புத்தக அறிமுகம்: முகமூடிகளே அமெரிக்காவின் முகம் – வே. அருண் குமார், இந்திய மாணவர் சங்கம்

”பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” எனும் இந்நூல் அமெரிக்காவின் திரைமறைவு வேலைகள் பலவற்றை  நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சமீபத்தில்  ஈரானின் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றதன் பின்னணியையும், முன்பு ஈராக்கின் ஜனாதிபதி சதாம் உசேனை கொன்றதன் பின்னணியையும் உலகளவில் நடந்துவரும்  போர்களும், தற்போது அமெரிக்க ஜனாதிபதி கரோனா வைரஸை சைனா வைரஸ் என்று கூறுவதன் நோக்கத்தையும், அதன் அரசியல் பின்புலத்தை புரிந்துகொள்ளவும்  உலக அரசியலில் அமெரிக்காவின் பங்கையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் இந்நூல் எடுத்துரைக்கின்றது.
ஜான் பெர்கின்ஸ் இந்நூலில் அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளையும்  அதில் அவரது பங்கையும்  அவர் செய்த செயல்களையும் எழுதியுள்ளார். இந்நூல் வெளிவந்த காலம் முதல் தற்போது வரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முதலாளித்துவ நாடு அதன் உச்சத்தை தொடும்போது அது ஏகாதிபத்திய நாடாக மாறும் என்பதற்கான உதாரணத்தை இந்த நூல் எடுத்துரைக்கிறது.
*வளர்ச்சியெனும் மாயவலை*
ஜான் பெர்கின்ஸ் தான் படித்த பொருளாதார துறைக்கு ஏற்ற ஒரு வேலை கிடைத்ததாக நம்பி ஒரு பொருளாதார நிறுவனத்தில்  துணைநிலை ஆலோசகராக முதலில் பணியாற்றுகிறார். இவரின் பணி என்னவெனில் ஒரு வளர்ச்சி அடையாத மூன்றாம் உலக நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களை வகுத்தளிப்பது. அந்நாட்டிற்கு  ஒரு பொருளாதார குழுவை அனுப்பி அந்த நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்தவும் அதாவது சாலைகள், மின் நிலையங்கள் போன்றவற்றை அமைப்பதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குவதேயாகும்.
வெளித்தோற்றத்திற்கு இப்படியான பணியாக இருந்தாலும் அதன் உணமையான செயல்திட்டம் என்பது வேறாகும். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி ஒப்பந்தத்தின் காரணமாக  எந்த ஒரு நாட்டையும் அனாவசியமாக ஆயுதமேந்தி தாக்க முடியாத நிலை உள்ளது. எனவே தன்னுடைய நாட்டின் முதலாளிகள் சொத்துகளை குவிப்பதற்காகவும் அவர்களின் சந்தையை விரிவுபடுத்தி மூலதனத்தை அதிகமாக்கி மேலும் லாபத்தை உருவாக்கும் வழிகளில்  ஒன்று தான் வளர்ந்த நாடுகளுக்கான அமரிக்காவின் இந்த பொருளாதார ஆய்வுக்குழுவும் அதன் அறிக்கைகளும் என்பதை பின்னர் பெர்க்கின்ஸ் புரிந்துகொள்கிறார்.
இப்பொருளாதார ஆய்வுக்குழுவால்  தயார்  செய்யப்பட்ட அறிக்கை முதலில் அந்த நாட்டிற்கு கொடுக்கப்படும். அதில் உள்ள விஷயங்களை காட்டி அக்கவர்ச்சியால் ஈர்க்கப்படும் மூன்றாம் உலக நாடுகளுக்கு  அமெரிக்காவும் உலக வங்கியும் கடன்களை வழங்கி அவ்வறிக்கையில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தும்  பெயரில் முதலில் கடனாளியாக்கும். அறிக்கையின் அடிப்படையில் செயல்பட்டால் வளர்ச்சி பெறும் என்ற பொய் பிம்பத்தை உருவாக்கி இந்தத் திட்டத்தையும் நிறைவேற்றும், பின்னர் அந்த நாட்டின் எந்த ஒரு வளர்ச்சிக்கும் இது பயன்படாத நிலையில் கடன் செலுத்த முடியாத சூழல் ஏற்படும். பிறகு அந்த நாட்டின் மீது அமெரிக்கா தன் ஆதிக்கத்தை செலுத்தும். இப்படியான  ஆதிக்கங்களையும் மக்களின் போராட்ட எழுச்சி வீழ்த்தியது. அந்த எழுச்சியின் ஒரு சாட்சியம் தான் கியூபா புரட்சி. லத்தீன்  அமெரிக்க நாடுகள் முழுவதிலும் அது வெளிப்பட்டது.
*விசுவாசிகளே உயிர்வாழ அனுமத்திக்கப்பட்டனர்*
அதே காலகட்டத்தில் அரேபிய நாடுகளில் ஒரு கூட்டமைப்பை அமெரிக்கா  உருவாக்கியது. அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக்கொண்டு வந்தது. அமெரிக்கா  சொன்னதை நிரைவேற்றியவாறு இந்த நிலை தொடர்ந்தது.   அந்தக் கூட்டமைப்பின் ஒரு முக்கிய உறுப்பு நாடான ஈராக்கின் ஜனாதிபதி சதாம் அதை எதிர்த்தபோது அவர் கொல்லப்பட்டதன்  பின்னணியையும் இதைக்கொண்டு பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். அதன் பின்னர் தன்னுடைய வழிகளை எப்படி மாற்றிக்கொண்டு சவுதி அரேபியா அமெரிக்காவின் கைப்பாவையாக  மாறியது என்பதையும் இந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறது. அமெரிக்கா ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப தன்னுடைய வழிமுறைகளை தொடர்ந்து மாற்றிக் கொண்டே வருகிறது என்பதையும் பெர்க்கின்ஸ் வெளிப்படுத்துகிறார்.
இந்த புத்தகத்தின் கடைசி பாகங்களில் அவர் குறிப்பிட்ட ஒரு கருத்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான கருத்தாகும். அதாவது உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரத்தை தாக்கியபோது ஒசாமா பின்லேடனின் குடும்பத்தாரை அமெரிக்க விமானங்களின் மூலம் அவர்களது  சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பதுதான்.
இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா தன்னுடைய நாட்டில் உற்பத்தி செய்த ஆயுதங்களை உலகம் முழுவதும் வியாபாரம் செய்தது. அதன்பிறகும் தன்னுடைய ஆதிக்கத்தை அது தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. உலகப் போர்களுக்குப் பிறகு பெட்ரோலின் தேவை உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதால் அதனை வைத்து ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது . அதன் ஒரு பகுதியாக தான் ஈரான்-ஈராக் பிரச்சனைகளும். தற்போது சீனாவை தாக்கும் நோக்குடனே கொரோனா தொற்றை சீனா வைரஸ் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகிறது.
உலக அரசியலில்  அமெரிக்காவின் மோசமான மறைமுக  செயல்பாடுகளை தெரிந்துகொள்ள அனைவரும் அவசியம்  படிக்க வேண்டிய புத்தகம் இது.
ஆசிரியர்- ஜான் பெர்கின்ஸ்
தமிழில்- இரா. முருகவேள்
வெளியிடு- பாரதி புத்தகாலயம்
விலை- 250