ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்


‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.’
எழுதியவர்: ஜான் பெர்கின்ஸ்.
++++
அடியாள்
பொருளாதார அடியாள்-  பெயர்தான் சிம்பிளாக ’அடியாள்’ என்றிருக்கிறது. ஆனால் இவர்கள் அடியாட்கள் மட்டுமில்லை. ஜகஜ்ஜால கில்லாடிகள். மிதமிஞ்சிக் கிடக்கும் தங்களின் அறிவையும் திறமையையும் கொண்டு பிற நாட்டின் தலைவர்களையும் அவர்களின் வழியாக அந்த நாடுகளையும் ஏகாதிபத்தியத்தின் காலடிகளில் விழச் செய்பவர்கள். பிறநாட்டு தலைவர்களை அடிபணியச் செய்வதற்காக மிரட்டலில் ஆரம்பித்து மாமா வேலை வரை அத்தனைவிதமான சாத்தியங்களையும் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு நாட்டை இன்னொரு நாட்டின் காலில் விழ வைப்பது அத்தனை சுலபமா? கான்செப்ட் ரொம்ப சிம்பிள். வளரும் நாடுகளில் முதலில் வளர்ச்சி வாய்ப்புளுக்கான சர்வே எடுப்பார்கள். சர்வேயின் முடிவில் நாங்கள் பரிந்துரைக்கும் திட்டங்களால் அந்த நாட்டின் பொருளாதாரம் பூதாகரமாக வளரும், வேலையில்லாத்திண்டாட்டம் இருக்கவே இருக்காது என்றெல்லாம் ‘கிளப்பி’விடுவார்கள். பிறகு வளர்ச்சித் திட்டங்களுக்கான பணத்தை உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி என அத்தனை வங்கிகளின் மூலமாகவும் கடனாக ஏற்பாடு செய்வார்கள். ஆனால் வளர்ச்சிப்பணிகளை அமெரிக்க நிறுவனங்களே செய்து முடிக்கும் என ஒப்பந்தமும் போட்டுவிடுவார்கள். அதாவது வங்கிகள் கடனாக கொடுத்த பணத்தை வேலை செய்கிறேன் பேர்வழி என்று ‘நைசாக’ அமெரிக்காவுக்கு திருப்பிவிடுவார்கள். பணிகள் முடிந்த பிறகு கடன் வாங்கிய நாடு வட்டியோடு திரும்பத் தர வேண்டியிருக்கும்.  இந்த வட்டி+கடனுக்காக ஐ.நாவில் அமெரிக்காவுக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளையும் விதித்துவிடுவார்கள். அமெரிக்கா ஒரு இராணுவ முகாமை அந்த நாட்டில் அமைத்துக் கொள்ளலாம். இத்யாதி இத்யாதி. இப்பொழுது அந்த நாடு அமெரிக்காவிடம் முழு சரண்டர்.
அமெரிக்கா உருவாக்கிய பொருளாதார அடியாளில் ஜான் பெர்க்கின்ஸ் முக்கியமானவர். தனது தொழில் பொருளாதார அடியாள் என்று மிரட்டல்களையும் மீறி துணிச்சலாக அறிவித்துக் கொண்டவர். இவர் தனது வாழ்வை புத்தகமாக எழுதியிருக்கிறார். தன் பிறப்பிலில் தொடங்கி, கல்வி,  குடும்பம் தன்னை இந்த வேலைக்கு எப்படித் தேர்ந்தெடுத்தார்கள், அதற்கு பிறகாக அளிக்கப்பட்ட பயிற்சிகள், ஈக்வெடார் நாட்டிலிருந்து சவூதி அரேபியா வரைக்கும் உலகநாடுகளில் தன்னால் செய்து முடிக்கப்பட்ட வேலைகள் என அத்தனையும் அதிபயங்கர சுவாரசியமான தகவல்களுடன் எழுதப்பட்ட புத்தகம் Confessions of an Economic Hit man என்பது. தமிழில் “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. விடியல் பதிப்பகத்தின் மூலமாக இரா.முருகவேள் மொழிபெயர்த்த இந்தப்புத்தகம் 2006 ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்கிறது. எனக்கு இப்பொழுதுதான் வாய்த்தது. (இதன் மற்றோர் பதிப்பு 2013 இல் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டது)
இந்த புத்தகம் ஜான்பெர்க்கின்ஸ் என்ற தனிமனிதனின் கதை மட்டும் இல்லை. தனது பணியின் நிமித்தமாக தான் பயணிக்கும் நாடுகளின் அமைப்பு, காலநிலை, பொருளாதார நிலை, அது சீரழிக்கப்பட்ட விதம், அந்த மக்களின் பண்பாடு,இரவு வாழ்க்கை என ஒவ்வொரு அம்சத்தையும் சுவாரசியம் குறையாமல் சொல்லிச் செல்கிறார். 1960களுக்கு பிறகாக  -குறிப்பாகச் சொன்னால் வியட்நாம் போருக்கு பிறகாக கம்யூனிசத்தை எந்த நாடும் பின்பற்றிவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் பிரயத்தனங்களையும் உலக வரலாற்றோடு சேர்த்து பேசுகிறார்.
ஈரானில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், தனக்கு ஒத்துவராத நாடுகளின் தலைவர்களுக்கு குடைச்சல் தருவதற்காக உருவாக்கப்படும் தெருச்சண்டைகள்,கலவரங்கள், இந்தோனஷியாவில் மின் திட்டம் ஆரம்பிப்பதாகச் சொல்லி தனது கைப்பிடிக்குள் கொண்டுவந்த முறை என  நூற்றுக்கணக்கான சுவாரசியத் தகவல்களால் புத்தகம் நிரம்பியிருக்கிறது.
சவூதி அரேபியாவில் குப்பை அள்ளுவதற்கு எந்த சுயமரியாதையுள்ள மனிதனும் தயாரில்லை என்பதால் ஆடுகள்தான் குப்பைகளை கிளறிக் கொண்டிருக்கமாம். ஆடுகளுக்கு பதிலாக நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் குப்பை அள்ளும் என்ற ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா சவூதிக்குள் கால் வைக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு அடிகோலிட்டவர் ஜான்பெர்க்கின்ஸ். இதன் பிறகாக சவூதியின் ஒவ்வொரு விஷயத்திலும் அமெரிக்கா மூக்கை நுழைத்தது. ஒரு கட்டத்திற்கு பிறகு அமெரிக்காவுடன் சவூதி இரண்டறக் கலந்துவிட்டது. இப்பொழுது அமெரிக்காவின் ’ஜிங்க்சக்’ நாடுகளின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் முதல் மூன்று இடத்திற்குள் சவூதி அரேபியா இருக்கும்.
அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் சிறு நிலப்பகுதியில் ஒரு கால்வாயை அமைக்க அமெரிக்கா விரும்பியது.இந்தக் கால்வாயை அமைத்துவிட்டால் அமெரிக்காவின் கப்பல் போக்குவரத்து சுலபமாகிவிடும். ஆனால் தனது நிலத்தில் கால்வாயை அனுமதிக்க முடியாது என கொலம்பியா முரண்டு பிடித்தது. சும்மா இருப்பாரா பெரியண்ணன்? கொலம்பியாவிடமிருந்து கொஞ்சம் நிலப்பரப்பை பிரித்து பனாமா என்ற சுதந்திர நாட்டை அறிவித்துவிட்டது. பனாமாவில் தனக்கு தலையாட்டும் பொம்மை அரசையும் அமைத்துவிட்டது. இதன் பிறகாக வெற்றிகரமாக கால்வாய் அமைக்கப்பட்டது என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு இருபத்திநான்காயிரம் மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் செப்டெம்பர்  11 தாக்குதலில் இறந்த மூவாயிரம் பேரை முன்னிறுத்தி அமெரிக்கா போர்களை நிகழ்த்தி வருவதன் பின்னணியை புரிந்து கொள்ளவும், ஒரு பக்கம் உணவுக்காக நாடுகள் ஏங்கிக் கொண்டிருக்க தங்களது காருக்கு பெட்ரோல் போடுவது குறித்தான கவலைப்படும் நாடுகளின் கொடூர முகத்தை அறிந்து கொள்ளவும் இந்தப் புத்தகம் உதவக் கூடும்.
இந்தியா ஏன் அமெரிக்காவுக்கு அடிபணிகிறது என்பதையும், வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாரம் இந்தியாவில் சூறையாடப்படுவதை பற்றியும், எதனால் சொந்த மக்களை விடுத்து இன்னொரு நாட்டின் ஆர்வத்திற்கு அதிகார வர்க்கம்  தலையசைக்க வேண்டும் என  நமக்குள் எழும் அத்தனை கேள்விகளுக்கான பதில்களையும் இந்தப் புத்தகம் தந்துவிடும்.
 
[button link=”https://thamizhbooks.com/oru-poruladhara-adiyalin-oppudhal-vaakumoolam-711.html”]புத்தகத்தை இங்கு வாங்கலாம்[/button]
 
 
 
 
நன்றி: வா. மணிகண்டன் (Nisaptham Blogspot: http://www.nisaptham.com/2012/08/blog-post.html)

Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *