இலைதழை தின்னும்
ஆடு முன்னே
ஒலிபெருக்கியை நீட்டினால்
அது பயந்து உளறுகிறது
ஊடகத்தின் முகங்களில்
எச்சில் துப்புகிறது.
உண்மைக்கு முறைக்கும் மைக்குகளெல்லாம்
பொய்மைக்கு புழுப்போல் நெளிகின்றன
முதலாளித்துவ பத்திரிக்கைகளில்
பேனாக்களின் நிப்புகள் வளைந்து
நெடுநாட்களாயிற்று.
ரபேல் கடிகாரம் கட்டி
கேள்வியின் சபைக்கு வந்த ஆட்டிடம்
ரசீது கேட்டால்
அது தேள்கொட்டிய திருடனைப்போல்
திருதிருவென விழித்தது.
கால நேரம் பார்க்கத் தெரியாத ஆடு
கேடு காலமாய்
கெடு கேட்டது
இல்லாத நண்பனிடம் வாங்கிய கடிகாரத்திற்கு
நாடே நம்பாத கதைகள் சொல்லியது.
நாடெல்லாம்
ஜி.எஸ்.டி வழிப்பறி செய்கிறது
ஆட்டின் ஆட்சி தலைமை
கள்ள ரசீதை கண்டுகொள்ளாமல்
அமலாக்கத்துறைகள் யாவும்
ஆட்டுப்புழுக்கைகளை
தின்று புழுத்துக் கிடந்தன.
20 ஆயிரம் புத்தகங்களை படித்ததாக
பீற்றிக்கொள்ளும்
அரிச்சுவடி படித்தளவுகூட
அறிவற்ற பதில்கள் பேசும்.
2 லட்சம் வழக்குபதிந்தாக
வீரம் பேசும்
கணக்கு கேட்டால்
கால்வழியே ஈரம் போகும்.
ஆருத்ரா தோட்டத்தில்
மேய்ந்து
ஊரையே கொள்ளையடித்த
பணத்தில்
தீவு வாங்கியதாய்
ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள்
ஊளையிடும் சத்தம் பெரிதாய் இருக்கின்றது
உண்மையாய் கூட இருக்கலாம்.
பாலியல் குற்றவாளிகளை
ஒருங்கிணைப்பதற்கென்றே
வார் ரூம் வைத்திருக்கிறது
அதன் வேலையெல்லாம்
அந்தரங்கமாய்
உளவு பார்ப்பது
வீடியோ எடுப்பது
சுகிப்பது
ஊரெல்லாம் வெளியிடுவது
இதன் வெளியீட்டில்
கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்காத ஆடொன்று
அரசியலைவிட்டே ஓடிப்போனது.
அக்கா தம்பியின்
ஆபாச வசனங்கள்
ஆடியோ ரிலீசின் ஹைலைட்
கமலாலயத்தையே
காமலயமாக்கியதில்
அதிகாரி வேடம் போட்ட ஆட்டிற்கே
இந்த கேவலமான பெருமைகள் யாவும் சேரும்.
தாமரையின் தலைமை பட்டியில்
அடைந்து கிடக்கும் ஆடுகள் யாவும்
திறந்தவெளி குற்றவாளிகள்
நல்லதோர் நாட்டாமைகள் வாய்க்கும்போது
அத்தனை கருப்பு ஆடுகளும்
கசாப்புக்கடைக்குப் போகும்.
ஆடுகளின்
ஒற்றை முழக்கம்
பாரத் ஆத்தாக்கீ ஜே
ஆடு திருடுகிறவனும்
நாடு திருடுகிறவனும்
அதைத்தான் முழங்குகிறான்.
சட்டசபைக்கும் போகாமல்
மந்திரிசபையிலும் சேராமல்
கேவலம்
ஒரு ஆளுநர் கூட ஆகாமல்
பத்திரிக்கையாளர்
சபையை கூட்டியே
பைத்தியம்போல் பேசுகிறது.
ஊழல் பட்டியலை
வெளியிடப்போவதாக
ஊரெல்லாம் தமுக்கடித்து
சொத்துப் பட்டியலை வெளியிட்டு
ஊர் சிரிக்க நிற்கிறது.
ஒரு ஆட்டிற்கா
இவ்வளவு குரூரமும்
கோணல் புத்தியும் என்பீர்கள்
ஆட்டின் தோலை உரித்துப் பாருங்கள்
கொடிய தொரு ஓநாயை காண்பீர்கள்.

