ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம் - என் ராமகிருஷ்ணன்

நால்வர்ண பேதங்களும் வர்க்கப் பிரிவினைகளும் நிலவிய அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்திற்கும் முன்பே இந்தியாவிலும் தமிழகத்திலும் நிலவி வந்த பண்ணை அடிமை முறை பற்றியும் அதில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் எவ்வாறு அதிலிருந்து மீண்டு எழுந்து தன்னை விடுவித்துக் கொண்டார் என்பதையும் தான் மட்டும் அதிலிருந்து மீளாமல் பண்ணை அடிமை முறையையே ஒழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதிலிருந்து மனித வர்க்கத்தை மீட்டெடுத்த வரலாறு இது.

விடியல் எது இருள் எது என வாழ்க்கையில் பேதம் பிரித்துப் பார்க்காத ஏழைகளும் அடிமைகளும் சூரியன் எழும்பும் முன்னே எழுந்து வயல்வெளிக்கும் நிலப்பிரபுகளின் வீடுகளுக்கும் வேலைக்குச் சென்று இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்பி வெறும் தரையில் கிழிந்த சாக்கின் மேல் படுத்து எவ்விதமான வாழ்வின் சுகங்களையும் அனுபவிக்காது வாழ்ந்த பண்ணை அடிமைகளைப் பற்றிய வரலாற்றை எழுதிச் செல்லும் இந்த நூல் ஒரு தனி மனிதரின் வரலாறு அல்ல

அறியாமையிலும் கல்வி அறிவற்ற பாமரத்தனத்திலும் மூழ்கியபடி எதிர்காலத்தையே மறந்து உடல் உழைப்பை முழுவதுமாக நிலப்பிரபுகளுக்கு வழங்கி வாழ்வைத் தொலைத்த அடிமைகளை மேலே ஏற்றுவதற்கான விடுதலைப் போராட்டத்தின் முழு நிகழ்வையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சையையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நிலவி வந்த நிலப்பிரபுகள் பண்ணை அடிமை முறை பற்றிய வரலாற்றை முதல் 40 பக்கங்களில் கூறிய பின் தோழர் பி எஸ் தனுஷ்கோடி அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆரம்பமாகிறது. பிறக்கும்போதே தாத்தாவை மரணிக்கவைத்தும் அப்பாவை மிகப் பெரும் துயரில் தள்ளியும் வாழ்க்கையைத் துவக்கிய தனுஷ்கோடியின் வாழ்வில் பண்ணை அடிமை முறை மிகப்பெரிய சீரழிவை உண்டாக்குகிறது. கல்வியைப் பற்றி சிந்திக்காமல் பள்ளிக்கூடங்கள் என்று எந்த அமைப்பும் அன்றைய காலகட்டத்தில் இல்லாத சூழலில் அடிமையாகவே வாழ்வைக் கழிப்பது மிகப்பெரிய கொடுமை என எட்டு வயது சிறுவனுக்குள் உதயமாகிறது புதுப்புது எண்ணங்கள்.

பண்ணை அடிமைகள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க மணியக்காரன் ஏஜென்ட் இன்ஸ்பெக்டர் தலையாரி காரியக்காரன் என்று ஒரு படையே அவர்களை கண்காணிக்க துவங்கும். பாய் என்பதோ விரிப்பு என்பதோ அவர்கள் அறியாதது. பண்ணை விட்டு பழைய சாக்கு வைக்கோல் இவைதான் அவர்களின் படுக்கை விரிப்பு. நண்டையும் நத்தையையும் அவிப்பதால் ஏற்படும் நாற்றம் குடிசைப் பகுதி முழுவதிலும் பரவி இருக்கும் நிலையில் அதை சுவாசித்துக் கொண்டே இந்த பண்ணை அடிமைகள் உறங்கிப் போய் விடுவர். அதிகாலை கொம்பு ஊதும் சத்தம் கேட்டோ, ஒற்றைப்பறை அடிக்கும் சத்தம் கேட்டோ விழிப்படைந்து கோமணத்துடன் வயலை நோக்கி நடையை எட்டிப் போடும் பண்ணை அடிமைகளின் வாழ்வில் விடுதலை என்பது குதிரைக் கொம்பாகவே மாறிப்போனது.

இந்த ஆண்டான் அடிமை முறை ஏன் வந்தது எப்படி வந்தது என்று சிந்திப்பதற்குக் கூட நேரமின்றி விவசாயக் கூலிகள் அலைந்து திரிந்த வேளையில் தனுஷ்கோடியின் மனதிற்குள் இதற்கான தீர்வுகள் உதிக்க தொடங்கின.

பண்ணை அடிமை ஏதேனும் தவறு செய்தால் அவருக்கு வழங்கப்படும் தண்டனைகள் மிகக் கொடுமையாகவும் கொடூரமாகவும் இருந்தன. புளிய விளாரில் தொடர்ந்து உடலில் ரத்தம் வரும் வரை சவுக்கடி வழங்கப்பட்டும் சவுக்கில் கூழாங்கற்கள் கொண்டு உடம்பில் கீறல்களை உருவாக்கியும் அதுவும் போதாது என்று மாட்டுச் சாணியைக் கரைத்து அவனுக்குக் குடிக்கக் கொடுத்தும் தண்டனையை நிறைவேற்றி ரசிக்க துவங்கினர் நிலப் பிரபுக்கள். சில சமயங்களில் இந்த இரண்டு தண்டனைகளும் அடிமைக்கு வழங்கப்படும். தண்டனை வழங்குகையில் அவனுக்கு சிபாரிசு செய்தோ வலிக்கும் என்று ஆறுதல் கூறவும் யாரும் முன்வருதல் கூடாது. அப்படி வருபவர்களுக்கும் அந்த தண்டனை வழங்கப்படும்.

சிறு வயதில் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகமெங்கும் மூளை முடுக்கெல்லாம் எதிரொலிக்கத் தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் முழக்கங்கள் தனுஷ்கோடிக்குள்ளும் ஒரு பெரிய நம்பிக்கையை உருவாக்குகிறது. காங்கிரஸ் கட்சி ஊர்வலங்களின் வாயிலாக அடிமைகளுக்குள் மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அதற்கு ஆதரவு அளிக்காததால் தனுஷ்கோடி தனது முயற்சியிலிருந்து பின் வாங்குகிறார். அதேசமயம் செங்கொடி இயக்கம் அவருக்குள் எழும்பிய எல்லா வினாக்களுக்கும் விடை சொல்லும் அமைப்பாக அவருக்குத் தெரிய வர தன்னை அதில் இணைத்துக் கொண்டு அதன் வழியே பண்ணை அடிமை முறை ஒழிப்பை முன்னெடுக்கிறார்.

அடிமைகளில் ஆண் பெண் பேதம் இல்லை பிறக்கும் குழந்தைகளும் நிலப்பிரபுக்கே அடிமை என சாசனம் எழுதப்படுகிறது. அடிமைகள் திருமணம் செய்து கொள்ளும்போது அவர்களுக்கு வழங்கப்படும் பணமும் பத்திரமாக எழுதி வாங்கிக் கொள்ளப்படுகிறது..சில இடங்களில் அடிமை திருமணம் செய்த பெண் முதல் இரவில் நிலப்பிரபுகள் அனுபவித்த பின் அடிமைக்கு பிச்சையாக போடப்படும் நிகழ்வுகளும் நடந்தது உண்டு.

இப்படியானதொரு கடுமையான கொடூரத்தின் பின்னணியில் தோழர் சீனிவாச ராவ் அவர்களை சந்திக்கும் தனுஷ்கோடி அவரின் விடாத உழைப்பாலும் தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாலும் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விவசாயிகள் சங்கத்தை ஆரம்பிக்கிறார். அரசின் கடுமையான அடக்குமுறைகளும் தொடர்ச்சியான சதிகளும் அவர்களது முயற்சிகளுக்கு பெரும் இடையூறாக மாறுகின்றன. சுமார் 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து தனுஷ்கோடி தனது இறுதி மூச்சு வரை அடிமை முறையை ஒழிப்பதற்காக முழு ஈடுபாட்டுடன் வாழ்ந்து மறைகிறார்.

என் வாழ்க்கை பூராவும் என் திறமைகள் அனைத்தும் மனித சமுதாய விடுதலை என்னும் உலகிலேயே மகோன்னதமான லட்சியத்திற்கே அர்ப்பணித்தேன் என்று கண்ணை மூடும் போது நினைக்கும் வண்ணம் வாழ்வதுதான் மனித வாழ்க்கைக்கு பெருமை அளித்திடும் என்ற ரஷ்ய எழுத்தாளன் ஆஸ்ட்ரோவ்ஸ்கியின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து வாழ்ந்தவர் தனுஷ் கோடி.

மனிதருக்குள் நிற பேதங்கள் இல்லை குருதி பேதங்களும் இல்லை வாழும் முறைகளும் வாழும் சூழலும் ஒவ்வொரு மனிதனையும் தனி சிந்தனையுள்ள மனிதனாக வாழப் பழக்குகிறது. ஆனால் சமுதாயத்தில் நிலவும் ஆண்டான் அடிமை முறைகளில் மாட்டிக் கொண்டு தமது வாழ்வைப் பற்றிய எதிர்காலத்தை சிறிதும் சிந்திக்காமல் முற்றிலுமாக பிற மனிதனுக்கே அடிமையாக ஒப்படைக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வில் தனக்கான சுதந்திரத்தை மட்டும் அடைந்து கொண்டு சுயநலத்தோடு தேங்கி விடாமல் ஒரு மிகப்பெரிய வர்க்கப் போராட்டத்தை துவக்கி அதிலிருந்து மாபெரும் வெற்றியும் பெற்றுத் தந்த தனுஷ்கோடியின் வாழ்க்கை வரலாறு வழியாக சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு பற்றியும் அது எவ்வாறு நீக்கப்பட்டது என்பது பற்றியும் அறிந்துகொள்ள சிறப்பானதொரு ஆவணமாக மலர்கிறது இந்த நூல்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்

ஆசிரியர் : என் ராமகிருஷ்ணன்

வெளியீடு : சவுத் மிஷன் புக்ஸ் சென்னை

பக்கம் 100

விலை : ரூபாய் 80

வெளியீடு 2022

 

எழுதியவர் 

 

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *