ஊருணிகளின் மரணம் – சு. தினகரன்
ஊருணி – இப்பெயரே இப்போது பேச்சு வழக்கொழிந்து போனது. ஆனால் இன்னும் ஊராகவோ, தெருப்பெயர்களாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. இப்புவி வெப்பமடைதல் காலத்தில் பல்லுயிர் வளம் அவ்வளவு முக்கியமானது என்கிறார்கள். நாம் தான் பல்லுயிர் வளத்தை சிதைத்துக்கொண்டிருக்கிறோம். ஆறாவது சிற்றினப்பேரழிவு மனிதர்களால் நிகழப்போகிறது என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை. பெரும்பாலான புறநகர் பகுதிகளில் காணாமல் போன ஊருணிகளைத்தேடி நத்தைக்குத்தி நாரைகள் வட்டமிட்டுச் சென்று கொண்டுதானிருக்கின்றன.
ஊருணிகள் ஒரு காலத்தில் இயல்பாக தோன்றியவை தான். மனிதர்களாலும் அவர்கள் தேவைக்காகவும் உருவாக்கப்பட்டது. ஈர நிலங்களில், கிளை பிரிந்த நதிகளில், பெரு மரமொன்று சாய்ந்த நிலத்தில் என வாய்ப்புக்கிடைத்தபோதெல்லாம் உருவானவை. குறிப்பாக எந்த இடத்திலெல்லாம் நீர் தங்க வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் ஊருணிகள் உருவாகும். சமயங்களில் இயற்கையான குளங்கள் உருவானதும் கூட மனிதர்களால் நிகழ்ந்திருக்கிறது. கிராமங்களில் ஊருணிகளுக்கு பெரும் பங்குண்டு. குடிநீர் ஆதாரத்துக்காக, மாட்டு வண்டிச்சக்கரங்கள் சுருங்காமல் இருக்க, மாடுகள் குளிப்பாட்ட, வண்டிச்சக்கரங்களை நனைக்க என்று அதன் பயன்பாடுகள் அதிகம். ஊருணிகள் உருவாவதும் ஒரு சுற்றுச்சூழல் நிகழ்வே. ஊருணிகள் குறித்து பன்நெடுங்காலமாகவே நாம் பேசிவருகிறோம். திருக்குறளில் 215 வது குரல் ஊருணி பற்றியதே! அறத்துப்பாலில், இல்லறவியலின் ஒப்புரவறிதல் என்ற தலைப்பில் ஊருணியின் சிறப்பைப்பற்றி இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது:
“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.”
அதன் பொருள் ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது. பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும். இப்படி ஏராளமாய்ச்சொல்லிக்கொண்டே போகலாம். அது நம் நோக்கமல்லவே! தமிழ்நாட்டில் மட்டும் அழிக்கப்பட்ட குளங்கள் ஏராளம். ஆனால் அரசு இது குறித்து எந்தவிதமாகவும் வினையாற்றவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஏராளமான அரசு அலுவலகங்கள் ஊருணிகளின் சமாதிகள் மேல் கட்டப்பட்டவை தான். மேலைநாடுகளிலெல்லாம் இவைகளை காப்பதற்காவே இயக்கங்கள் உண்டு. ஊருணிகளை நம்பி பல தாவரங்களும், கரைகளில் மரங்களும், மிதவை உயிர்கள் தொடங்கி மீன்கள் வரை, தட்டானப்பூச்சிகள், நீரளவிகள், பூச்சிகள், அதன் புழுக்கள், நுண்ணுயிர்கள் என ஏராளமாய் இருக்கின்றன.
ஒன்றை யோசித்திருக்கிறீர்களா? ஏன் குளங்களில் கொசுக்களின் லார்வாக்கள் இருப்பதில்லை? தட்டானப்பூச்சிகளின் லாரவப்பருவம், கொசுக்களின் லார்வாக்களை இல்லாது செய்துவிடும். பொதுவாக அனைத்து பாசிகளும் கொசு லார்வாக்களின் உணவு தான் என்றாலும், சில வகை ஆல்காக்கள் கொசுக்களுக்கு விஷத்தன்மை கொண்டவை, குறிப்பாக நீலப்பசும்பாசிகள். இயல்பாகவே, ஒரு முழுமையான உணவுச்சங்கிலிகொண்ட சுற்றுச்சூழலில் உயிர்களின் பெருக்கம் கட்டுக்குள்ளேயே இருக்கும். மனிதன் மட்டுமே அடங்குவதில்லை. தவிரவும் சுற்றுச்சூழலில், உணவுச்சங்கிலியில் அவனுக்கு எந்த பங்கும் கிடையாது. ஆனால் சூழலை அழிப்பதில் முதலிடத்தில் இருக்கிறான்.
இயற்பியலில் பட்டாம்பூச்சி விளைவு என்ற விதியை அறிவீர்கள் தானே? அது போல இந்திய நீர்நிலைகளின் பேரழிவிற்கு ஐரோப்பா தான் காரணம். தொழிற்புரட்சியின் காரணமாகத்தான் தங்கள் நீர்நிலைகள் அழிகின்றன என்று புரிந்த பிறகு மாசுபடுத்தும் பெரும் தொழிற்சசாலைகள் இந்தியாவிற்கும், தெற்காசிய நாடுகளுக்கும், சீனாவிற்கும் இடம் பெயர்ந்தது. நம் நீர் வளங்களை மாசடையச்செய்தது. நொய்யலாறும், பாலாறும் மாசடைந்ததன் காரணமும், தேம்ஸ் நதி மாசற்று இருப்பதற்கும் இதுவே காரணம்.
தட்டான்களின் பெரும் வேட்டைக்களம் ஊருணிகளின் சூழல் சார்ந்தது, இவற்றின் லார்வாக்கள் தண்ணீரில் தான் வாழும். பின்னரே முதிர் பருவமடைந்து பூச்சிகளை வேட்டையாடும். பயிர்களைத்தாக்கும் தீங்குயிர்களும் திட்டங்களுக்கு உணவாய்ப்போகும். அதனால் பயிர்கள் காக்கப்படும். தட்டான்கள் சிறந்த வேட்டையாடிகள், சிங்கமோ, புலியோ அல்ல. இரையைப்பிடிப்பதில் 93% க்குமேல் வெற்றி பெற்றுவிடும். ஊருணிகளின், குளங்களின், கண்மாய்களின் அழிவால் தட்டான்கள் குறைந்து போயின. தட்டான் தாழப்பறக்க மழை வரும் என்ற சொலவடையை இச்சமூகம் மறந்துவிட்டது. பெரும்பாலும் ஊருணிகள் இயற்கையாய் மரணிப்பதில்லை! அப்படியே நிகழ்ந்தாலும் அவை மீண்டெழும். ஆனால் மனிதன் நிகழ்த்தும் நிகழ்வுகள் ஊருணிகளை நிரந்தர, மீட்க இயலாத மரணங்களை நிகழ்த்திவிடும்.
எப்படியாவது, எவ்வளவு செலவழித்தாவது உயிரை மீட்டிவிட நினைக்கும் மனிதர்கள் ஊருணிகளை மீட்பதில் மெனக்கெடுவதில்லை. இத்தனைக்கும் மனிதர்கள் தேவைக்கும் அதிகமாக்க நீர்த்தேவைகளில் இருப்பவர்கள். பணம் கொடுத்து வாங்குபவர்கள். ஆனாலும் அக்கறையில்லையே!
இன்னொரு வகையான மரணம் கொடுமையானது! ஊருணிகளை மேல மெல்ல ஆக்கிரமித்துக்கொள்வது. மெதுவாக உருவாகும் புறநகர் பகுதிகளில் அருகிலுள்ள குடியிருப்புகளின் குப்பைகள் கொட்டப்படும். அதில் வெளியாகும் நச்சுப்பொருட்களும் சிறிது சிறிதாக ஊருணியை ஆக்கிரமிக்கும், பிறக்க கொள்ளும். நகரமயமாதலில் வீடுகள் மேலும் பெருகும். குப்பைகளும் ஊருணிகளில் கொட்டப்படும். மேடாக, மேடாக நீர்வரத்தும் குறைந்து போகும். குளங்கள் மேவப்பட்டு மெல்ல மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படும். அந்தப்பகுதியில் தாட்டியமாய் பெயரெடுத்தவர்கள் தான் முதலில் குடிசை ஒன்றை அமைப்பார்கள். பின் மாடுகளைக்கட்டுவார்கள். அவர்களின் புழக்கத்தில் ஊருணியின் இருப்பு மறைக்கப்படும். பின் மக்களின் மனதிலிருந்து நீக்கப்படும். நகர்மயமாதலின் தீவிரத்தன்மை அந்த இடத்தின் சதுர அடியை பானங்களில் தீர்மானிப்பார்கள். பின் வீடுகளாகவோ, அடுக்ககங்களாகவோ, நவீன அங்காடிகளாகவோ பரிணமிக்கும். மக்களின் மனதிலிருந்து ஊருணிகள் மரித்துப்போகும். வயசாலிகள் மாட்டு பிதற்றிக்கொண்டிருப்பார்கள்.
இப்படியாக ஊருணிகள் மரித்துப்போயின!
கட்டுரையாளர் :

சு. தினகரன் – மலையக ஓடைகளில் உள்ள நீர்வாழ் பூச்சிகள் குறித்து 25 வருடங்களுக்கும் மேலாக ஆய்வுகளை மேற்கொண்டவர். 17 க்கும் மேலான நீர்வாழ் பூச்சிகளை புதிதாக கண்டறிந்தவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநில தலைவர். மதுரைக்கல்லூரியின் மேனாள் விலங்கியல் இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர். முனைவர் பட்ட நெறியாளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


ஊருணிகள் குறித்து விளக்காமன கட்டுரை. ஊருணிகளின் அழிவுக் குறித்து மிக அழகாக விளக்குவது இருக்கிறது. இன்றைக்கு நீரினால் உருவாகும் நோய்களுக்கு காரணம் பல விதமான கொசு உற்பத்தி. மனிதர்களுக்கு தீங்கு செய்யும் கொசுக்களை ஊருணிகளில் வாழும் லார்வாக்கள் (தட்டான் பூச்சி) அழிக்கின்றன என குறிப்பிடும் செய்தியானது நாம் ஏன் ஊருணிகளை காப்பாற்ற இயலவில்லை என்ற உணர்வு மேலோங்குகிறது. தமிழத்தில் எங்கெல்லாம் ஊருணிகள் இருந்தன அவை எப்படி அழிந்தன என கண்டறிய வேண்டும். இதனை பாதுகாக்க மக்கள் இயக்கங்கள் முன்வர வேண்டும்.தொடர்ச்சியான விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தி தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.இதற்கு லாப நோக்கமற்ற அரசியல் கொள்கை தேவை. காலத்திற்கு பொருத்தமான கட்டுரை.