Orange Chocolate short story by Sutha சுதாவின் ஆரஞ்சு மிட்டாய் சிறுகதை



கரூர் நெடுஞ்சாலையில் கார் தனக்கே உரித்தான வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காருக்குள் இருந்த கோதையின் மனது மட்டும் தன் அம்மாயின் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறது.

என்ன கோத காரை விட்டு இறங்கலியா..உங்க அம்மாயிக்கு ஏதாவது தின்பண்டம் வாங்கலாம்ல..கணவன் சதீஷின் குரல் கேட்டு நினைவு வந்தவள் போல் காரை விட்டு இறங்கி எதிரிலிருந்த பெட்டிக் கடைக்கு போனாள்…அந்தப் பெட்டி கடையில இனிப்பும் காரமும் அங்கேயே செய்யரதால ருசி கொஞ்சம் அதிகமா இருக்கும். எப்பவும் கோத ஊருக்கு வந்தா அந்தப் பெட்டிக் கடையில தான் தின்பண்டம் வாங்குவா..என்ன என்ன வேணும்னு சொல்லிட்டு சுத்தியும் முத்தியும் பார்க்கும்போது ஆரஞ்சு மிட்டாய் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அழகா கலர் கலரா வச்சிருந்தாங்க…ஆரஞ்சுமிட்டாய் பார்த்ததற்கும் கோதைக்கு நினைவுகள் மீண்டும் பின்னோக்கி போச்சு..

எப்பவுமே கோதைக்கு பள்ளிக்கூடம் போறதுன்னா பிடிக்கவே பிடிக்காது…அம்மாயி முந்தானைய பிடிச்சிட்டு தோட்டத்துல வேல செய்யுற கிழவிகள்கூட கதை பேசிக்கிட்டு இருக்க தான் பிடிக்கும்..மத்தியானம் ஆச்சுன்னா அம்மாயி கட்டிக் கொண்டு வந்த சோத்துல உருண்டை பிடித்து உள்ளங்கையில் தருவா அதைவிட அமிர்தம் வேற என்ன இருக்கும்…

அப்புச்சி அப்புச்சி நான் நாளைக்கு பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று சொல்லிட்டு தான் தூங்க போவா கோதை..கோதை காளிமுத்துவின் மகள் வழி பேத்தி..மகள் வீட்டில் வசதி இல்லாததால் கோதை காளிமுத்துவிடம் இருக்கிறாள்…உன்னோட அம்மா யாருன்னு கோத கிட்ட யாராவது கேட்டா..அவ அப்புச்சிய தான் கை காட்டுவா..அவ்வளவு பாசம் காளிமுத்து மேல கோதைக்கு..காளிமுத்துவும் கருப்பாயும் எது கேட்டாலும் வாங்கி கொடுத்துடுவாங்க…

அன்னைக்கு கருப்பாயி வெளியூருக்கு போனா ஆனா கோதையை கூட்டிட்டு போகல..அவள மட்டும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு கருப்பாயி மட்டும் வெளியூர் போனதுல கோதைக்கு ரொம்ப கோவம்…
ஆனா சாப்பாட்டு நேரத்துல ஜன்னல் வழியா அம்மாயி வரலான்னு தேடிக்கொண்டிருந்தாள் கோதை…கோத நெனச்ச மாதிரியே புளிய மரத்துக்கு அடியில கண்டாங்கி சேலையில வழித்து சீவிய தலை அதுல சின்ன கொண்ட கொண்டைய சுத்தி கொஞ்சம் ஜாதிமல்லி…தேவதையின் அம்சம் அவதா..

எனக்கு எதாவது திங்க வாங்கி வந்து இருப்பானு நினைச்சுகிட்டே ஓடிப் போனேன்…நான் உனக்கு ஒன்னும் வாங்கியாரல சிலேட்டு குச்சி தான் வாங்கி வந்தேன் இந்தா அப்படினு கொடுத்தா..அப்போ என்கூட சுமதி இருந்தா..ச்சச என்ன இந்த அம்மாயி ஒன்னுமே வாங்கி வரல அப்படின்னு நினைச்சிகிட்டேன்…சுமதியை எப்பவுமே என்னோட அம்மாயிக்குப் பிடிக்காது..அதனால அம்மாயி மொரச்சதும் சுமதி பள்ளிக்கூடத்துக்கு ஓடிட்டா…

நானும் பள்ளிக்கூடத்துக்கு போலாம்னு ஒரு எட்டு எடுத்து வச்சேன் இந்தா ஆரஞ்சு மிட்டாய் அப்படினு முந்தானையில் முடிந்து வைத்திருந்தத எடுத்துக் கொடுத்தா…அப்ப முகத்துல இருந்த அன்பு இப்பவும் என்னால உணர முடியுது…அவ முந்தானையில முடிஞ்சு கொடுத்த ஆரஞ்சு மிட்டாயின் தித்திப்பு இப்பவும் நாக்குல…

ஆனா இன்னைக்கு அவளால எந்திரிச்சு நடக்க முடியல பக்கவாதம் வந்து படுத்துருக்கிறதா போன் வந்ததும் நானும் கிளம்பி வந்துட்டேன்..ஆனா நான் பாத்துட்டு உடனே கிளம்பிடுவேன் ஏன்னா என்னோட வேலை அப்படி..இருந்து ஒரு நாள் கூட பாக்க முடியல அப்படிங்கிற மனவருத்தம் இருக்கு ஆனா வாய்ப்பு இல்லாம இருக்கு…

கோதை நினைக்க நினைக்க கண்ணுல தண்ணி அருவியா ஓடுச்சு கடைக்காரர் என்னமா அப்படின்னு கேட்கவும் சதீஷ் இன்னும் வாங்கலையான்னு கேட்கவும் சரியா இருந்துச்சு..காசு கொடுத்துட்டு கண்ணீரை தொடச்சிகிட்டு திரும்பவும் காரில் ஏறி உட்கார்ந்ததும் கார் மீண்டும் சீறிப் பாய்ந்தது…இங்கொன்றும் அங்கொன்றுமாய் முளைத்திருக்கும் சிறு சிறு வீடுள்ள கிராமத்துக்கு…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *