதாளத்திலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை வந்து கேரள மக்களை சந்திக்க வரம் பெறுகிறான். அவன் வரும்நாளே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
கேரள மக்களின் பேச்சு வழக்கில் ஓணம் பண்டிகை சிரவணப்பண்டிகை என்றும் கூறப்படுகிறது.பௌத்தத்தின் அஷ்டாங்க யோகத்தில் இரண்டாம் படியாக நியமம் உள்ளது. அதில் சித்தாந்த சிரவணம் உள்ளது .இது புத்த சங்கத்தால் பரிநிர்வாணம் தினத்தில் வணங்குதல் என அயோத்திதாசர் கூறுகிறார். பண்டிகையின் 10 நாட்களிலும் ஒவ்வொரு நாட்களிலும் என்னென்ன நடைபெறுகிறது என நூல் தெளிவாக விளக்குகிறது. பண்டிகை பற்றி விவரித்து பௌத்தத்தின் தொடர்பு கூறுவது ஆராயத்தக்கது. சிரவண பண்டிகை தினத்தில் மூன்று வைணவத் தலங்களா!திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் ,கடலூர் தேவநாதன் சுவாமி கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் ஆகியவற்றில் மட்டும் ஆசிரியர் கள ஆய்வு செய்து அதை பதிவு செய்துள்ளார். சீன பௌத்த துறவி பாகியான் குறிப்பிடும் குறிப்புகளை துணைக்கொண்டு மூலவர் -உற்சவர் என்ற இரட்டை நிலை தோன்றியது பற்றியும் பெயர் அரசியலின் துவக்கத்தையும் கூறுகிறார். அதாவது பௌத்த மத சாமியை வைணவ சாமியாக பெயர் மாற்றம் செய்வதை குறிப்பிடுகிறார் .இறந்தவர்களை வணங்கும் மரபு பௌத்தத்தில் மட்டுமே உள்ளது. சைவத்திலும் வைணவத்திலும் இல்லை என்றும் தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் இறந்தவர்களின் சமாதி மேல் கட்டப்பட்டது என்றும் கூறுகிறது இந்த நூல்.
பௌத்த மதத்தை வைதீகம் சுவீகரித்தது என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை நிறுவ சிரவண தீபம், சிரவண விரதம் ,சிரவண துவாதசி, சிரவண பாதம், சிரவண சுண்டல் ஆகியவையே சிரவண பண்டிகையாயிற்று என்று விளக்குகிறது நூல். புத்த துவாதசியின் மறு பெயர் சிரவண துவாதசி. சபரிமலை கோயிலின் மற்றொரு பெயர் சாஸ்தா கோயில் ..சாஸ்தா என்ற பாலி மொழி சொல்லுக்கு புத்தர் என்று பொருள் .அதேபோல வடக்கு திசைக்கு மதிப்பு தருவது புத்த மரபு ..அதேபோல பாதத்தை வழிபடுவதும் புத்த மரபு.. பழனியில் பஞ்சாமிர்தம் ..திருப்பதியில் லட்டு போன்றவையும் பௌத்த மரபுதான் .சிராவகர் என்பது சிராவணன் ஆயிற்று இது பௌத்த பிக்குகளை குறிக்கிறது என்றும் கூறுகிறது. திருநெல்வேலி வட்டார பகுதியில் இன்றும் மாவலி சக்கரவர்த்தியை கார்த்திகை மாதத்தில் “கார்த்துலதீபத்” திருநாளில் மக்கள் நினைவு கூர்கிறார்கள்.
பௌத்த கருத்துக்களுக்கு எதிர்மாறான பண்பாட்டு கதைகள் உருவாக்கப்பட்டன .மாவலி சக்கரவர்த்தி புத்த சங்கத்தில் சேர்ந்து தம்ம கருத்தை பரப்பி வந்தான் .ஒவ்வொரு ஓணம் பண்டிகையின் போதும் மக்களை சந்தித்து வாழ்த்தினான்.அப்படி வந்த நாளில் பார்ப்பனர்கள் அவனை கொன்று விட்டதாக கேரளத்தில் இன்றும் நாட்டுப்புறக் கதைகள் உள்ளன. இன்று மாவலிகர (புத்தா நிலையம்) என்ற பகுதியில் புத்தர் சிலை உள்ளது. இப்படி தமிழகத்தில் மாவலிக்கதை மகாபலிபுரத்தில் மாபலி சக்கரவர்த்தி பௌத்த முறையில் அரசாண்டான்என்று கூறப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு மாவலி அமாவாசை என்று அயோத்திதாசர் கூறுகிறார். இது கேரளத்தில் ஆவணி மாதத்தில் வருகிறது. மாவலி அமாவாசையின் வெவ்வேறு பெயர்கள், 16 திதி நாள்களில் கடைபிடிக்கப்படும் சடங்குகள், நீத்தார்நினைவை போற்றும் பௌத்த மரபு ஆகியவற்றை நூல் கூறுகிறது. அதேபோல இறப்பு வீட்டில் இறந்தபின் 16 நாட்களும் நடைபெறும் சடங்குகள் பற்றியும் அதன் புத்தமத மரபு பற்றியும் நூல் கூறுகிறது. வடக்கு வாசல் ,கோட்டம் ,கல்வட்டம் ,சிரார்த்தம் ஆகியவை பற்றியும் புத்த மத பண்பாட்டின் அடிப்படையில் நூல் விளக்குகிறது.
பௌத்த பண்பாட்டின் கூறுகள் இந்தியா முழுவதும் இது பௌத்த மரபு என்று புரியாமலேயே பின்பற்றப்படுகிறது .”மீண்டும் புத்த மதத்திற்கு திரும்புவோம் “என்ற திசையில் செல்ல முடியுமா என்பதும் விவாதிக்கத்தக்கது.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் சடங்குகளை ஆய்வு செய்யும் போது அதில் புத்த மத சடங்குகள் பல பின்பற்றப்படுவதை நூலாசிரியர் விளக்குகிறார். ராகுல் விகாரம் என்பது வீரராகவ ஆலயமாக மாறியது என்று அயோத்திதாசர் கூறுகிறார் .குபேரன் பற்றியும் ..சதுர்த்தி… இறந்தவர்களை தெற்கு வடக்காக படுக்க வைக்கப்படுவது, கௌதம புத்தர் கண்ட ஐந்து விதமான கனவுகள், வைத்தியம் பார்த்த பௌத்த புக்குகள் ,மால் என்றால் புத்தரைக் குறிக்கிறது… என்று பல்வேறு செய்திகள் தொடர்கின்றன. மயிலை சீனி வேங்கடசாமி ,ஜெயமோகன் ஆகியோர்களின் நூல் குறிப்புகளை தனது கருத்துக்கு ஆதரவாக பயன்படுத்தும் ஆசிரியர் மூங்கில் மரம் பல கோயில்களில் தல விருட்சமாக இருப்பதும் இது பௌத்த மரபு என்றும் கூறுகிறார். பூம்புகார் நெய்த வாசல் கிராமத்தில் உள்ள சிராப்பட்டி அய்யனார் கோயில் பற்றிய மூன்று கதைகள், அய்யனாரே ஐயப்பன் என்று கூறுவது, சீர்காழி சட்டை நாதர் கோயிலில் திருவிழா நடக்கும் நாட்களில் ஒரு நாளில் அங்கு அடித்தட்டு மக்கள் தன் கரைவழி ஆட்டம் பற்றிய செய்தி ஆகியவையும் பௌத்த மரபுகளை கொண்டது என்று வாதங்களை முன் வைக்கிறார் ஆசிரியர்.
இலக்கியங்களில் பௌத்த பண்புகள்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அயோத்திதாசர் தனது பாணியில் எப்படி வார்த்தைகளை உடைத்து அர்த்தம் சொல்கிறார் என்று நூலில் பல சான்றுகள் உள்ளன .இப்படி பத்து பாடல்கள் உள்ளன. சம்பந்தர் எழுதிய பாடல்கள் நான்கினை எடுத்து பூம்பாவை பதிகம் என்னும் நூலில் சில வரிகளை மாற்றி இடம் பெற வைத்திருப்பது நூலில் குறிப்பிடப்படுகிறது .(பக்கம் 93 முதல்) புத்தரின் நினைவு தினம் பண்டு+ ஈகை பண்டீகை என கொண்டாடப்படுகிறது என்கிறார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் பரவாய் கிராமத்தில் கொண்டாடப்படும் காமன் பண்டிகை பற்றியும் அதில் உள்ள புத்த மரபையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆவணி மாத விரத நாள் ஒன்றில் புத்தரை தலித் மக்கள் வழிபடுவதை குறிப்பிடுகிறார். ஓணம் எனும் சிரவணப் பண்டிகை புத்த மதத்தின் படி புத்தர் மாரனை வெற்றி கொண்டதை கொண்டாடுகிறது என புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்( பக்கம் 121.)
பௌத்த ஆய்வாளர் டாக்டர் என்.குஞ்சன் பிள்ளை கூற்றுப்படி.. இன்றைக்கு உள்ள புகழ்பெற்ற வழிபாட்டு முறைமைகள், கோவில்கள் ,சிலைகள், ஊர்வலங்கள், உற்சவங்கள் போன்றவை பௌத்தத்திலிருந்து பெரிதும் மாற்றம் அடையாத வடிவத்தில் நேரடியாக கடன் வாங்கப் பெற்றுள்ளன.. கேரளத்தில் கொண்டாடப்படும் தாலப்பொலி ,பரணி உற்சவம் இதற்கு சில உதாரணம். பின்னிணைப்பில் அயோத்திதாசரின் தமிழன் இதழில் வெளியான பல கட்டுரைகள் இந்த நூலின் கருத்துக்களுக்கு சான்று கொடுக்கும் வகையில் இடம் பெற்றுள்ளன. அதேபோல பல புகைப்படங்களும் சான்றாக இடம் பெற்றுள்ளன.
இங்கு உள்ள எல்லாமே புத்தம்…புத்தம் என பொதுமக்கள் மத்தியிலே விழிப்புணர்வு ஊட்டப்பட்டால்… அவற்றின் அடையாளங்கள் முற்றிலுமாக சுவீகரிக்கப்பட்டவர்களால்அழிக்கப்படுவதற்கான அபாயமும் இருக்கிறது என்பதையும் சற்றே முன்னெச்சரிக்கையுடன் பார்க்க
வேண்டியிருக்கிறது.
“ஓணம் பண்டிகை
பௌத்தப் பண்பாட்டு வரலாறு “(நூல்)
ஆசிரியர் :அருள் முத்துக்குமரன்
வெளியீடு: நீலம்
156 பக்கம்- ரூபாய் 175/-
இரண்டாம் பதிப்பு ஜனவரி 2022
இரா.இயேசுதாஸ்
அறிவொளி வாசிப்பு இயக்கம்
மன்னார்குடி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.