“ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்” நூலில் இருந்து…
“சிறந்த நாள் என்பது
கடப்பதில் இல்லை
களிப்பதில் உள்ளது”
நேற்றைய நாள் பொழுதை வாழ்நாளின் நன்னாள் வரவில் சேர்க்க விழைகிறேன். ஜான் மார்ஷல் சிந்துவெளி நாகரிகத்தினை உலகிற்கு எடுத்துரைத்த நூற்றாண்டினை தமுஎகச ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக முன்னெடுத்து கொண்டாடி வருகிறது .அவ்வகையில் சிவகாசி தமுஎகச கிளை நேற்றைய நாளில் சிந்துவெளி நூற்றாண்டு கொண்டாட்டத்தினையும் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் படைப்புகளை முன்வைத்து எழுத்தாளர் தமிழ்செல்வன் அவர்கள் எழுதிய “ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்” நூல் வெளியீட்டினையும் ஒருங்கிணைத்து நிகழ்த்தியது .
மணிமாறன் தோழர் உரை எப்பொழுதும் கூர்முனையாய் மனதில் தைத்து நிற்கும் . நூல் வெளியீட்டு நோக்கவுரையில் நூலின் நோக்கினை மிக நுணுக்கமாய் சொன்னார்கள் .
பைபிளை எப்படி வாசிப்பதென்று வாசிப்பதற்கான பயிற்சி இருக்கிறது ..
கார்ல் மார்க்ஸ் புத்தகத்தை எப்படி வாசிக்க வேண்டுமென்று நிறைய பிரதிகள் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது…
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிச அறிக்கையை எப்படி வாசிக்க வேண்டும் என வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை பொருள் விளக்கத்தோடு எஸ். வி .ராஜதுரை அவர்கள் நூல் எழுதியுள்ளார்.
அவ்வழியில் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் நூல்களை எப்படி வாசித்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான புத்தகம் தான் தமிழ்செல்வன் அவர்கள் எழுதியுள்ள “ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்” நூல் என விளக்கினார்கள் .
தமிழ்செல்வன் அவர்களின் நூலும் நேற்றைய நாளும் எந்த விஷயத்தை முன் வைக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் வகையில் …. ” தீவிரமான எழுத்தியக்கத்தில் உள்ளவர்கள் எழுத்தாளர்கள் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நூல் வாசிப்பு நம் நிலைப்பாட்டினை மாற்றக்கூடியஇதுவரை நாம் எதை வரலாறாக நம்பியிருந்தோமோ எது வரலாறாக சொல்லப்பட்டதோ அதையெல்லாம் மாற்றக்கூடிய வல்லமை கொண்ட நூல். ஜான் மார்ஷல் அவர்கள் சிந்துவெளி நாகரிகத்தினை உலகிற்கு சொல்லும் முன் இந்திய நாகரிகம் என்பது வேத நாகரிகமாகவே நம்பப்பட்டு இருந்தது.
ஆர்.பாலகிருஷ்ணன் அவரது நூல்களில் தொடர்ந்து சிந்துவெளி நாகரிகம் வேத நாகரிகத்திற்கு முந்தையது என்பதனை பதிவு செய்து வருகிறார் .அவரது நூல்களை படிப்பதற்கான வழிகாட்டியாக “ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் ” நூல் அமைந்துள்ளது என மிக சிறப்பாக நோக்கவுரை வழங்கினார்கள் .
நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்ற விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் அவர்கள் வந்திருந்தார்கள் . ஆட்சியர் அவர்களின் தமிழ் உரைகள் அத்தனை செறிவார்ந்ததாக இருப்பதை அறிவோம். நேற்றைய உரையும் அத்துனை செறிவுமிக்கதாய் அமைந்திருந்தது . சங்க இலக்கிய பாடல்களை சொன்ன விதத்திலும் விளக்கிய விதத்திலும் அவை வியந்து நின்றது .

ஆட்சியர் ஆக எது தூண்டுகோலானது என்பதில் தொடங்கி ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களை பற்றி ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆட்சியாளர் என்று கூறி ….
சங்க இலக்கியத்தின் பெருமையை… சுருதி பேதங்கள் இல்லாமல் சுகமான ராகங்கள் பிறக்கமுடியாதோ, மேடு பள்ளங்கள் இல்லாமல் ஒரு பாதை நிறைவடைவதில்லையோ, அதே போன்று துன்பங்களும் இன்பங்களும் தான் வாழ்க்கையில் மாறி மாறி வரும் அது தான் வாழ்க்கையின் இயல்பு… என்ற பொருள் தரும் பக்குடுக்கை நன்கணியார் அவர்களின் படைத்தோன் பண்பிலாளன் என்ற புறநானூற்று பாடல் வழி தொடங்கி …
” உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்” என்ற புறநானூற்று பாடல் ….
குறுந்தொகை பாடல்கள் ..
மனத்துக்கண் மாசிலன் ஆதல் திருக்குறள் கூறும் நெறி…
இடைக்கண் முரிந்தார் பலர் …
என பல சங்க இலக்கிய பாடல்கள் வழி அதன் சிறப்பினை விளக்கி …சங்க இலக்கியத்தையும் ,திருக்குறளையும் தம் கருவியாய் கொண்டு வரலாற்றினை ஆதாரங்களுடன் அணுகும் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் சிறப்பினை பாராட்டி…. சங்க இலக்கியங்கள் பரிட்சைக்கும் ஆசிரியர்களுக்குமானது அல்ல .இலக்கியம் என்பது எளியவர்களுக்கு நம்பிக்கைக்குரிய நண்பரை, வழிகாட்டியை, தத்துவ ஆசிரியரை பெறுவதற்கான வாயில் என அழகாக எடுத்துரைத்தார் …
கூடுதல் மைலில் கூட்டமில்லை என்று ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் கவிதையோடு அவர்களின் சிறப்பினை பறைசாற்றி அத்தோடு அவர்களின் நூலினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாய் அதை முன் வைத்து ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் நூல் எழுதியுள்ள எழுத்தாளர் தமிழ்செல்வன் அவர்களை பாராட்டினார்கள் ….
மாவட்ட ஆட்சியரின் உரை அத்துனை அற்புதமான உரையாய் அமைந்தது …
ஏற்புரை வழங்கிய எழுத்தாளர் தமிழ்செல்வன் அவர்கள் பேசும் பொழுது “ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்” நூல் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் நூல்களினை படிப்பதற்கான வழி நூல் எனவும் …தொல்காப்பியம் கூறிய வழி நூல் எப்படி அமையப்பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் எழுதியுள்ளதை குறிப்பிட்டார்கள் . இந்நூல் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் மொத்த ஆய்வுப்பணியினை சுருக்கமாக சொல்வதெனவும் …இந்நூல் பாலகிருஷ்ணன் அவர்களின் நூலினை நோக்கி வாசிப்பை நகர்த்த வேண்டும் என்பதுதான் தனது அவா எனவும் தெரிவித்தார்கள். பாலகிருஷ்ணன் அவர்களின் பணியினை எடுத்துரைக்கும் பணியினை தான் செய்துள்ளதாகவும் கூறினார்கள் .
பண்பாட்டில் அரசியல் இல்லாமல் இருக்கலாம்…. அரசியல் இல்லாத பண்பாடு என்பது கிடையாது. ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் இன்பத்து பால் பற்றி மட்டுமே மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார். திருவள்ளுவரை சாமியாராக சித்தரித்து காவி போர்த்தும் நாட்டில் திருவள்ளுவர் எழுதிய காதலையும் காமத்தையும் பேசுவதே அரசியல் என்பதை தெளிவுற பேசினார்கள்… வரலாற்றை நிருபிக்க கல்வெட்டுகள் வேண்டும் என சொல்லப்படுகிறபோது சங்க இலக்கியமே ஆதாரம் என்பதனை ஆர்.பாலகிருஷ்ணன் முன்வைத்துள்ளார் என்பதனை குறிப்பிட்டார்கள் .
இந்தியாவில் தமிழ்நாட்டினை தவிர எங்கும் சிந்துவெளி நூற்றாண்டு கொண்டாடப்படவில்லை தமிழ்நாட்டிலும் சிந்துவெளி நூற்றாண்டினை கொண்டாடும் ஒரே அமைப்பு தமுஎகச என்பதை பதிவுசெய்தார்கள்.
“ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்” நூலினை என்னிடம் கொடுத்து நீ எந்த வேலையையும் செய்யவேண்டாம். வாசித்து கொண்டே இரு என்று சொன்னால் கூட மொத்த புத்தகத்தையும் வாசித்து முடிக்க எனக்கு வாரக் கணக்காகும். ஆனால் மொத்த புத்தகத்தின் சாராம்சத்தை பவர்பாயிண்ட் வீடியோவாக இரண்டு மணிநேரம் விளக்கி வரலாற்றின் வேரினை அறிய செய்த அரும்பணிக்கும் மெனக்கெடலுக்கும் ச.தமிழ்ச்செல்வன் அவர்களை தலைவணங்குகிறேன்….
மிக்க நன்றி தமிழப்பா …
குழுவாக இணைந்து செயலாற்றி சிறப்பாக நிகழ்ச்சியை நிகழ்த்திய சிவகாசி கிளை தோழர்களுக்கு அன்பும் வாழ்த்துகளும் ……
நூலின் தகவல்கள் :
நூல் : ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.380
தொடர்புக்கு : 04424332924
நூல் அறிமுகம் எழுதியவர் :
– மணி மாதவி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

