முன் ஒரு காலத்தில், தமிழுலகில் ஓர் எழுத்துலக ஜாம்பவன் வசித்து வந்தார். கதை, கவிதை, நாவல், விமர்சனம் என சகலத்திலும் பின்னிப் பெடலெடுக்கக்கூடிய அஷ்டாவதானி அவர். தஞ்சை மண்ணில் அவதரித்து, பெருநகரங்களில் ஜீவனம் பண்ணிக் கொண்டிருந்த அவர், உலக இலக்கியங்களை எல்லாம் கரைத்துக் குடித்திருந்தார். அதில் சில துளிகளை, தமிழ் வாசகப் பெருமக்களும் பருகி பேருவுவகை கொள்ளட்டும் என்று தமிழாக்கி தந்து கொண்டுமிருந்தார். தான் சுட்டிக் காட்டுகிறவன்தான் சிறந்த எழுத்தாளன் என்கிற அளவுக்கு அவர் அதிகாரம் பெற்றவராய், அவ்வப்போது அட்டவணை போட்டு அருள் பாலித்துக் கொண்டுமிருந்தார். ஆகவே, அவர் கடைக்கண் பார்வைக்காக சிலர் தவமிருந்தனர்.

அந்த ஜாம்பவானிடம் ஒரு பதிப்பாளர், தனது கம்பெனிக்கும் ஒரு நாவல் எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். அந்த ஜாம்பவானும் பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டு, அதன்படி சில மாதங்களில் அந்த அருமையான நாவலை சிருஷ்டித்து பதிப்பாளரிடம் கொடுத்துவிட்டார்.

பதிப்பாளருக்கு நாவல் மிகவும் பிடித்துவிட்டது. ஆனால், நாவலின் நாயகனுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்தது. அந்தப் புகை வாடை அவருக்குப் பிடிக்கவில்லை. குமட்டிக் கொண்டு வந்தது. இந்த நாவலை (சு)வாசிக்கிறவாளுக்கு கேன்சர் வந்து தொலைத்துவிடும் என்று பயந்து நடுங்கினார்.

இதென்ன, பந்தி இலையில் அறுசுவை உணவுப் பதார்த்தங்களைப் பரிமாறிவிட்டு, இடையில் எதையோ கொண்டு வந்து வைத்தது போல செய்துவிட்டாரே என எழுத்துலக ஜாம்பவானின் செயலுக்காக வருந்தினார் பதிப்பாளர்.

பதிப்பாளரும் தஞ்சை விவசாய பூமியில் ஜனித்தவர்தான். சென்னை மாநகருக்கு வந்து கம்பெனி கட்டினார். படிக்கிற பிள்ளைகளுக்கு பென்சில், பேனா, நோட்டு புத்தகங்கள் என கடைக்கால் பதித்தவர், புத்தகம் போட்டு கொஞ்சம் கல்லா கட்டலாம் என முடிவெடுத்து, சில தலைவர்களின் புத்தகங்களையும், கொஞ்சம் கதை புத்தகளையும் வெளியிட்டு பதிப்பாளர் ஆகிவிட்டார். மாணாக்கர்களும் அவர்களைச் சார்ந்தவர்களுமே பிரதான வாசகர்களாக இருந்தனர். ஆகவே, படிக்கிற பிள்ளைகளை நல்வழிப் படுத்துகிற புத்தகங்களை மட்டுமே வெளியிடுவது என்றொரு தொழில்தர்மத்தை அவர் கறாராக கடைபிடித்து வந்தார்.

ஆகவே, எழுத்தாளரிடம், “நாவலை பிரம்மாதமாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால், கதையின் நாயகன் சிகரெட் புகைக்கிறான். அதை மட்டும் திருத்திக் கொடுத்துவிட்டால் பேஷாக புஸ்தகம் போட்டுறலாம்’’  என்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.

அதைக் கேட்டு ‘இதென்ன சிறுபிள்ளைத்தனமா இருக்கு’ என மனதுக்குள் எரிச்சலடைந்த எழுத்துலக ஜாம்பவான், “என் நாவலின் அந்தக் கேரக்டர் உண்மையிலேயே சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவன். அவனை என்னால் எப்படி திருத்த முடியும்?’’ என்று பதிலளித்திருக்கிறார்.

“சிகரெட் புகைப்பதற்குப் பதிலாக, வெற்றிலை போடும் பழக்கமுள்ளவனாக மாற்றிக் கொடுங்களேன்’’ என்று ஓர் ஆலோசனையையும் வழங்கியிருக்கிறார் பதிப்பாளர்.

“அப்படி நான் மாற்றினால், அந்த நாவலின் ஜீவனே போய்விடும். அதனால் அந்தக் கேரக்டரை ஒதுபோதும் என்னால் மாற்றவே முடியாது’’ என்று கருணையே இல்லாமல் பதிப்பாளரின் கோரிக்கையை நிராகரித்து விட்டார் எழுத்தாளர்.

பதிப்பாளரும் ஒரு முடிவுக்கு வந்தவராய், “அப்படியானால், வேறு ஏதாவது ஒரு பதிப்பாளரிடம் உங்கள் நாவலைக் கொடுத்துவிடுங்கள். அவர்கள் வெளியிட்டுக் கொள்ளட்டும்…’’ என்று நாசுக்காக அந்த ஜாம்பவானின் நாவலை நிராகரித்தார்.

கடுப்பான எழுத்தாளர்,  “இது உங்கள் கம்பெனிக்காகவே எழுதின நாவல். இதை புத்தகமாக வெளியிடுவதும் வெளியிடாததும் உங்கள் விருப்பம். நான் ஒருபோதும் இதை திரும்பப் பெறவே மாட்டேன்’’ என்று கறாராக சொல்லிவிட்டார்.

காலம் கடந்து கொண்டிருந்தது.

அந்த நாவலை எழுத்தாளர் மாற்றிக் கொடுக்கவும் இல்லை; பதிப்பாளர் புத்தகமாக வெளியிடவும் இல்லை. இருவரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். நாவலின் கையெழுத்துப் பிரதி கம்பெனியிலேயே தங்கிவிட்டது.

பின்னர், எழுதியவரும் காலமாகி விட்டார்; வாங்கியவரும் மறைந்து விட்டார். எழுத்துப் பிரதி மட்டும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

காலம் மாறிவிட்டது.

இப்பொழுது பதிப்பக நிர்வாகம் மூன்றாவது தலைமுறையான பேரனுக்கு கைமாறிவிட்டது.

அவரிடம், “அந்த நாவல் என்னதான் ஆயிற்று?’’ என்று கேட்டேன். அவருடனான பேட்டியின் கடைசி கேள்வி அது.

அவர் முகஇறுக்கத்துடன், “இவ்வளவு காலமும் பரணில்தான் இருந்தது. கரையான் அறித்து நடுவில் பொத்தலாகிவிட்டது. அதனால் சமீபத்தில்தான் அதைக் கொண்டு போய் குப்பையில் போட்டு விட்டேன்’’ என்றார்.

பிறகென்ன?

ஒரு நாவல் மௌனமாக செத்துவிட்டது.

அந்தப் பேட்டியைப் படித்த ஒரு வாசகர் “அந்த நாவலைக் கொன்றது யார்? எழுத்தாளரா? பதிப்பாளரா?’’ என்று பதற்றத்தோடு என்னிடம் கேட்டார்.

“எழுத்தாளரும் இல்லை; பதிப்பாளரும் இல்லை; அந்த நாவலின் நாயகன்’’ என்றேன் நான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *