“ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்” (Oru Panpattu Arasiyal Payanam) நூலில் இருந்து…
ஒரு பண்பாட்டின் பயணம்; சிந்து முதல் வைகை வரை
நாம் இதுவரை படித்த, பார்த்த வழக்கமான நூல் அல்ல. அது கனத்திலும் சரி அகல நீளத்திலும் சரி வலு குறைந்தவர்களால் வாசிப்பது சற்று கடினமே. 28–26– கனம் 2.800 அதாவது இது சராசரி நூலல்ல அதன் கனத்தில் மட்டுமல்ல நூலின் உள்ளடக்கத்திலும் அப்படித்தான். நினைத்த இடத்தில் நினைத்தவாறு எடுத்துச் சென்று வாசிக்க இயலாது.
மலை அளவான பண்பாட்டின் பயணத்தை திணை அளவாக..
இன்னும் சொல்லப்போனால் சுண்டக் காய்ச்சிய பாலாக
தோழர் தமிழ்ச்செல்வன் அவர்கள் நமக்கு அரசியல் பயணமாக சுருக்கி அளித்துள்ளார் … சிந்து முதல் வைகை வரை என்கிற பண்பாட்டின் பயணம் மட்டுமல்லாது தோழர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களையே தராசில் வைத்து எடை போட்டு, அதாவது ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் 40 ஆண்டு காலச்சிந்தனை, சிரிப்பு, உழைப்பு, கதை, கண்ணீர், என மொத்தத்தையும் பிழிந்தெடுத்து சாராக ‘ஒரு பண்பாட்டு அரசியல் பயணமாக’ தோழர் தமிழ்ச்செல்வன் நமக்கு அளித்துள்ளார்.
தோழர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களை, ஒரு ஐ.ஏ.எஸ், ஒரு கடுமையான உழைப்பாளி, அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என பார்வை விலகாத ரயில் போன்ற நேர் பார்வை கொண்ட ஆய்வாளர், அவருக்கு சிரிப்பதற்குக்கூட எங்கே நேரம் இருக்கப் போகிறது என்று கூட நினைத்தேன். சில தொழிலதிபர்கள், வசதி படைத்தவர்களும், கவிஞர் என தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் ஆசையில் எதையோ எழுதி அதை கவிதை என்பார்கள். நல்ல கவிஞர்களாக ஒன்றுக்கு இரண்டு பேரிடம் அணிந்துரை (சாட்சியாக) எழுதச் சொல்லி அவர்களும் ( எல்லோரும் நக்கீரனாகவே இருந்து விடுவதில்லையே) ஆஹா ஓஹோவென புகழ்ந்து. கவிஞர் என்ற மகுடத்தை சுருட்டி விடுவார்கள்.
கவிஞர் என்ற மகுடத்தை யாரும் யாருக்கும் சூட்டத் தேவையில்லை. அவரவர் எழுதும் கவிதைகளே அவர்களுக்கு மகரத்தை சூட்டி விடும். தோழர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அப்படி அவர் எழுதிய கவிதைகளில் ஒன்று அவருக்கு கவிஞர் என்ற மகுடத்தைச் சூட்டி மகிழ்கிறது. பாலைவனத்தை ஈரமற்ற கடல் என்ற உவமையும், ஒவ்வொரு மணலும் ஒரு தீவு என்ற கற்பனையிலும், கவிதை மிளிர்கிறது, மகா கவிஞர் என்ற மகுடத்தைச் சுட்டுகிறது.
பாலைவனம் ஓர் ஈரமற்ற கடல்
இரைந்து கிடக்கிறது ஆனாலும்
ஒவ்வொரு மணலும் ஒவ்வொரு தீவாய்
பிரிந்து கிடக்கிறது….
திருவள்ளுவர்
ஊடுதற் காமத்துக்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
திருவள்ளுவர் கூறியதை தோழர் ஆர்.பாலகிருஷ்ணன் இப்படிக் கவிதையாக்குகிறார்.
“ஊடல் என்பது ஒரு அதிசயமான போர்க்களம்.
தோற்பவர் தலையில் மகுடம் வென்றவர் கொடுக்கும் வெகுமதி”
இதோடு கவிதை முடிந்திருந்தால், சிறப்பாக இருந்திருக்காது.
“வெகுதிக்காகவே மீண்டும் மீண்டும் தோற்கலாம்”
என்று முடியும் போது கவிதை மேலும் மேன்மை அடைகிறது.
எழுதிய கவிஞனின் விரல்களுக்கும் கவிதை முத்தம் தந்து மகிழ்கிறது.
தோழர் தமிழ்செல்வன் வியக்கிறார். ஆர் பாலகிருஷ்ணனை முழுதாக உள்வாங்கி ரசிக்கிறார். ஐஏஎஸ் அதிகாரியாக, தலைமைச் செயலாளராக, தேர்தல் ஆணையராக, சிந்துவெளி ஆய்வாளராக, தலைமைச் செயலாளராக, சமூக சிந்தனை கொண்ட கவிஞராக, எல்லாவற்றுக்கும் மேலாக சங்க இலக்கியங்களை சிந்துவெளி ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தமிழ் மாணவராக வியக்க வைக்கிறார் கற்றாரை கற்றாரே காமருவார் என்பதைப் போல.
இவ்வளவு காலம் இவரை சந்திக்காமல் போனேனே என வருந்துகிறார். சரி இப்போதாவது சந்தித்தோமே என மகிழவும் செய்கிறார். எவ்வளவோ படித்தோம் எழுதினோம் கைக்கு அருகிலேயே இருந்த சங்க இலக்கியங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமோ, என வருந்துகிறார்.
சங்க இலக்கியங்கள் என்றால், என்ன? இதுவரை நமக்கு எப்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது, மன்னர்களையும், அவர்களின் மகுடங்களையும், அவர்கள் வீற்றிருக்கும் சிம்மாசனங்களையும், அவர்கள் போய் சூடுதனித்துக் கொள்ளும் அந்தப் புறங்களையும், பிறகு அவர்கள் மறித்துப் போனதையும், போரில் அவர்கள் ஆற்றிய வீரதீரச் செயல்களையே போற்றிப் புகழ்ந்து பாடும் பாடல்களாகவே, ஆசிரியப் பேராசிரியப் பெரும் புலவர்களெல்லாம் இதுதான் இப்படித்தானென்று, சங்கத் தமிழின் மேட்டிமைகளை மட்டுமே, வரை ஓவிங்களாக நமக்கு வரைந்து காட்டி விட்டார்கள். நம் தோழர் ஆர்.பாலகிருஷ்ணன் தான்,
அடடா சங்கத் தமிழ் இலக்கியம்னா, வானத்து நட்சத்திரங்களை தோரணங்கட்டி தொங்க விடுவேன், என்கிற அதீத கற்பனைக் கவிதை அல்ல. அது வரலாறைப் பேசுகிறது வாய்க்காத் தகராறுகளைப் பேசுகிறது, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, போன மனிதர்களின் வாழ்க்கையைப் பேசுதகிறது, காடு கழனிகளைப் பேசுகிறது, கஞ்சிக்கு இல்லாதவர்களையும் பேசுகிறது, உணவில் இத்தனை வகை என்று மட்டும் பேசவில்லை, பசியில் எத்தனை வகை என்றும் பேசுகிறது, ஆள்பவனை ஆண்டவனை மட்டும் பேசவில்லை, மனிதன் கடவுளாக மாறி நின்றதையும் பேசுகிறது. என்று போனால் ஆர்.பாலகிருஷ்ணன் சங்க இலக்கியங்களை முழுக்க முழுக்க சிந்துவெளி ஆய்வுக்கு பக்கபலமாக சங்க இலக்கியங்களை பயன்படுத்தி இருக்கிறார்.

மனிதன் கடவுளாக மாறி நின்றான் என்றால்!
ஒட்டி, உலர்ந்து, காய்ந்து போன வையிற்றில்
சிறிது குளிர்ந்த கூழை ஊற்றி,
போற உயிரை பிடித்து நிறுத்தினால் அவனும் கடவுள் தானே.
இப்படி கடவுள் என்று புகழும் மனிதர்களைத்தான்
சங்க இலக்கியம் வள்ளல்கள் என்கிறது.
கடையேழு வள்ளல்களாக ஏழு வள்ளல்களைக் குறிப்பிடுகிறது
போகன், பாரி, காரி, ஓரி, அதியமான், ஆயி, நல்லி
இந்த வரிசையில் கடைசியாக உள்ள நல்லி, அதாவது நல்லியக்கோடன்.
இந்த நல்லியக்கோடனிடம் பரிசில்கள் பெற்று தன் வறுமையை போக்கிக் கொண்ட நத்தத்தனார் என்கிற பாணன், வறுமையில் வாடும் இன்னொரு பாணனுக்கு, நல்லிய கோடனைக் கண்டு பரிசில் பெற்று வறுமை போக்கிக் கொள்ளும் வழியைக் காட்டுகிறான். அதோடு, நல்லியக் கோடனைக் கண்டு தான் பரிசில் பெற்றதையும், அவனைக் காண்பதற்கு முன்னால் அவன் வீடு இருந்த வறுமையையும் கவிதையால் பாணன் வரைந்து காட்டுகிறான்.
……………
திறவாக் கண்ணை சாய் செவிக் குருளை
கறவாப் பால் முனை கவர்தல் நோனாது
புனிற்றுநாய் குறைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர் முதுசுவர் காணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கை கிணைமகள் வல் உகிர் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்போர் ஓக்கலொடு ஒருங்கு
உடன்மிசையும் அழிபசி…..
2500 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு பாணணின் இல்லத்தை காலக் கண்ணாடியாக காட்சிப்படுத்துகிறது.
அந்த வீட்டில் அப்போதுதான் குட்டிகளை ஈன்ற வளைந்த காதுகளையுடைய நாய் ஒன்று இருக்கிறது. இன்னும் கண் திறாவா நாயின் குட்டிகள் தாயின் முலையில் பால் குடிக்க முயல்கிறது. பசியில் இருக்கும் அந்த நாயிடம் பாலில்லை, தாய் நாய் வலியில் குறைக்கிறது. அவன் வீட்டு அடுப்பிலொரு குட்டி நாய் படுத்துக் கிடக்கிறது. அந்த வீட்டின் கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருக்கிறது. சுவர்கள் கரையான் அரித்து, புழுதி படிந்து கிடைக்கிறது. அந்தப் புழுதியில் காளான் பூத்துக் கிடக்கிறது. அவருடைய மனைவி ஒட்டிய வயிறோடு, கை வளையல் கலண்டு விடுமளவு மெலிந்த போன விரல்களால், குப்பையில் கிடைத்த கீரைகளை ஆய்ந்து உப்பில்லாமல் வேக வைத்த அந்தக் கீரையை, எவரும் பார்த்து விடக்கூடாதெனும் மான அவமானம் கருதி கதவைச் சாத்திவிட்டு பெரும் சுற்றதோடு அமர்ந்து, உயிரை அழிக்கும் பசியை போக்கினோம். ஆகவே நீ சென்று நல்லிய கோடனை கண்டு வா உன் வறுமையும் தீர்ந்து போகும் என்கிறான். இப்படி பசியை வறுமையை பேசுகின்ற இலக்கியமா தங்க இலக்கியம் வியக்கிறார் தோழர் தமிழ்ச்செல்வன்.
ஒல்குபசி, அழிபசி உயிரை அழிக்கிற பசி. என்று சங்க இலக்கியத்தில் தான் எத்தனை வகைப் பசிகள். தோழர் தமிழ்ச்செல்வன், சங்க இலக்கியத்தில் வரும் பசிகளை வரிசைப்படுத்தியிருக்கிறார்.
உறுபசி, கடும் பசி, கொடும் பசி, கொலைப்பசி, அழிபசி, அடங்காப்பசி, இதெல்லாம் போக, இளம்பசி, சிறுபசி என எத்தனை பசிகள்.
வலது புறம் ஒரு சாய்ந்து படுத்துப் பார்த்தேன், இடது புறமும் திரும்பிப் படுத்து பார்த்தேன், குப்புறப் படுத்தும் பார்த்தேன், மல்லாக்காப் படுத்தும் பார்த்தேன், எப்படிப் படுத்தாலும் பசிக்கிறது. என்று பசியைப் பாடிய நிகழ்கால பாணனல்லவா தோழர் தமிழ்ச்செல்வன். மனிதர்களின் பசியைப் பாடுகிற சங்கத் தமிழை, தோழர் தமிழ்ச்செல்வன் நெருங்கி நேசிக்கிறார். இது சங்கத்தமிழல்ல தங்கத் தமிழென்று போற்றிப் புகழ்கிறார்.
மொகஞ்சதாரோவில் நடனப் பெண்ணின் பதுமை கிடைத்திருக்கிறது அந்த நடனப் பெண் சங்கு வளையல் அறிந்திருக்கிறாள். இப்போதுள்ள தமிழகப் பெண்கள் சங்கு வலையல்களை பார்த்தது கூட இல்லை. கண்ணாடி வளையல்கள், பிளாஸ்டிக்கு வளையல்கள் அணிகின்ற காலமாக இருக்கிறது. ஆனால், சங்க காலத்தில் தமிழகப் பெண்கள் சங்கு வளையல்கள் அணிந்திருக்கிறார்கள் ஆதாரமாக, கீழடி போன்ற தமிழக அகழாய்வு இடங்களிலெல்லாம் சங்கு வளையல்கள் கிடைக்கிறது. ஆதிச்ச நல்லூரில் சங்கு வளையல் செய்கின்ற தொழில் கூடத்தையே கண்டுபிடித்திருக்கிறார்கள். சேகரிக்கப்பட்ட சங்குகள், பாதி அறுத்த நிலையிலான சங்குகளும்…. எனக்கு இப்போது திருவிளையாடல் திரைப்படத்தில் நக்கீரனாக ஏ.பி.நாகராஜனும் சிவனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் காரசாரமாக வாதித்துக் கொள்ளும் வசனங்கள் என் ஞாபகத்திற்கு வருகிறது.
நக்கீரர், கி.மு. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர் என்று அறிகிறோம். திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை என மொத்தம் 37 பாடல்களை பாடியதாக சங்க நூல் தொகுப்பில் உள்ளது. மேலும் அவரின் தகப்பனார் பெயர் கணக்காயனார் என்றும் அவர்களின் குலத்தொழில் சங்க இருப்பது என்றும் தெரிகிறது. அதாவது அந்தக் காலத்தில் சங்க அறுப்பது ஒரு குலமாக இருந்திருக்கிறது, தையல் தைப்பவர்கள், கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் கூட ஒரு குலமாக இருந்ததாக அறிகிறோம்.
சொல்லில் குற்றம் இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், பொருளில் குற்றம் இருக்கக் கூடாதென்று வாதாடுகிறார் நக்கீரர். வந்திருப்பது சிவன் என்று தெரிகிறது ஆனாலும், தன் கருத்தில் உறுதியாக இருக்கிறார். ஆனால் சிவன் உறுதி குலைந்து, தான் கடவுள் என்பதையே மறந்து,
“அங்கம் புழுதிபட அருவாய் நெய் பூசி
பங்கம் படவெரண்டு கால் பரப்பி
சங்கதனை கீர் கீர் என அறுக்கும் நக்கீரனே
என் கவி ஆராய்ந்து சொல்லத் தக்கவன்”
அதாவது, அங்கத்தில் புழுதி பட (சங்கை அறுக்கின்ற போது உடலில் தூசி படலாம்) தரையில் கால் பரப்பி அமர்ந்து அருவாளில் நெய் பூசி ( நெய் பூசிக் கொள்வதால் விரைவாக அறுக்கலாம் தூசி பறப்பதும் குறைவாக இருக்கும்) சங்கதனை கீர் கீரென அறுக்கும் நக்கீரனால் என் கவியை ஆராய்ந்து சொல்லும் அளவு தகுதி இல்லாதவனென்று கூறுகிறார். அதற்கு ஏன் செய்யும் தொழிலை இழிவாக பேச வேண்டும். சங்குகள் இப்படித்தான் கருத்துக்கு எதிர் கருத்தை எடுத்து வைக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களிடம் கருத்து இருக்காது ஆகையால் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்ட தொடங்குவார்கள். இந்த புராணத்தை எழுதியவர் கூட எவ்வளவு சங்கியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
சிவன் இப்படிக் கூறவும். நக்கீரர், தன்னையும் தாங்கள் செய்யும் தொழிலையும், தங்கள் குலத்தையும் அவமானப்படுத்தி விட்டதாகக் கருதி,
“சங்கறுப்பதெங்க குலம்
சங்கரனாருக்கு ஏதுகுலம்
சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அறனே
உன் போல் இரந்துண்டு வாழ்வதில்லை”
ஆமா சங்கறுப்பது எங்கள் குலம் தான். எனக்காவது குலம் என்று ஒன்று இருக்கிறது ஆனால் உனக்கு? உனக்கேது குலம் குலமென்று உன்னை கேட்டால் நீ எந்த குலத்தை சொல்வாய். சங்கருக்கிறோம் வளையல் செய்கிறோம் அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்கிறோம். ஆனால் உன்னைப் போல பிச்சை எடுத்து வாழ வில்லை. கடவுளை பிச்சைக்காரன் என்றே திட்டுகிறார். கடவுளை ஒரு பிச்சைக்காரன் என்று திட்டியதாக உலகில் எந்த இலக்கியமும் இல்லை.
சரி, அந்தக் கூந்தலில் இயற்கையிலேயே மனம் இருந்ததா இல்லையா என்ற பிரச்சினைக்குள் நாம் போக வேண்டியதில்லை. நமக்கு வேண்டியது சங்கு வளையல். சிந்துவெளியில் கிடைத்த நடனப் பெண்ணின் கையில் சங்கு வளையல் இருக்கிறது. தமிழ்நாட்டின் அகழாய்வுகளிலும் சங்கு வளையல்கள் கிடைக்கிறது. மேலும் ஒரு தகவலாக சங்கறுத்து, வளையல் செய்து, வணிகம் செய்பவர்கள் ஒரு குலமாகவோ அல்லது ஒரு குழுவாகவோ இருந்திருக்கிறார்கள். சிந்துவெளி புலனாய்வில் மேலும் ஒரு தலையமாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
எனவே நண்பர்களே தமிழர்களாகிய நாம் தோழர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் ஆய்வுப் பெட்டகமான ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை ‘ நூல் வாங்கி வாசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அந்த நூல் கனமானது கடினமானது என கருதுபவர்கள் தோழர். ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் ஆய்வுக் கட்டுரையான’ ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்’ (Oru Panpattu Arasiyal Payanam) வாங்கி வாசியுங்கள் ஏராளமான புரிதல்களைப் பாருங்கள். இப்போதுள்ள அரசியல் சூழல் தமிழையும் தமிழகத்தினையும் தமிழ் வரலாறுகளையும் திருடி தின்று விட துடிக்கிறது. எச்சரிக்கையாக மட்டுமல்ல அறிதலும் புரிதலும் பெற இது போன்ற நூல்களை அவசியம் வாசிக்க வேண்டும்.
நன்றி
நூலின் தகவல்கள்:
நூல் : ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் (Oru Panpattu Arasiyal Payanam)
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.380
தொடர்புக்கு : 04424332924
“ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்” (Oru Panpattu Arasiyal Payanam) நூல் அறிமுகம் எழுதியவர்:
பொன் விக்ரம்
Ponvickram1967@gmail.com
*****************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

