2021 ஜனவரி 29
ஸ்ரீ ராம்நாத் கோவிந்த்
இந்திய குடியரசுத் தலைவர், ராணுவ தலைமைத் தளபதி
ராஷ்டிரபதி பவன்
புது தில்லி 110001.
அன்புள்ள குடியரசுத் தலைவரும், தலைமைத் தளபதியுமான ஸ்ரீ கோவிந்த் ஜி,
மூன்று நாட்களுக்கு முன்னர் குடியரசு தினத்தன்று நடந்த நிகழ்வுகள் குறித்து மிகுந்த கவலையும், வருத்தமும் கொண்டிருக்கிறேன் என்பதை என்னுடைய தலைமை தளபதியான உங்களிடம் தெரிவிப்பதற்காகவே இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.
செல்லும் இடம் தெரியாது, தீர்வுகள் கண்ணுக்கு எட்டாதவையாக இருக்கின்ற விவசாயிகள் பிரச்சனை உடனடியான, முதிர்ச்சியுடன் கூடிய கையாளுதலுக்கான தேவையை உருவாக்கியிருப்பதான அச்சத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நான் சில நாட்களுக்கு முன்பு வீடியோ, கடிதம் மூலமாக பிரதமருக்கும், விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கும் வேண்டுகோளை விடுத்திருந்தேன். எனது அந்த வேண்டுகோள் நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகள் விவசாயிகளால் ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவுகளை வழங்கத் தவறிவிட்டதால், குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகரில் டிராக்டர் அணிவகுப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டும்; அது அமைதியான பேரணியாக இருக்க வேண்டும்; ராஜ்பாத்தில் வழக்கமாக நடைபெறுகின்ற குடியரசு தின அணிவகுப்பில் தலையிடாத வகையில் அது இருக்கும் என்று விவசாயிகள் சங்கங்களின் அறிவிப்பை ஒட்டியே இருந்தது. கீழே உள்ள இணைப்பைக் காண்க:
https://ruralindiaonline.org/en/articles/you-have-awakened-the-entire-nation/?fbclid=IwAR1O_ 6X3F fNEM8K6yLrHFAsYG_2w0yIQkJMmxwJU7uK0cebKde gxctd1
விவசாயிகள் தங்களையும், தங்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்ற சட்டங்களை இயற்றுவதற்கு முன்பாக தங்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்று மட்டுமே கோரி வருகின்றனர். அது செய்யப்படவில்லை. விவசாயிகளும், விவசாய நிபுணர்களும் அந்த சட்டங்கள் அவற்றின் தற்போதைய வடிவத்தில் பெருநிறுவனங்களின் நலன்களுக்கு சாதகமாகவும், விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவும் செல்லும் என்றே பயப்படுகிறார்கள்.
2020 செப்டம்பரில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்து விட்டு, புதிய சீர்திருத்தங்கள் / சட்டங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக விரிவான ஆலோசனைகள் மற்றும் விவாதங்களைத் தொடர வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கியமான கோரிக்கை இருக்கின்றது. அவர்களிடம் இருந்து வருகின்ற இந்த அச்சங்களில் நியாயம் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், இப்போதுள்ள நிலைமையைக் கையாள மிகுந்த கூருணர்வு தேவைப்படுகிறது. மாநில அரசுகளின் பங்களிப்புடன் குறைந்தபட்ச ஆதார விலை, மண்டி அமைப்பு, தனியாரிடமிருந்து வருகின்ற நியாயமற்ற அழுத்தங்கள் என்று விவசாயிகளிடம் இருக்கின்ற உண்மையான அச்சங்கள் குறித்து பாதிக்கப்பட்டிருப்பவர்களிடம் விரிவாக விவாதிக்கப்படக்கூடிய வகையில் அவற்றைக் கவனித்துக் கேட்டு செயல்படுவதற்கான விருப்பமே இப்போது அதற்குத் தேவைப்படுகிறது.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கையைப் பரிசீலிக்க விரும்பாத மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசிற்கும் இடையில் விவசாயிகள் நாட்டின் தலைநகரிலே – தங்களுடைய தலைநகராகவும் பார்த்த – தங்களுடைய நிலைப்பாட்டையும், கோரிக்கைகளையும் முன்னிறுத்துவதற்கு குடியரசு தினத்தை பொருத்தமான நாளாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தனர்.
பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தில் பின்வரும் முறையீடுகள் இருந்தன:
1. மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்
2. அந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர் விவசாயிகள் தலைவர்கள் போராட்டங்களை நிறுத்த வேண்டும்.
3. நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ராணுவத்தில் இருந்த உறவினர்களுக்கு மரியாதை செலுத்தி விவசாயிகள் குடியரசு தினத்தை கொண்டாட முடியும் என்பதால் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
நமது எல்லைகளைக் காத்து, கடமையை ஆற்றிய பிறகு வீட்டிற்குத் திரும்புகின்ற ராணுவ வீரர் கிட்டத்தட்ட ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் இருக்கிறார் என்பதை இதற்கு முன்பாக நான் குறிப்பிட்டிருந்தேன். ஒருபோதும் இந்த உறவை நாம் மறந்து விடக்கூடாது. விவசாயிகள், ராணுவ வீரர்களை எதிர்ப்பது கடுமையான வீழ்ச்சியையே ஏற்படுத்தும். அதன் மூலம் தேசிய பாதுகாப்பு மீது ஏற்படுகின்ற தாக்கங்களைப் புறக்கணித்து விட முடியாது.
டெல்லியைச் சுற்றி நடந்து வருகின்ற போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கும் விவசாயிகளில் பெரும்பான்மையானவர்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுவும், அதைத் தொடர்ந்து மற்ற வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் (தில்லிக்கு அருகிலும், தொடர்பில் இருக்கின்ற இடங்கள் காரணமாக இருக்கின்றன) சேர்ந்துருப்பதுவும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்த சட்டங்களை திடீரென அறிவித்திருப்பதன் மூலம் ஏதேனும் ஒரு வடிவத்திலே வேளாண் துயரங்கள் நாடு முழுவதும் உள்ள விவசாய சமூகத்தைப் பாதிப்பது தெளிவாகிறது.
டிராக்டர்களில் மற்றும் கால்நடையாகச் சென்ற 90% போராட்டக்காரர்களைக் கொண்டு நடைபெற்ற அமைதியான, ஒழுங்கான ஊர்வலம் குறித்து ஜனவரி 26, 27ஆம் நாட்களில் பிரதான ஊடகங்கள் எதிலும் பதிவு செய்யப்படவே இல்லை என்பது துயரமானது. செங்கோட்டையின் ‘ஆக்கிரமிப்பு’க்குப் பிறகு, தீப் சிங் சித்து தலைமையிலே சிறிய இளைஞர்கள் குழுவால் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும், அச்சு ஊடகங்களிலும் தொடர்ந்து வெளியானது. மூவர்ணக் கொடியை வீழ்த்தி ‘மத’ கொடி ஏற்றப்பட்டது பற்றியும் தவறான தகவல்கள் வெளியாகின.
ஆகஸ்ட் 15, ஜனவரி 26 போன்ற நாட்களில் எப்போதுமே செங்கோட்டையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்பதை நான் அறிவேன். அதிகாரியாக செங்கோட்டையில் நடைபெற்ற பல விழாக்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். எனவே எந்த வகையிலும் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத நபரோ அல்லது குழுவோ அந்த கொத்தளத்தின் கீழே உள்ள இடத்தின் மேலே ஏறுவது எளிதானது அல்லது சாத்தியமானது இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். உள்ளே செல்லும் வழியில் பல தடைகளும், வாயில்களும் இருக்கின்றன. அந்த வாயில்கள் பொதுவாக பூட்டியே வைத்திருக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஜனவரி 26 அன்று மிக முக்கியமான அந்த தேசிய நினைவுச்சின்னத்தைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எங்கே போயின? பொதுவாக கோட்டையின் உள்ளே வைக்கப்பட்டுள்ள ராணுவ பட்டாலியன் ஏன் அன்றைக்கு காணாமல் போனது? ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாடு நிகழந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய மோசமான பாதுகாப்பு மீறலுக்கான காரணங்களைக் கண்டறியும் வகையில் முழுமையான விசாரணை உடனடியாகத் தேவைப்படுகிறது.
தகவல்களைத் தருகின்ற ஊடகங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தில் உள்ள சிலரும் ‘விவசாயிகள்’ மற்றும் போராட்டக்காரர்கள் தேசத்தையும், தேசியக் கொடியையும் அவமதித்து விட்டதாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும், அவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள், குடியரசுக்கு எதிரானவர்கள் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் நடந்தது குறித்து மிகமிக மிகைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்ச ஊடக சித்தரிப்பு காரணமாகவே இவ்வாறான கருத்துகள் வெளியாகின. கீழே உள்ள கிளிப்பைப் பார்க்கவும்: https://youtu.be/ZnSOApEiaT8
இதையடுத்து தேசத்துரோக குற்றச்சாட்டு உட்பட பல காரணங்களுக்காக விவசாயிகள், விவசாயிகள் தலைவர்கள் மற்றும் நன்கு அறியப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் மீது தில்லி காவல்துறையினரால் முதல் தகவல் அறிக்கை அதிக அளவிலே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது வருத்தமளிப்பதாக இருக்கிறது.
சிறிய போராட்டக் குழு மற்றும் உயர் மட்ட அரசியல் தொடர்புகளைக் கொண்ட சில நபர்களை கோட்டைக்குள் எளிதில் நுழையும் வகையில் ஆத்திரம் கொண்ட நபர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் பாதுகாப்புப் படையினர் ஒன்றிணைந்து செயல்பட்டது குறித்து பல செய்திகள் பரவி வருகின்றன. காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டவாறு லட்சக்கணக்கான விவசாயிகளால் ஒழுங்காகவும் அமைதியாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருக்கக்கூடிய வேண்டிய பேரணியை வேண்டுமென்றே அவர்களால் சீர்குலைக்க முடிந்திருக்கிறது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள், உண்மையில் பாதுகாப்பில் ஏற்பட்ட கடுமையான குறைபாடுகள் குறித்து பக்கச்சார்பற்ற, உயர்மட்ட விசாரணை ஆணையம் உடனடியாக விசாரிக்க வேண்டும், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாய சமூகத்தினருக்கு சிறிதளவிலாவது ஒழுங்கு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தி தர வேண்டும்.
இன்று உயிருடன் இருக்கும் மிக மூத்த முன்னாள் சேவைத் தலைவர்களில் ஒருவனாக நான் இருக்கிறேன். முதலாவது சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தைக் கண்ட ஒரு சிலரில் ஒருவனாகவும் இருக்கிறேன்.
ஓய்வு பெற்ற பிறகு இப்போது மகாராஷ்டிராவில் உள்ள கிராமத்தில் இருபத்தியேழு வருடங்களாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறேன். எனக்கு இப்போது எண்பத்தியேழு வயதாகிறது. இனிமேல் என்னால் பயணிக்கவோ அல்லது பொது வாழ்க்கையில் மிகவும் சுறுசுறுப்பான பங்கை எடுத்துக் கொள்ளவோ முடியாது. மூத்த குடிமகன், மூத்த வீரர் என்ற முறையில், இதுபோன்று கடிதங்கள் மூலமாக எனது கவலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், ஐயா உங்கள் மூலமாக அரசாங்கத்திடம் தெரிவிக்கவும் முயன்று வருகிறேன். இந்த பிரச்சனைகளை உங்களிடமும் எனது சக நாட்டு ஆண்கள், பெண்களிடமும் கொண்டு செல்வதை எனது கடமையாகவும் பொறுப்பாகவும் கருதுகிறேன். இன்று என்னைப் போன்றவர்கள் அமைதியாக இருந்து விட்டால், குடியரசாக நாம் மாறிய போது அரசியலமைப்பில் நமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிலைநிறுத்துவதற்காக குரல் எழுப்பாமல் இருந்து விட்டேன் என்று கூறி வருங்கால சந்ததியினர் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
உயர்திரு குடியரசுத் தலைவர் அவர்களே, எனது தலைமைத் தளபதியாக, இந்த கடிதத்தில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைகளை தயவுசெய்து நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மிகவும் முன்னுரிமை தர வேண்டிய இந்த விஷயத்தில் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களை நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே 170க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களில் இந்த காரணத்திற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளனர். ‘உண்மையில் அவர்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் விழித்தெழ வைத்திருக்கிறார்கள்’.
எங்களுடைய குடியரசின் தலைவராக ஐயா, விவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் எங்கள் மக்களுக்கு இடையில் ஏற்படுத்தபப்டுகின்ற இந்த பயங்கரமான பிளவைத் தடுக்கும் வகையில் தனித்துவமான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். நீதியையும் சமாதானத்தையும் மீண்டும் கொண்டுவர உங்கள் நிலைப்பாட்டையும் உங்கள் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துங்கள். இந்த நிலத்துக்கும் அதற்கு அப்பாலும் உள்ள மக்களுக்கு அது நிச்சயம் ஒரு சிறந்த சேவையாக இருக்கும்.
எல்லா பக்கங்களிலிருந்தும், உலகம் நம்மைக் கவனித்து வருவதாகத் தெரிகிறது.
தங்கள் உண்மையுள்ள
எல்.ராம்தாஸ்
அட்மிரல் (ஓய்வு)
கடற்படை முன்னாள் தலைவர்
மகாராஷ்டிர கௌரவ் புராஸ்கர்
அமைதிக்கான மக்சேசே விருது பெற்றவர்
நன்றி: ஜனதாவீக்லி
தமிழில்: தா.சந்திரகுரு