மனம் திறந்த உரையாடல்
மனம் திறந்த உரையாடல்களை துவக்காமல் மாற்றங்கள் எதுவும் சாத்தியம் இல்லை.
தமிழ் சமூகத்தில் அடையாள அரசியல் வலுவாக வேரூன்றியுள்ள சூழலில் அறிவியல் பூர்வமான மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் தமிழக கல்வி நிலையங்களை அத்தகைய ஆபத்துக்கள் சூழ்ந்திருப்பதை ஆழமான விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. திருவிழாக்கள், ஊர்ப் புறங்களில் பின்பற்றப்படும் வாழ்க்கை வட்டச் சடங்குகள், சினிமாக்கள் வழியாக பகிரப்படும் சாதிய பெருமிதங்களால் கல்வி நிலைய வளாகங்களை வன்முறை கூடங்களாக மாற்றும் போக்கு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

குறிப்பாக, 21 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வண்ணம் என்ற வகையில் தனது கைகளில் சாதியின் அடையாளத்தை வெளிபடுத்த பள்ளி மாணவர்கள் கயிறு கட்டத் துவங்கினார்கள். பள்ளிகளில் சாதிய முரண்கள் அதிகரித்து வன்முறைகள் அதிகரித்து ஆரோக்கியமான சூழல் பள்ளியில் கேள்விக்குறியானது. இந்திய மாணவர் சங்கத்தின் தொடர் போராட்டங்கள் சமூக அளவில் உருவாக்கிய பெரும் விவாதத்திற்கு பிறகு அத்தகைய நடைமுறை ஒழிக்கப்பட்டது.

தென் மாவட்டங்கள் குறித்த வரலாற்றுப் புரிதலோடு ஒவ்வொரு பிரச்சினைகளையும் ஆராயவும், அணுகவும் வேண்டியுள்ளது. ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு விதமான ஒடுக்குமுறையை காலனிய காலத்திலும், அதற்கு முந்தைய மதுரை நாயக்கர்- கர்நாடக நவாப் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் சந்தித்துள்ளன. தென் மாவட்ட ஆட்சி நிர்வாகமே ஜமீன்தாரி பகுதிகளுக்கு ஒருவகையான நடைமுறை, அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பகுதிக்கு வேறு வகையான நடைமுறையுமாக இருந்தது. சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகள் அனைத்தும் சாதிகள் வேறாக இருப்பினும் அந்தந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஏற்ப மாறியிருந்தது. குறிப்பாக, சம்பந்தவழி என்ற சொல்லாடல் திருமணங்கள் நடைபெற்ற நிலங்களுக்கான வரலாறை வெளிப்படுத்தும்.
வெவ்வேறு பண்பாட்டு பின்புலங்கள் கொண்ட இனக்குழுக்களை ஒரே சாதிக்குள் அடைத்து, அச்சாதிக்குள் இருக்கும் அனைவரையும் ஒரே மாதிரியாக அணுகுவது தீர்வை தராது. 1871ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தான் உட்சாதிகளை இணைத்து ஒரு சாதியாக கணக்கிடும் முறைமை செயல்வடிவம் பெற்றது. அதற்கு முன், சாதி என்பது உபசாதிகள் உள்ளடங்கிய வர்க்கமாகவே பார்க்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிராமணர்கள் மற்றும் முன்னேறிய வகுப்பினர்களால் உருவாக்கப்பட்ட சமூக, சமய சீர்திருத்த இயக்கங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட முழக்கங்களில் ஒன்று உபசாதி வேறுபாடுகள் கடந்து ஒரு சாதியாக மாறுவது என்பதே. அந்தந்த சாதிக்குள் இருக்கும் பொருளாதார ரீதியிலான உள் முரண்பாடுகளை பொதுவிவாதித்திற்கு உட்படுத்தாமல் நம்மால் சமூக முரண்பாடுகளை களைய ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.

இத்தனை ஆண்டு காலம் சமூக பிரச்சினைகளில் தலையீடு செய்தும், ஜனநாயக மற்றும் முற்போக்கு இயக்கங்களால் சாதிய முரண்பாடுகளுக்கு ஒரு முடிவு கட்ட இயலவில்லை என்றால் நம்முடைய வேலைத் திட்டத்தில் ஏதோ கோளாறு என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். அடையாள அரசியல் ஓங்கி ஒலிக்கும் மண்ணில் சுயசாதி பற்று, பிறசாதி நட்பு என்ற முழக்கம் வலதுசாரிகளால் வழிகாட்டப்பட்டு அம்முழக்கம் வெற்றியும் பெற்றுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
சமூக பிரச்சினையில் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வாங்கிக் கொடுக்கும் பணியோடு நின்று விடாமல், பொது விவாதத்தை முன்னெடுக்க திட்டமிட வேண்டும். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற பொது மேடைகள் தங்களது சமூக நல்லிணக்கப் பிரச்சாரங்களை அனைத்து தரப்பட்ட மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும். சாதி மறுப்பு என்பது திருமணங்களோடு நின்று விடாமல், சமத்துவத்திற்கு எதுவெல்லாம் சாத்தியமோ அதை நோக்கி நகர வேண்டியுள்ளது. முதலில் மனம் திறந்த உரையாடலை துவங்குவோம் அந்தந்த சாதிகளில் உள்ள சாதி மறுப்பாளர்களிடமிருந்து… ஏனெனில் மீண்டும் நினைவுபடுத்த விரும்புவது என்னவெனில் “ஒவ்வொரு சாதியும் ஒடுக்குமுறையைக் கடந்தே வளர்ந்துள்ளது.”
கட்டுரையாளர் :

கி. மகாராஜபாரதி
உள்ளூர் வரலாற்றுக்கான கல்லோடை ஆய்வு மையம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

