ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் – நூல் அறிமுகம்
மார்க்சிய வரலாற்று அறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் கூற்றுப்படி “வரலாறு எழுதுதல் என்பது அணுகுண்டு தயாரிப்பதற்குச் சமமானது “ என்பதற்கிணங்க ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐயாவின் ‘பண்பாட்டின் பயணம்’ இந்திய பண்பாட்டு வரலாற்றையே தலைகீழாக மாற்றியுள்ளது. சிந்துவெளிப் பண்பாடு திராவிட பண்பாடு என அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கும் பகுப்பாய்வில் இருந்து ஒரு தொகுப்பாய்வை இந்நூலின் ஆசிரியர் தமிழ்ச்சொல்வன் அவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல தந்திருக்கிறார். மூல நூலின் விரிவையும் ஆழத்தையும் நிச்சயம் இந்த நூல் எட்டிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இத்தொகுப்பாய்வை வாசித்த பின்னர் கண்டிப்பாக வாசிப்பாளருக்கு ஒரு “புலமை வெடிப்பு” அல்லது “கண்திறப்பு” நிச்சயம் உண்டு.
இந் நூலின் ஆசிரியர் குறித்தான அறிமுகமோ அல்லது இந்த நூலாக்கத்திற்கு காரணமான மதிப்பிற்குரிய ஆர்.பாலகிருஷ்ணன் ஐயா அவர்களை குறித்து விவரிப்பு தந்து சொல்லும் அளவுக்கு புகழ்குன்றியோர் அல்ல அவர்கள். தமிழ் பண்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் சங்க இலக்கியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் . சங்க இலக்கியம் என்பது சாமானியர்களின் இலக்கியம் என்று நிரூபித்து அதன் துணை இல்லாமல் இந்திய துணைக்கண்டத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு ஒப்பாகும் என்ற நோக்கில் தம் வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐயா குறித்து பேசுவதாலேயே…
இங்கே வாசிக்கப்படுவது ஆய்வாளரின் எழுத்துக்களா அல்லது கதை சொல்லியாக நின்று விவரிக்கும் தோழர் தமிழ்ச்செல்வன் ஐயா அவர்களின் எழுத்துக்களா என்று ஒரு குழப்பம் ஏற்படுகின்றது . அந்த அளவுக்கு கருத்தை உள்வாங்கிய வாசிப்பானது இந்த புத்தகத்தோடு மட்டும் முற்று பெறாமல் மென்மேலும் மூல நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பாக நான் கருதுகிறேன்.
சங்கச் சுரங்கமான “சங்க இலக்கியம்” ஒரு மழைக்காடு .;அங்கே விழுந்ததெல்லாம் முளைக்கிறது ! முளைத்ததெல்லாம் தழைக்கிறது !! என்கிறார்.
இத்தொகுப்பாய்வில் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் அவர்கள்
இந்துமாக் கடலில் முத்து எடுத்தல்
ஏன் இந்த நூல் ? என்ற தலைப்பில்
1.சங்க இலக்கியத்தின் மீது புதிய வெளிச்சம்
2.திருக்குறள் பேசாப்பொருள்
3.சிந்துவெளி ஆய்வில் ஒரு திருப்புமுனை
4.ஒரு பண்பாட்டின் பயணம்
5.தனி வாழ்விலும் சங்க அறம்
6.ரித்- இந்திர- காந்தாரா வளாகம்
7.சிந்து -சரஸ்வதி- வைகை உரையாடல்
8.கருத்தியல் கூட்டணியின் விருதுகள்
என பல்வேறு தலைப்புகளில் தகவல்களைத் தந்துள்ளார் .
ஒவ்வொரு தலைப்பிலும் மிக மிக அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டிய , தெரிந்து கொள்ள வேண்டிய பகுதிகளை மட்டும் ஆசிரியர் தொகுத்திருப்பது தான் இந்நூலில் வியத்தகு விடயம். அத்தனை எளிதாக கடந்து சென்று வாசித்து விட முடியாது. ஒரு பக்கத்தை வாசித்து ஜீரணித்து உள்வாங்கி அசைபோட்டுத் தான் அடுத்த பக்கத்தை வாசிக்க முடியும்.
உதாரணத்திற்கு சங்க இலக்கியத்தில் ஆய்வாளர் அவர்கள் எடுத்தியம்பும் ஒவ்வொரு வரியும் சமகாலத்தில் பேசுபொருளாக உள்ளது தான் ஆச்சரியப்படுத்துபவையாக இருக்கிறது. பொறுப்புணர்வோடு இருப்பது பெரிதல்ல. “வெறுப்புணர்வு இல்லாத பொறுப்புணர்வு தேவை “, என்று கூற விளைவதை 2300 ஆண்டுகளுக்கு முன்னால் ‘யாரையும் வெறுக்க மாட்டார்’ என்பது ஒரு நல்லவனுடைய இலக்கணமாக, பண்பு நலனாக , அடையாளம் காட்டப்பட்டுள்ளது என்ற சங்க இலக்கியத்து வரிகளைத் தேடிக் கொணர்ந்து சுட்டுகிறார்.
பருத்திப் பெண்டீர் , கல்லா இளைஞர், முதுவோர்க்கு முகிழ்த்த கை என்று முதியோர்களை பேணுவது குறித்தும் சங்க இலக்கியம் பேசுவதையும் அதே நேரத்தில் சமகாலத்தில் அவற்றுக்கு எதிரான நிகழ்கால பிரச்சனைகளையும் ஒப்பிட்டுக் கூறி வியக்க வைக்கிறார். உண்ணும் உணவில் அமிழ்தம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த உணவையே அமிழ்தமாக ஆக்குவது அதிலிடும் உப்புதானே . எனில் உப்புதானே அமிழ்தம். ஆம், அதைத்தான் சொல்கிறது சங்க இலக்கியம் . கடல் விளை அமிழ்தம் என்று உப்பை முன்னிறுத்தி… வறீதையா கான்ஸ்டாண்டின் எழுதியுள்ள கடல்சார் நூல்களை வாசிக்க பரிந்துரை செய்வதோடு 2048-ல் மீன்களே இல்லாத கடலை நாம் சந்திக்க நேரிடும் என்கிற சூழ்நிலையில் அச்சத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.
சங்கம் பேசிய காற்றின் வகைகள் குறித்தும், ஹரப்பா செங்கலின் உருவாக்கமும் , சுடுமண் பொம்மை வகைகளும் , பானைத் தடமும் , குயவர்களின் வாழ்வியல் முன்னிலையும் , தமிழர்களோடு எருமை இயைந்திருந்த பெருமையும் பத்தி பத்தியாக விவரித்து ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் ஒரு வினாவை நம் முன் விட்டு செல்கிறார். அதற்கான விடையை மட்டும் நாம் தெரிந்து கொண்டால் சங்க இலக்கியமும் சிந்துவெளிப் பண்பாடும் இணையும் புள்ளியை நாம் அறிந்து விடுவோம்.
புலப்பெயரிடம் குறித்து நீங்கள் சுருக்கமாக தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த பத்தி உங்களுக்கு உதவுமென்று நினைக்கின்றேன். எடுத்துக்காட்டாக இன்னொரு கோளிற்கு மனிதர்கள் குடியேறினால் தமிழர்களும் குடியேறுவார்கள். அதனால் தமிழும் குடியேறும். அவன் நெஞ்சில் சங்க இலக்கியமும் திருக்குறளும் உறுதியாக இருக்கும் . அவனுடன் குறிஞ்சி முருகனும் கூடச் செல்வான் . கருப்பனும் மதுரை வீரனும் மாரியம்மனும் உடன் செல்வார்கள் . இது உண்மை என்றால் இப்படித்தான் புலப்பெயர்வு நடந்து இன்று வரை அதே பெயர்களை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வழிகோலுகிறார்.
சில வரிகள் சீரிய சிந்தனையை நமக்குள் விதைத்துச் செல்கிறது. உதாரணமாக சங்க இலக்கியத்தில் அறுத்த வரகைக் கடனுக்கு கொடுத்துவிட்டு , மீதி வரகை வீடு தேடி வந்த பாணர்களுக்கு கொடுத்துவிட்டு சுற்றத்தின் உணவுக்கு மீண்டும் வரகை கடன் வாங்கிய சீறூர்த் தலைவனை சங்க இலக்கியத்தில் எடுத்துக்காட்டுகிறார். அவர் சொல்வது போல கடன் வாங்கி கொடை அளித்த ஒரு பேரரசையோ , கடன் வாங்கி விருந்தோம்பிய ஒரு பெரிய வணிகனையோ நாம் இன்று காண முடிவதில்லை . மாறாக ஆயிரக்கணக்கான கோடி வங்கி கடனை வாய்க்கரசியாக்கிவிட்டு வெளிநாடுகளுக்கு பறந்து போனவர்களைத் தான் சமகாலத்தில் நாம் பார்த்து நொந்து கொண்டிருக்கிறோம்.
இங்கு எடுத்து இயம்பும் ஒவ்வொரு பொருண்மைக்கும் சங்க இலக்கியங்களில் பாடல் வரிகளையும் தந்துவிடுகிறார். என் மனதைத் தொட்ட சில வரிகளில் ஒன்று “ ஊர் சுற்றியது ஓதம்” என்ற தலைப்பில் பூமியில் கொஞ்சத்தை பட்டா போடாமல் பாக்கி வைப்போம் . நிலத்தை சாப்பிடாமல் நிலத்தில் விளைவதை மட்டும் சாப்பிட்டு பழகுவோம் என்ற வரிகளும்..
“ ஆரியர் கயிறாடு பாறை” என்ற தலைப்பின் கீழ் “பொன் படு நெடுவரை” உண்மையா என்ற கேள்வியை எழுப்பி அதற்கான பதிலை (குறிப்பாக தங்கலான் படம் போன்று இருக்கிறது இவ்வாசிப்பு) அண்மையில் 40 மில்லியன் மதிப்புள்ள தங்கமும் வெள்ளியும் இமயமலையில் கிடைப்பதால் தான் அந்த எல்லைப் பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வருகின்றன என்கிறார். இதை ஏன் நான் தங்கலான் படத்தோடு இணைத்து காண்கிறேன் என்றால் அதற்கும் ஒரு வரி வருகிறது. இமயமலையில் இருக்கும் *தௌலா* என்ற பழங்குடி மக்கள் ஆற்றில் உட்கார்ந்து அதில் வரும் சிறிய அளவிலான தங்கத்தை எடுத்து தங்களது வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்துகின்றனர் என்பதுதான்.
சங்க இலக்கிய விளையாட்டுகளில் ஆண்களுக்கும், பெண்களுக்குமான விளையாட்டுகள் இருவருக்கும் பொதுவான விளையாட்டுகள் , புனலாடுதல் – கடலாடுதல் , குறிப்பாக சிந்து வெளி பகடை குறித்தான கருத்துக்கள் , ஆதிச்சநல்லூர் கீழடி அகழாய்வுகள் , மிக முக்கியமாக சிந்துவெளி பற்றிய அறிவிப்பு- 1924 இல் வெளியாகிவிட்டாலும் ஜான் மார்ஷல் முழுமையான அறிக்கையை 1931 இல் தந்ததும் . அதில் அவருடைய முக்கியமான பங்கையும் ஒவ்வொரு அகழாய்வுக்கு பின்னரும் அது குறித்தான விஷயங்களை வரலாற்று ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின்னர் தெரிந்து கொள்ளும் சூழ்நிலைகளும் மனதிற்கு நெருடலைத் தந்தன.
முதல் தலைப்புத்தான் இப்படி இருக்கிறது என்று இரண்டாம் தலைப்பான திருக்குறள் பேசாப்பொருள் எடுத்தால் அதில் கொட்டிக் கிடக்கிறது இன்பத்துப்பால். திருவள்ளுவர் ஒரு உலக மனிதர் . திருக்குறளை பொதுமறை என்று அழைப்பதை விட பொதுமுறை என்றால் தான் பொருத்தம் . மறைக்கப்பட்ட ஒரு பொருள் அல்லது மறையாக இருக்கும் எதுவும் எல்லோருக்கும் பொதுவாக இருக்க முடியாது அல்லவா என்று விவரிப்பு தந்து , பேசாப்பொருளை பேசத் துணிந்த கவிஞராக திருவள்ளுவரை ஆர். பாலகிருஷ்ணன் அய்யா வெளிப்படுத்தும் தளங்களாக நாட்டுக்குறள் , பன்மாய்க்கள்வன்,’ இப்படி ஒரு தீயா போன்ற அவர் எழுதிய நூல்களை சுட்டுகிறார்.
அறம் பேசும் ஆசானாய் , பொருள் பேசும் அறிஞனாய் , இன்பம் பேசும் காதலனாய் இந்த வள்ளுவனுக்குள் எத்தனை பன்முகங்கள் என்பதனை உணரச் செய்கிறது இந்த பகுதி. இன்பத்துப்பால் குறல்கள் எல்லாம் இலக்கியப் படிப்புகளில் கூட இடம்பெற முடியாத நிலை அல்லவா..!!
சிந்துவெளி புனல் , கீழடி மணல் , ஈரடி குறல் ஆகிய மும் முனைகளையும் ஒரு முனையில் இணைக்கும் கூர்நோக்குச் சிந்தனையாளர் என்று ஆய்வாளரைச் சொன்னால் மிகையில்லை என்கிறார் கவிஞர் பாடலாசிரியர் பழநிபாரதி அவர்கள். நாம் போகிற போக்கில் பார்த்துவிட்டு புறக்கணித்துப் போகிற பழம் பானைக்குள் பதுங்கி கிடக்கும் நம் கண்களுக்குப் புலப்படாத தொன்மையின் சுவடுகளை இதற்குப் பிறகு உள்ள அத்தனை கட்டுரைகளும் பேசுகிறது என்று சொன்னால் மிகையில்லை.
ரிக் – இந்திர – காந்தாராக் கோட்பாடு குறித்து ஆசிரியர் சுமித்ரா சத்தியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு தினமணியில் வந்த கட்டுரை , ராமாயண பெயர் ஒப்பீடு , எப்படி ஒரு பிராமணிய மரபு இஸ்லாமிய மரபாக மாறியதற்கான எடுத்துக்காட்டாக இந்தோனேஷியா இருக்கிறது என்பதை விவரித்துள்ள விதம் ஆச்சரியத்தை கொடுக்கிறது.
ஏழாவது தலைப்பாக சிந்து சரஸ்வதி வைகை உரையாடல் என்ற தலைப்பில் ஆராய்ச்சியாளர் ஆர் பாலகிருஷ்ணன் அவர்கள் முகநூலில் எழுதியுள்ள நதிகளின் உரையாடல் நகை உணர்வோடு கூடிய சிந்திக்க வேண்டிய விடயங்கள்.
இன்னும் எக்கச்சக்கமாக ….
எடுத்து கூறிக் கொண்டே போகலாம். அத்தனை தகவல்கள் உள்ளன . சொல்லப்போனால் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது நூல்களை குறித்தும் , முகநூல் பதிவுகள் குறித்தும், அவருடைய கவிதைகள், விருதுகள் குறித்தும் , இன்னும் சங்க அறம் , பண்பாட்டின் பயணம் சிந்து சரஸ்வதி வைகை, ரிக் இந்திர காந்தாரா வளாகம் எல்லாவற்றையும் இணைத்து ஒரு தொகுப்பாக தமிழ்ச்செல்வன் ஐயா தந்தது போல வாசித்ததின் மூலம் நான் எனக்குள் ஏற்பட்ட வாசிப்பு அனுபவத்தை தனி நூலாக போடும் அளவுக்கு நிரம்பி வழிகிறது ஆய்வு முன்னெடுப்புகள் அறிமுகம்.
வாசித்து இன்புறுக. தமிழனாய் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது.
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர்: ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
விலை : 380
பக்கங்கள் : 383
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
நூல்ப் பெற : https://thamizhbooks.com/product/oru-panpattu-arasiyal-payanam/
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா விமலா தேவி
பட்டுக்கோட்டை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.