ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் (Oru Panpattu Arasiyal Payanam) – நூலறிமுகம்
எழுத்தாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் இது வரை 16 நூற்கள் எழுதி வெளியிட்டுள்ளார். நூலின் உள்ளடக்கம் அதன் முக்கியத்துவம் கருதி அதன் கருத்துக்கள் உலகோர்க்கு சென்று சேர்வதற்காக எளிய நடையில் அதன் கருத்துக்களை உட்கிரகித்து எளிய வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக இந்த நூலை எழுதியுள்ளார் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் அவர்கள்..
ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 16 நூல்களை எட்டுத் தலைப்புகளாக பிரித்து அதை எளிய விளக்கங்களால் பொருள் கூறி கிட்டத்தட்ட கோனார் உரை மாதிரி நமக்கு வாசிக்க தந்துள்ளார். முதல் கட்டுரை சங்க இலக்கியத்தின் மீது புதிய வெளிச்சம் எனும் தலைப்பில், 30 உரைகளுக்கு 30 ஒளிப்பந்தங்கள் என்று பெயரிட்டு வெளிச்சம் பாய்ச்சியுள்ளார். சங்க இலக்கியங்கள் குறித்த ஒரு உரையை நூலை நாம் புரிந்து கொள்ள ஒரு கை விளக்கு நமக்கு தேவையாகத்தான் இருக்கிறது.
பசிப்பிணி மருத்துவர், பருத்திப் பெண்டிர், கடவுள் ஆயினும் ஆக, முதுவோர்க்கு முகிழ்த்த கை, இமிழ் பனிக் கடல், சேண் நெடும் புரிசை, குட காற்று எரிந்த குப்பை, கலம் சுடும் புகை, அணி நடை எருமை, நடவு நின்ற நல், நெஞ்சினோர் நும்மினும் சிறந்தது நுவ்வை, தமிழ்கெழு கூடல், எத்திசைச்செலினும், ஓர் ஏர் உழவன், கூர் உளி குயின்ற கோடு, ஆரியர் கயிறாடு பாறை, பெரும் கை யானை, சாலார் சாலார் பாலர்
என ஆர்வத்தை தூண்டும் தலைப்புகளில் நம்மை கைப்பிடித்து அழைத்துச் சென்று, தாயின் சாலப் பரிவோடு சங்கத் தமிழ் புகட்டுகிறார். அசந்து போகும் அளவு வியப்பூட்டும் செய்திகளோடு ஒரு முத்துக் குளித்ததைப் போன்று உணர்வீர்கள்.
இரண்டாம் கட்டுரையாக திருக்குறள் பேசாப்பொருள் குறித்து பேசுகிறார்
நாட்டுக்குறள் /பன்மாயக் கள்வன் /இப்படி ஒரு தீயா
மூன்று தலைப்பில் இன்பத்துப் பால் குறித்த மூன்று புத்தகங்களை அலசி ஆராய்கிறார். திருவள்ளுவர் காதலை ஆராதிக்கத் தெரிந்த நுட்பமான காதலன். மோப்பம் பிடித்து அவர் பின் செல்வோர் கையில் காதலை அள்ளி திகட்ட திகட்ட தருவார். பாலக்கிருஷ்ணன் அவர்கள் தேனள்ளி வந்திருக்கிறார். சொற்கள் யாவும் சுவையூறிக் கிடக்கின்றன.
சிந்து வெளி ஆய்வில் திருப்பு முனை கட்டுரையில்,சிந்து வெளி திறவுகோல்,
சிந்து வெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்,என்ற இரண்டு புத்தகங்களை விளக்கிப் பேசியுள்ளார். தமிழர், திராவிடர் குறித்தான கருத்துருக்கள் இன்று கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. அது குறித்தான சர்ச்சை தீவிரப்படும் இன்னாளில், மிகத் துணிச்சலாக தமிழர்கள் யார்? திராவிடர்கள் யார்? சிந்துசமவெளி நாகரித்தில் நின்று உரிமை கொண்டாடும் போது நாம் திராவிட நாகரிகமாகவும், கீழடியில் நின்று பேசும்போது தொல் தமிழர் நாகரிகமாகவும் பேசப்பட வேண்டும் என்று மிக விரிவான நேர்காணல் ஒன்றை தமிழ் மரபு அறக்கட்டளைக்கு அளித்திருக்கிறார். அதனை முழுமையாக இதில் பிரசுரம் செய்திருக்கிறார்கள்.
ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் 30 ஆண்டுகால உழைப்பில் வைரம் போல் ஒளி வீசக்கூடியது. ஒவ்வொரு பக்கத்திலும் காலத்தின் புதையலை தோண்டியெடுத்து வரிகளாய் மாற்றியிருக்கிறார். புத்தகத்தை புரட்ட, புரட்ட, அசாத்தியமான பேருழைப்பு, மிரண்டு போய் நிற்க வேண்டி இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகமும் கீழடி நாகரிகமும் ஒன்றுதான் என்பதை நிறுவுவதற்காக சங்க இலக்கியத்திலிருந்து பெயர்கள், சூழலியல், பானைத் தடம், வன்னிமரம், மேல் மேற்கு, கீழ் கிழக்கு, திராவிடச் சிகப்பு, எருமை மாடுகளின் சின்னங்கள், காற்றுத் தடம், நிலவியல் போக்குகள், பகடைகள், மட்பாண்டங்கள், பவளமணிகள், சுட்ட ஒரே அளவிலான செங்கல்கள் என்று பிரிதொருவர் மறுத்துச் சொல்ல முடியாத ஆவணங்களை பட்டியலிட்டு தந்துள்ளார். என்றேனும் ஓர் நாள் சிந்து வெளியில் எழுதப்பட்டுள்ள புதிர்கள் விடை காணப்படும் போது ஆய்வாளரின் கருதுகோளுக்கு நெருக்கமாக வருமாயின், உலகே இந்த சங்கத் தமிழனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும்.
வஞ்சி- கொற்கை -தொண்டி வளாகத்துடன் நிற்கவில்லை. சோர்வறியாத சுடர்மணியாய் இப்போது ரிக்- இந்திர-காந்தாரா வளாகம் நோக்கி அவரது ஆய்வு அடுத்த நிலைக்கு செய்கிறது. ஏறத்தாழ 3000 பக்கங்களை வாசித்து, அவற்றிலிருந்து சாறு பிழிந்து 380 பக்கங்களில் பாலகிருஷ்ணன் குறித்தான முழுமையான பரிணாமத்தை நமக்கு காட்டியிருக்கிறார். இதன் வழியே பயணப்பட்டால் நாம் இவ்வுலகம் தோன்றிய நாகரீக சமூகத்தை கண்டடைவதற்கு, மிக எளிதான ஒரு எழுத்து தடத்தை உருவாக்கியுள்ள எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
நூலின் தகவல்கள் :
நூல் : ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்
ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணனின் முன்னெடுப்புகள் – ஓர் அறிமுகம்
எழுத்தாளர் : ச.தமிழ்செல்வன்
ஆண்டு : 2025
பக்கம் : 384
விலை : 380
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/oru-panpattu-arasiyal-payanam/
நூல் அறிமுகம் எழுதியவர் :
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.