ஆரிகாமி வனம்: Origami Vanam

 

 

வெவ்வேறு வடிவங்களில் காகிதத்தில் பொம்மைகள் செய்யும் ஒரு தேர்ந்த ஆரிகாமி கலைஞனைப்போல் தனது கவிதைகளுக்குள் வார்த்தைகளை மடித்து விதவிதமாய் நம் முன் அடுக்குகிறார் கவிஞர் முகமது பாட்சா.. அவரது கவிதைகளை வாசிப்பதற்கு உள்நுழையும்போதே அவர் அடுக்கி வைத்திருக்கும் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரு வனமாய் விரிந்து நமக்கு வழி விடுகிறது. வண்ண வண்ண காகிதக்கொக்குளாய் காற்றில் ஆடி வசீகரிக்கும் ஆரிகாமி பறவைகளைப்போல் ஏடுகளுக்குள்ளிருக்கும் கவிதைகள் ஒவ்வொன்றும் சிறகடித்து நம் அருகில் வந்து பறப்பதை உணரலாம்…

அடிப்படையில் ஆழ்ந்த புலமையும் சிந்தனை வலிமையும் மிக்க கவிஞர் முகமது பாட்சாவின் எழுத்துக்கள் வாசிப்போரை இதுவரை வாசித்தறியாத ஒரு புதிய உலகுக்கு உடனழைத்துச்சென்றுவிடும் . கவிதை என்பது போதனையல்ல என்று சொல்வதுண்டு… கவிதை கேள்விகளை எழுப்பி விடைகளை வாசிப்பவன் வசம் விட்டுவிட வேண்டுமென்பார்கள்… ஒரு கவிஞனின் கோணத்திலிருந்து மட்டுமே கவிதைகளை பாராமல் வாசிப்பவனின் யூகங்களுக்கும் வசதியாய் பொருந்தும்படி கவிதை புனைவதில் தேர்ந்தவர் கவிஞர் முகம்மது பாட்சா. இவரது பல கவிதைகள் தத்துவங்களைச் சூடிக்கொண்டு வலம் வரும் ரூமியின் சாயலையொத்ததாய் காணப்படும் அதே வேளையில் மற்றொரு பக்கத்தில் கவிதைக்குள் அதிரடியான கேள்விகளை நேரடியாய் முன் நிறுத்தி பிரச்சினைகளுக்கான தீர்வுகளாய் பதிலையும் சொல்லிவிடுவதுண்டு… பிரசங்க நடையுமில்லாமல் பூடகமாக அதிக பொடிவைத்தும் சொல்லாமல் இரண்டும் கலந்த கலவையாய் இருக்கும் சில கவிதைகளும் இன்றைய காலத்தின் அவசியமாகிறது. அதனால்தான் சமூகத்தில் நிகழும் அவலங்களின் மீதும் அரிதாரம் பூசி போலி வேடமிட்டு ஆடும் அரசியல் மீதும் இவரது எழுத்துக்கள் ஓங்கி அறைந்து தன் ஆற்றாமைகளை வெளிப்படுத்துகிறது.. இவர் போகிற போக்கில் தன்னை ஒரு நாடோடிப்பாடகனென்று செய்துகொள்கிறார்… ஆம்… நாடோடிகளின் பாடல்கள்தான் மனித வாழ்வில் பொதிந்துகிடக்கும் அத்தனை ரகசியங்களையும் அத்தனை தத்துவங்களையும் மனித மனதின் அடியாழம் வரை சென்று தோண்டியெடுத்துப் பிரதிபலிக்கக்கூடியது. எளிமையை தன் அடையாளமாய் அணிந்துகொள்ள விழைந்தாலும் அவரது எழுத்துகள் தனித்த அலங்காரத்துடனே மின்னுகின்றன. அவரது பல கவிதைகளுக்குள் தத்துவங்கள் தாமாக வந்து அமர்ந்து கொள்கின்றன. வாசிப்பவனுக்குள் அவை ஒரு தர்க்கத்தை நிகழ்த்திவிடுகின்றன.

காலவோட்டத்தில் கலைகள் தனது வடிவத்தை பல்வேறு விதங்களில் மாற்றிக்கொண்டிருக்கலாம். ஆனால் அதன் மூல முகம் ஒன்றுதான்.. எழுத்துகள் யாவும் தனக்கான சொற்களைப் பழைய படிமத்திலிருந்தே வேறொன்றாய் தேவைக்கேற்ப உருவி எடுத்துக்கொள்கிறது… பூமியில் புதிதாய் சொற்கள் ஏதுமில்லை… அனைத்துமே மூலத்தின் பிரதிகள்தான் என்றாலும் காலச்சூழல்களுக்கேற்ப சமூகத்தை வழி நடத்தும் உத்திகள் நிறைந்ததாய் சொற்களும் படைப்புகளும் இருக்க வேண்டும். தனக்குள் உதிப்பதையும் தான் உள்வாங்கியதையும் சூழல்களுக்கேற்ப வெளிப்படுத்துபவனே சிறந்த கலைஞன். கவிஞனும்கூட அப்படித்தான். ஆனால் அவனது உலகம் இன்னும் அலாதியானது. எண்ணங்களைக் கூர்மைப்படுத்தி நுண்புலத்தில் தன்னையும் தன் படைப்புகளையும் நுழைத்து ஒற்றைப் புள்ளியொன்றில் நிறுத்த விரும்புகிறான் கவிஞன். அப்புள்ளியின் குவியத்திலிருந்து தான் அடுக்கி வைத்த சொற்களில் அர்த்தங்கள் ஒவ்வொன்றையும் மொட்டு நிலையிலிருந்து பூவாய் அவிழும் இதழ்களைப்போல் அவிழச்செய்கிறான். முகமது பாட்சாவின் கவிதைகளும் அப்படித்தான். அவரது கவிதைத்தொகுப்பிலிருக்கும் அர்த்தம் பொதிந்த பல கவிதைகளிலிருந்து சில வரிகளுக்குள் மட்டும் மேலோட்டமாக பயணித்துப் பார்க்கலாம்..

வார்த்தைகளின் அடிமைகள் நாம்…. விரும்பியோ விருப்பமற்றோ சொற்களின் வலைப்பின்னலுக்குள் சிக்கியபடிதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமது சொற்கள் மட்டுமே பூரணத்துவம் மிக்கதாகவும் நியாயத்தை வலியுறுத்துவதாகவும் எல்லோருக்குள்ளும் ஒரு கற்பிதம் உலாவிக்கொண்டேயிருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிரிலிருந்து தலையசைத்து ஆமோதிக்கும் வார்த்தை ஒன்று வரவேண்டுமென்பதே அநேகம் பேரின் விருப்பமாயிருக்கிறது. உதடுகள் உதிர்க்கும் வார்த்தைகள் துருப்பிடித்துக்கிடந்தாலும் வன்மம் மிக்கதாயிருந்தாலும் தான் உச்சரிக்கும் வார்த்தைகள் சுத்தமானதே என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்ளும் தந்திரம் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் எல்லோரையும் அலைக்கழிக்கவே செய்கிறது. சொற்களால் பின்னப்பட்டு சதா வார்த்தைகளை சுமந்தலையும் நம் ஒவ்வொருவரையும் வார்த்தைகள் எனும் கவிதை மூலம் மறைமுகமாய் கவிஞர் எச்சரிக்கிறார்.

எதையாவது எப்போதும்
பேசிக்கொண்டேயிருக்கிறேன்
தேவையில்லாத வார்த்தைகளும்
தேவையான ஒன்றாய்
காற்றில் கலந்து விடுகின்றன.

வார்த்தகளைப்பற்றி வரிசையாய் சொல்லும்போது

செங்கோலோச்சும்
வார்த்தைகளால்
அரசனாகிப்போகிறேன்
மமதை வார்த்தைகளென்னை
களவாடிச்சென்று
காரித்துப்புகின்றன.

பாவத்தின் வார்த்தைகள்
சிலுவைகளை செய்துகொண்டிருக்க
வஞ்சகத்தின் வார்த்தைகள்
பள்ளம் தோண்டிக்கொண்டிருக்கின்றன..

என வார்த்தைகள் சூழ் வாழ்வின் காட்சிகளை விவரிக்கும் கவிதையின் இறுதி வரிகள் இவன் வார்த்தைகளால் இறந்தவன் என்று முடிகிறது. எல்லோருக்கும் வார்த்தைகள் முக்கியமானவை. எப்போதும் மனித உதடுகள் உன்னதமான வார்த்தைகளை மட்டுமே உச்சரிக்க வேண்டுமென்பதே கவிதையின் விருப்பமாயிருக்கிறது. போலித்தனமான வார்த்தைகளை வெளிப்படுத்தும் உதடுகளைவிட அதை உத்தரவிடும் மனதையே எச்சரிக்கிறது கவிதை. எனவே எல்லோரும் வார்த்தைகளைப் பத்திரப்படுத்துங்கள். தேவையற்ற இடத்தில் மெளனத்தை விட உயர்ந்த வார்த்தை ஏதுமில்லை என்று சொல்லி எச்சரிக்கிறது கவிதை…

“நிராசைப்பயிர்கள்” எனும் ஒரு கவிதையில்

கோடிட்ட இடங்கள்
நிரப்பப்படாமல் அப்படியே
இருக்கின்றன
கோடுகள் மட்டும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன.

கோபங்களை புதைத்தவிடத்தில்
கள்ளிச்செடிகள்
முளைத்து நிற்க…
கனவுகளாய் விரிந்த நிராசைகளை
புறாக்களின் கால்களில் கட்டி
பறக்க விடுகிறோம்.

போதி மரத்தினில் தொங்கும்
விழுதுகளில்
கழுத்தின் கதைகள்
எழுதப்பட்டிருக்கின்றன.

நம் மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் சுமைகளையும் நிறைவேற்ற விரும்பாமல் தேங்கி நிற்கும் குட்டையாய் நிறுத்தப்பட்ட நமக்கான வாக்குறுதிகளையும் கூர்ந்து நோக்கும்போது… நம்மை வழி நடத்துவதற்கு வந்தவர்களின் கரங்களாலேயே தொடர்ந்து நம் முகங்களில் கரி பூசப்படுவதைக் கவிதை வரிகளின் மூலம் காணலாம்…

வாக்குறுதிகளால் மட்டுமே நாம் வழி காட்டப்படுகிறோம். நிராசைகளைப் பழகிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறோம். நாளடைவில் அதை ஏற்றுக்கொண்டு கடிவாளங்களுக்குக் கட்டுப்படும் கால்நடையைப்போல் அனிச்சை செயலாய் அதை பழகிக்கொள்கிறோம்.

பேரமைதியுடன் அசைவாடும் போதி மரத்தின் விழுதுகள் உண்மையில் விழுதுகளல்ல நம்மைப்போன்றோரின் கழுத்தெலும்பு முறிக்கும் தூக்குக்கயிறுகள் என்ற உண்மையை அறியாமல் ஊஞ்சல் போல் அதில் ஆடிக்கொண்டிருக்கிறோம். ஆட்சி செய்வோரின் வாக்குறுதிகள் வெறும் சொல்லலங்காரங்களாய் மட்டுமே நீடிக்கும் அவலத்தை எதிர்த்து நமக்கு நாமே போர்த்தியிருக்கும் அகிம்சை முகமூடிகளை அகற்றி எப்போதுதான் வெளிப்படப்போகிறோம் என்று புறக்கணிப்பின் வலியை எதிர்வினை எப்போது ஆற்றப்போகிறாய் என்று பேசுகிறது கவிதை…

பார்வைகள் என்ற ஒரு கவிதையில்

எல்லைகளை இடைவெளியில் வைத்திருக்கிறோம்
பார்வைகளின் ஊடுருவலை யார் தடுப்பது
மாயையின் பிரமைகள்தான் எல்லைகள்
மனதின் மொழிகளை மொழிபெயர்க்க முடியாது.

என்று காதலைப்பற்றி சொல்லும் கவிதையொன்றில்… எல்லாவற்றுக்கும் எல்லைகள் வகுத்துக்கொண்டிருக்கும் மனிதன் அளவற்ற கட்டுப்பாடுகளின் பள்ளத்தாக்கில் தன் சக நேசசிப்புக்குறியவரையே சரித்து வீழ்த்துகிறான்… இருவருக்குமிடையே கயிறு கட்டி எல்லைகள் வகுத்துவிட்டாய் சரி “பார்வைகளின் ஊடுருவலை எப்படித்தடுப்பாய்” என்ற வினாவோடு மாயைகளின் பிரமைகள்தான் எல்லைகள் என்றும் மனதின் மொழிகளை மொழிபெயர்க்க முடியாதெனும்போது காதலின் கட்டுப்பாடுகள் சாதியாகவும் மதமாகவும் அளவுகோலாகவும் நிர்ணயிப்பதென்பதே மானுட உணர்வுகளைச் சிதைக்கும் ஏற்பாடே என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டுச்செல்கிறது கவிதை…

அடையாளங்களை
அடையாளத்துடன் நாங்கள்
தேடிக்கொண்டிருக்கிறோம்.

என்று துவங்கும் அடையாளங்கள் கவிதையில் நாம் தினமொன்றாய் சுமந்து கொண்டு திரியும் அடையாளங்கள் குறித்து ஆழ்ந்த பார்வையை வீசுகிறார். இவ்வுலகில் அடையாளங்களே அனைத்தையும் தீர்மானிக்கின்றன. உண்மையான அடையாளத்தைத் தொலைத்து எது நம்முடைய உண்மையான அடையாளம் என்பதை மடியில் வைத்துக்கொண்டு வேறெங்கோ தேடியலைந்து கொண்டிருப்பதாய் சொல்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் அவசியமான ஒன்று என்றாலும் அந்த அடையாளம் எந்த புள்ளியில் துவங்கி எந்த எல்லைக்குள் நிற்கவேண்டுமென்பதே கேள்வியாய் வைக்கப்படுகிறது.

துறவியென்பதற்கும்
ஓராடை
நிச்சயம் தேவைப்படுகிறது.

அடையாளங்களுக்கான
முகமூடிகள் சந்தைகளில்
ஏராளம் இருக்கின்றன.

எனக்கூறி… இருக்க வேண்டிய அடையாளத்தை விட்டு விட்டு எதையெதையோ வாங்கி அணிந்து திரிவதில் அர்த்தமென்ன இருக்கிறது என்றும் வினவுகிறார். அடையாளம் என்பதே ஒரு புனைவு என்றும் முகத்துக்கு ஒரு மச்சம்போல் ஒன்றுக்கு ஒரு அடையாளமே போதுமெனும்போது எதற்குப் புள்ளிகளை முகமெங்கும் விதைத்ததுபோல் மனிதனுக்கு இத்தனை அடையாளங்கள். உண்மையில் சொல்லப்போனால் சூழ்நிலைகளுக்கேற்றவாறு அடையாளங்கள் என்ற குப்பிகளுக்குள் நம்மை அடைத்துக்கொண்டு சுயத்தின் கழுத்தை நெறித்து வாழ்வதாகவே தெரிகிறது. ஒற்றை அடையாளத்தைத் தள்ளி வைத்துப்பார்த்தோமென்றால் அணிந்திருக்கும் பிற அடையாளங்கள் அனைத்தும் மனதின் மாயைகளே எனத் தோன்றுகிறது. அதே கவிதையில்…

அன்பை தொலைத்து விட்டு
ஆயுதங்களை சுமந்து திரிகின்றன… 
என்று மதங்களின் போலித்தனங்களையும்

நல்லவனுக்கான அடையாளம்
வார்த்தைகளின் மீதும்
கெட்டவனுக்கான அடையாளம்
செயல்களின் மீதும் சேர்ந்துகொள்கிறது

எனும் வரிகளில் வாக்கும் செயலுமே ஒருவனுக்கான அடையாளமாகிறது. எனவே அடையாளங்களுடன் அலைவதைவிட மனிதனாய் இருப்பதில் கவனம் கொள் மனிதனே எனக்கூறுகிறார்.

சுவடுகளென்பது
கடந்த காலங்களின் பிரதிமை.
நிகழ்காலமென்பதோ
மாயச்சொற்களின் காட்சிப்பிழை

சாதியடையாளங்கள் மதத்தின் அடையாளங்கள் என பல்வேறு அடையாளங்களை ஆயுளுக்கும் சுமந்துகொண்டு தவிர்க்கமுடியாத தவிப்புடனே வாழ்ந்து தொலைப்பது என்ன வாழ்வு…? என ஒவ்வாத அடையாளங்களை அடுத்தடுத்த வரிகளில் கேள்வியெழுப்பும் கவிதை அடையாளங்கள் குறித்த புரிதல் வளரவேண்டுமென்பதை வலியுறுத்துவதாகவே தோன்றுகிறது. நடைமுறை வாழ்வில் அதிகாரம் இருந்தால் எந்த அடையாளத்தையும் விலைகொடுத்து வாங்கி விடலாம் என்ற நிலையிருக்கும்போது போலித்தனமான மனிதர்களின் பிரம்மாண்ட அடையாளங்களின் மீதான மதிப்பீடுகள் இலகுவாய் குறைந்துபோகும்போது அடையாளத்திற்கான மதிப்புதான் எது.. எப்படியிருப்பினும் யார் எந்த அடையாளத்தை கொண்டிருப்பினும்

காதல் மட்டுமே இங்கு
அடையாளமின்றி வாழ்கிறது
ஆகையினால் காதல் செய்வீர்
மானிடரே…!

என முடிக்கும் இக்கவிதையின் அடிநாதமாக ஒளிர்வது உள்ளுக்குள் வியாபித்திருக்கும் உங்களின் அன்பையே அடையாளமாக கொண்டு வாழுங்கள் என்பதை வலியுறுத்துவதை விட இக்கவிதையின் நோக்கம் வேறென்ன இருக்கமுடியும்…

சின்னச்சின்ன கவிதைகளில் கூட அடர்ந்த தத்துவத்தை முன்வைத்து நகர்கிறார்.

சாத்தான்
சாக்கடையில் விழுந்துவிட்டதாகச்
சொன்னார்கள்
தேவதூதர்கள் அவனைக் காப்பாற்றி
கரையில் உட்கார்த்தி வைத்தார்கள்
வழிப்போக்கன்
காரணம் கேட்டான்.
சாத்தான் இறந்துவிட்டால்
தேவதூதர்களுக்கு
வேலையில்லையென்ற
விதியிருக்கிறதாம்…

அடிப்படையில் பார்த்தால் துன்பங்களுக்கான தீர்வு நிரந்தரப்படுத்தப்படும் போது தேவதூதர்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கே வேலையின்றி போகும் நிலைதான் இருக்கிறது. தீயது முற்றாக மனதிலிருந்து அகற்றப்படும்போது நன்மையை போதிப்பவனுக்கு அவசியமில்லாமல் போகிறது. கடவுளுக்கும் சாத்தானுக்கும் தேவதூதர்களுக்கான கவிதையாய் மட்டுமே பார்க்காமல் கொஞ்சமாய் ஆட்சியாளர்களுக்கெதிராய் திருப்பிப்பார்த்தோமானால் வஞ்சகமும் ஏமாற்றுகளும் மக்களின் மீது மொத்தமாய் கவிழ்க்கப்பட்டிருக்கும் காலத்தில் எளியவர்களுக்கான அடிப்படை தேவைகள் தீர்க்கப்படும் போது மக்களுக்கு யாசித்தும் போராடவும் வேண்டிய அவசியமிருக்காது. ஆனால்… மக்களுக்கு பிரச்சினையில்லையென்றால் தங்களால் போதையூறும் அதிகாரத்தையும் எல்லைகளற்ற சுய லாபத்தையும் பெறமுடியாதென்பதால் தொடர்ந்து பற்றாக்குறை மிக்கவர்களாகவும் தேவைகளுக்காக தங்களிடம் கையேந்துபவர்களாகவும் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். அதற்கான கட்டமைப்புகளையே தொடர்ந்து வகுக்கிறார்கள். தேவைகள் மட்டுமே ஒன்றை இருப்பதும் இல்லாமல் செய்வதையும் தீர்மானிக்கும் காரணியாய் இருப்பதை இக்கவிதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

வாழ்வியல் தத்துவங்களும் சமூக அவலத்தின் மீதான கோபங்களும் இயல்பாய் வெளிப்படும் இவரது கவிதைகளுக்கிடையே காதலும் இடையிடையே எட்டிப்பார்த்து கண்சிமிட்டி இதயத்தின் ஓரங்களை பூக்கச்செய்கிறது.

என் நிலழைத் திருடியவள்
நீயாகத்தான் இருக்க வேண்டும்
பொன்னழலில் நான்
பொசுங்கிக்கொண்டல்லாவா இருக்கிறேன்…

கசங்கிய காகிதங்களில்
என் கவிதைகள் மடிந்து கிடக்கின்றன
ஆனாலும் அதற்குள்தான்
உனக்கான நேசமும் ஒட்டிக் கிடக்கிறது…

காதலிக்கும் பெண்ணிடம் காதலைச்சொல்ல எழுதிய கவிதைகள் கொடுக்கப்படாமலே கசக்கியெறியப்பட்டு மூலையில் கிடப்பதின் பின்னணிக்காரணம் என்னவாயிருக்கும் என்று மறைமுகமாய் யோசிக்க வைக்கிறது சில வரிகள். ஒரு வேளை கொடுக்கப்பட்ட கவிதை அங்கீகரிக்கப்படாமல் அவளின் பார்வைகள் படாமலே வார்த்தைகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டால்… நிராகரிப்பை தாங்கும் வலிமை இதயத்திற்கில்லை என்று எழுதிய கவிதையை மூலையில் எறிந்து விட்டாலும் கசங்கிய கவிதைக்குள் உனக்கான நேசம் ஒட்டிக்கிடக்கிறது என்று இயலாமையின் விளிம்பில் நிற்கும் தயக்கங்கள் நிரம்பிய ஒரு கவிஞனின் காதலை வெளிப்படுத்துகிறது கவிதை.

ரோஜாக்களின் தோட்டத்தை
நீ மூடி மறைத்திருக்கிறாய்
காதலின் வாசத்தை
காற்றல்லவா சுமந்து வருகிறது.

இரண்டு கைகளால் பொத்தி கண்களை மூடிக்கொண்டால் வானத்தை மூடிவிட்டதாய் அர்த்தம் கொள்ள முடியுமா… காதலும் அப்படித்தான். எந்த பாதாளத்துக்குள்ளும் மூடி அதை ஒளித்து வைக்க முடியாது. வெளிப்படுத்தவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் அது வேறிடத்தில் எப்போதோ வெளிப்பட்டுவிட்டிருக்கும் என்று காதலின் ஈரமான காற்றை எல்லா ஜன்னல்களுக்குள்ளும் நுழைக்கிறார்…

ஒரு எழுத்தாளன் தான் எழுதிய நூல் முகமிழந்து முகவரியிழந்து அனாதையாய் எடைமேடையில் நிறுத்தப்பட்டிருப்பதை பார்ப்பதென்பது எவ்வளவு வலி நிறைந்தது….

இருட்டிற்குள் கிடந்த அந்தப்புத்தகம்
சுவாசத்திற்காக தன்னை
ஒவ்வொரு தாளாக கிழித்துக்கொண்டது.
தராசுக்காரனின்
தட்டிலமர்ந்தபோது தனித்தனியாக கழன்றது…
வாங்கி வாசித்த அச்சனின் கண்கள்
அத்துணை பரிச்சயம்
பூவாக நகர்த்தும் அந்த விரல்களை
அவ்வப்போது முத்தமிட்டுக்கொள்ளும்.
வாசிக்கும் கண்களில்
வசிப்பதும்கூட தனிச் சுகம்….
உடைந்து கிடந்த அச்சனின் கண்ணாடியும்
புத்தகமும் இனி ஒன்றுதான்.

விஞ்ஞானம் தன்னையும் காலத்தையும் புதிது புதிதாய் மாற்றிக்கொண்டே பயணித்துக்கொண்டிருக்கும். அனைத்து எழுத்து வடிவங்களும் தாள்களிலிருந்து கணினி விஞ்ஞான ஏடுகளாய் உருமாற்றம் பெற்று வரும் சூழலில்… மாற்றங்களை தடுத்து நிறுத்த முடியாதெனினும் சில பழைமைவாத குப்பைகள் மட்டும் மாறாமல் நூல் வடிவத்திலேயே இன்னும் அப்படியே அதே வடிவத்தோடு நிலைபெற்று விற்பனையாகிக் கொண்டிருக்கும்போது ஒரு எழுத்தாளனின் நல்ல புத்தகம் மட்டும் சீந்துவாரின்றி பழைய பேப்பர் கடையின் எடைமேடையில் கொலைக்குற்றவாளி போல் நிறுத்தப்பட்டிருப்பது எவ்வகை நியாயம் என ஆதங்கம் கொள்ள வைக்கும் கவிதையிது.

வாசிக்கும் கண்களில்
வசிப்பதும்கூட தனிச் சுகம்.

பழைய புத்தகக்கடையிலிருந்து வாங்கி வாசிக்கும் ஒருவனைப்பார்த்து அந்த புத்தகமே பூரிப்படைவதுபோல் இந்த வரிகள் தோன்றுகிறது. அந்த அச்சனின் கடைசி வசிப்பும் மூச்சும் நின்றுபோன பின் புத்தகம் என்ற நிலையிலிருந்து காகிதமாய் தரையிறங்கிய அந்த புத்தகத்தின் சொற்ப மதிப்பும் வற்றிப்போகிறது…

எழுத்துகளை
இணையத்தில் தேடிக்கொண்டிருந்தவர்கள்
எடைக்குப் போடும் போது வருத்தப்படவில்லை…
முறத்திற்காவது இனி
பூசி மெழுகச் சேருமா இந்தப் புத்தகம்…

என முடியும் வரிகளுக்கு பின்னால் இருக்கும் புத்தகத்தை எழுதியவனுடைய வலிக்கு என்ன மருந்து இருக்கிறது… முறத்திற்காவது இனி பூசி மெழுகச் சேருமா… ஒரு நூலுக்கு நேரக்கூடிய அவமானமாய்த்தான் இதை கருதமுடிகிறது. வாசிப்பவன் எடைக்குபோடுவது கூட பரவாயில்லை.. எழுதியவனே தனது நூலை எடைக்குப்போடும் அவலம் மிக்க சூழலில் தான் இன்றைய எழுத்தாளனின் நிலையிருப்பதை பட்டவர்த்தனமாக முன் வைக்கிறது கவிதை…

‘நீரோவின் பிடில்‘ என்ற கவிதையில்… கவனிக்கப்படுமென்ற என்ற நம்பிக்கையுடன் நாம் முன் வைக்கும் வார்த்தைகள் யாவும் கேட்டும் கேட்காத செவிகளாகவே எப்போதும் இருப்பதின் ஆதங்கத்தை…

அகன்னம் பூசிய காதுகள்
ஆங்காங்கே உலாவுகின்றன
என்று சொல்லத்துவங்கும் கவிதையில்…..

அடிமை வாழ்க்கையை
அரசியல்தான் கற்றுத் தருகிறது
நீதி கிடைக்காதவிடத்திற்குத்தான்
நீதிமன்றம் என்று பெயர் வைக்கிறார்கள்
இன்னமும் நீரோ பிடில்
வாசித்துக்கொண்டுதானிருக்கிறான்
உவமை மட்டும் இங்கு மாறவேயில்லை..
நிஜங்கள் கனக்கிறபோது
நிழல் எப்போதும் குளுமை தருவதில்லை
என் நிழலோடு நடப்பதற்குப் பழகிக்கொள்கிறேன்
கனவுப் பந்தலில் இனி காய்ப்பதை
நீங்களே பறித்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நிலையிலும் நம்மைச்சுற்றி முரண்களால் முடிச்சிடப்பட்டிருக்கும் சமூக அம்சங்களனைத்தையும் வெவ்வேறு படிமங்களால் வெட்டி வெட்டி நம் அருகிலேயே அடுக்குகிறார். நம்மைச்சுற்றி சுழலும் பிரச்சினைகள் அனைத்திலும் கண்ணுக்குத்தெரியாத அரசியலொன்று மறைமுகமாய் பின்னிக்கிடக்கிறது அதை புரிந்துகொள்ளாமல் இது யாருக்கானதோ என்று ஒவ்வொன்றையும் கண்மூடிக் கடந்து கொண்டிருக்கிறோம். நெடுங்காலம் அடிமைப் படுத்தப்பட்ட எதுவும் இங்கே மாறவில்லை மாறியிருப்பது போன்ற தோற்றங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்… மனப் பிரம்மைகள் உண்மை காயங்களின் மீது பொய்யான களிம்புகளை பூசிக்கொள்கிறது. காயத்துக்கான மருந்தை கண்டுபிடியுங்கள் எனச்சொல்ல வருகிறது கவிதை… மேலும் பிரச்சினைகளில் உழலும் காலத்தை எப்படி ரசனைக்குறியதாய் ஏற்றுக்கொள்ள முடியும். மனம் கனத்த பெரும் வலி நிறைந்த பொழுதில் எந்த ரசனைக்குறியதும் அர்த்தமற்ற சூழியத்தின் நிலையிலேயே நிற்கும். நான் என்பதும் அதனுடன் பயணிக்கும் நிழலும் மட்டுமே நிஜம். நீங்கள் எங்கள் மூளையில் விதைத்த கனவுகளில் எதை விளைவிக்க முனைந்தீர்களோ அதையே அறுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் நாங்களாகவே இருந்து அதிலிருந்து எங்களுக்கானதை பெற்றுக்கொள்கிறோம் என்று கவிதைக்குள் பலதரப்பட்ட வாழ்வின் சித்திரங்களையும் விடைகளையும் செதுக்குகிறார்.

நிகழ்கால அரசியல் அவலங்களை இரவரது கவிதைகள் எள்ளி நகையாடத் தயங்கியதேயில்லை… ஆதாயங்களுக்காக அல்லது சந்தர்ப்பங்களுக்காக காந்தியின் வேடமணிந்து கொண்டவர்கள் காந்தியைவிட புனிதமடைந்தவர்களாக தங்களை பாவித்துக்கொள்கிறார்கள். சுய லாபங்களுக்காக காந்தியாகவே தங்களை நிறுவிக்கொள்ள முயலும் அவர்களின் அரசியல் தந்திரத்தை…

காந்தியை அடிக்கடி பார்க்கிறேன்
சற்று முன் கூட என்னெதிரில்
நின்று பேசிக்கொண்டிருந்தார்…
அங்கிருந்து நகர்ந்தவுடன்
இஸ்மயில் என்று பச்சை குத்திக்கொண்ட
கோட்சே போவதைப் பார்த்தேன்.

மேக் இன் இந்தியா காந்திகள்
தங்கள் கைகளை அகல விரித்து
தேசத்திற்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்
அரசியல்வாதிகளின் கைகளில்
எப்போதும் பார்க்க முடிகிறது
சத்திய சோதனை புத்தகம்.

நடைமுறை காலத்தின் ஊடாக நிலவும் நம்பிக்கைகளின் நகலாக நம்பப்படும் வேறொரு ரூபத்தில் நுழைந்து நம் கையிலும் திணிக்கப்படலாம் சத்திய சோதனை புத்தகம். காந்தியின் அட்டைப்படத்தை பிரித்து உள்ளுக்குள் நுழைந்து பார்த்தால்தான் தெரியும் அந்த புத்தகம் நம்மையே நசுக்கும் சித்தாந்தங்களடங்கிய வேறொரு புத்தகமென்று…

கடலை வரைவதை விட
கடல் என்று எழுதிவிடுவது
சுலபமாயிருக்கிற்து…
ஞாபக மறதிக்குள் உட்கார்ந்துகொண்டு
கட்டங்களைத் தேடுகிறேன்.

என்று தொடங்கும் ஒரு கவிதை… அசலாய் இருப்பதை விட நகலாய் இருப்பதையே எல்லோரும் விரும்புகிறார்கள். நிழலை வைத்தே தன்னை நிரூபிக்க நினைக்கிறார்கள். எதார்த்தத்தில் உண்மையைவிட நகல்களே நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. விருப்பமான முகமூடி அணிபவர்களைக் கண்டு அசல் முகத்தை அறிந்துகொள்ள மறுக்கிறோம். எல்லாவற்றையும் எளிதாய் மறந்து விடுகிறோம். சின்னச்சின்ன சந்தோஷங்களை மறந்துவிடலாம் சரி… ஆனால் பெரிய அவமானங்களையும் காயங்களையும் சுலபமாய் மறந்துவிட்டு செல்கிறோம்… எதையும் மறக்கும் நிலையிலேயே எல்லோருடைய சிந்தனையும் காயடிக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் இக்கவிதையை எந்த கோணத்திலிருந்து எழுதினார் என்பது தெரியாது என்றாலும் இக்கவிதை இன்றைக்கிருக்கும் ஆட்சியதிகாரத்தின் போக்குகளையும் மக்களின் மன நிலையையும் கருத்தில் கொண்டும் எடுத்துக்கொள்ளலாம்… அதே கவிதையில்…

ஓடிக்கொண்டேதான் இருக்கிறேன்
நின்றவிடத்தை விட்டு
பாதங்கள் சற்றும் நகரவில்லை…
வரைந்துவிட்ட கோடுகளை பறவையென்கிறேன்
பறவையென்றுமே
நிஜமென்று நிரூபிக்கப் போராடுவதில்லை…

இருந்த இடத்திற்கே நம் இலக்குகள் வரவேண்டுமென்று நினைப்பவர்களை பார்த்தெழும் கேள்வியிது. இலட்சியங்களை அடைப்புக்குறிகளுக்குள் அடைத்து வைத்துவிட்டு வெளியில் இருப்பவை அனைத்தும் வெற்றிடம் என்று புலம்புவதில் என்ன நியாயமிருக்கிறது… பறவையின் ஓவியம் மட்டுமே பறவை என்று நம்பவைக்கும் முயற்சிகளே நடக்கிறது. பறவையானாலும் எதுவாயிருப்பினும் உண்மையானது எதுவும் தன்னை நிரூபிக்க போராடுவதில்லைதான்.. ஆனால் மனிதன் மட்டும் தன்னை நிரூபிக்க போலித்தனமாக எத்தனை அவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் இக்கவிதை சுட்டுகிறது… எந்த ஒன்றும் அதனதன் செயல்பாடுகளாலேயே மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது..

மூன்றே வரிகளில் ஒரு கவிதை…

இரவை எழுப்பி விடாதீர்கள்
அதனோடுதான்
பேசிக்கொண்டிருக்கிறேன்…

அடிப்படையில் மனிதன் புறச்சூழல்களால் பிசையப்பட்டவனே. நம்மைச் சுற்றியிருக்கும் வெளிச்சங்கங்களாலும் மனிதர்களாலும் சூழப்பட்டிருக்கும்போது… மற்றவர்களின் எண்ணங்களுக்கும் செயலுக்கும் பதிலுரைக்கும் பிரதிநிதியாக இருக்கவே நமக்கு வாய்ப்புகள் அதிகம். இரவுகளே நம்மை வெளிச்சத்தின் உறக்கத்திலிருந்து எழுப்புகிறது. இரவுகளே வெளிச்சம் குறித்து சிந்திக்கவு வைக்கிறது. தனித்திருந்தாலும் இரவானது வேறொரு தனிமையை நமக்குள் அறிமுகம் செய்கிறது. நம்மை நாமே அறிமுகம் செய்து கொள்ளவும் நமக்கு நாமே உரையாடிக்கொள்ளவும் வசதியான இடம் இரவுதான். சதா சிந்தனை வயப்பட்டு அனைத்து நிலை எண்ணங்களுக்குள்ளும் சஞ்சரிக்க முயலும் கவிஞனுக்கு தனியாய் தன்னை அணிந்து கொண்டு நிற்கும் இரவென்பது ஒரு வரம். சமயங்களில் அது வற்றாத ஊற்றுகளை பெருக்கெடுக்கச் செய்யும். எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் மட்டுமல்ல இரவு… இரவுடன் சேர்ந்து நிற்கும் நிலவுடன் மின்னும் அலைகளுடன் பேசும் நட்சத்திரங்களுடன் மிதக்கும் மேகங்களுடன் வருடும் காற்றுடன் வாழ்க்கையின் நிகழ்வுகளுடன் இசைந்த காதலுடன் கண்ணீருடன் என பலவற்றுடனும் கவிஞனை சட்டென இழுத்துப்போர்த்திக்கொள்ளும் வசீகரமானது இரவு. அதனால்தான் கவிஞனின் பார்வையில் ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கி

இரவை எழுப்பி விடாதீர்கள்
அதனோடுதான்
பேசிக்கொண்டிருக்கிறேன்… என்று சொல்கிறார்….

பொருளாதாரச்சரிவுகளால் ஒரு வீடு அமைதியிழக்கும்போது சமையல றையிலிருந்து படுக்கையறை வரை நரகத்தின் வாசனை மொத்தமாய் சூழ்ந்து கொள்கிறது. பற்றாக்குறைகள் வாசல் தட்டும்போதெல்லாம் ஒரு குடும்பத்தில் அத்தனை எல்லைகளும் சிதைகிறது. குடும்பத் தலைவி மட்டுமல்லாமல் பிள்ளைகளின் வானமும் சுருங்கிப்போகிறது. முதியவர்களின் கருவளையங்கள் இன்னும் இருளடைகிறது. ஆனால் நெருக்கடிகளில் தடுமாறி வீடு குடைசாயும் நேரத்திலெல்லாம் முதலில் முறிந்து விழுந்து மூலையில் அழுவதும் பின் சட்டென எழுந்து அதை சாயும் குடை முழுவதும் சரிந்து விழுவதற்குள் சக்திகளத்தனையும் திரட்டி முட்டுக்கொடுத்து தூக்கி நிறுத்துவது எல்ல குடும்பங்களிலும் பெரும்பாலும் குடும்பத்தலைவியாகத் தானிருக்கிறாள். கட்டங்கள் என்ற கவிதையில் மிக எளிமையாய் குடும்பத்தின் சிக்கல்களை தாங்கும் ஒரு இல்லத்தரசியின் பொறுப்புகளை சொல்கிறார்..

கோட்டையாய் இருப்பது
மன தைரியம் மட்டுமென்றாலும்
அவை வீழும்போது இந்த ராணியும்
அடிபட்டுத்தான் போகிறாள்…
ஒரே ஒரு திருத்தம் மட்டும்தான்
எப்போதும் அதுதான் நடக்கிறது.
ராஜாவிற்கு
யாராவது செக் வைத்துவிட்டால்
ராணிதான்
மீண்டும் உயிர்பெற்று வருகிறாள்
நகைகளை வைத்துக் காப்பாற்ற…

நடுத்தர நலிந்த குடும்பங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் இயல்பென்றாலும் அடிப்படையில் பெண்ணே ஒரு வீட்டின் ஆகப்பெரிய சிற்பி என்பதை கூறும் விதம் கவிதையை அர்த்தப்படுத்துவதோடு பெண்ணையும் பெருமை படுத்துகிறது.

சிலைகள் என்னும் கவிதையொன்று சமகால அரசியலில் சிலைகள் படும் பாட்டையும் சிலைகளின் மீது கட்டமைக்கப்படும் அதிகார அரசியலையும் காலங்காலமாய் கைவிடப்பட்டு இருட்டடிப்பு செய்யப்படும் மக்களின் துன்பங்களையும் வெளிப்படுத்துகிறது

சிலைகள் அரசியல் செய்கின்றன
ஆதிக்கச் சிலைகள் அண்ணாந்து உயர்கின்றன
சிலைகளைச் சுற்றிலும்
சிதறிக் கிடக்கின்றன வறுமையின் கூடாரங்கள்
சிலைகளாக மக்கள் உறைந்து கிடக்க
சிலைகள்தான் உயிர் பெற்று
ஆட்சிக்கட்டிலிலும் அமர்ந்து அதிகாரம் செய்கின்றன…

என சிலைகளை வைத்து நடத்தப்படும் அதிகாரங்களின்மீது எல்லோரது பார்வையையும் குவிக்கச்செய்கிறது கவிதையின் வரிகள்.

தீஞ்சுவைச் சொற்களடங்கிய கவிதைகளும் புற வாழ்வின் புண்களை ஒதுக்கி வெறும் அழகியலையும் அது சார்ந்த ரசனைகளையும் பேசுவது மட்டுமே தேர்ந்த இலக்கியம் என்று கருதப்படும் சில தன்மைகளிலிருந்து சற்று விலகி ரசனையும் அழகியலையும் உள்ளடக்கும் அதே நேரம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளையும் சக மனிதர்களின் புறக்கணிப்புகளையும் துக்கங்களையும் சுமத்தப்படும் இழிவுகளையும் பிணைத்துக்கொண்டே சமகால இலக்கியம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இவரது கவிதைகளில் இடம்பெற்றுக்கொண்டேயிருக்கிறது.

எழுத்துகள் இடம் மாறும்போது
சில நேரம் தீப்பற்றிக் கொள்கின்றன
பேனா புகைகிறது.

இக்கவிதையில் புகைவது பேனாவல்ல என்று நமக்கும் தெரிகிறது. பேனாவிலிருந்து வெளிப்படும் புகைச்சல் படைப்பாளனுக்குள் கனன்றெழும் அநீதிக்கெதிரான ரெளத்திரத்தின் வெளிப்பாடுதான். சமூகத்தின் மீது அழுந்தி அழுகிய நாற்றமெடுத்து காய்ந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற கந்தக சொற்களால் எல்லோரும் தீ மூட்டுங்கள் என்கிறார்.

வாசிப்பவர்கள் அருகிக்கிடக்கும் காலத்தில் தனது நூல் வாசிக்கப்படவேயில்லையா…? என ஆதங்கம் கொள்ளும் ஒரு எழுத்தாளனுக்கு இப்படியொரு ஆறுதலை அள்ளிக்கொடுக்கிறார் கவிஞர்… கணிணி மயமாக்கப்பட்டுவிட்ட காலத்தில் ஒரு நூல் எடைமேடையில் கேட்பாரற்று கிடக்கும் அவலத்தையும் அதை எழுதிய எழுத்தாளனின் வலியையும் மறைமுகமாய் பதிவு செய்த கவிதையினூடே எழுத்தாளனுக்கு நம்பிக்கையை விதைக்கும் விதமாக…. ஒருவரின் எழுத்துக்கு மூப்பும் மரணமும் எப்போதும் கிடையாது எனும் பொருள்படும்படி இப்படியொரு நம்பிக்கை கவிதையையும் கவிஞர் படைத்திருக்கிறார்.

படிக்காத புத்தகங்கள்
யாராவது ஒருவரின் வாசிப்பிற்காகவே
உயிரோடு வாழ்கிறது….

ஆம்… தனது படைப்புகள் குறித்து கருத்துக்கள் பதிவிடப்படவில்லையென்பதாலேயே எழுதுபவன் புறக்கணிக்கப்படுவதாய் அர்த்தம் கற்பித்துக்கொள்ள வேண்டாம்… என்றேனும் ஒருவரிடமிருந்த அதற்கான அங்கீகாரம் வந்து சேரும். ஒருபோதும் அதற்காக எழுத்தாளன் சோர்ந்துவிடக் கூடாது. எங்கோ ஒரு மூலையில் யாராவது ஒருவர் நம் நூலை வாசித்துக்கொண்டிதானிருப்பார்கள் என்ற எண்ணமும்… நாளை பிறக்கும் குழந்தைகூட ஒரு நாள் தன் எழுத்துக்களை வாசிக்கக்கூடும் என்ற நம்பிக்கையையும் விதைத்து எழுதும் விரல்களையும் எழுதுபவரின் எண்ணங்களையும் அடுத்தடுத்த படைப்புகள் நோக்கி நகர்த்திவிடும் நம்பிக்கையை விதைக்கிறது கவிதை. எனினும் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் கிடைக்கும் பொருளாதார அங்கீகாரம் என்பது இன்னமும் இங்கே வற்றிய நிலையிலேயே வைக்கப்பட்டிருப்பதுதான் இம்மண்ணில் எழுத்தாளனுக்கு நிகழும் பெருத்த அவமானம்….. ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல் எழுத்துகள் தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன இனியும் இருக்கும் என்பதையே இக்கவிதை சொல்ல விரும்புகிறதுபோலும்….

கவிஞர் முகமது பாட்சா தன் படைப்புகளுக்குள் பலவற்றையும் பாடுபொருளாக்கிக் கொள்கிறார். அழகியலை காதலை துன்பத்தை துரோகத்தை அரசியலை தத்துவத்தை கணிதத்தை ஆற்றாமைகளை இயற்கையை பறவைகளை நீரோடையை குளிரை பாலைவனத்தை என வாழ்வின் பல்வேறு விழுமியங்களுக்குள்ளும் பயணித்து எழுதும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கண்களுக்குள் நுழைத்து மூளையில் ஆழத்தில் முகாமிடச்செய்கிறார். தனது ஆரிகாமி வனமென்னும் இக்கவிதைத்தொகுப்பு முழுக்க அவர் பல்வேறு உணர்ச்சிகளுக்குள் உட்கார்ந்து பயணித்துநம்மையும் உடன் அழைத்துச் செல்கிறார். இவரது கவிதைகள் ஒன்றிலிருந்து பல கோணங்களில் கருத்துக்களை கிளைபிரித்துப் பார்க்கத்தூண்டும் திறன் மிக்கது. இவர் எழுதும் பெரும்பாலான கவிதைகள் எதார்த்த வாழ்வியல் மீது கவனம் செலுத்தும் மனிதத்தை பேசுகிறது. சமூகத்தின் பிரச்சினைகளூடே நுழைந்து அறம் நழுவுகின்ற செயல்களின் மீது கோபத்தை முன் வைக்கிறது. காதலையும் கண்ணீரையும் ஏடுகளில் ஈரமாய் விதைக்கிறது. தடைகளில்லாமல் தத்துவங்களை இயல்பாய் வெளிப்படுத்தும் வித்தை கொண்டது இவரது படைப்புகள். இவரது கவிதைகளில் கஸல்களின் வாசத்தை நுகரலாம். ரூமியின் தத்துவத்தை பருகலாம். நாடோடிகளின் இலக்கிய மணத்தை இதயத்துக்குள் நிரப்பலாம். இவரது பல படைப்புகள் ஆழ் மனதின் இருட்டுக்குள் சென்று வெளிச்சத்தை அள்ளி நம் மடியில் போடுகிறது. வாழ்க்கையுடன் இயைந்த தத்துவப் பின்னல்களுடன் கவிதைகளை புதிய கோணத்தில் நகர்த்துகிறது. பல்வேறு படிமங்களை உள்ளடக்கி வைத்திருக்கும் கவிதைகள் வெவ்வேறு பார்வைகளில் வாசிப்போரை பயணிக்க வைக்கிறது. அடிமனப்பரப்புகளில் உறங்கும் மாயைகளின் முகவரியை எடுத்து வைக்கிறது. ஆரிகாமி வனம் இவரது முதல் கவிதைத்தொகுப்பு என்பதை ஏற்க முடியவில்லை. காலச்சூழல்கள் நூல் வெளியீடுகளை தள்ளி வைத்திருந்தாலும் இனிவருங்காலங்களில் இவரது கவிதைத்தொகுப்புகள் அணியணியாய் வெளிவரும் என்பது இவரது எழுத்தின் அடர்த்தியை வைத்தே அடையாளப்படுத்தலாம். இக்கவிதைத் தொகுப்பின் இன்னொரு சிறப்பம்சம் ஒரே சமயத்தில் மூலக் கவிதையின் அருகிலேயே கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான திரு ஸ்ரீவத்சா அவர்களால் மொழி மாற்றம் செய்யப்பட்டு முகநூல் தளத்தில் கவிஞர்கள் பலரை முன்னணியில் நிறுத்தியிருக்கும் படைப்பு பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறது, கவிதை சிறுகதை கட்டுரைகள் என பல தளங்களிலும் சிறப்புடன் பயணித்துவரும் கவிஞரின் படைப்புகள் மேலும் வெளிவந்து தமிழுக்கு அணி செய்ய வாழ்த்துகள்..

நூல் : ஆரிகாமி வனம்
கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : முகமது பாட்சா
வெளியீடு: படைப்புப் பதிப்பகம்

தோழமை வாழ்த்துகளுடன்

சந்துரு ஆர்.சி
சென்னை.

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *