இன்றைய சூழ்நிலையில் வண்ண மீன் வளர்ப்பு என்பது வளர்ந்து வரும். ஒரு முக்கிய தொழிலாகக் கருதப்படுகிறது. இது ஒரு நல்ல வருவாய் தரும் தொழிலாக மட்டுமல்லாமல் மனித மனதிற்கு சந்தோஷத்தையும், அமைதியையும் தருகின்றன. பல குடும்பங்களில் வண்ணமீன் வளர்ப்பு ஒரு சாத்தியமான தொழிலாக செயல்பட்டு வருகிறது. மக்களிடையே ஏற்பட்டு வரும் விழிப்புணர்வு காரணமாக இதன் தேவையும் அதிகரித்து வருகிறது. அதேசமயம் வண்ண மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பல சவால்களும் இருக்கவே செய்கின்றன. முதலில் இதன் வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வோம்.
வரலாற்று பின்னனி :
குறிப்பாக பழங்காலத்தில் இருந்தே பொழுதுபோக்கிற்கு ஒரு முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறது. வண்ண மீன்கள் முதன்முதலில் வீடுகளில் செல்லபிராணிகளாக வைத்து இருந்தவர்கள் பண்டைய ரோமானியர்கள். வண்ண மீன்களின் பராமரிப்பு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் 18ஆம் நூற்றாண்டில் கூட பிரபலமானது. பின்னாளில் வண்ணம் வடிவமைப்பு மற்றும் வடிவத்தால் அழகான மீன்களை வளர்க்கும் கலை உலகம் முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. பிரகாசமான வண்ண உயிரினங்கள் கற்பனை வகையில் ஆர்வம் அதிகரித்து வருவதால் வண்ண மீன் வளர்ப்பு கலாச்சாரம் மிகப்பெரிய வணிகமாக வளர்ந்து வருகின்றன. முக்கியமாக வளர்ந்த நாடுகளுக்கு ஏற்ப இந்தியாவிலும் வண்ண மீன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
வண்ண மீன் வளர்ப்பில் பொருளியல் முக்கியத்துவம் :
இந்தியாவில் கடல்சார் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்ட மதிப்பீட்டில் இந்தியாவில் ஒரு மில்லியன் மீன் பொழுதுபோக்கு ஆர்வலர்கள் உள்ளனர். உள் வர்த்தக ஏற்றுமதியில் சுமார் 15 கோடி என்ற நிலையில் உள்ளது இந்த வர்த்தகத்தின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 15 சதவீதம் ஆகும். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90 சதவீதம் கொல்கத்தாவில் இருந்தும், 8 சதவீதம் மும்பையில் இருந்தும், 2 சதவீதம் சென்னையிலிருந்து செல்கிறது. பரவலான இனங்கள் கிடைப்பதும் சாதகமான காலநிலை போன்ற அனைத்து சூழ்நிலைக்கும் ஏற்ப வளரும் தன்மை கொண்ட வண்ண மீன்கள் இந்தியாவில் கிடைப்பதால் அனைத்து நாடுகளும் தங்களுக்கு தேவையான வண்ண மீன்களை வாங்கி வளர்க்க விரும்புகின்றனர்.
வண்ண மீன் வளர்ப்பில் தமிழ்நாட்டின் பங்கு:
தமிழகத்தில் சென்னை,மதுரை,கோவை போன்ற பகுதிகளில் பல விவசாயிகள் வீட்டின் சிறிய இடத்திலேயே வண்ண மீன் வளர்த்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். தமிழகத்தில் குறிப்பாக வர்த்தகரீதியாக சென்னை புறநகரில் உள்ள கொளத்தூர், செங்குன்றம், தேவாம்பட்டு முதலிய பகுதிகளில் சிறிய அளவிலான உற்பத்தியாளர்கள் முதல் பெரிய அளவிலான உற்பதியாளர்கள் வரை வண்ணமீன் வளர்ப்பை ஒரு பிரதான தொழிலாக செய்துவருகின்றனா. கொளத்தூரில் வண்ண மீன் வளர்ப்பு மூலம் சுமார் 600 குடும்பங்களுக்கு மேல் முழு நேரத்தொழிலாக நம்பி வாழ்கின்றனர். மேலும் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு குடும்பமும் வண்ண மீன் வளர்ப்பு மூலம் மாதத்திற்கு சராசரியாக 5,000 முதல் 10,000 வரை வருவாய் ஈட்டுகின்றனர். தமிழ்நாட்டில் கொளத்தூர்,தேவாம்பட்டு,மதுரை போன்ற இடங்களில் வண்ணமீன் வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முன் மாதிரியாக விளங்குகிறது.
வண்ண மீன் வளர்ப்பில் வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்
சுய வேலைவாய்ப்பு:
சுய வேலை வாய்ப்பின் மூலம் குறைந்த முதலீட்டை பயன்படுத்தி வீட்டின் கொல்லைப்புறம் மற்றும் சிறிய இடங்களை உபயோகித்து வண்ண மீன்களை வளர்க்க முடியும். முதற்கட்டமாக உள்ர் மற்றும் பக்கத்து கிராமங்களிலே விற்பனை செய்து வருவாய் ஈட்ட முடியும். கும்மிடிப்பூண்டி, கொளத்தூர் போன்ற பகுதிகளில் பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் வண்ண மீன்களை வளர்த்து வருவதால் பெண்களின் வாழ்வாதாரமும் வேலைவாய்ப்பும் பெருகுகின்றன. வர்த்தக ரீதியாக வண்ண மீன் வளர்ப்புத் தொழில் சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்கள் முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக இருந்து வருகிறது. ஆகவே லாபம் தரும் அந்நிய வண்ண மீன்களை வளர்ப்பதோடு நம்முடைய உள்நாட்டு மீன்களையும் வளர்த்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் வருவாய் பெருக்கத்திற்கும் பலருக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

அரசின் திட்டங்கள்:
கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஆPநுனுயு) பல்வேறு மாநிலங்களில் வண்ணமீன்களை சந்தைப்படுத்துதல் மற்றும் மீன் இனப்பெருக்க பிரிவுகள் அமைப்பதற்கான மானிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக இந்நிறுவனம் வண்ண மீன் வளர்ப்பு தொழில்நுட்பத்தை மக்களிடையே கொண்டு செல்லும் முகமாக பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. சிறு தொழிலாகவும், பெரிய முதலீட்டிலும் இதை மேற்கொள்ள முதலீட்டு உதவி, தொழில்நுட்ப உதவி இவைகளை இந்நிறுவனம் வழங்கிவருகிறது. மத்திய மாநில அரசின் சம்பந்தப்பட்ட துறையில் வண்ணமீன் வளர்ப்பை மேம்படுத்துவதற்க்காக வேலையற்ற இளைஞர்களுக்கும்,பெண்களுக்கும் வண்ணமீன்வளர்ப்பு பயிற்சிகளும்,சந்தைப்படுத்துதல்,ஏற்றுமதி,இறக்குமதி பயிற்சிகளும் வழங்கபட்டு வருகிறது.
வேலைவாய்ப்பை பெருக்குதல் :
வண்ணமீன்வளர்ப்பு தொழில்நுட்பம் மூலம் பல வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முடிகிறது. மீன்களை சந்தைபடுத்துதல், வண்ண மீன் கடை அமைத்துக் கொடுத்தல், வண்ணமீன் வளர்க்க தேவையான உபகரணங்களை தயாரித்தல் மீன்விற்பனை போன்ற பல வழிகளை மேற்கொள்வதின் மூலம் வேலைவாய்ப்பு பெருகிறது.
குறைந்த முதலீடு :
குறைந்த முதலீட்டு மூலம் வீட்டின் சிறிய இடங்களான தொட்டிகள், பாரல்கள் போன்ற பொருட்களை வைத்து கப்பி, மோலி போன்ற காலநிலையை தாங்கக்கூடிய இனங்களை வளர்த்து, அவற்றை உள்ளுரிலே சந்தைப்படுத்தி பின்னர் பெரிய அளவில் பண்ணை, குட்டைகள் அமைத்து தொழில்துவங்களாம்.
குறைந்த செலவில் அதிக இலாபம் தரும் மீன்களை வளர்த்தல் :
வீட்டில் அதிர்ஷ்டம் தரும் மீன்களான அரவான, ஆஸ்கர், ஃப்ளவர்ஹார்ன் போன்ற வண்ணமீன்கள் வீட்டில் அதிர்ஷ்டத்திற்க்காக வளர்க்கும் மீன்களாகும். இதன் விலை ரூபாய் 5000 முதல் 1 லட்சம் வரை விற்கப்படுகிறது. இத்தகைய மீன்களை குறைந்த விலையில், அதன் மீன்குஞ்சுகளை வாங்கி வளர்த்து அதிக இலாபத்தில் விற்பனை செய்ய முடியும்.
உள்நாட்டு மீன்களை சந்தைபடுத்துதல்:
தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகம் (வுNகுனுஊ) மற்றும் தமிழக மீன்வளத்துறை 2000ஆம் ஆண்டில் இந்த முயற்சியில் இறங்கியது. கோயம்புத்தூர் அருகே சில விவசாயிகள் தங்களது தனது பண்ணையில் தங்கமீன்கள், பைட்டர் போன்ற பிரபலமான வண்ண மீன்களை வளர்த்து வந்தனர். பின்னர் உள் நாட்டு மீன்களான கேட்பீஷ், கௌராமி மற்றும் பார்ப்கள் போன்ற உள்நாட்டு இனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நல்ல வருவாயை ஈட்டினர். தமிழ்நாட்டில் வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தகத்திற்கு கொளத்தூர் முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. இது வண்ண மீன் வளர்க்க நினைக்கும் விவசாயிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். உள்நாட்டு மீன்கள் வெப்பம்,காலநிலை மாறுபாடு போன்ற காரணிகளில் சுலபமாக வாழ்வதால் பெரும்பாலான அயல் நாட்டவர்கள் இந்திய மீன்களையே வளர்க்க முற்படுகின்றனர்.
வண்ண மீன் வளர்ப்பின் முக்கியத்துவம் :
பிறவகை வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்களுக்கும் வண்ணமீன் வளர்ப்பு தொழில் நுட்பத்திற்கும் பல வேறுபாடுகள் உண்டு.
இத்தொழில்நுட்பத்தை எளிதாக கற்றுக் கொள்ளலாம்
மிகக் குறைந்த அளவிலான இடமே போதுமானது,சுற்றுப்புறசூழலுக்கு பாதிப்பு இல்லை.
தண்ணீரும் மற்ற இன மீன் வளர்ப்பை போலின்றி குறைந்த அளவே போதுமானது.
மேலாண்மை(நீர்த்தரம்,உணவு மற்றும் நோய்) முறைகளை எளிதாக மேற்கொள்ளலாம்
குறைந்த முதலீட்டிலும் தொழில் துவங்கலாம் அதிக முதலீட்டிலும் மேற்கொள்ளலாம்
சந்தைப்படுத்துதல் கடினமானதல்ல.
உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தைகளில் இவ்வகை மீன்கள் எளிதாக விற்பனை செய்ய இயலும்.
அதிகமான இலாபம் ஈட்ட முடிகிறது.
எனவே வண்ண மீன் வளர்ப்பு தொழில் நுட்பம் வெற்றிகரமாகவும் இலாபகரமான தொழிலாகவும் மேற்கொள்ள ஒரு சிறந்த வழியாகும்.

வண்ண மீன் வளர்ப்பில் உள்ள சவால்கள்:
வண்ண மீன் வளர்ப்பு தற்போது பெரும்பாலான விவசாயிகளால் வளர்க்கப்பட்டு வரும் ஒரு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. அதேசமயம் வண்ண மீன் வளர்ப்பு ஒரு குடிசைத் தொழிலாக மட்டுமல்லாமல் கணிசமான வருவாயை ஈட்டிக் கொடுக்கும் தொழிலாக மாறி வருகிறது. வண்ண மீன்களை பல்வேறு நோய் தாக்குவதால் பெரும்பாலான பண்ணையாளர்கள் பெரும் பாதிப்படைகிறார்கள். ஆகவே வண்ண மீன்களின் நோய்களைப் பற்றியும் அவற்றை குணமாக்கும் முறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வது பெரும் சவாலாக உள்ளது.
பொதுவான நோய்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் :
வண்ண மீன் வளர்ப்பில் மீன் நோய்கள் பற்றிய நியாயமான அறிவுகள் அவற்றின் சிகிச்சை முறைகளும் முற்காப்பு நடவடிக்கைகளுக்கு இன்றியமையாதவை. இயற்கை செயல்முறைகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட நடவடிக்கைகள் முக்கியமாக வண்ண மீன்களில் நோய்களை ஏற்படுத்துகின்றன. போதிய ஊட்டச்சத்து இன்மை, அசாதாரண வானிலை, வளர்ப்பு ஊடகத்தில் தீவனம் மற்றும் கழிவுகள் குவிதல், சுகாதாரமற்ற முறையில் கையாளுதல் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள் வண்ண மீன்களில் சில நோய்களை தோற்றுவிக்க காரணமாகின்றன. நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்க முன்னெச்சரிக்கை எடுக்கப்பட வேண்டும். நல்ல தரமான மற்றும் இணக்கமான மீன்களை வாங்க வேண்டும். புதிய மீன்களை குளத்தில் சேர்ப்பதற்கு முன்பு எப்போதும் தனிமைப்படுத்த வேண்டும். இதற்காக ஒரு பாதுகாப்பான தொட்டியை பயன்படுத்தலாம். மீன்களுக்கு அதிகப்படியான உணவு கொடுப்பதை தவிர்க்கப்பட வேண்டும்.நோய்வாய்ப்பட்ட மீன்களை எப்போதுமே கைவலையை உபயோகித்து பிடிக்கவேண்டும். நோய்வாய்ப்பட்ட மீன்களுக்கு மருத்துவமனை தொட்டியில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.பயன்படுத்தப்பட்ட வலைகளை கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட தொட்டியிலிருந்து பிரதான மீன் வளத்திற்கு நீரை மாற்றுவது தவிர்க்கப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் பிரச்சனைகள் :
சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு வழிவகுக்கும் காரணிகளான அதிக வெப்பம், மழை நீர் தேங்குதல், அதிக உணவு அளித்தல் போன்ற காரணிகளால் மீன்களின் வளர்ச்சி பெரிதும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அதிக இழப்பும் ஏற்படுகின்றன.
கோடைகாலங்களில் ஏற்படும் பிரச்சனைகள் :
வண்ண மீன்கள் வளர்க்கும் குளங்களில் கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் குளங்களின் வண்ணம் மாறுதல் அடைந்து குளங்கள் நுறைத்தல் தன்மை போன்று காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக குளங்களில் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறுவதில்லை. இதுவே சில நோய்க் காரணிகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி மீன்கள் இறக்க நேரிடவும் வழிவகுக்கிறது. கோடை காலங்களில் முறையான வடிகால் வசதியுடன் வளர்ப்பு குளத்தில் உள்ள பாதி நீரை வெளியேற்றி புதிதாக நீரை சேர்க்க வேண்டும். இதனால் நீர் வெப்பம் அடைவதையும் சில நோய்க் காரணிகள் வருதலையும் தடுக்க இயலும்.
மழை நீர் தேங்குதல் :
மழைக்காலங்களில் குளம்,ஏரி, ஆறுகள் தேங்கி நாம் வளர்க்கும் குளங்களில் மழைநீர் வந்தடைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் மற்ற வேட்டையாடும் மீன்களும் நம்முடைய மீன்களும் வேறு இடத்திற்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம். எனவே இதனால் மீன்களின் எண்ணிக்கை குறைதலும் இழப்பும் ஏற்படுகின்றன. மழை காலங்களில் மற்ற மீன்கள் உள் நுழைவதையும் வளர்க்கும் மீன்கள் வெளியேறுவதையும் தடுக்க முறையான வடிகால் வசதியுடன் குளங்களைச் சுற்றி மீன்வலை அமைப்பதன் மூலம் மற்ற மீன்கள் உள் நுழைவதையும் வளரும் மீன்கள் வெளியேறுவதையும் தடுக்கலாம்.
உணவளித்தல் :
வண்ண மீன் வளர்ப்பில் மீன்களுக்கு உணவுக்கான செலவு அதிகம். மேலும் அன்றாடம் வண்ண மீன்களுக்கு உணவளிக்கும் வேலையில் மீன்கள் உண்ணும் உணவின் மூலம் அதனுடைய கழிவுகள் வளர்க்கும் குளங்களில் தங்கிவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் அதனுடைய தீவன வடிவிலான கழிவுகளும் சேர்கின்றன. இதனால் நைட்ரஜன் அடிப்படையாகக் கொண்ட கழிவுகள் தங்கிவிடுவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறக்க நேரிடுகின்றன. அதிகமாக உணவு அளிப்பதால் தீவனம் வடிவிலான கழிவுகள் வளர்க்கும் குளங்களில் தங்கி ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்க குறைந்த அளவிலான உணவுகளை அளிக்கவேண்டும்.மீன்களின் அளவைப் பொறுத்து உணவுகளில் மாறுதல்கள் ஏற்படுத்தலாம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆக்சிஜன் கருவியை பயன்படுத்தலாம்.

மற்ற உயிரினங்கள் மீன் குளத்தில் உள்நுழைதல் :
மழைக்காலங்களில் மீன்களை உண்ணி வேட்டையாடும் உயிரினங்களான வேட்டையாடும் மீன்கள் பாம்பு,தவளை மற்றும் பூச்சிகள் குளம், ஏரி, ஆறுகளில் மழை நீர் தேங்குவதால் வண்ணமீன் குளங்களில் வந்து அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் வண்ண மீன்கள் வேட்டையாடும் உயிரினங்கள் மூலம் வேட்டையாடி உண்ணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மற்ற விலங்குகளான நாய், பூனை ,பறவைகள் போன்றவை ஆட்கள் இல்லாத நேரத்தில் வந்து வேட்டையாடுகின்றன. இதனால் மீன்களின் எண்ணிக்கை குறைய நேரிடுகின்றன. மற்ற உயிரினங்களான நாய், பூனை, பறவை போன்ற உயிரினங்கள் உள்நுழைவதை தடுக்க குளங்களின் 4 பகுதிகளையும் சுற்றி மீன் வலை அமைப்பதன் மூலம் உள் நுழைவதை தடுக்கலாம்.
நோய்த்தொற்று காலங்களில் ஏற்படும் பிரச்சனைகள் :
கொரோனா போன்ற நோய்த்தொற்று காலங்களில் மீன்களை சந்தைபடுத்துதல் ,மீன்களுக்கு உணவின்மை ,வேலையாட்கள் குறைவு போன்ற காரணங்களால் வண்ண மீன் வளர்ப்பு தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சரியான முறையில் மீன்களை மக்களிடையே கொண்டு செல்ல முடியாத சூழல் போன்ற காரணங்களாலும் இழப்பு ஏற்படுகிறது. நோய்த்தொற்று காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மீன்களுக்கு உணவு, சந்தைப்படுத்துதல் போன்ற சாதகமான சூழ்நிலையை அரசு ஏற்ட்படுத்தித்தரவேண்டும். பொதுவாக நோய் தொற்று காலங்களில் மீன்களுக்கான உணவுப் பற்றாக்குறை, பராமரிப்பு குறைவு நிலை அதிகம் ஏற்படுகிறது. அக்காலகட்டத்தில் இயற்கை உணவுகளான கேழ்வரகு, கம்பு,திணை போன்ற இயற்கை உணவுகளையே பயன்படுத்தலாம். இதனால் மீன்களின் வளர்ச்சி குறைதலையும் மற்றும் இழப்புக்களையும் குறைக்கலாம்.
முடிவுரை :
வண்ண மீன் வளர்ப்பு கலாச்சாரம் வேலையற்ற பல இளைஞர்களுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும். மற்ற மீன் வளர்ப்புகளைவிட இதற்கு சிறிய இடமும் குறைந்த ஆரம்ப முதலீடும் போதுமானது. வண்ண மீன் வளர்ப்பிற்கு மீன்களின் பழக்கம் மற்றும் உயிரியல் பற்றிய தெளிவான புரிதல் மட்டுமே தேவை. ஒரு வீட்டின் கொல்லைப்புறம் அல்லது மாடியில் சிறிய சிறிய இடத்தில் கூட வளர்க்க முடியும். இதனை கிராமப்புறம்,நகர்ப்புறங்களில் கூட செய்யலாம். குறைந்த மனித சக்தி தேவைப்படுவதால் பெண்கள்,பெரியவர்கள்,சிறுவர்கள் வண்ண மீன்வளர்ப்பில் ஈடுபடலாம். இதன்முலம் அவர்களின் சமூகம் மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த முடியும். ஒரு நாடு சுய சார்புடன் இருக்க வேண்டுமெனில் அந்த நாட்டிலுள்ள மனித வளத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதற்கு வண்ண மீன் வளர்ப்பு போன்று தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதன் மூலமும். அதற்கு தேவையான சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி தருவதன் மூலமும் சுயசார்பு இந்தியாவை உருவாக்க முடியும்.
இரா.விக்ரம் குமார்
நான்காம் ஆண்டு இளநிலை மீன்வள அறிவியல் மாணவர்
முனைவர் இல.சுருளிவேல்
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம். ஜி. ஆர். மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி
மின்னஞ்சல்:surulivel@tnfu.ac.in

