ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ” ஓரெண்டே, ரெண்டே…. {நாவல்}” – தேனிசீருடையான்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ” ஓரெண்டே, ரெண்டே…. {நாவல்}” – தேனிசீருடையான்

 

 

 

 

அரசுப் பள்ளிகளும் அரசாங்கமும்!

 

அரசு கல்விக்கூடங்கள், குறிப்பாக ஊரகப் பகுதியில் இயங்கும் பள்ளிகள் உயிர்த்துடிப்பு இல்லாத வெற்றுடம்பாய்க் கிடப்பதைத் தோலுரித்துக் காட்டும் இலக்கியப் பனுவல் இந்த நாவல்.

கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி என்பது வெறும் படித்தலோடு நின்றுவிடுவதில்லை. அவர்களின் குடும்பநிலை, பொருளாதாரக் கட்டமைப்பு, ஊதியம் ஈட்டுதலின் ஏற்றத் தாழ்வு ஆகியவற்றோடு கலந்திருக்கிறது. இருபது ஆடுகளை மேய்க்கும் சிறுமி ஏன் படிக்க வேண்டும் என்ற மனோநிலை இன்றும் கிராமப்புற ஏழைகளிடம் குடிகொண்டிருப்பதை நாவல் சுட்டிக் காட்டுகிறது. உணவு கிடைத்தால் பள்ளிக்கூடம் வருவார்கள் என்ற காமராசர் அவர்களின் திட்டத்தின் வழியே கல்விப்புலத்தில் பெரும் புரட்சி நிகழ்ந்தது என்றாலும் இன்றைக்கும் கல்விக்கூடம் செல்ல விரும்பாத வாழ்க்கைக் கெடுபிடி இருந்துகொண்டுதான் இருக்கிறது. 2015ஆம் ஆண்டுவாக்கில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஒரு திட்டம் (எமிஸ் திட்டம்) குழந்தைகளை அரசுக் கல்விக்கூடப் படிக்கட்டுகளை மிதிக்கும் ஆர்வத்தை மேலும் குறைத்து விட்டது.

தனியார் கல்வி நிறுவனங்கள் சிறந்த கட்டுமானத்துடனும் நடுத்தர வாழ்வைப் பிரதிபலிக்கும் லாவகத்துடனும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதுவும் ஆங்கில வழிக் கல்வி! ஆங்கிலம் பயின்றால்தான் வாழமுடியும் என்ற மேல்தட்டு வர்க்க நுகர்வுப் பிம்பம் வாழ்வின் எல்லா மட்டத்திலும் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு இருக்கிறதோ இல்லையோ பெற்றோர்க்கு ஆங்கில மோகம் தலைக்கேறிவிட்டது. இந்தச் சூழலில் எமிஸ் திட்டத்தை அரசு அறிமுகப் படுத்தியது. பணம் கட்ட முடியாத 25% ஏழைக் குழந்தைகளை தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கவேண்டும்; அவர்களுக்கான செலவை அரசு ஏற்றுக் கொள்ளும்.

ஊரகப் பகுதிகளில் ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. நூறு குடும்பங்களுக்குள் இருக்கும் ஊர்களின் குழந்தைகள் எமிஸ் திட்டத்தின்மூலம் தனியார் நிலயங்களில் சேர்ந்துகொள்கிறனர். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன. நாளாவட்டத்தில் மாணவர்கள் இல்லாத வெற்றுக் கட்டிடங்களாய் சீர்குலையும் போது அந்தப் பள்ளிகள் இழுத்து மூடப்படும் என்று நாவல் எச்சரிக்கிறது.

வெள்ளத்தேவன்பட்டி என்ற குக்கிராமத்தில் ஈராசிரியர் பள்ளி ஒன்று இயங்குகிறது. திருவண்ணாமலையில் இருந்து மாற்றலாகி கவிதா டீச்சர் அங்கு வருகிறார். நான்கு மாணவர்களும் அண்டர் ஏஜ் குழந்தைகள் இருவரும் பயில்கின்றனர். புதுப் புதுப் பிள்ளைகளைச் சேர்த்துப் பள்ளியை விரிவு படுத்த முயன்று பத்துப் பேர்வரை சேர்க்கிறாள் கவிதா. எமிஸ் திட்டத்தின் தாக்கத்தால் அடுத்த ஆண்டு ஒரு மாணவர் கூட இல்லாத நிலை உருவாகிறது. தன் சொந்தச் செலவில் ஆட்டோ பிடித்து வீட்டுக்கே போய் குழந்தைகளை அழைத்து வந்து மீண்டும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கிறாள். ஒருநாள் ஆட்டோ எதிர்பாராத விபத்தில் சிக்கி குழந்தைகளுக்குச் சிறு காயம் உண்டாகிறது. இதைக் காரணம் காட்டி, கவிதா பள்ளி விதிகளுக்குப் புறம்பாய் நடந்தார் எனக் கூறி இடைநீக்கம் செய்யப் படுகிறார். எட்மாஸ்டர் வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போக, ஆசிரியர் இல்லாப் பள்ளி என்ற பலகை ஒட்டப் பட்டு பள்ளி மூடப் படுகிறது.

ஒரு சிறுகதை அளவுள்ள இந்தப் படைப்பை நாவல் அளவு விரித்து எழுதியிருப்பது ஆசிரியரின் எழுத்துத் திறமைக்குச் சான்று.

இந்தப் பள்ளி 1916ல் தொடங்கப்பட்ட நூற்றாண்டுப் பள்ளியாகும். எமிஸ் திட்டம் வருவதற்குமுன் அந்தப் பள்ளியில் எட்டு ஆசிரியர்கள் வேலை செய்ததை நினைவு படுத்துகிறார் முன்னாள் ஆசிரியர் ராமசாமி. அவர் கூறுகிறார். “இந்த இங்கிலீஷ் மோகம்; அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அரசாங்கம் இஷ்டத்துக்கு இங்கிலீஷ் பள்ளிக் கூடத்தைத் திறக்கு அனுமதி கொடுத்ததால் உள்ளதும் போச்சு.”
“இந்த விஷ விதையை யார் தூவியது? மனிதனின் நுகர்வுக் கலாச்சாரம்தான் அதற்கான பிள்ளையார் சுழியாக இருக்க முடியும். உலகமே சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் போது பாவம் இந்த கிராமத்துத் தமிழ்வழிக் கல்வி நிலயம் என்ன செய்துவிட முடியும்?” நாவலின் அழுத்தமான கேள்வி இது. மனித மோகத்துக்கு அரசு அடிபணிந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

கல்வி என்பது சேவைப் பிரிவு. தனியாருக்கு ஒப்படைத்தால் வணிக நோக்கம் கொண்டதாக மாறிவிடும்; கல்வியும் சுகாதாரமும் அரசின் கையில் இருந்தால்தான் அது மக்களுக்கானதாய் இருக்கும். அப்போதுதான் ஏற்றத்தாழ்வற்ற கல்வியும் நலவாழ்வும் கிடைக்கும் என்கிறார் ஆசிரியர்.

ஆசிரியர்கள் வெறும் சம்பளம் வாங்கும் யந்திரங்கள் அல்ல; மனிதநேயமும் உதவும் பண்பும் உள்ளவர்கள். ஒருவரை ஒருவர் நேசிக்கும் அன்யோன்யம் அவர்களுக்கு உண்டு. கவிதாவின் அப்பா திடீரென மயக்கமுற்று பக்கத்தில் இருப்பவர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார். ஒரு விழாவில் கலந்துகொண்டிருந்த போது கவிதாவுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. உடன் இருந்த மற்ற ஆசிரியர்கள் தங்கள் வேலைகளை ஒத்திவைத்துவிட்டு மருத்துவமனைக்கு ஓடி உதவுகின்றனர். கவிதாவையும் காரெடுத்து அழைத்துச் சென்று தந்தையிடம் சேர்ப்பிக்கின்றனர். இது மனித மாண்பின் யதார்த்தப் படப்பிடிப்பு.

இந்த நாவலில் அங்கங்கே சில தத்துவத் தெறிப்புகளும் உண்டு. உதாரணத்துக்கு ஒன்று. அத்தியாயம் 12 இப்படித் துவங்குகிறது. “பள்ளி என்பது பிடித்துப் போய்விட்டால் சிலருக்குப் பூங்கா மாதிரி; சிலருக்குக் கோயில் மாதிரி; சிலருக்கு அதுவே ஜெயில் மாதிரி தெரியும். 12 வருட பூங்காவாழ்க்கை, 12 வருட கோயில் வாழ்க்கை, 12 வருட ஜெயில்வாழ்க்கை என வாழ்ந்துவிட்டு வரும் சகலரையும் ஒரே களத்தில் நிற்கவைக்கிறது காலம். அதன் பின்பான வாழ்க்கையில் பூங்காவிலும் கோயிலிலும் இருந்து வந்தவர்கள் ஜெயில் வாழ்க்கைக்கும் ஜெயில் என இருந்துவிட்டு வந்தவர்கள் பூங்கா வாழ்க்கைக்கும் தள்ளப்படலாம். நம் வகுப்பறைகள் வாழ்க்கையைக் கற்றுத் தருவதற்குப் பதிலாக, சம்பந்தமே இல்லாத பலரால் கட்டமைக்கப் பட்ட பாடங்களையே கற்றுத் தருகிறது.”

இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது. நம் மாணவர்கள் லீவு விட்டால் ஏன் குதூகலம் அடைகிறார்கள் என்ற கேள்விக்கான விடையை இந்தக் கோணத்தில் ஆராய்வது முக்கியம் என நினைக்கிறேன்.
நாவலின் நடுநடுவே நகைச்சுவை சிலேடைகளும் இருக்கின்றன. ஓர் அதிகாரி ஆசிரியர்களின் பரிசீலனைக் கூட்டத்தில் பேசும் பகுதி உம்மணாமூஞ்சியைக் கூட சிரிக்க வைத்துவிடும்.

“இதப்பத்தி நாம ஊருப்பட்ட இதப் போட்டுட்டோம்; ஏற்கனவே இருந்த இத வச்சு எல்லாருக்கும் நாம பல இதப் போட்டுட்டோம்; இருந்தாலும் நம்மல்ல பல ஸ்கூல் ‘இதப் பண்ணி முடிக்யல; இது இல்லாம நமக்கு இனிமே எதுவும் செய்ய முடியாதுன்னு டைரக்டர் இதப் போட்டு கண்டமேனிக்கிப் பேசுறார். இத எதுக்கு நீங்கல்லாம் இதுபண்ணி முடிக்காம இருக்கீங்கண்டு தெரியல; கேட்டா எனக்கு இது கெடக்யல; அது கெடக்யலைன்னு சொல்றீங்க; அதனால இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னுதே அரசாங்கம் ஒரு இதக் கொண்டு வந்திருக்கு.”

‘இது’ என்பது எது என்று கடைசிவரை புரியவே இல்லை.
இந்த நாவல் நவரசங்களின் கூட்டுக் கலவையாய்த் திகழ்வதைப் புரிய முடிகிறது. ஆனாலும் நாவலுக்கு சம்பந்தமில்லாத சில பகுதிகளும் இருக்கின்றன. கவிதாவைக் காமப் பார்வையோடு நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் ஜெயவேல் என்ற பாத்திரமும் அவன் வந்துபோகும் காட்சிகளும் நாவலோடு ஒட்டவில்லை. அந்தப் பகுதியை வெட்டி எடுத்துவிட்டால் நாவலில் ஒரு குறையும் இருக்கப் போவதில்லை. இயற்கையின் உயிர்ச்சங்கிலி பற்றிய பகுதியும் (பக்கம் 157) ஒருவேளை உணவு கிடைக்காத 30% மக்கள் பற்றிய (பக்கம்160) விவரணையும் கலை நேர்த்தி இல்லாமல் செயற்கைத் தன்மையுடன் புனையப் பட்டுள்ளது. ஓர் இலக்கியப் படைப்பு சித்தரிப்புகளின் தொகுப்பாகவும் ஆசிரியர் தலையீடு இல்லாமலும் இருக்க வேண்டியது முக்கியம்.

அரசு பள்ளிகளின் இருப்பு கேள்விக்குறியாகியிருப்பது பற்றிய முக்கியமான இலக்கியப் படைப்பு என்பதால் ஆசிரியரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

நூல் : அரசுப் பள்ளிகளும் அரசாங்கமும்!
ஓரெண்டே, ரெண்டே {நாவல்}
ஆசிரியர் : இதயநிலவன்.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்.
பக்கம் :170
விலை: 170/

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,  கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *