ஓரெண்டே… ரெண்டே… – நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் :
நூல் : ஒரெண்டே… ரெண்டே..
ஆசிரியர் : இதயநிலவன்
புத்தக வெளியீடு : பாரதி புத்தகாலயம் சென்னை
விலை : ரூபாய் 170/-
அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு நடைமுறைக்கு இந்திய நாட்டில் வருவதற்கு நடைபெற்ற போராட்டங்கள் ஏராளம். இந்திய நாட்டின் விடுதலைக்கு பின் ஏழை அடித்தட்டு மக்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் கூடுதலாக உருவாகின.இந்திய நாட்டில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின் தமிழகத்தில் கல்வியின் வாசல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டது. இதன் விளைவாக கல்விச் சிறந்த தமிழ்நாடு என மாறுவதற்கு அடித்தளமாக ஆரம்பக் கல்வி அமைந்தது.
கிராமங்கள்தோறும், நகர்ப்புறங்களிலும் ஆரம்ப பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இந்த பள்ளியில் ஏழை பணக்காரர் உயர்ந்த வகுப்பினர் ஒடுக்கப்பட்டவர் என்ற வேறுபாடு இன்றி அனைவரும் கற்கும் நிலை ஏற்பட்டது. எல்லோரும் கல்வி கற்று இன்புற்றார் என்னும் நிலையை நோக்கி தமிழ்நாடு நகர்ந்தது.
கிராமங்களில் பள்ளிகளும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் கிராம மக்களின் மதிப்புக்கு உரியவர்களாக மதிக்கப்பட்ட காலம் உருவாகியது. ஆனால் இந்த நிகழ்வு கடந்த 30 ஆண்டுகளில் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது என்பதை இதய நிலவனின் “ஓரெண்டே ரெண்டே ” நாவல் பதிவு செய்திருக்கிறது.
கவிஞர், சிறுகதை எழுத்தாளர்,குறும்பட இயக்குனர்,நாடக ஆசிரியர், திரைக்கதை வசனகர்த்தா என்ற பன்முக தன்மை ஆளுமைகளை உடையவர் நாவலாசிரியர் இதயநிலவன்.
நூறாண்டு பயணம் செய்த ஒரு அரசு ஆரம்பப்பள்ளி மூடப்படுவதை கண்டு மனம் வெதும்பியதுடன் ஓராசிரியர் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றும் அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆசிரியர்கள் படும் அல்லல்களை அவஸ்தைகளை அற்புதமாக விவரித்து இந்த நாவலில் கொண்டு செல்லும் பாங்கு நயமாக உள்ளது.
ஆசிரியர் கவிதா அவர்தான் நாவலின் கதாநாயகி. கவிதா பல எதிர்ப்புகளையும் நிராகரித்து மகேசை திருமணம் செய்து 5ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்ற நிலைமை அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்குகிறது. நிலைமையை புரிந்து கொண்டு அவரே அலைந்து தேடித் திரிந்து சித்ரா என்ற பெண்ணை இரண்டாவது மனைவியாக மகேசுக்கு திருமணம் முடித்து வைக்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை.
எதிர்பாராத விதமாக விபத்தில் மகேஷ் மரணம் அடைந்து விடுகிறார். குழந்தையுடன் வந்து நிற்கும் சித்ராவை கண்டு கலங்கும் கவிதா குழந்தையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறார். சித்ராவிற்கு வாரிசு அடிப்படையில் அரசுப் பணி கிடைக்க ஏற்பாடு செய்கிறார். அதோடு வேறு திருமணம் செய்து கொள்வதற்கும் உதவி செய்கிறார் .
ஆசிரியர் பட்டயத் தேர்வில் மாநிலத்தில் எட்டாவது இடத்தை பிடித்த கவிதாவுக்கு ஆசிரியர் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் கிடைக்கிறது.மூன்று ஆண்டுகள் அங்கு பணி செய்கிறார். குழந்தையையும் தந்தையையும் பாதுகாக்க சொந்த மாவட்டத்திற்கு வந்து விட வேண்டும் என்ற முடிவில் செலவினைப் பாராமல் தேனி மாவட்டத்திற்கு மாறுதல் பெற்று வந்துவிடுகிறார். வெள்ளத்தேவன் பட்டியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பணியில் சேருகிறார்.
சொந்த வாழ்க்கை இவ்வளவு நெருக்கடிக்கு உள்ளான பொழுதும் தான் புதிதாக பணியில் சேர்ந்த வெள்ளைத்
தேவன்பட்டி அரசுப் பள்ளியில் ஆத்மார்த்தமாக வேலை செய்ய முடிவு செய்கிறார். தலைமை ஆசிரியர் மற்றும் தன்னையும் சேர்த்து இரண்டு ஆசிரியர்கள் ஐந்தே மாணவர்கள். பள்ளி நிலைமை பரிதாபமாக உள்ளது.
எப்போது குழந்தைகள் இல்லாமல் பள்ளி நெருக்கடிக்கு உள்ளாகுமோ என்ற பயம் கவிதா ஆசிரியரை நாள்தோறும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இரண்டு குழந்தைகள் அண்டர் ஏஜ். இரண்டு குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு.ஒரு குழந்தை இரண்டாம் வகுப்பு.
அண்டர் ஏஜ் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் மஞ்சள் பஸ் அழைத்துக் கொண்டு சென்று விடும்.
ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் இரண்டு குழந்தைகளும் சென்று விடுவார்கள். இப்படி ஒரு நெருக்கடியான பள்ளியில் பணியில் சேர்ந்ததை எண்ணி அவள் வருந்தினாலும் நம்பிக்கையை விடாமல் எப்படியாவது குழந்தைகளை சேர்த்து விட முடியும் என்று தொடர்ந்து முயற்சி செய்கிறார்.
இரண்டு குழந்தைகள் சேர்ந்தன. இடையிலே போய் விடுகிறார்கள் தலைமை ஆசிரியருக்கு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்து அவரும் மாறுதலில் சென்று விடுகிறார். இப்போது ஈராசிரியர் பள்ளி ஓர் ஆசிரியர் பள்ளியாக மாறுகிறது.
நாள்தோறும் வீட்டிற்கு வரும் பொழுது சோகத்தோடு வரும் மகளைக் கண்டு தந்தை நொந்து நொம்பலமா கிறார்.
எதிர்பாராத விதமாக அந்த ஊரைச் சேர்ந்த நீண்ட நாள் தலைமை ஆசிரியராக பணியாற்றிய 84 வயதை எட்டிய ராமசாமி என்னும் ஓய்வு பெற்ற ஆசிரியர் அந்த பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு கவிதா ஆசிரியையோடு துணை நிற்கிறார்.
அருகிலுள்ள சமத்துவபுரத்தில் குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள 25 சத அடிப்படையில் பக்கத்து ஊரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களை உள்ளூர் பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஆசிரியர் கவிதாவும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும் ஈடுபடுகிறார்கள். மக்களோடு பேசுகிறார்கள். அந்த குழந்தைகளைப் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்து திரும்ப அந்த பகுதிக்கு கொண்டு சேர்க்க தேவையான ஆட்டோ வசதியும் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்து தருவதாக கவிதா ஆசிரியை உறுதியளிக்கிறார்.
அந்த மக்களும் ஏற்றுக்கொண்டு குழந்தைகளை கவிதா ஆசிரியர் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். நீண்ட தொலைவு பயணம் செய்து பள்ளிக்கு வரும் கவிதா ஆசிரியர் நேரடியாக சமத்துவபுர த்திற்கு காலையிலேயே சென்று குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார்.
ஒருநாள் எதிர்பாராத விதமாக சாலையில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக வேறு சாலை வழியாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வருகிறார். ஆட்டோ விபத்துக்கு உள்ளாகிறது . குழந்தைகளும் ஆசிரியையும் காயம் அடைகிறார்கள்.
கல்வித்துறை ஆசிரியை கவிதா மீது விசாரணை நடத்தி அனுமதியின்றி குழந்தைகளை அழைத்து வந்தமைக்காக பணியிடை நீக்கம் செய்கிறது.
பள்ளியில் சேர்ந்த குழந்தைகளும் தங்களது பழைய பள்ளிக்கு சென்று விடுகின்றனர். பள்ளியில் தற்போது குழந்தைகளே இல்லை. அப்பள்ளிக்கு ஒரு புதிய ஆசிரியரை மாற்றுப் பணி அடிப்படையில் பணிக்கமர்த்துகிறது கல்வித்துறை. ஆனாலும் குழந்தைகள் இல்லை.
மாற்றுப் பணியில் வந்த ஆசிரியரும் மாறுதல் பெற்று சென்று விடுகிறார். பள்ளியில் குழந்தைகள் இல்லாமையால் அரசு ஆரம்பப் பள்ளி மூடப்படுகிறது.
100 ஆண்டுகளை கடந்து கல்விக் கண் திறந்த கிராமப் பள்ளி தற்போது மூடப்பட்டு கிடக்கிறது.
ஏக்க்கத்தோடு ராமசாமி ஆசிரியர் கடந்த கால நினைவுகளோடு பள்ளியைப் பார்க்கிறார். பள்ளியில் கொடி கம்பம் இருக்கிறது. கொடி இல்லை. கம்பத்தில் காக்கா மட்டும் உட்கார்ந்திருக்கிறது. இதுதான் கதை
குழந்தையோடும், தந்தையோடும், மகேஷ் உடன் வாழ்ந்த வாழ்க்கை நினைவுகளோடும் கவிதா நாளும் நகர்த்தும் வாழ்க்கை நாவலை படிப்போர் கண்களிலும் ஈரத்தை உருவாக்கும்.
எதிர்பாராத விதமாக தலைமை ஆசிரியர்l கூட்டத்திற்கு ஒரு முறை சென்றபொழுது தன்னுடன் ஒன்றாகப் படித்த கனகவள்ளி என்ற ஆசிரியரை சந்திக்கிறார் கனகவள்ளி ஆசிரியர் தனக்கே உரிய தனது எதார்த்தமான தேனி மாவட்ட மக்கள் மொழியில் கவிதாவுடன் பேசும் பகுதிகள் மிகச் சிறந்த இலக்கியப் பகுதியாகும்.
கிராமத்தில் தனியாக பணியாற்றும் ஒரு பெண்ணாசிரியருக்கு ஏற்படும் கிராமத்தானின் இடைஞ்சலையும் நாவலாசிரியர் காட்டுவது எதார்த்தமாக இருக்கிறது.
நாவலில் தொடக்கத்தில் இருந்து இன்றைய ஆரம்பக் கல்வி குறித்த செய்திகளை கோடிட்டுக் கொண்டு செல்கிறார்.
42 மாணவர்கள் படித்த திருவண்ணாமலை பள்ளியின் வகுப்பை நினைவு கூறுகிறார் கவிதா
“அப்பப்பா ஒரு நாளைக்கு எவ்வளவு அந்த குழந்தையின் கொண்டாட்டங்கள். சண்டைகள்.கோரசாக பாடும் மனப்பாடப் பாடல்கள். வரிசையாக ஓர் இடம் விட்டு ஒரு இடம் நடந்து செல்லும் அழகு.பார்க்க எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்று கிராமப் பள்ளியை நினைந்து உருகுவது.
தான் வேலை பார்க்கும் காலத்தில் ஒரு பாரம்பரியமிக்க பள்ளி ஒன்று மூடப்பட்டு விட்டால் அந்த கறையை எப்படி துடைத்து எடுப்பது, அது மூடப்படாமல் இருக்க எவ்வளவு போராட முடியுமோ அவ்வளவு போராட வேண்டும் என்று உறுதி எடுத்து பணிபுரியும் கவிதா
சொந்த வாழ்க்கை பிரச்சினைகளையும் அன்றாடம் நினைத்து வருந்தும் மனநிலையை “இவள் வாழ்க்கை பிரச்சினைகள் நிரம்பிய ஒரு அடர் வனமாக இருக்கிறது “என்று குறிப்பிடுவது நாவலாசிரியரின் கவித்துவ வரியாகும்
“ஒரெண்டே ரெண்டே என்று வாய்ப்பாடு சொல்லி கணக்குகளை சுலபமாக சரி செய்யும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பல லட்சம் முறை இந்த ஒப்பித்தலை கேட்டிருந்தாலும் புதிதாய் வந்த குழந்தை தப்பும் தவறுமாக வாய்ப்பாடு சொல்ல அந்த குழந்தை சரியாக சொல்லும் வரை அதை சரி செய்து அந்த குழந்தை வாய்ப்பாட்டை சரியாக சொல்லி முடிக்கவும் மனதில் ஒரு மகிழ்ச்சி தோன்றுமே அதற்கு ஈடாக நாம் எதையும் சொல்லிவிட முடியாது. நன்றாக கூறிவிட்டால் சக மாணவர்களை கைதட்டச் சொல்லி உற்சாகமூட்டுவார்கள் கவிதாவும் அப்படித்தான்” என்ற வரிகள்,
“பிடிமானம் என்கிற வார்த்தை எவ்வளவு வலிமையானது அது வாழ்வியல் கோட்பாடுகளில் எத்தனை நிதர்சனமானது. மனிதன் தொடர்ந்து இந்த சமூகத்தில் இயங்குவதற்கான ஒற்றை அர்த்தமான தொடர்பு கூறு” என்று வரும் வரிகள்,
“வெளி உலகிற்கு ஆசிரியரின் தொழில் பருமனாகத்தான் தெரிகிறது. ஆனால் ஆசிரியர்கள் ஆசிரியப் பணியை தவிர்த்து வாக்காளர் சேர்ப்பு நீக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு வருடாந்திர மக்கள்தொகை கணக்கெடுப்பு,தேர்தல் அதிகாரி,தடுப்பூசி முகாம், அரசு விழா மேற்பார்வை என பல வேலைகளையும் பார்க்க வேண்டி உள்ளார்கள் என ஆசிரியர்களின் ஆசிரியர் பணி அல்லாத வேலைகளையும்,
எமிஸ் தரும் எல்லையில்லா தொல்லைகள்மற்றும் அடிக்கடி நடைபெறும் ஆசிரியர் பயிற்சி கூட்டங்களில் என்ன நடக்கிறது என்பதை கனகவள்ளி மூலம் கலாட்டா செய்யும் தன்மையும்,
“ஈராசிரியர் பள்ளியில் பணியாற்றினால் தான் அங்கே வேலை பார்க்கும் ஆசிரியர்களின் சிரமம் தெரியும்.
அல்லது அதைப்பற்றி ஆய்வு பூர்வமாக சிந்தித்து பேசுபவர்களால் மட்டுமே ஈராசிரியர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை பற்றி புரிந்து கொள்ள முடியும். இப்படிச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் மன அளவில் சோர்ந்து விடுகிறார்கள்.அந்த சோர்வு அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது. அந்த மன அழுத்தம் பல வகை நோய்களையும் கொடுக்கிறது”
“மாணவர்களின் வருகையின்மையால் பள்ளி 16.8.17 முதல் காலவரையின்றி மூடப்படுகிறது” என்ற அறிவிப்பு
“ஆகஸ்ட் 15 கொடியில்லா மொட்டை கம்பம” என வரும் வரிகள் எல்லாம் மனதை மிகவும் பாதிக்கச் செய்கின்றன இன்றைய கிராமங்களில் உள்ள இரண்டு ஆசிரியர்கள் பணி புரியும் ஒற்றை இலக்க மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் பரிதாப நிலையை நாவல் ஆசிரியர் மிக அருமையாக சுட்டிக்காட்டுகிறார்.
” நம்மில் பல பேர் இந்த வேலையை பத்தோட 11 ஆக நினைக்கிறது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. நாம முயற்சி எடுக்கணும்.அது நடக்கவில்லை என்றால் தப்பு நம்ம மேல இல்ல. இந்த சிஸ்டத்து மேல.
“எந்த ஸ்டெப்பும் எடுக்க மாட்டோம். தப்பித்தவறி அரசு பள்ளிக்கு வர்ற பிள்ளைகளுக்கு ஒழுங்கா சொல்லியும் கொடுக்க மாட்டோம்னு சில பேர் இருக்கறதுனால தான் நம்ம ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தை ரொம்ப சாதாரணமா பேசுறாங்க.” என்ற வார்த்தைகள் சுடு சொல்லாகவே உள்ளன.
இந்த நாவலில் வயது முதிர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மூலம் கிராமங்களில் கடந்த காலங்களில் ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதையை, ஆசிரியருடைய பணியையும் வெற்றியையும் பற்றி குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
“யார் பள்ளிக்குள் நுழைய கூடாது என்று வரலாறு தடுத்து நிறுத்தியதோ இன்று அதே பகுதியைச் சேர்ந்த குழந்தைகளால் கிராமப் பள்ளிகள் உயிர் வாழ்கின்றன. அவர்களால் தான் நமக்கு ஊதியம்,வீடு, வாசல், கார் என்ற மரியாதையும்” என்று போகிற போக்கில் சமூக நீதியையும் குறிப்பிடுகிறார் நாவலாசிரியர்.
தமது சொந்த அனுபவங்களோடு கலந்து நம்முடைய காலத்தில் அரசு பள்ளிகள் இத்தகைய நிலையை நோக்கி நகருகின்றனவே. மக்களுடைய சிந்தனை மாற்றங்களும் ஆங்கில மோகமும் அரசின் கொள்கைகளும் என்ன செய்ய காத்திருக்கிறது.
எதிர்காலத்தில் இந்த பள்ளிகள் எல்லாம் கிராமங்களில் இருக்குமா என்ற ஏக்கத்தோடு முடிக்கிறார்கவிஞர் இதயநிலவன்.
ஆசிரியர்கள் மட்டுமல்ல சமூகத்தில் அரசு பள்ளிகளை நேசிப்பவர்கள், அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த நாவலை அவசியம் படிக்க வேண்டும். கலந்து உரையாட வேண்டும்.
நூல் மதிப்புரை எழுதியவர் :
ச. செல்லத்துரை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

