இணையவழிக்கல்வி: சமூக ஏற்றத்தாழ்வு – பேரா. வே. சிவசங்கர்

Online Education: Social Inequality - Dr. V. Sivashankar. Book Day Website is a Branch Of Bharathi Puthakalayamகடந்த ஆண்டு (2020) மார்ச் மாதத்திலிருந்து உலக அளவில் பள்ளிகள் மூடப்பட்டன. கரோனா பரவத் தொடங்கியதன் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் (UNESCO) ஆய்வு அறிக்கையின்படி உலகில் 150 நாடுகளில் பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டன. 10 நாடுகளில் பகுதி நேரமாக மூடப்பட்டன. மேலும் 10 நாடுகளில் மட்டுமே பள்ளிகள் திறந்து இருந்தன. இதனால் உலக அளவில் 168 மில்லியன் குழந்தைகளின் கல்வி பாதிப்புக்கு உள்ளானது. லத்தீன் அமெரிக்க நாடுகள், கரேபியன் நாடுகள் மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன. உலக அளவில் பள்ளிகள் மூடப் பட்டதினால் அக்குழந்தைகளின் வாழ்நாள் வருவாய் இழப்பு 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என உலக வங்கி கணித்துள்ளது. இந்தியாவில் பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் 32 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 4 சதவீதம் மழலையர் கல்வியும், 86சதவீதம் ஆரம்ப கல்வி மற்றும் உயர்கல்வி (1 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை) 10சதவீதம் மேல்நிலை கல்வி (+1 மற்றும்+2) என மேற்குறிப்பிட்ட ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

தகவல் தொழில்நுட்பத் திறன் இடைவெளி (Digital Divide) கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் தங்களின் வகுப்பறைக் கற்பித்தல் நடைமுறையிலிருந்து மாற்றம் பெற்று இணையவழி மூலம் கற்பிக்கும் நடைமுறைக்கு தள்ளப்பட்டன. இதனால் அனைத்து மாணவர் மற்றும் மாணவியர் ( அனைத்து வருமான வகுப்பினர், மதம், சாதி மற்றும் வட்டார ) என கற்றல் இடைவெளி அதிகரித்து உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் திறன் இடைவெளி அதிகம். அதனால் இணையவழி மூலம் கற்பித்தல் கற்றல் திறன் இடைவெளியை அதிகரிக்கும் என்பது உண்மை. இணையவழி மூலம் கல்வி கற்றல் மிக குறைந்த சதவீத அளவிலான வசதி படைத்த மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு மட்டுமே சென்றடைந்து கற்றல் ஏற்ற தாழ்வை அதிகரித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத் திறனை அனைவரும் பெறுவதற்கு அதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு அவசியம். அதில் முதலாவது மின்சாரம், இரண்டாவது இணையவழி கல்வி கணினி சாதனங்கள் மற்றும் மூன்றாவது இணைய வசதி (Internet).

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி (NFH 2019-2020) இந்தியாவில் 97.6 சதவீத இல்லங்கள் மின்சார இணைப்பை பெற்றுள்ளன. ஆனால் 24 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கும் நேரம் என்பது மாநிலங்களுக்கு இடையே வேறுபடுகிறது. கிராமங்களில் 24 மணிநேர மின்சாரம் என்பது கேள்விக்குறியாகும். கிராமங்களில் மின்சாரம் அளிப்பானது 16 சதவீத இல்லங்களில் ஒரு நாளைக்கு 1 முதல் 8 மணி நேரமும், 33 சதவீத இல்லங்களில் 9 முதல் 12 மணி நேரமும் மற்றும் 47 சதவீத இல்லங்களில் 12 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் மட்டுமே மின்சாரம் தங்குதடையின்றி கிடைக்கிறது.இரண்டாவதாக இணையவழிக் கல்வி பெறுவதற்கு கணினி சாதனம் அவசியமாகும். கணிப்பொறி சாதனத்தை பெற்றுள்ள இல்லங்கள் மிகக்குறைந்த சதவீதமாகும். ( மேசைக் கணினி, மடிக்கணினி, நோட்பேட், டேப்லட் மற்றும் இதர) இந்திய தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனத்தின் (NSSO) அறிக்கை எண் 585, சுற்று எண் 75, இல்லங்களில் கல்வி நுகர்வு செலவு பற்றிய புள்ளி விவரத்தின்படி 10.7 சதவீதம் மக்களே கணினியைப் பயன் படுத்துகின்றனர். அவர்களில் 23.4 சதவீதம் நகர் புறத்திலும் கிராமப்புறங்களில் 4.4 சதவீதம் மட்டுமே கணினியை பயன்படுத்துகின்றனர்.

மூன்றாவதாக இணையவழியின் பயன்பாடு இந்தியாவில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு இணைய வழியை பயன்படுத்துவோரின் சதவீதம் 20 ஆகும். இதுவே 2019ஆம் ஆண்டு 48 சதவீதமாக அதிகரித்துள்ளது என தேசிய மாதிரி கணக்கெடுப்பு (NSSO) புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. நில்சன் என்ற அமைப்பின் புள்ளி விவரத்தின்படி கணினி சாதனங்களில் இணைய வழி பயன்பாடு 90 சதவீதம் திறன் கைபேசி( Smart Phone) மூலமும் 6 சதவீதம் மடிக்கணினி மூலமும் 3 சதவீதம் மேசைக் கணினி மூலமும் 1 சதவீதம் டேப் மூலமும் பயன்படுத்தப்படுகிறது.

கணினி மற்றும் இணையதள பயன்பாட்டில் பெண்களின் பயன்பாடு ஆண்களின் பயன்பாட்டை விட குறைவு. இணைய வழி பயன்பாட்டில் 65 சதவீத ஆண்களும் 35 சதவீதம் பெண்களும் பயன்படுத்துகின்றனர். கிராமப்புறங்களில் இணையவழிப் பயன்பாடும் ஆண்கள் 69 சதவீதமும், பெண்கள் 31 சதவீதமும் பயன்படுத்துகின்றனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை இந்திய சராசரியை விட அதிகம். மின்சார பயன்பாட்டில் கிராமம் மற்றும் நகரங்களுக்கு இடையே எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை ஆனால் கணினி மற்றும் இணைய வழி பயன்பாட்டில் புரட்சி ஏதும் ஏற்படவில்லை. தமிழகத்தில் கணினி வைத்துள்ள இல்லங்களின் சதவீதம் 18 ஆகும். நகர்ப்புறங்களில் 24.7 சதவீதம் கிராமப்புறங்களில் 11.6 சதவீதமும் கணினி வைத்துள்ளனர். கணினி வைத்துள்ளோரில் இணையவழி பயன்பாடு 19.6 சதவீதம். இது நகரங்களில் 24.8 சதவீதம், கிராமங்களில் 14.4 சதவீதமாகும் என தேசிய மாதிரி கணக்கெடுப்பு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மாநிலங்களுக்கிடையே கணினி பயன்பாட்டில் அதிகப்படியாக டெல்லியில் 35 சதவீதம், இரண்டாவது கேரளா 23.5 சதவீதமும் தமிழகம் மூன்றாவதாக 18 சதவீதமும் மிகக் குறைந்த அளவாகப் பிகார் 4.6 சதவீதம் ஆகும். இணைய வழி பயன்பாட்டில் டெல்லி 55.7 சதவீதமும், கேரளா 51.3 சதவீதமும், தமிழகம் 19.6 சதவீதமும் ஆகும்.மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரங்களின்படி இணையவழிக் கல்வி குறைந்த அளவிலான குழந்தைகளையே சென்றடைந்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகள் கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதியில் உள்ள குழந்தைகள், பெண் குழந்தைகள் போன்றவர்களுக்கு இணையவழிக் கல்வி சென்றடைய வில்லை. மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசு இணைய வழி கல்வியை மேம்படுத்துவதற்கான குறுகியகால மற்றும் நீண்டகால திட்டம் ஏதுமில்லை. இணைய வழி கல்வியில் ஏற்படும் தரவு தொகுப்புக்கான (Data Pack) செலவுகளை அரசுகள் இலவசமாக அல்லது மானிய விலையில் மாணவர்களுக்கு வழங்க வில்லை. வேலை மற்றும் வருமானம் இன்றி இருக்கும் இந்த கரோனா காலத்தில் இணையவழி செலவுகள், இணைய வழி சாதனங்கள் கூடுதல் கடன் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே அரசு இலவசமாக வழங்குவதற்கு முன் வர வேண்டும். ஒரு சில மாநிலங்கள் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இதர ஊடகங்களின் வழியாக கல்வியை அளித்த போதிலும் அதன் பயன் மாணவர்களை சென்றடைய வில்லை.

ஆசிரியர்களின் கணினி திறன் மேம்பாடு என்பது அரசு பள்ளிகளில் 17 சதவீத ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளில் 43.8 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பெற்றுள்ளனர் என ஆக்சாம் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. கரோனா கால விடுமுறையில் ஆசிரியர்களின் கணினி மற்றும் இணையவழி பயிற்சி வகுப்புகளை நடந்த அரசு முன்வர வேண்டும். புதிய கல்விக்கொள்கை 2020இல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பாக கணினியின் மூலமும், இணையவழி மூலமும் கற்றல் திறனை அதிகரித்து கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. ஆனால் உண்மையில் அதற்கான உட்கட்டமைப்பை அதிகரிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கரோனா காலத்தில் இணைய வழி கல்வி என்பது வசதி படைத்த குழந்தைகளுக்கு மட்டுமே நடப்பு வழக்காக மாறி விட்டது. ஆனால் விளிம்புநிலை குழந்தைகள் கரோனா காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களாகவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதையும் தடுத்து அரசு குறுகிய காலத் திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் கல்வியை உறுதி செய்யுமா!

முனைவர் வே.சிவசங்கர்,
உதவிப்பேராசிரியர் பொருளியல் துறை முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி),
வேலூர் 632002.