ஊர்க்காரி ஒருத்தியின் காதல் - மௌனன் யாத்ரிகா | Oorkari Oruthiyin Kadhal

காதல் இயல்பானது என்பதைத் தாண்டி அது எல்லோருக்குமானது . வசப்படும் உயிர்களை அது வாட்டி எடுக்கும். அறியாமையை அணு அணுவாய்
நம்மிடமிருந்து விலக்கும். பிரிவினை எனும் விஷத்தை பெரிதாய் முறிக்கும்.

எல்லாமும் கடந்து சிந்திக்க செய்யும். சில நேரம் சிந்திப்பற்று சிதறிப் பிழைகளோடு உருளும்.

அப்படியான காதலைச் சமூகம் உள்வாங்கிய விதம், அதைச் சார்ந்த மக்களின் புரிதல் மிகவும் வேடிக்கையானது. தன் இருப்பை பொறுத்து யார் என்ற கேள்வி யாருக்கும் எழாமல் இல்லை. இருந்தும் எழ விடாமல் பார்த்துக் கொள்வதே மானுட அறம்.

தோழர் மௌனன் யாத்ரிகாவின் கவிதைகள் அறம் பேசுகிறது. பாதிக்கப்படுபவர்களின் பக்கம் நிற்கிறது. கலையின் வாயிலாக நீதி கேட்கிறது. ஆதிக்கத்திற்கு எதிராகவே இறுதி வரை போராடுகிறது.

காதலைச் சூழ்ந்த அரசியல், பெண்களைச் சுற்றிய ஆணாதிக்கப் பார்வை எனத் தொகுப்பு முழுக்க சமூக வன்மங்களை தோலுரித்திருக்கிறார்.

எழுதப்பட்ட எல்லா கவிதைகளிலும் ஊர்க்காரி ஒருத்தி நடமாடிக் கொண்டே இருக்கிறாள்.

தாழம்புதரிலிருந்து பாம்பாக வெளியேறுகிறாள். ஊர் அஞ்சும் தெய்வத்திற்கு முன் கூடல் புரிகிறாள். குருதியில் குளித்த அவனை குத்திக் குடிக்கிறாள்.
ஊருக்கு கேட்காத உறுமலோடு தினம் துயில்கிறாள்.

சினிமாக்களில் காட்டப்படும் செயற்கைத் தனமான காதல் இவரது கவிதைகளில் துளியும் இல்லவே இல்லை. மாறாக நம்மூர் முச்சந்தியிலும்,அச்சமூட்டப்பட்ட இடங்களிலும் அரங்கேறும் காதலை கண் முன் நிறுத்தியதில் அத்தனை நேர்த்தி.

ஆதிக்கத்திற்கு ஆகச்சிறந்த மருந்தாக இருப்பதால் என்னவோ காதலுக்கு இடைநிலை மக்களின் ஓட்டு விழுவதே இல்லை. தரம் பிரிக்கும் மூளைக்கு எப்படி புரியும் காதலென்பது யாவருக்குமான இசையென்று.

விமர்சனமும் வீண் பழியும் நிறைந்த பல ஊர்க்காரிகளின் காதலயே தோழர் மௌனன் யாத்ரிகா இந்நூலில் அழுத்தமாக பதிவிடுகிறார்.

சாதியும் ,ஆணும் அதிகாரத்தின் குறியீடாகவே சமூகத்தில் உலாவுது என்பதை உறுதிப்படுத்துகிறது தோழரின் கவிதைகள்.

சேரும் அல்லது பிரியும் ஒரு காதலில் காயங்கள் அது தரும் விளைவுகள் பெண்ணைச் சுற்றியே நிகழ்கிறது என்பதை யதார்த்தம் .விமர்சனமும் கூட இதற்கு விதிவிலக்கில்லை. ஆணை விரட்டும் விமர்சனங்கள் இன்னமும் எழுதப்படவில்லை போலும்.

காதல் வயப்பட்ட ஒருத்தியை குடும்பமாய் தனித்தனியாக மிரட்டுமிடம், இரக்கம் இல்லாதவர்களின் கோர முகத்தை கண்முன் நிறுத்துகிறது.

காதலின் பொருட்டு நிகழ்த்தப்படும் வன்முறைகளையும், ஆணவ படுகொலையையும், அதை ஒட்டிய அதிகாரத் திமிரையும், அறியாமை இருளையும் அப்படியே பதிவு செய்கிறது.

காதலால் நிகழும் மரணங்கள் பாதிக்கப்படுபவர்களுக்கே பரிசாகிறது. இதை விதியாக்கிய பெருமை திட்டித் திமிரும், அறிவற்று இயங்கும் சாதியவாதிகளையேச் சாரும்.

அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான தொகுப்பு. சமூக அரசியல் புரிய இத்தொகுப்பு நல்ல வாய்ப்பு.

தோழரின் எழுத்துகள் வலுவானாதாகவும் வலிமையுள்ளதாகவும் இருக்கிறது. சமகால கவிஞர்களில் மிகவும் என்னை ஈர்ப்பவராகவும் திகழ்கிறார்.

 

நூலின் தகவல்கள்

நூல்  : ஊர்க்காரி ஒருத்தியின் காதல்

ஆசிரியர் : மெளனன் யாத்ரீகா

விலை : ரூ.120

வெளியீடு : எதிர் 

 

எழுதியவர் 

க. மணிமாறன்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *