ஊர்சுற்றிப் புராணம்
மூல மொழியும் நூல்
வெளிவந்த ஆண்டும்
பற்றிய விவரங்கள் இல்லை.
தனது நாற்பதாண்டு கால ஊர் சுற்றி அனுபவத்தைக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார் ராகுல்ஜி என்றழைக்கப்படும் ராகுல சாங்கிருத்யாயன்.
1916 முதல் 1932 வரை தான் ஈட்டிய பௌத்த மத அறிவை பனிரெண்டு நூல்களில் வடித்திருப்பதாகக் கூறுகிறார்.அதோடல்லாமல் மனிதகுல வரலாற்றைக் கதை வடிவில் சொல்லும் பிரபலமான நூல்களான “வால்காவிலிருந்து கங்கை வரை”, “சிந்து முதல் கங்கை வரை” உள்ளிட்ட மேலும் பல நூல்களையும் எழுதியுள்ளார்.
ஊர்சுற்றி மதம்
உலகின் மிகப் பழமையான மதமென்றால் அது ஊர் சுற்றி மதம்தான்.
அது வானத்தைப் போல பரந்து விரிந்ததும் கடலைப் போல ஆழமானதுமாகும்.
இயற்கையான புராதன மனிதன் மிகவும் ஊர்சுற்றியாகத்தான் இருந்திருக்கிறான்.
இந்தப் புதிய உலகத்தை ஆக்கியவனே அவன்தான்.
அவன் மட்டும் வசதியாக இருக்கிறதென்று ஓர் நதிக்கரையிலோ குளக்கரையிலோ தங்கிவிட்டிருந்தால் மனித சமுதாயம் மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டிருக்கும்.
ஊர்சுற்றிகள்
அன்று முதல் இன்று வரை….
ஆச்சார அனுஷ்டானங்களிலும் நற்பண்புகளிலும் தலைசிறந்த புத்தபிரான் ஊர்சுற்றிகளின் அரசராகத் திகழ்ந்தார்.
தொன்மையான மதத்தை நிறுவிய மகாவீரர் தன் வாழ்நாள் முழுவதும் ஊர்சுற்றிக் கொண்டே இருந்தார்.
ஏசுநாதரும்,அமர காவியங்கள் படைத்த அஷ்வகோஷும் ஊர்சுற்றிகளே.
வரலாற்றில் கடினமான சிரமங்களை அனுபவித்த ஊர்சுற்றிகளைப் பற்றி மதிப்புடனும் அனுதாபத்துடனும் வர்ணித்திருக்கிறவர்கள் பாஹியானும் யுவாங் சுவாங்ம்.
குருநானக் இந்தியாவோடு பாரசீகத்திலும் அரபுநாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்தார்.
கொலம்பஸ்ம் வாஸ்கோ டகாமாவும் ஊர்சுற்றிகள்தாம்.
ஐரோப்பாவிலுள்ள ஊர்சுற்றி இனத்தவர் நம் நாட்டு ஊர்சுற்றி இனத்தவரின் உறவினர்தான்.
அவர்கள் இந்தியா,ஈரான்,மத்திய ஆசியாவில் சுற்றிக் கொண்டே இருப்பவர்கள்.
ரோமானியர்கள் பதினொன்று அல்லது பனிரெண்டாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சென்ற ஊர்சுற்றி இனத்தவரே என்பதை ஆராய்ச்சிகள் மெய்ப்பித்துள்ளன.
டார்வின்
டார்வின் காட்டிய புதிய ஒளியில் எல்லா விஞ்ஞானங்களுமே தம் வளர்ச்சிப் போக்கினை மாற்றிக் கொள்ள நேர்ந்தது.டார்வின் மட்டும் ஒரு ஊர்சுற்றியாக மாறாமலிருந்தால் இப்படிப்பட்ட மகத்தான சாதனையைப் புரிந்திருக்க முடியுமா?
பழங்குடிகளைப் பற்றி…
சுகாதாரம்:
நம்மவரில் பெரும்பாலானோர் மூக்கையும் கண்களையும் துடைக்க வெறும் கைகளையே பயன்படுத்துகிறார்கள்.இவையெல்லாம் சுகாதாரத்திற்கு எதிரானவைதான்.ஆனால் பழங்குடி மக்களின் சில பழக்கங்கள் சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் நெருங்கியவையாகவே இருக்கிறது.
ஓரோர் சமயம் விவரிக்க இயலாத பயத்தினாலும்,கண்ணுக்குப் புலப்படாத சக்திகளின் கோபத்துக்கு ஆளாவோம் என்ற அச்சத்தினாலும் சில செயல்கள் செய்யப்படுகின்றன.
ஊர்சுற்றியானவன், மாசுபடாத இயற்கையின் மடியிலும், அதன் உண்மையான வாரிசுகளான பழங்குடிகளுடனும் ஒரு சில மாதங்கள் அல்லது வருடங்கள் செலவழித்தால் வரலாறு,மனித இனம், மொழி அல்லது வேறேதாவது பற்றி புதிது புதிதாய் ஆராய்ச்சி செய்து கொண்டேயிருக்கலாம்.
நாடு பிடிக்கும் ஏகாதிபத்திய ஊர்சுற்றிகளால் ‘தஸ்மானிய’ பழங்குடி இனம் உலகிலிருந்தே மறைந்து விட்டது.இன்னும் பல இனங்கள் வீழ்ச்சியடைந்து விட்டன.
பெண்கள்
நம் நாட்டில்தான் ஆண், பெண்ணின் ஒவ்வொரு ரோமக் கண்ணிலும் ஆணி வைத்து அடித்திருக்கிறான்.
மேலும்,பெண்கள் வெறும் பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல என்ற பெரியாரின் வரிகளை இவரும் கூறுகிறார்.
நாட்டை ஆளவும் தயாராகிவிட்ட பெண்களின் முன்னேற்ற வேகத்தை இனி ஆண்களால் தடுத்து நிறுத்த முடியாது.
பெண்களை அடிமை விலங்குகளில் பிணைக்காத நாடுகளில் பெண்கள் சாகசப் பயணம் செல்லத் தயங்குவதில்லை.
மதமும் ஊர்சுற்றுதலும்
மதங்களின் குறுகிய எல்லைகளை ஊர்சுற்றி கடந்து போய் விடுகிறான்.அவன் மதப் பாகுபாட்டைத் துச்சமெனக் கருதுகிறான்.
மற்ற நாட்டினர் இந்தியப் பண்பாட்டுத் தூதுவர்களை எதிர்பார்த்து நின்றனர்.ஏனெனில் அப்போது நமது நாட்டுப் பண்பாடு உச்ச நிலையில் இருந்தது.
கி.பி. முதல் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டு வரையிலும் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு மதப் பிரச்சாரகர்களும், வியாபாரிகளும்,அரச பரம்பரையினரும் சென்று கொண்டே இருந்தனர்.
மார்கோ போலோ வின் பயணக் குறிப்புகள் எப்போதும் உற்சாகமளிப்பவை.
சிற்பக்கலை, ஓவியக்கலை, மற்றும் கட்டிடக் கலைகள் நாடுவிட்டு நாடு ஊர்சுற்றிகளாலேயே பரவியது.
ஊர்சுற்றி நாட்குறிப்பு எழுதுவது மிகவும் அவசியமாகும்.
தனது பயணத்தில் சரித்திர முக்கியத்துவம் உள்ள ஓவியங்கள்,நூல்கள் மற்றும் கலைப் பொருட்களைப் பெறலாம்.
நான் அவ்வாறு பெற்ற அரிய பொருட்களை
பாட்னா மியூசியத்துக்கும்,காசியிலுள்ள கலாபவனத்துக்கும் இன்னும் சிலவற்றை அலகாபாத் நகராட்சி மியூசியத்துக்கும் அளித்துவிட்டேன்.
ஊர்சுற்றிகளுக்கு வழிகாட்டுவதற்காக பௌத்தர்களின் “பிரதிமோட்ச சூத்திரங்கள்” இருக்கின்றன.அவற்றை நான் “வினய்மிடக்” நூலில் மொழிபெயர்த்துள்ளேன்.
*”கடலின் உப்பு நீருக்கும் இந்து மதத்துக்கும் கடும் பகை” என்ற முட்டாள்களின் உபதேசம் காரணமாகவும், ஊர்சுற்றும் மனப்பான்மையை இழந்து விட்டதாலுமே கேட்பாறற்றுக் கிடந்த ஆஸ்திரேலியாவை நோக்கிச் சென்று கொடி நாட்டும் மனப்பான்மை வரவில்லை…
ஊர்சுற்றி மனப்பான்மை அருகி வருவதையும் அவை இன்பச் சுற்றுலாவாக மாறி வருவதையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.
இந்நூலின் கடைசிப் பக்கத்தில்,”1949 ஆம் ஆண்டு ஜுன் மாதத்துக்கு முன்னால் “ஊர்சுற்றிப் புராணம்” எழுதப்படவில்லை என்று சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது இது 1949ல் எழுதப்பட்டது என அறியமுடிகிறது.
~~~
இறுதியாக,
‘ இந்தப் புதிய யுகத்தை ஆக்கியவனே ஊர்சுற்றிதான்’ என சொல்கிறார் ராகுல்ஜி.
இன்று, உலகில் உள்ள பிற்போக்கு சக்திகள்
விஞ்ஞான வளர்ச்சியின் சகல விசயங்களையும் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு,வரலாற்றையும் முடிந்தால் பூகோளத்தையும்,அறிவியலுக்குப் புறம்பான பல வகைகளில் திரித்துத் திணிக்கிற வேலையில்,உண்மை பேசும் நவீன கால ஊர்சுற்றிகளின் தேவை காலத்தின் கட்டாயமாகிறது.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! எனும் பாரதியின் அறைகூவலை ஏற்போம்.
ஊர்சுற்றிப் புராணம்
நூலாசிரியர்
ராகுல சாங்கிருத்யாயன்
NCBH வெளியீடு
1982
தமிழில்:
ஏ.ஜி.எத்திராஜுலு.
நூல் மதிப்புரை: ந.சண்முக சுந்தரம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஈரோடு .