நூல் அறிமுகம்: விஷ்ணுபுரம் சரவணனின் “ஒற்றைச்சிறகு ஓவியா” –  மதுசூதன் ராஜ்கமல் 



நூல் – ஒற்றைச்சிறகு ஓவியா
நூல் ஆசிரியர் – விஷ்ணுபுரம் சரவணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்.
விலை:110/
புத்தகம் வாங்க: ஒற்றைச்சிறகு ஓவியா
தொடர்புகொள்ள – 044-24332424.

 

மாயங்களுக்குள் ஒரு பயணம்!
சிறார் உலகின் மனவெளிகளில் பயணிப்பதற்கு நாம் முதலில் நாமாக இருப்பதை தவிர்த்துவிட்டு அவர்களாக மாறுவதை கற்றுக்கொள்ள வேண்டும். எவ்விதமான முன்தீர்மானிக்கப்பட்ட முடிவுகளுமற்று அந்த மாய உலகில் பூத்துக்கிடக்கும் மந்திர வனத்திற்குள் பிரவேசிக்கத் துணியும் வேட்டையாடியின் மனத்திறன் வாய்க்கப் பெற்றிருக்க வேண்டும்.
அத்தகைய மன அலைகளை எத்தனித்து உள்ளிழுத்துக் கொள்ளும் லாவகம் பெறும் வாசகனாலேயே கற்பனை உருவாக நிழலாடும் காட்சிபிம்பங்களின் ஊடாக பின்னப்பட்டிருக்கும் அதன் கருத்தியலையும் அது முன்மொழியும் அரசியலையும் முழுதாக புரிந்துகொள்ள முடியும்.அந்தவகையில் ஒரு அரசுப்பள்ளியின் ஆண்டு விழா மேடைநிகழ்ச்சிக்காக மாயாஜால நிகழ்ச்சியை நடத்த ஆயத்தமாகும் மாணவர்களின் கதையாக இது உருக்கொண்டு சமகால சூழலியல் சார் அரசியலை கதைக்குள்ளாக பேசி இருப்பது அபூர்வம்.
சிறார் நாவலில் அரசியல் பேசலாமா என்கிற கேள்விக்கு பேசினாலென்ன பேசித்தான் ஆகவேண்டுமென அதையே ஒரு மாய எதார்த்தவாத பாணியில் குழைத்து கொடுத்திருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன்.எதார்த்தங்கள் தோற்கிற போது கனவுகள் எனும் மாயங்களின் வழியே தான் நமது இயலாமையை இயன்றளவு நிறைவேற்றிக்கொண்டதாக மனித மனங்கள் இதுநாள் வரை ஆசுவாசமடைந்துகொண்டிருக்கிறது.
ஒருவகையில் இது சிறுவயதின் தொடர்ச்சி தான் என்றாலும் கூட அது மிகையாகாது.
துவக்ககால சிறார் கதைகள் எல்லாம் இதன் அடிப்படைகளில் இருந்தே தான் முகிழ்ந்திருக்க வேண்டும்.அதுவே தான் நவீன இலக்கியத்தின் பிரதிபிம்பங்களாகவும் விரிவடைந்திருக்கிறது.பிற்கால நவீனங்கள் யாவும் துவக்க கால மாயத்தின் வழிநின்று பரிமானம் அடைந்தவைகளே என்பதால் தான் கதைகளின் துவக்கம் Grand narrative வாக இருந்திருக்கிறது.ஆக மாயங்கள் சுவாரஸ்யங்களை நிகழ்த்திக் காட்டுவதற்கு மட்டுமல்ல,நமது இயலாமையை அதன் வழி நின்று நிறைவேற்றிக்கொள்ளவும் தான்.
அந்தவகையில் இளமஞ்சள் ஒளியும் அதிலிருந்து பூக்கும் மஞ்சள் நிற பட்டாம்பூச்சிகளும் பறவைகளாக உருமாறும் மாயங்கள்,இந்தக் கதைகளில் மட்டுமல்லாமல்,வாசித்து முடித்த பிறகு நமது மனங்களிலும் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.இக்கதையின் இறுதியில் வருவது போலவே சில பறவைகள் பலப் பறவைகளாக பூத்துக் குரல் எழுப்புவதைப் போல் இப்படியான ஆக்கப்பூர்வமான படைப்புகள் ஒன்று நூறாக வேண்டும்.அந்த பட்சிகளின் ஓசை நமது சமூகத்தின் மனசாட்சியை பிரதிபலிக்கும் கூட்டுக்குரலாக மாறவேண்டும்.மாறும் என்ற நம்பிக்கையில்.
நூல் – ஒற்றைச்சிறகு ஓவியா
நூல் ஆசிரியர் – விஷ்ணுபுரம் சரவணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்.
விலை:110/
புத்தகம் வாங்க: ஒற்றைச்சிறகு ஓவியா
தொடர்புகொள்ள – 044-24332424.