இரண்டு நாளாக வீட்டை சுத்தமா பெருக்கி துடைச்சு ஒருவழி ஆச்சு. அஞ்சாறு வருஷமாச்சி. பூட்டியே கிடந்துச்சு. அப்பப்ப இவக தூரத்து சொந்தங்க கோவில் திருவிழாவுக்கு அக்கம் பக்கம் ஊர்களுலேந்து வந்தா போனா தங்கிப்பாக.
நாட்டமேகார ஐயாகிட்டே தான் சாவி கிடக்கும். பெரிய்ய சொத்து பத்து எதுவும் பூட்டி கிடைக்கலே. பெரியவங்க வாழ்ந்து வந்த வீடு பூர்வீகம்.
எங்களுக்கு ஒண்ணே ஒண்ணு பையன். அவனே இதோ இந்த வீட்டுலே தான் கண்ணு போலே பொத்தி பொத்தி வளர்த்தோம்.
அவனும் நல்ல படிச்சி பட்டணத்துக்கு வேலக்கி போய்ட்டான். இவரு உத்யோகத்துலே இருந்து ஓய்வுபெற்ற பிறகு நாங்களும் அவன் கூட போயிட்டோம்.
அவன் ஆசப்பட்டான்னு அங்கேயே வீடு வாங்க இவர் காசு எல்லாம் குடுத்தார். அவன் ஆசைப்படியே அவனோட வேலே பாக்கற பொண்ணே கட்டிக்கிட்டான்.
அவனுக்கு சமமா படிச்ச பொண்ணு. அதுவும் அவ்வளவு அவனைப் போலவே சம்பாதிக்குது. வீட்டிலேயும் அவனைப் போலவே கால் நீட்டி வக்காந்த எடத்துலேயே எல்லாம் கேக்குது.
நானும்தான் நமக்கு பொண்ணு இல்லேயேன்னு அதை பொண்ணு மாதிரி தான் நெனச்சேன். ஆனாலும் அதுக்கு நாங்க அங்கே இருக்கறது பிடிக்கலே. ஏதோ சொல்லிட்டே இருக்கும்.
நான் எதையும் பெருசு படுத்தலை. என்ன சொல்லுமோ எப்படி சொல்லுமோ அவனும் நாங்க செய்யறது தான் தப்பு மாதிரி நெனச்சான். என்னை என்ன சொன்னாலும் பரவாயில்லே.
இவர அவனோ அவளோ மரியாதை குறைவா பேசறது எனக்கு தாங்கலே. ஒருநாள் அவங்களை நேரில் கேட்டுப்புட்டேன். அது அவன் எதிர் பார்க்கவில்லை.
அம்மாவும் அப்பாவும் நம்பளே நம்பி இருக்காங்க. என்ன செஞ்சாலும் சகிச்சுத்தான் ஆகணும்னு நினச்சிட்டான் போல.
இவருக்கு நான் இங்கே வந்தா கிராம வாழ்க்கை வசதிக் குறைவு கஷ்ட்டம்னு நினைச்சிட்டார். எங்கே இருந்தாலும் புருஷனோட மான மரியாதையா வாழரதுதான் சுகம் என சொல்லி திடீர்ன்னு பொட்டியே தூக்கிட்டோம்.
என்ன அங்கேயே நின்னுட்டீங்க. கிணத்துக்கு வாளி மாட்டுங்க இல்லே இங்கே தானே நீ ராஜாவை குளிப்பாட்டுவே ?
ஆமா நீங்க தான் அத பாத்து மாஞ்சு மாஞ்சு போவீங்க. உங்க புள்ளைக்கு நான் சூடா தண்ணி ஊத்திடுவேனோன்னு தொட்டு தொட்டு பாப்பீங்க.. சீயக்கா கண்ணுலே போகுதுன்னு என்னேய எசுவீங்க. இப்போ என்ன
நாம எதையும் மறக்கலே. அவன் எப்படி நம்பளே வேணான்னு நெனக்கிறான் ?
அதுதாங்க இயர்க்கை. நம்ப வீட்டுலே மாத்திரம் இல்லே இது. வீட்டுக்கு வீடு இதுதான். தண்ணி மேட்டிலேருந்து தான் பள்ளத்துக்கு பாயும். பாசமும் அப்படித்தான்.
நம்ம பிள்ளே. அதுக்கு எப்பப்ப என்ன வேணுமோ பெத்தவங்க தான் செய்யணும். சின்ன வயசுலே குளிப்பாட்டினோம். அப்புறம் படிக்க வச்சோம். இப்போ குடும்பம் அமைச்சு குடுத்திட்டோம். அவன் நல்லா இருந்தா சரி.
நீ சுலபமா சொல்லிட்டே. எனக்கு முடியலே
நாங்க பொம்பளேங்க. கல்யாணம் ஆகர வரே ஒரு வீடு. அப்புறம் கட்டை வேகர வரை புருஷன் வீடுன்னு எல்லாம் மாத்திப்போம். கடைசி வரை எங்களுக்கு இது தான் ஒரே சொந்தம்.
நல்ல வேளை. நான் வச்ச தென்னம் பிள்ளைகள் நல்லா வளர்ந்து காச்சிக்கிட்டிருக்கு.
அது மட்டுமில்லீங்க. நம்ப சூர்யா குட்டி. எப்படி பெருசா வளர்ந்திருக்கு பாருங்க. நம்மை நல்ல நினைவு வச்சிருக்குங்க. எங்கேயோ இருந்தது. நாம வந்ததுலே இருந்து இங்கே அங்கே நகரலேயே.
இவ்வளுவுக்கு நாம அத பாத்து பாத்தா வளர்த்தோம். ஏதோ மிச்ச மீதியே போட்டோம். அது நம்பளே சொந்த அம்மா அப்பாவா நினைக்குது போல.
இனி அதை விடக்கூடாது. இனிமே நமக்கு அது துணையா இருக்கும். நாம் போர வழிக்கு புண்ணியம் கிடைக்கட்டும்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.