பற்பல வருடங்களுக்கு முன்னால் சைனாவில் ஒரு அரசரும், அரசியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஷீன்யென் என்ற அழகிய மகள் இருந்தாள். ஒரு நாள் அரண்மனை நந்தவனத்தில் இளவரசி ஷீன்யென் உலாவிக் கொண்டிருக்கையில், பயங்கரமான சூறாவளிக் காற்று வீசியது. அதி வேகத்துடன் வந்த காற்று, வந்த வேகத்தில் இளவரசியைத் தூக்கிச் சென்றது. இந்த சூறாவளிக் காற்றை அனுப்பிய, ஒன்பது தலைப் பறவை, இளவரசியை தன்னுடைய குகைக்கு கொண்டு சென்றது.
இளவரசி எப்படி பறந்து சென்றிருக்க முடியும்? காற்றில் அடித்துச் செல்லப்பட்டாளா, கடத்திச் செல்லப்பட்டாளா, எங்கிருக்கிறாள் என்ற விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை. தன்னுடைய மகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டி வருபவர்களுக்கு, அவளை மணமுடித்து வைப்பதாக அறிவித்தார் அரசர்.
பறவை, இளவரசியை தூக்கிச் சென்றதை, போலின் என்ற வாலிபனைத் தவிர, நாட்டு மக்கள் வேறொருவரும் பார்க்கவில்லை. இளவரசியை கவர்ந்து சென்ற பறவை, ஒரு குகைக்குள் நுழைந்ததை அந்த வாலிபன் பார்த்தான். பெரிய பாறைகளினால் கட்டப்பட்ட சுவற்றின் நடுவில் இருந்தது பறவையின் குகை. மேலிருந்து கீழே இறங்கி குகையை அடைவதோ, கீழிருந்து மேலே சென்று குகையை அடைவதோ முடியாது.
போலின் பாறையால் கட்டப்பட்ட அந்த சுவற்றைச் சுற்றி வந்து, குகைக்குள் நுழைவதற்கு வழி தேடிக் கொண்டிருந்தான். அப்போது அந்தப் பக்கம் வந்த ஜியா என்ற வாலிபன் போலின் அந்தப் பாறையைச் சுற்றி வருவதின் காரணம் கேட்டான். ஒன்பது தலைப் பறவை இளவரசியைத் தூக்கி வந்து குகைக்குள் கொண்டு சென்றதைப் பார்த்ததாகவும், இளவரசியைக் காப்பாற்ற குகைக்குள் செல்லும் வழியைத் தேடுவதாகவும் கூறினான் போலின்.
ஜியா தனக்கு குகைக்குள் செல்லும் வழி தெரியும் என்றும், போலின் குகைக்குள் செல்வதற்கு உதவி செய்வதாகவும் கூறினான். ஜியா தன்னுடைய நண்பர்களைக் கூட்டி வந்தான். ஒருவர் உட்காருவதற்கு வசதியாக ஒரு கூடையை எடுத்து வந்தான். கூடையில் போலின் இறங்கிக் கொள்ள, ஜியாவும், அவனுடைய நண்பர்களும், பாறையின் மேலிருந்து கூடையை குகைக்குள் இறக்கினார்கள்.
இளவரசியைக் கண்டு பிடித்தவுடன், ஒருவர் பின் ஒருவராகக் கூடையில் அமர்ந்து, ஜியா நண்பர்கள் உதவியுடன் கூடையை மேலே இழுத்து காப்பாற்றுவதாக முடிவு செய்தார்கள். கூடையில் ஒருவர் ஒரு சேர ஏறினால், கூடை தாங்காது, மேலும் இழுப்பதும் சிரமம் என்றான் ஜியா.
போலின் குகைக்குள் இறங்கிய போது, இளவரசி ஒன்பது தலைப் பறவையின் காயம் பட்ட பகுதிகளுக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தாள். பறவைக்கு மொத்தம் பத்து தலைகள் இருந்தன. சொர்கத்தில் நடந்த சண்டையில், அங்கிருந்த வேட்டை நாய் பத்தாவது தலையைக் கடித்து விழுங்கி விட்டது. மற்ற தலைகளுக்கும் காயம் ஏற்பட்டது. பறவையின் கண்ணில் படாமல் ஒதுங்கிக் கொள்ளும் படி இளவரசி சைகை செய்ய, போலினும் ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டான்.
பறவையின் காயங்களுக்கு மருந்து போட்டவுடன், வலி நீங்கி, பறவை உறங்கச் சென்றது. ஒன்பது தலைகளும் ஒவ்வொன்றாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன. ஒன்பது தலைப் பறவை நன்றாக உறங்கியவுடன், தன்னுடைய வாளை எடுத்துப் பறவையின் ஒன்பது தலைகளையும் வெட்டிச் சாய்த்தான் போலின்.
இளவரசியை கூடையில் ஏறி குகைக்கு வெளியே போகச் சொன்னான் போலின். போலின் தான் முதலில் போக வேண்டும் என்றாள் இளவரசி. “இந்த நாட்டின் இளவரசியாகிய உங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதை உறுதி செய்து கொண்ட பின்புதான், நான் குகையை விட்டு வெளியேற வேண்டும்” என்றான் போலின். போலின் வற்புறுத்தலுக்கு சம்மதித்த இளவரசி, கூடையில் ஏறுவதற்கு முன்னால், தன்னுடைய தலையிலிருந்த வெள்ளி ஊசியை இரண்டாக உடைத்து ஒன்றை அவள் தலையில் வைத்துக் கொண்டாள். மற்றதை போலினிடம் கொடுத்தாள்.
அதைப் போல அவளின் பட்டுக் கைக்குட்டையை இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை போலினிடம் கொடுத்தாள். வெள்ளி ஊசி மற்றும் பட்டுக் கைகுட்டை பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி கூறினாள். இளவரசி, கூடையில் ஏறிக் கொள்ள ஜியாவும், அவன் நண்பர்களும் கூடையை மேலே இழுத்து இளவரசியை மீட்டனர். இளவரசி மேலே வந்தவுடன், போலினை குகைக்குள் தவிக்க விட்டு, ஜியா, இளவரசியைக் கூட்டிச் சென்றான்.
குகையிலிருந்து வெளியேறுவதற்கான வழியைத் தேடி குகையைச் சுற்றி வந்தான் போலின். குகையில் அழகான பெண்கள் சிலர் இறந்து கிடந்தனர். இவர்கள் ஒன்பது தலைப் பறவையால் கொண்டு வரப்பட்டு பசியினால் இறந்தவர்கள். சுவற்றில் ஒரு மீன் நான்கு மூலைகளிலும் ஆணி அடிக்கப்பட்டு மாட்டி வைக்கப்பட்டு இருந்தது.
அந்த மீனை போலின் தொட்டவுடன், மீன் அழகான வாலிபனாக மாறியது. நீ என்னைக் காப்பாற்றியதால், இன்று முதல் நீ என்னுடைய சகோதரன் என்று சொல்லி அந்த வாலிபன் மறைந்து விட்டான்.
போலினுக்கு அதிகப் பசி எடுத்தது. சாப்பிடுவதற்கு குகையில் ஒன்றும் இருக்கவில்லை. குகைக்கு வெளியே கற்கள் இருந்தன. பக்கத்தில் டிராகன் ஒன்று கீழே இருந்த கல்லை நாக்கால் நக்கிக் கொண்டிருந்தது. போலினும், டிராகன் செய்தது போல கல் ஒன்றினை எடுத்து நாக்கால் நக்கத் தொடங்கினான். அவனுடைய பசி குறையத் தொடங்கியது. இந்த குகையிலிருந்து எப்படி வெளியேறுவது என்று டிராகனைக் கேட்டான். என் மீது அமர்ந்து கொள் என்று சைகையில் சொல்லியது டிராகன்.
போலின், டிராகன் முதுகில் அமர்ந்து கொள்ள சில நொடிகளில் டிராகன் அவனை குகையிலிருந்து மீட்டுத் தரையில் இறக்கியது. டிராகன் உடனே மறைந்து விட்டது.
போலின் நடந்து வந்த பாதையில் நிறைய முத்துக்களுடன் ஆமை ஓடு ஒன்றினைப் பார்த்தான். அந்த முத்துக்கள் எல்லாம் மந்திர சக்தி கொண்டவை. எரிகின்ற நெருப்பில் முத்துக்களைப் போட்டால், நெருப்பு அணைந்து விடும். தண்ணீரில் முத்துக்களைப் போட்டால், தண்ணீர் விலகி நடப்பதற்கு நடுவில் வழி ஏற்படும். முத்துக்களை எடுத்துக் கொண்டு நடந்தான் போலின்.
போலின் கடற்கரையை அடைந்தான். கடல் நீரில் முத்துக்களைப் போட்டவுடன், கடல் விலகி போலின் நடப்பதற்கு வழி ஏற்பட்டது. கடலில் ஏற்பட்ட சலசலப்பைப் பார்த்த கடல் டிராகன், “இந்தக் கடலின் அமைதியை ஏன் குலைத்தாய்?” என்று கேட்டது. ஆமை ஒட்டிற்குள் முத்துக்களைப் பார்த்தேன். அந்த முத்துக்களைக் கடலில் போட்டதும், கடல் விலகி, நான் நடப்பதற்கு வழி அமைத்துக் கொடுத்த்து.” என்றான் போலின். “அப்படியானால் என் இருப்பிடத்திற்கு வா. என்னுடன் இருக்கலாம்.” என்றது கடல் டிராகன்.
கடல் டிராகன் இருப்பிடத்தில் தான் காப்பாற்றிய வாலிபனைப் பார்த்தான் போலின். தன் மகனை மாய வலையிலிருந்து மீட்டது போலின் என்றறிந்த டிராகன், “நீ காப்பாற்றியதால் என் மகன் உன்னுடைய சகோதரன். நான் உன்னுடைய தந்தை. சில நாட்கள் எங்களுடன் தங்கிப் போக வேண்டும்” என்றது. போலின் விடை பெற்றுச் செல்லும் போது அந்த வாலிபன் சொன்னான்.
“என் தந்தை உனக்கு பணம் மற்றும் நகைகள் தருவதாகச் சொல்வார். ஏற்றுக் கொள்ளாதே. அங்குள்ள மந்திரக் குடுவை வேண்டும் என்று சொல். உனக்கு என்ன வேண்டுமென்று விரும்புகிறாயோ, அத்தனையும் மந்திரக் குடுவை கொடுக்கும்.”
போலின் கிளம்பும் போது “உனக்கு என்ன வெகுமதி வேண்டும், கேள். கொடுக்கிறேன்” என்றது டிராகன்.
டிராகன் மகன் கூறியது போல மந்திரக் குடுவையைக் கேட்டான் போலின். அதைக் கொடுக்க மனமில்லை டிராகனுக்கு. ஆனால், சொன்ன சொல் மாறக்கூடாது என்று மந்திரக் குடுவையைக் கொடுத்தார்.
போலினுக்கு கடற்கரை வந்தவுடன் பசி எடுத்தது. உடனே அவனுக்கு முன்னால் ஒரு அழகிய சாப்பாட்டு மேஜையில் வித விதமான உணவுகளும், பானங்களும் வந்தன. சாப்பிட்டு நடக்கத் தொடங்கினான். நடப்பது களைப்பாக இருந்தது. உடனே எதிரில் கழுதை தோன்றியது. கழுதையில் ஏறி பயணித்தான் போலின். கழுதைப் பயணம் சுகமாக இல்லை. உடனே வாகனம் ஒன்று வந்தது.
வாகனத்தில் செல்லும் போது, ஒரு அழகிய பல்லக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று போலின் நினைத்தான். அழகிய பல்லக்கு, அதைத் தூக்கிச் சுமக்க வேலையாட்கள் வந்தனர். பல்லக்கில் ஏறி இளவரசி ஷீன்யென் வசிக்கும் நாட்டிற்குள் நுழைந்தான் போலின்.
ஜியா, இளவரசியைக் கூட்டி வந்ததால், வாக்களித்தபடி ஜியாவுக்கு, இளவரசியைக் கல்யாணம் செய்து கொடுக்க முன் வந்தார் அரசர். இளவரசி ஒத்துக் கொள்ளவில்லை. என்னைக் காப்பாற்றியது ஜியா இல்லை. என்னைக் காப்பாற்றியவர் வருவார். அவரைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்றாள் இளவரசி. அரசரும் சில நாட்கள் அவகாசம் கொடுத்தார். போலின் வரவில்லை. ஜியா கல்யாணம் எப்போது என்று அரசரை நச்சரித்துக் கொண்டிருந்தான்.
நீ ஜியாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை என்றால் வாக்குத் தவறியவன் என்று நாட்டு மக்களிடம் கெட்ட பெயர் வந்து விடும். ஆகவே, நாளை உன்னுடைய திருமணம் ஜியாவுடன் என்றார் அரசர்.
போலினைத் தேடி அரண்மனையிலிருந்து வெளியே வந்தாள் ஷீன்யென். அதே சமயம் பல்லக்கில் அரண்மனை அருகில் வந்தான் போலின். போலின் கையில் பாதிக் கைக்குட்டையைப் பார்த்த ஷீன்யென், மகிழ்ச்சியுடன் அவனை அரசரிடம் அழைத்துச் சென்றாள். போலினிடம் இருந்த வெள்ளி ஊசி, இளவரசியிடம் இருந்த ஊசியுடன் பொருந்தியது. அதுபோலவே இருவரிடமும் இருந்த கைக்குட்டைகளும் பொருந்தின.
ஒன்பது தலைப் பறவையைக் கொன்று, தன்னுடைய மகளைக் காப்பாற்றியது போலின் என்ற உண்மையைப் புரிந்து கொண்ட அரசர், ஜியாவை சிறையில் அடைத்தார்.
ஷீன்யென், போலின் திருமணம் விமரிசையாக நடந்தது
(சீன நாட்டின் நாட்டுப்புறக் கதை)
கே.என்.சுவாமிநாதன்
சென்னை
.