ஓரிகாமி – காகித மடிப்புக் கலையின் கதை : நூல் அறிமுகம்
“ஒரிகாமி” என்ற இந்த வார்த்தை காகித மடிப்புக் கலையை உணர்த்தும் என்பது தெரியும் . குழந்தைகளாக காகிதத்தை மடித்து கப்பல் செய்யாத பால்ய பருவம் இல்லை. இது ஒரு ஜப்பானிய சொல் . ஓரி என்றால் ‘மடிப்பு’ . காமி என்றால் ‘காகிதம்’ என்று பொருள்.
காகிதத்தை வெட்டியோ , ஒட்டியோ அல்லது மடித்தோ எப்படி செய்தாலும் அது “ஓரிகாமி” தான். எப்போதேனும் பள்ளிகளில் ஓரிகாமி தெரிந்தோர் வந்து செய்து காட்டுவார்கள். இதனை செய்வதற்கு கற்பனைத் திறன் அவசியம் வேண்டும். அதனால் தான் இதனை “ஓரிகாமி கலை” என்று சொல்கிறோம். இந்த கலைக்கு அடிப்படைத் தேவையான காகிதத்தை கண்டறிந்தவர்கள் சீனர்கள் தான். காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில் அது மிகவும் மதிப்புமிக்க பொருளாக இருந்திருக்கிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே காகிதக் மடிப்பு கலையை (ஓரிகாமியை ) கண்டறிந்தவர்கள் ஜப்பானியர்களே. ஆனால் இவர் தான் கண்டுபிடித்தார் என்று சொல்லும் அளவுக்கு யாருடைய பெயரும் இதுவரை நிரூபணம் ஆகவில்லை . ஒரு பெண் தான் கற்ற கலையை தங்களுடைய தலைமுறைகளுக்கு என படிப்படியாக அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றுள்ளனர். 1911 ஆம் ஆண்டு அகிராயூசிசவா “நவீன ஓரிகாமியின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். ஓரிகாமியின் அடிப்படை கோட்டுப் படங்களை வரைந்தவரும், Wet folding முறையை அறிமுகப்படுத்தியவரும், ஓரிகாமி குறித்த பல நூல்களை எழுதி பல கருத்துரங்குகளை நடத்தியவரும் இவரே. அதற்காக ஜப்பான் நாட்டின் உயரிய விருதான “Order of the rising Sun” பெற்றுள்ளார்.
சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் மன அழுத்தமுள்ளவர்களாகக் காணப்படுகின்றார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்னைத்தானே மகிழ்வித்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது கலைகள் இலக்கியங்கள் தேவை.
நமது அன்றாட வாழ்வில் நம்மை அறியாமலே பல இடங்களில் ஓரிகாமி கலையைப் பயன்படுத்தி வருகின்றோம். எடுத்துக்காட்டாக தீப்பெட்டி, தபால் அட்டை , திருமண பத்திரிக்கை, வாழ்த்து அட்டை , ஹோட்டல் முதல் திருமண அலங்காரம் வரை ஒரிகாமி இல்லாத இடமே இல்லை எனலாம்.
இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவு கூற வேண்டும். இரண்டாம் உலகப்போரில் உலக நாடுகள் எல்லாம் பிரிந்து போட்டி போட்டுக் கொண்டு போர் நடத்தியது நமக்கெல்லாம் சமூகவியல் பாடத்தில் படித்தது நினைவிருக்கலாம். 1945 ஆம் ஆண்டு ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டு எத்தனை மக்களை கொத்துக் கொத்தாக சாய்த்தது என்பதையும் நாம் மறந்திருக்க மாட்டோம். பேரிழப்பின் வலிகளை , பெருஞ்சோகத்தை, ஆற்ற முடியாத பெருந்துயரத்தை இன்றும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஓரிகாமியும் சிறுமி சடாகோ சசாகியும்.
யார் இந்த சடாகோ சசாகி..?
லூகேமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி வாழ்நாளின் இறுதி நாட்களை எதிர்கொண்டிருப்பவள் , ஆனால் தன்னம்பிக்கை கொண்டு காகிதக் கொக்குகளை செய்கிறாள். காரணம் அவள் இரண்டு வயதாக இருக்கும் பொழுது ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டு பத்து வருடங்களுக்குப் பின்னர் அவளுக்கு நோயாக வெளிவர, ஆயிரம் கொக்கு செய்தால் தன் உடல்நலம் தேறி விடும் என்று நினைத்து 664 வது கொக்கைச் செய்கையில் அவள் உயிர் உடலை விட்டுப் பிரிகிறது. மீதி உள்ள கொக்குகளை அவள் வகுப்பு தோழிகள் செய்து கொண்டு வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இன்றளவும் உலகம் முழுவதும் அன்பையும் , அமைதியையும் விதைக்க ஓரிகாமி கொக்கும் சசாகியும் பாடமாக இருக்கிறார்கள்.
இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு காகித வகைகளும் மாறுபட்டு இருக்க , ஓரிகாமியின் வகைகளும் மாறிகிறது.
எ.கா:
*சியோகாமி
*வசிகாகிதம்
*காமி காகிதம்
இந்த கலை ஜப்பானில் தோன்றினாலும் அமெரிக்கா , ஜப்பான், பிரிட்டன் , ஸ்பெயின் போன்ற நாடுகளில் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஐரோப்பியர்கள் வழியாக ஓரிகாமி கலை உட்புகுந்திருக்கிறது.
காகிதத்தில் மட்டும் செய்வது கலை அல்ல . பனை ஓலைகளில் நம் முன்னோர்கள் செய்த பல பொருட்களும் கூட ஓரிகாமியின் ஒருவகை என்கிறார் இப்புத்தகத்தின் ஆசிரியர்.
காகிதங்களைக் கொண்டு ஒரிகாமி பல வகைப்படுவதைப் போல , செய்யும் முறைகளைக் கொண்டும் Origami பல வகைப்படுகிறது. ஜப்பானிய மரபு ஒரிகாமி, இயங்கும் ஓரிகாமி, முப்பரிமாண ஒரிகாமி, பின்னல் ஒரிகாமி, மிட்டாய்த்தாள் ஓரிகாமி , பணத்தாள் ஓரிகாமி, ஈரத்தாள் ஓரிகாமி, இணைப்பு ஓரிகாமி என இன்னும் விரிவடைகிறது இதன் வகைகள்.
எல்லா மனிதனும் பிறக்கும்போது நல்லவனாகத்தான் இருக்கின்றான். சூழ்நிலைகள் சிலரை எதிர்மறை எண்ணங்கள் கொண்டவனாக வளர்த்து பல சிக்கல்களில் மாட்டி விடுகிறது. அவ்வாறு சிறைச் சென்றவர்களுக்கெல்லாம் மனமாற்றத்தை தரவும் அவர்களது பொழுதை நன்முறையில் மாற்றவும் இது போன்ற கலைகள் கை கொடுக்கின்றன.
உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் எல்லாம் தற்போது கையில் எடுத்திருக்கும் ஒரு ஆயுதம் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு” . ஆம், சூழல் மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்பினை குறைக்கும் பொருட்டு மறுசுழற்சி முறையை கையிலெடுக்கின்றன. ஜப்பானில் கிட் கேட் (KIT – KAT ) நிறுவனம் அதனுடைய ரேப்பரை ஓரிகாமி பேப்பராலானது என்று குறிப்பிட்டு இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் நாகசாகியில் எரித்த காகித கொக்குகளின் சாம்பலைக் கொண்டு ஊதுபத்திகள் தயாரிக்கின்றனர். நாகசாகியில் உள்ள அருங்காட்சியகத்தில் வருடத்திற்கு 700 காகிதக் கொக்குகள் வருகின்றனவாம். Compra sha என்பவர் ஒரு குழு ஏற்படுத்தி இந்த காகிதக் கொக்குகளை எரித்து சாம்பலாக்கி நறுமணம் கலந்த ஊதுபத்திகளாகத் தயாரிக்கிறார். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
இப்புத்தகத்தின் ஆசிரியரான தியாக.சேகர் அவர்கள் 2008 ஆம் ஆண்டு முதல் ஓரிகாமி கலையைப் பரப்பும் பொருட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல கல்லூரி மாணவர்களிடத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதோடு , ஒரிகாமி குறித்த முதல் புத்தகத்தை வெளியிட்டவரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏடிஎம் மிஷினுக்குள் இருந்து வெளிவந்தவுடன் இயற்கைக்கு நான் சேவை செய்தேன் என்று பிரிண்ட் எடுக்காமல் வரும் நாமெல்லாம் மற்ற இடங்களில் காகிதங்களை எப்படியெல்லாம் வீணாக்குகிறோம் என்பது தெரிந்தது தான். எனவே வீணான காகிதம் கொண்டு காகித மடிப்புக் கலையைப் பரப்புவோம்.
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர் : ஓரிகாமி காகித மடிப்புக் கலையின் கதை (Origami Kakitha Madippu Kalaiyin Kathai)
ஆசிரியர் : தியாக.சேகர்
பக்கங்கள் : 40
விலை : 49
பதிப்பகம் : ஓங்கில் கூட்டம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/origami-kakitha-madippu-kalaiyin-kathai/
நூல் அறிமுகம் எழுதியவர் :
✍️பா விமலா தேவி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

