ஒறுப்பு நாவல் - தமிழ்வெளி | Ooruppu - Novel

ஒறுப்பு என்ற நாவலின் பெயரே சற்று வித்தியாசமாக இருக்கிறது. ஒறுப்பு என்பதற்கு பல பொருட்கள் இருந்தாலும் நாவலாசிரியர் கா. சி. தமிழ்க்குமரன் அவர்கள் தண்டனை, வெறுப்பு போன்ற பொருள்களை மையமாக வைத்து நாவலைப் புனைந்திருப்பது வாசிக்கும் நமக்கு புரிகிறது. சிறுகதை எழுத்தாளர் என்ற முத்திரை கொண்ட ஆசிரியர் தனது முதல் நாவல் முயற்சியிலும் வெற்றி பெற்று நாவலாசிரியர் என்ற இடத்தை அடைந்து, ஒறுப்பு நாவல் மூலம் நமக்கு தனது மற்றொரு பரிணாமத்தை அளிக்கிறார்.

சிவந்திபுரம் கோவில் நகை கொள்ளை என்ற ஒரு கதைக்களம் காளியப்பன், செல்லபாண்டி, கல்யாணி என்ற முக்கிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு நகர்கிறது. காவல் நிலையத்தில் பதியப்படும் ஒரு ஆணின் நடத்தைத் தொடர்பான வழக்கில் ரவி, திலகா, மீனா குமாரி, பார்வதி போன்ற கதாபாத்திரங்களைக் கொண்டு அமைகிறது மற்றொரு கதைக்களம். இருவேறு கதைக்களங்கள் எந்தத் தருணத்திலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற நிலையில் நகர்கிறது. இரண்டு கதைகளும் சந்திக்கும் புள்ளியாக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்படுவதில் ஒற்றுமை கொண்டுள்ளன என்பது கதையின் வாயிலாக நமக்கு காட்சிபடுத்தப்படுகிறது. தொடர்பற்ற இரு கதைகள் அடுத்தடுத்து அத்தியாயங்களாக விரிவதால் வாசிப்பவருக்கு ஆர்வம் குறையாமல் கதை செல்கிறது.

வழக்கமாக கோவிலில் அரங்கேற்றும் கொள்ளை சம்பவங்கள் எவ்வாறு திட்டமிடப்படுகிறது போன்ற நுணுக்கமானத் தகவல்களை தெரிந்துகொள்ள முடிகிறது. எதிர்பார்ப்பற்ற தூய்மையான அன்பு எப்படிப்பட்ட ஆணையும் ஒரு மனிதனாக மாற்றும் வலிமை பெற்றது என்பது காளியப்பனின் மீது கல்யாணி வைத்திருக்கும் அன்பின் மூலம் நமக்கும் கடத்தப்படுகிறது.

இந்த சமூகத்தில் பெண்கள் பெரும்பாலும் உயர்வானவர்களாகவே கருதப்படுகின்றனர். அவர்களுக்கு இடையில் சில பெண்கள் தங்கள் பெண்மையை கருவியாகப் பயன்படுத்தி ஆதாயம் தேடுபவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் அவர்களால் ஒழுக்கமான ஆண்கள் எத்தகு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்ற மாறுபட்ட கண்ணோட்டத்தையும் ரவியின் கதை மூலம் கவனமாக கையாண்டிருக்கிறார் ஆசிரியர். ஒரு இளைஞன் ஓரிரு வருடங்கள் மட்டுமே தங்கள் ஊரில் தங்கி பள்ளியில் தற்காலிகமாக ஆசிரியராக பணியாற்றுகிறான் எனும்போது அவன் மீது நம்பிக்கை கொண்டு பஞ்சாயத்தில் அவனுக்காக குற்றம் சாற்றிய பெண்களிடம் பேசுவது போன்று வருவதும் அவனுக்காக ஆதரவாக இருப்பதும் நடைமுறையில் அத்தனை சுலபமாக சாத்தியப்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

ரவியும் திலகாவும் காதலில் ஒன்று சேராதபோதும் ரவியின் உணர்வுகளை அழகாக விவரிக்கும் இடங்களில் நாவலை ரசனையுடன் நாம் வாசிக்க வாய்ப்பளித்துள்ளார். காதலின் வெற்றி இருவரும் இணைவது மட்டுமல்ல இருவரின் அன்பும் உணர்வுபூர்வமாக பரிமாற்றிக்கொள்வதில்தான் அதன் வெற்றி என்பது ரவி திலகா காதல் நமக்கு வழங்கும் புரிதல். அதே நேரம் ஒரு பெண்ணின் சுயநலம்மிக்க நடத்தை ஒரு ஆணின் வாழ்வையும் அவன் குடும்பத்தையும் எப்படி புரட்டிப்போடும் என்பதையும் மீனாக்குமாரி, பார்வதி என்ற இரு பெண்கள் மூலம் விளக்க முற்பட்டிருக்கிறார் ஆசிரியர்.

இந்த இரண்டுக் கதைகளிலும் நட்பு, காதல், குடும்பம், சமூகம், கோவில், திருவிழா, நம்பிக்கை போன்ற கட்டமைப்புகள் பொதுவாக இடம்பெற்றிருந்தாலும் அவற்றில் ஒரு வித்தியாசம் கொண்டுவந்து ஒன்றைப் போல் மற்றொன்று அமைந்துவிடாத வண்ணம் கதை நகர்கிறது. நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சிறு சிறு சம்பவங்களையும் உரையாடல்களையும் கூர்ந்து கவனித்து அவற்றை தனது எழுத்தின் மூலம் கோர்வையாக அளித்து நாவலுக்கு முழுமை பெற்ற வடிவம் அளித்திருக்கிறார். காளியப்பனின் கதையில் தீர்வை சுமூகமாக வழங்கிய ஆசிரியர் ராவின் கதைக்கான தீர்வை வாசகர்களான நம்மிடமே விட்டுவிடுகிறார்.

கதைசொல்லல் என்பதன் பொருள் அதனை எவ்வாறு கோர்வையாக, வேகமாக தொய்வின்றி வாசகனை எழுத்துடனும் மொழியுடனும் கதையுடனும் கதாபாத்திரங்களுடனும் பயணிக்கச்செய்கிறது என்பதை பொறுத்தே அமைகிறது. நடைமுறையில் நடந்துகொண்டு இருக்கும் இயல்பான இரண்டு சம்பவங்களை தனது எழுத்தின் கட்டமைப்பினால் முந்நூறு பக்கங்களில் வடிவமைத்து நாவலாக முழுமைபெற செய்திருபபது சிறப்பான முயற்சி. ஒரு சிறுபுள்ளியை எழுத்தின் வலிமையால் முழுநீலக் கதையாக உருமாற்றியிருப்பது நாவலாசிரியரின் இடத்தை இலக்கிய தளத்தில் தக்கவைக்கிறது.
ஆசிரியருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : ஒறுப்பு

நாவலாசிரியர் : கா. சி. தமிழ்க்குமரன்

விலை : ₹280

வெளியீடு : தமிழ்வெளி

 

எழுதியவர் 

பிரியா ஜெயகாந்த்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 3 thoughts on ““ஒறுப்பு நாவல் “”
 1. இந்நாவலைப் படித்துவிட்டு அந் த ரவியிடமிருந்து மீளவியலாமல் தவித்தேன்… குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம். நிரபராதிகள் யாரும் தண்டனைப் பெற்றுவிடக்கூடாது என்ற சமூகநீதி ஒரு சிலருக்கு வாய்க்காமலே போய்விடுகிறது. மூன்று வகையான கதைக்களங்களைக் கொண்டிருந்தாலும் கதை நகர்த்துதல் அருமை. ஒறுப்பு எனும் தலைப்பு நம்மைத் திக்குமுக்காட வைக்கிறது. இதுவே ஆசிரியரின் வெற்றி…
  இந்நாவலை வாசியுங்கள்.. படிக்கப்படிக்கத் தூண்டும்..

 2. மிகச்சிறப்பான விமர்சனம்..தோழர். வாழ்த்துகள்

 3. ஒறுப்பு நாவலின் வாசிப்பு அனுபவத்தை எழுத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் தோழர்.

  நாவலின் மையத்தையும் கதையின் போக்கையும் ,கதை மாந்தர்கள் வழியாக நீங்கள் உணர்ந்தவற்றை தொகுத்து நாவலை வாசிக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள் தோழர்.

  தங்களின் எழுத்து நடை வாசிப்பதற்கு சுகமாக இருக்கிறது தோழர்.

  வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழர் 💐💐😍🤝🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *