புத்தகத்தின் அடர்த்தி உள்ளடக்கம் காரணமாக பதிவும் சற்று விரிவடைகிறது வாசகர்கள் பொறுத்தருள்க.

அகாலத்தின் பாழ்வெளியில் புதைந்து கிடந்த சிந்துவெளி நாகரிகமொன்று தன் கரங்களை அகல விரித்து புதைமேட்டிலிருந்து தலைதூக்கி ஒரு நூற்றாண்டாக எந்த இனக்குழுவாலும் உரிமை கோரப்படாமல் கொள்வாரின்றி உயிரற்று கிடக்கிறது.

தன் ஆதிப்புதிரை மொழியில் எழுதிவைத்து விளையாடிக்கொண்டிருக்கும் சிந்துவெளியின் குறியீடுகளை மொழிபெயர்க்கும் பிதாமகர் எவரோ அவரே அந்நாகரிகத்தின் புதிரவிழ்த்து விடை காணக்கூடும். அன்றிலிருந்து அந்த அகழாய்வு மேடுகள் யாவும் உயிர்த்தெழும். உலக நாகரிகங்கள் யாவும் தன் ஆதித் தொன்மை குறித்தான மயக்கங்களில் இருந்து விடுபடவும்கூடும்.

தண்டவாளத்திற்கு பாதை தேடியவர்கள் ஒருபோதும் அறியவில்லை நாகரிகத்தின் பெரும்தொடர் வண்டியொன்று அதில் பயணிக்கப் போவதை. காலத்தின் மாயப்பாதையில் பெரும்பாய்ச்சலொன்றை நகர்த்திக்கொண்டிருக்கும் தொல் நாகரிகத்தின் முடிச்சவிழ்க்க தன் ஆதித்தொல் மூதாதையர்களின் இலக்கிய மொழியை கையிலேந்தி, உலகெங்கும் வலம் வந்து, உண்மையின் அண்மையில் நின்று, அறிவியல்பூர்வமானதொரு ஆய்வுகளை, வாசிக்கும் யாவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம், வெல்லுஞ்சொல்லோடு சபையேறியிருக்கிறார் ஆய்வாளர் ஆர். பாலக்கிருஷ்ணன் அவர்கள்.

30 ஆண்டுகால உழைப்பில் ஒவ்வொரு ஆய்வும் உண்மையின் தீச்சுடராய் ஒளிர்கிறது. பழந்தொன்மையான வார்த்தைகளை எடுத்துக்கொண்டு உலகெங்கும் சொற்களின் வேர்களை மிக மிகத் துல்லியமாக பதிவு செய்திருக்கிறார். ஒரு இனத்தின் அழிந்துபோன நாகரிகத்தை பிணக்கூறாய்வு செய்வது அவ்வளவு எளிதானதன்று. தோண்டியெடுக்கப்பட்ட ஒவ்வொரு சாம்பலும் உண்மையையும் ஆதாரங்களையும் விலையாய் கேட்கும்.

அந்த வகையில் சிந்துசமவெளி நாகரீகத்தின் அகழ்ந்தெடுக்கப்பட்ட செங்கற்கள்,மண்பாண்ட ஓடுகள், முத்திரைகள், நாணயங்கள், சிலைகள், நகர நாகரீகத்தின் கட்டுமானங்கள், யாவும் யாவும் யாராலும் எந்த இனக் குழுவாலும் உரிமை கோரப்படாத சூழலில், திராவிடக் கருத்தியலோடு, சங்கத்தமிழின் துணையோடு, ஆதாரங்கள் யாவற்றையும் வான் குருவியாய் பறந்து நுண்மான் நுழைபுலத்தோடு அள்ளி அள்ளி சேகரித்திருக்கிறார்.

ஆதித் தாயான சிந்துசமவெளி நோக்கி நவீன பேரத் தமிழன் எவ்வாறு தன் அடையாளங்களை தேடிப் பயணிக்கின்றான் என்பதை அவரின் நூலோடு சேர்ந்து பயணிப்பதொன்றுதான் தமிழர்களின் தலையாயப் பணி. வேர்களை தேடிச்செல்லும் விழுதின் பயணம் என்றும் கொள்ளலாம்.

ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து துவங்குகிறது மனிதர்களின் பயணம். தேடல் மிகுந்த கால்களின் வழியே ஒரு பண்பாட்டையும் நாகரிகத்தையும் வழிநெடுக விதைத்து சென்றுள்ளான் என்பதை புத்தகத்தில் உள்ளவரைபடங்கள் யாவும் அறிவியல்பூர்வமான தரவுகளோடு நமக்கு நிருபிக்கின்றன. கண்டத்திட்டுக்கள் எவ்வாறு நகர்ந்து பழைய நிலவிடங்களிலிருந்து விலகி புதிய நிலப்பரப்புகளில் இணைந்தது என்பதை காணொளிப்படம் வாயிலாக மிக அருமையாக எளிமையாக உணர்த்தினார் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன்.

வாசிப்பு இயக்கத்தில் ஒரு பண்பாட்டு பயணத்தின் நூலை வாசிப்பது குறித்தான வகுப்பை சுமார் நான்கு மணிநேரம் நடத்தி எளிமையாக புரிய வைத்தார்.
நூலை எளிமையாக புரிந்துகொள்ள சில தலைப்புகளாக பிரித்து கொடுத்தார். அதன்வழியே பயணப்படுவது வாசிப்பை சுலபமாக்கியது.

சிலம்புத்தடம்

கண்ணகி அணிந்த கால் சிலம்பு சோழநாட்டில் துவங்கி பாண்டிய நாட்டில் நீதிகேட்டு சேரநாட்டில் தெய்வமாகியதோடு நின்றுவிடவில்லை. கேரளம், குஜராத், பாகிஸ்தான், இலங்கை என நீள்கிறது சிலம்பின் ஆற்றொணா துன்பக் குரல். சிலம்பின் ஓசையோடு பின்தொடர்ந்து பயணித்திருக்கின்றார் ஆய்வாளர்.

சிலப்பதிகாரம் ஒரு புனைவுதான் என்றபோதும் அதன் நினைவின் தொடர்ச்சி நம்மை அசரடிக்கிறது. 2018 ஆம் ஆண்டுவாக்காளர் பட்டியலில் 12500 கண்ணகிகள் இருந்ததாக ஆய்வுகள் சொல்லுகின்றன. ஒரு கைச்சிலம்போடு ஊரெல்லாம் ஆவேசக் கோலத்தோடு அலைந்து திரிந்த கண்ணகியின் காற்சிலம்பிலிருந்து முத்துக்கள் மட்டும் உதிரவில்லை. அவள் பெயரும் நாடெங்கும் பூத்துக் கிடக்கிறது வாசிப்பில் வரைபடத்தடத்தில் நீங்களும் அசந்துபோவீர்கள்.

விளையாட்டுத் தடம்

ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் நடக்கிறது .சங்க இலக்கியப் பாடல்களில் ஏறு தழுவுதல் குறித்தான காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் ஏறு தழுவும் காட்சி மிகச்சிறப்பாக பொறிக்கப்பட்டுள்ளது.

பகடை உருட்டிவிளையாடும் காய்கள் கீழடியிலும் சிந்துவெளியிலும் ஒரே மாதிரி காணக்கிடைக்கின்றன. தந்தத்தால் செய்யப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு. தமிழ்நாட்டு கோழிச்சண்டை கிடா சண்டை ஏறுதழுவுதல் என யாவும் முத்திரைகளில் பதித்து கிடக்கின்றன. ஹரப்பாவிலிருந்து தமிழனின் விளையாட்டுத் தொடர்ச்சி எனக் கொள்ளலாம்.

வன்னிமரம்

வன்னிமரமானது ஆதித்தமிழ் இனத்தின் புனித மரமாக கருதப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுப் பத்து ஆகியத் தமிழ் இலக்கியத்திலும் இம்மரம் குறித்து பாடப்பட்டுள்ளது, வன்னியர் உள்ளிட்ட ஒரு சாதிப் பிரிவினர்க்கு வன்னிமரம் வழிபாட்டுமரமாக இருக்கின்றது. குஜராத், ராஜஸ்தான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளில் இம்மரம் வழிபாட்டுமரமாகவே வணங்கப்படுகிறது. ராஜஸ்தானில் இம்மரத்தில் அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது. சிந்துசமவெளியில் கிடைத்துள்ள சுடுமண் முத்திரையில் வன்னிமரம் மிகத் தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளது. மரத்தின் வேர் வழியாகவும் பற்றிப் பயணித்து தமிழரின் உரிமை கோருகிறார்.

கீழடியும் ஆதிச்சநல்லூரும்

தொப்புள்கொடி உறவுகளாக கண்டறியப்படுகின்றன. ஆதிச்சநல்லூர் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியும் புதைமேடுகளும் ஈமச்சடங்கு பொருள்களும் கீழடியிலும் காணப்பெறுகின்றன.ஆதிச்சநல்லூர் கீழடியில் எடுக்கப்பட்ட குதிர் சுடுமண் உருவச் சிலைகள், உண்மையை தேடிய பயணத்தில் நிச்சயம் மைல்கல்தான். கீழடி அகழாய்விற்கு பின்தான் வெகுஜன மக்கள் திரளிடம் அகழாய்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. அங்கு தோண்டியெடுக்கப்பட்ட பொருள்கள் யாவும் சிந்துவெளி பொருட்களுடன் ஒப்பிட்டு பார்த்து தமிழர் நாகரிகமே என்பதை மேலும் அடையாளப்படுத்த உதவியது.

குமரிக்கண்டமும் பஃறிளியாறும்

ஒரு நூறாண்டு காலம் நாம் கண்டறிந்த உண்மை என்று நம்பிய குமரிக்கண்டமும் பஃறிளியாறும் காலத்தின் நகைப்பொலியில் மிகச்சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட கற்பிதங்கள் என்பதையும் அந்தக் கட்டுக் கதைகளின் முடிச்சையும் அவிழ்த்துக் காண்பிக்கிறார். அந்த வகையில் எதிர்காலத்து அகழாய்வின் மறுவாசிப்பில் சிந்துசமவெளி, ஹரப்பா, மொகஞ்சதாரோ அதன் மீது கட்டி எழுப்பப்படும் பெருமிதங்கள் யாவும் மணல் குவியலாய் உதிர்ந்து போகவும் கூடும், என யாவற்றையும் உள்வாங்கி முடிந்த முடிவாக அறிவிக்காமல் கருதுகோளாக முன்வைப்பதில் ஆசிரியரின் அறிவு நாணயம் வெளிப்படுகிறது.

அறிவியலின் துணைகொண்டு அனைத்தையும் சர்வ ஜாக்கிரதையாக அடியெடுத்து வைத்திருக்கிறார். தமிழ்நாட்டின் நிலவெல்லையாக வடக்கே இமயமலையை நிறுவுவது சங்க இலக்கிய காற்றுத்தடத்தை பின்பற்றி நிறுவுகிறார். மொழியின் வழியாக ஒரு நாகரிகத்தை உரிமை கொண்டாட திராவிட மொழிக்குடும்பத்தை கையிலெடுக்கிறார். அதற்கு வலிமை சேர்க்கும் விதமாக சிந்துவெளியிலிருந்து தமிழகம் வரை சிதறிக்கிடக்கும் திராவிட மொழிச்சொற்களை அள்ளித் திரட்டுகிறார்.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் முதல் ஐராவதம் மகாதேவன் வரையிலான ஆய்வாளர்களின் ஆய்வுகளை தரவுகளாக்குகிறார். உலகின் மற்ற எந்த மொழிக்குடும்பமும் இதுவரை அதன் அருகில் நெருங்க முடியாத சூழலில் இக்கருதுகோள்கள் ஏற்கத்தக்கவைதான். குறியீடுகளுக்கு நாக்கு முளைக்கும்வரை ஒவ்வொரு மொழியும் உரசிப் பார்த்தவண்ணமே இருக்கும் திராவிட மொழியின் உதடுகள் சிந்துசமவெளியின் எழுத்துக்களை என்றேனும் ஒர் நாள் உச்சரிக்கும் என்று நம்புவோம்.

திராவிட நாகரிகம்தான் என்பதை நிறுவ எண்ணற்ற இடப்பெயர்களை கண்டறிகிறார். அவற்றில் முக்கியமானது கொற்கை வஞ்சி தொண்டி எனும் மூன்று இடப்பெயர்கள். சங்க இலக்கியத்திலிருந்து நூல் பிடித்து சிந்துவெளியியை சுற்றிவரை இப்பெயர்கள் பரவிக் கிடக்கின்றன. சேர சோழ பாண்டிய மன்னர்களின் பெயர்கள். தமிழ் நிலக் குடித் தலைவர். சங்கத்தமிழ் அரசியல் எல்லைகள். அரசமரபுப்பெயர்கள். அரசர்களின் பெயர்கள். தமிழ் கடவுள் முருகன் கல்வெட்டில் இடம்பெற்ற தனிமனித பெயர்கள்.
ஒரு சொல் பெயர்கள். என தமிழ் மொழியின் புழங்கிய அத்தனை பெயர்களும் புதைமேட்டை சுற்றி சுற்றி புழங்குகின்றன என்பதை ஆதாரத்துடன் நிறுவுகிறார்.

திராவிடச் சிவப்பு

தமிழர்கள் கருப்பர்கள் என நினைத்துக்கொண்டிருக்க, திராவிடச் சிவப்பென்று ஒரு கட்டுரையில் நிறுவ முயல்கிறார். சங்ககால கடவுளின் பெயர்கள், விலங்குகள், மற்றும் பறவைகள், தாவரங்கள், அரசர்கள், நிலக்குடித்தலைவர்கள், புலவர்கள், தனித்த பெயர்கள், என யாவும் செம்மை நிறப் பெயர்களாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். சிந்துவெளியில் கிடைத்த பெரும்பாலான பொருட்களின் நிறமும் தமிழனின் நிறமும் ஒன்றே என்று வாதிட்டு மெய்ப்பிக்கிறார். சுட்ட செங்கலின் பயன்பாடு கீழடியில் கிடைத்த அகழாய்வு பொருட்கள் யாவும் சிவப்பு நிறத்தில் உள்ளதை சுட்டுகிறார். செங்கலின் நீள அகலம் நிறம் யாவும் தமிழர் கட்டடக்கலைக்கு நெருக்கமாக நிற்பதை காண்கிறார்.

பானைத் தடம்

மிக முக்கியமான கட்டுரை சுடப்பட்ட மண்பானைகள். ஓடுகள். கருப்பு சிவப்பு வண்ணங்கள். அதனை செய்த குயவர்கள். அவர்களின் வாழ்விடங்கள். சமூகத்தில் அவர்களுக்கான இடங்கள். யாவற்றையும் மிக விரிவாக பேசுகிறார். ஹரப்பா மண்பாண்டங்கள், தமிழ்நாட்டு மண்பாண்டங்கள், உருவ ஒற்றுமைகள், பானைகளிலும் ஒடுகளிலும் எழுதப்பட்ட பெயர்கள், அதைச் செய்த தொழிலாளிகளின் 9 விதமான சாதியாய் திரிந்த பெயர்கள், பூசாரிகளாக இருந்த குயவர்களை பிராமணர்கள் சாதீய அடுக்கில் கீழே கொண்டு சென்றது, புராணத்தில் திருநீலகண்டரும் ஒரு குயவரே என எடுத்து உரைப்பது, குயவர்களின் கையெழுத்துக்களே கீறல்களாக எவராலும் படித்தறிய முடியாமல் கிடப்பதுவரை கோடிடுகிறார். ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்.

இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பத்தியிலும், அவர் விவரித்துச் சொல்கிற செய்திகள் யாவும் எவரும் மறுத்துச் சொல்ல முடியாத அறிவியல்பூர்வமான அலசல்கள். ஒவ்வொரு தகவலும் அசரடிக்கின்றன.தொல்லியல்துறை சார்ந்த அறிவென்பது மிகுந்த உழைப்பை கேட்க கூடியது. மிகவும் மெனக்கெட்டு தன் காலம் முழுமையும் அதற்காக தீரா உழைப்பை செலுத்தி எழுத்தால் ஒரு புதையலை தேடி கண்டடைந்துள்ளார். நாமெல்லோரும் வாசிப்பது ஒன்றுதான் உழைப்பிற்கு செலுத்திய மரியாதையாகும்.

எனக்கு எழுகிற இரண்டு சந்தேகங்கள் சிந்துவெளி நாகரிகத்தின் வாசிக்கப்பட முடியாமல் இருக்கும் எழுத்துக்களை எதிர்காலம் வாசித்து பொருள் கொள்கையில், வேறொரு இனக்குழு உரிமை கொண்டாடும் உண்மையை ஏற்றுக்கொண்டால், இந்தப் புத்தகம் அறுதியிட்டு சொல்கிற உழைப்பு யாவும் வீணாகிவிடும். ஆகவேதான் ஆசிரியர் முடிந்த முடிவாக அறிவிக்காமல் அனைத்தையும் கருதுகோளாக முன்வைக்கிறார். சிந்துவெளி எழுத்தின் பூட்டை திறக்கும் சாவி எவர் வசம் உள்ளதோ அவர் வசமே சிந்துவெளி நாகரிகம் ஒப்படைக்கப்படும்.

இரண்டு

கடந்த ஒரு நூற்றாண்டாகத்தான் அகழாய்வுப்பணிகள் துவங்கி ஆங்காங்கே மனித குல நாகரிக வரலாறு தோண்டியெடுக்கப்படுகிறது. பூமியை முழுவதாக என்று அகழாய்வு செய்கிறோமோ அன்று தான் உலக நாகரிகத்தில் முழுமையான வரலாறு கிடைக்கக்கூடும். நதிக்கரை தோறும் நாகரிகங்களை தேடிக்கொண்டிருக்கிறோம் அது ஏன் ஆழ்கடலுக்குள் மூழ்கி கிடக்க கூடாது. இதுவரை கிடைத்த தரவுகளை காட்டிலும் கிடைக்காத தரவுகளில் தான் உண்மையானது ஒளிந்து கிடக்கலாம். பூமியின் நிலத்திலும் கடலுள்ளும் ஆயிரமாயிரம் நகரங்கள் புதையுண்டு கிடக்ககூடும். ஆய்வாளர்கள் காலயந்திரத்தின் மீதேறி பறந்துசென்று மிகத்துல்லியமான எந்தவொரு முடிவையும் தீர்க்கமாக அறிவிக்க முடியாது. கல்வியறிவும், துறைசார்ந்த அனுபவமும், அனுமானமாக சிலவற்றை மெய்ப்பிக்க முயலலாம்.
காலம் ஒன்று மட்டுமே யாவற்றுக்கும் தீர்வு சொல்லும். அதுவரை கிடைத்த உண்மைகளை பற்றி நிற்போம்.

சிந்துநதிக்கரையில் உதித்த நாகரிகமொன்று வைகை நதிக்கரை வரை தன் பயணத்தை தொடர்ந்துள்ளதும், அதற்கான உரிமையை தமிழர்கள் கோரி நிற்பதும் அதற்கான உள்ளடக்கமே இந்நூலின் ஆதார சுருதியாக நான் காண்கிறேன்.

ஒரு சின்னமனக்குறை என்னவென்றால், இந்நூல் அனைத்து தமிழர்களும் வாசிக்ககூடிய தகுதியான நூல், ஆனால் புத்தகத்தின் செய்நேர்த்தியும், கட்டமைப்பும், ஆடம்பரமும், அதனால் ஏற்பட்ட விலை உயர்வும், எளிய மக்கள் அதன் அருகில் கூட நெருங்கிவிட முடியாத உயரத்தில் இருக்கிறது. எல்லோருக்கும் இந்நூல் போய்ச்சேரவேண்டும் என்ற நோக்கம் வெளியிட்டாளர்களுக்கு இருந்தால், எளிய மக்கள் பதிப்பாக கொண்டுவரப்பட வேண்டும். தேவையெனில் அரசாங்க உதவியை கூட நாடலாம். எதிர்வரும் பதிப்பு எல்லோரும் வாங்கிப் படிக்கும்
விலையில் இருக்கும் என்று நம்புவோம். என்னால் இரவல் வாங்கித்தான் படிக்க முடிந்தது.

ஒடிசா மாநில முன்னாள் தலைமை செயலரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆர்.பாலகிருஷ்ணனின் உழைப்பு போற்றத்தகுந்தது அவருக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

நூல்: ஒரு பண்பாட்டின் பயணம் (சிந்து முதல் வைகை வரை)
ஆசிரியர்: ஆர்.பாலகிருஷ்ணன்
பக்கம்: 630
விலை: 3300
வெளியீடு: ரோஜா முத்தையா மன்றம்

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *