ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்” – பா.பேகன்
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – "ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்" - பா.பேகன்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்” – பா.பேகன்

 

 

 

“பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது” – பழமொழி.

இதன் பொருள் நாம் அனைவரும் அறிந்ததே! அதாவது, நம்முடைய ஆதாயத்திற்காக எதையும் செய்வது.

இதைப் போன்று நம்முடைய ஆசையைத் தூண்டி அல்லது நம்மைத் திசை திருப்பி நம்முடைய ஒவ்வொரு நொடியையும் சுரண்டி, உலகில் வெகு சிலர் மட்டும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்… தொடர்ந்து தங்களுடைய லாபத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படிச் சொல்வதன் மூலம் நான் ஏதோ கம்யூனிசம் பற்றியோ அல்லது ஜோதிடம் பற்றியோ கருத்து கூற விரும்புகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

ஜனநாயகம் என்ற பெயரில் உண்மையான ஜனநாயகத்தை மறைத்து நாம் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம்??? உலகமயமாக்கல் என்ற பெயரில் நாம் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம்??? இன்னும் சுருங்கக் கூற வேண்டுமானால் நாகரீகம் என்ற பெயரில் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம்??? என்பதை நாம் ஆதாரத்துடன் அறிந்து கொள்ளும் பொழுது நம்முடைய செயல்பாடு எவ்வாறு இருக்கும்?

அதையும் அதைச் செய்த ஒரு நபரே… எந்தெந்த நாடுகளில் எப்படியான செயல் திட்டங்கள் மூலம் அந்நாட்டின் இறையாண்மை சூறையாடப்பட்டது… இயற்கை வளங்கள் சூரையாடப்பட்டன… எப்படி அந்நாடு அடிமையாக்கப்பட்டது… அதன் அடுத்த தலைமுறை எவ்வாறு பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.. போன்ற தகவல்களை ஆதாரத்துடன் கூறினால் எப்படி இருக்கும்???

ஆம் அப்படி ஒரு நபர் தான் வாக்குமூலமாக தன்னுடைய பதிவைப் புத்தக வடிவில் கூறியிருக்கிறார்.

“ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்”.

இப் புத்தகத்தைப் பற்றிப் பல ஆண்டுகள் முன்பே கேள்விப்பட்டிருந்த போதிலும் சமீபத்தில் தான் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. படிக்க ஆரம்பிக்கும் பொழுது, ஒரு பொருளைச் சந்தைப்படுத்துதல் பற்றியோ அல்லது ஏகாதிபத்தியத்தைப் பற்றியோ வணிக மொழியில் வறட்சியாக இருக்கும் என்ற முன் முடிவில் படிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, வணிக மொழியில் ஒரு சதவீதம் கூட பேசப்படவில்லை. மாறாக முழுக்க முழுக்க தனது சொந்த அனுபவத்தை ஆதாரபூர்வமாக எந்தச் சமரசம் இன்றி பதிவு செய்துள்ளார் எழுத்தாளர். அதிலும் ஏகாதிபத்தியம் என்ற வார்த்தைக்குப் பின்பு மறைந்து இருப்பது நிறுவனமயம் தான் என்பதை படிக்கும் பொழுது பயம் கலந்த ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது.

ஏகாதிபத்தியத்தியத்தைப் பற்றிப் பலவாறு கேள்விப்பட்டிருப்போம். என்னுடைய அனுபவத்தில் ஏகாதிபத்தியத்தைப் பற்றி வறட்சியான மொழியில் படித்திருக்கிறேன். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான பொருளைக் கொண்டு பேசுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் இப் புத்தகத்தின் மூலம் ஏகாதிபத்தியம் எவ்வாறு உருவாக்கப்பட்டது. அதன் பின்பு உள்ள நிறுவனமயம் என்றால் என்ன??? அதன் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன… என்பவற்றை மிகத் தெளிவாக இன்னும் சொல்லப் போனால் நிறுவனமயத்தால் பணியமர்த்தப்பட்ட ஒருவர் தன் பணி மூலம் அடைந்த ஆதாயத்தையும் அதனால் இவ்வுலகம் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் சங்கடங்களையும் அனுபவமாக பதிந்திருப்பது மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

இன்று நான் எதை பார்க்க வேண்டும்… எந்த மாதிரியான உடை அணிய வேண்டும்… என்னுடைய தட்டில் எந்த மாதிரியான உணவு இருக்க வேண்டும்… இன்னும் சொல்லப்போனால் என்ன மாதிரியான வார்த்தையை நான் பயன்படுத்த வேண்டும் என்பது முதற்கொண்டு எங்கோ ஒருவர் முடிவு செய்கிறார் என்பதை அறியும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.

இதற்குக் காரணம் நம்முடைய தேவையற்ற நுகர்வும் நாகரிகம் என்ற பெயரில் அதிகமாக நாம் கொண்டிருக்கும் கற்பனையே என்று அறியும் பொழுது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

தங்களது திட்டத்தை செயல்படுத்தத் தேவையான தரவுகளை தாங்களே தயார்ப் படுத்தி, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் பாலாறும் தேனாறும் ஓடும் என வெற்று வார்த்தைகளால் அலங்காரமாக பேசி தன்னுடைய வலைக்குள் நாடுகளை சிக்க வைத்து அதன் பின்பு அந்த நாடுகளைத் தங்களுடைய அடிமைகளாக மாற்றிக் கபளீகரம் செய்கின்றனர்.

இதை அறியாமல், அவர்கள் கொடுக்கும் அந்தப் போலியான தகவல்களை வைத்துக்கொண்டு நாம் நாகரிகத்தின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம் என்ற அறியாமையை வளர்த்துக்கொண்டு காலகாலமாக அந்த நாடுகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களைத் தன் வயப்படுத்துவதற்கோ அல்லது அழிப்பதற்கோ எந்த அளவிற்கும் செல்லத் துணிவார்கள் என்பதை அழிக்கப்பட்ட/ அவர்கள் வயப்பட்ட தலைவர்களின் வரலாற்றின் மூலம் அழகாக எழுத்தாளர் எடுத்துரைக்கிறார். அது அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த நிறுவனவயத்தின் மூலமாக தற்சார்பை அழித்து, அனைவரும் அவர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் என்பதே அவர்களது அடிப்படையான நோக்கம். வரலாற்றை நம்மளவில் பின்னோக்கிப் பார்த்தால் அது உண்மை என்பது புலப்படும்.

நம்முடைய இயற்கை வளங்களை நாமே பராமரித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியது போல் இயற்கையில் இருந்து யார் ஒருவர் குறைந்த அளவில் நுகர்கின்றாரோ அவரே வாழத் தகுதியானவர் என்ற அடிப்படையைப் புரிந்து கொண்டு நுகர்வை தேவைக்கானதாக மாற்றி நம்முடைய தற்சார்பு வாழ்வை மீட்டெடுக்க வேண்டும். அது ஒன்று மட்டுமே, நம்மை மீட்டெடுப்பது மட்டுமல்ல.. நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் ஒரு நல்ல வாழ்வியல் சூழலை கடத்திச் கொடுக்க உதவும் என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.

நிறைவாக, தன்னுடைய தவறை திருத்தி கொள்ள, எழுத்தாளர் என்கின்ற முன்னாள் பொருளாதார அடியாள், விரும்புகிறார்.. நாம் நம்மை எவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் அழகாக விளக்கி உள்ளார்.

புத்தகத்தின் ஒட்டுமொத்தப் புரிதலாக, நிறுவன மயத்தால் எவ்வாறான பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்… எதிர்காலத்தில் எம் மாதிரியான பாதிப்பு ஏற்பட போகிறது என்பதையும் அனுமானிக்க முடிகிறது.

ஏற்கனவே மிகுந்த காலம் கடந்து விட்டது. உடனடியாக நாம் நம்முடைய செயல்பாட்டை தொடங்காவிட்டால் எதிர் கால பாதிப்பிலிருந்து தப்புவது கடினம். நாம் மட்டுமல்ல நம்முடைய சந்ததிகளுக்கும் அந்தப் பாதிப்பை நாம் நமது கையால் வழங்கும் சூழல் நேரிடும்.

கடந்த கால வரலாற்றைப் புரிந்துகொண்டு, அதை நிகழ்காலத்தில் சரி செய்து விட்டால், எதிர்காலம் இனிமையாகிவிடும்.

சரி செய்யும் செயல்பாட்டை தொடங்க வேண்டிய நேரமிது…

புத்தகம்: ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்.
பதிப்பகம்: விடியல் பதிப்பகம்
எழுத்தாளர் ஆங்கிலத்தில்: ஜான் பெர்க்கின்ஸ்.
எழுத்தாளர் தமிழில்: போப்பு
பக்கங்கள்: 288
விலை: ₹225

பா.பேகன்
செங்கல்பட்டு

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *