1966 இல் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவல். பலரும் படித்து சிலாகித்து பரவச நிலையை அடைந்த நாவல். சுந்தர ராமசாமி அவர்களின் முதல் நாவல். பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்.
” இந்திய இலக்கியத்தில் ஒரு மைல்கல்” என்று கே.என்.பணிக்கர் அவர்களால் புகழுந்துரைக்கப்பட்ட நவீன செவ்வியல் புனைவு. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே‌‌.எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசு பெறத் தகுதியானதெனக் குறிப்பிடுகிறார்.
 ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு மகத்தான சாதனை படைத்திட்ட நூல்.இத்தகு சிறப்பு வாய்ந்த நாவலை அடியேன் படிப்பது இதுவே முதன்முறை. அதுவும் நண்பர் அழகர்சாமி அவர்கள் படிக்க கொடுத்துதவியதால் விளைந்ததே.
சாதாரண பாமர ரசிகனின் பார்வையில் ” ஒரு புளியமரத்தின் கதை” எப்படி இருந்தது என்பதாகவே இந்த பதிவு அமையுமென விழைகிறேன்.
அடிப்படையில் ஒரு புளியமரத்தின் கதையாக இது தோன்றினாலும் இந்நூல் காட்சிபடுத்தும் பிம்பங்கள் முற்றிலும் பலதரப்பட்ட உணர்வுகளின் தொகுப்பாகவே காட்சியளிக்கும் வண்ணம் அமைந்துள்ளன.
தாமோதர ஆசானின் கதை சொல்லுதலில் தொடங்கும் கதை தங்கு தடையின்றி நம்மை பேய், பித்து பிடித்து ஆட்டும் மோன மனநிலையிலேயே நாவலில் பயணிக்க வைக்கிறது.
தேர்ந்த எழுத்துநடை, விரிவான சொல்லாக்கங்கள், கதை சொல்லும் யுக்தி, காட்சிப்படுத்தும் எளிய விவரணைகள் என இந்நூல் நம்மை புளியமரத்திலேயே கட்டிப் போட்டு மிரட்டுகிறது எனலாம்.
செல்லத்தாயி கதை ஒருகட்டத்தில் கட்டுக்கதையாகத் தோன்றினாலும் ஆசான் எடுத்துக்காட்டும் தெளிவுகள் நம்ப வைத்து நம்மை ஆட்டிப்படைப்பதாகவே உள்ளது.
மரத்தைக் காப்பாற்ற ஆசான்  கிளையை மட்டும் வெட்டக் கூறும் வருணனை பரவசப்படுத்தக்கூடியதே..‌ ” சமஞ்சு கல்யாணத்துக்கு ரெடியாட்டு நிக்கிற குட்டிக்கு மூக்கே ஒட்ட நறுக்கறாப்பலே, குறைப்படுத்திப் போடணும் இதே” என்று ஆசான் கூறுவது கேட்டு ‘மகுடி  கீதம் கேட்டு மயக்குவது’ போல் மயங்குவது கொப்ளான் மட்டுமன்று நாமும் தான்.
புளிக்குளம் மறைந்து புளியமரம் ரஸ்தா உருவான மகாராஜா கதை நகைச்சுவை ததும்பும் விதத்தில் அமைந்த நறுமணச் சோலையே ஆகும்.
நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள் ...
காற்றாடி மரத்தோப்பு அழிந்து நகராட்சி பூங்கா உருவாகும் விதத்தை எழுத்தாளர் விவரிக்கும் பாங்கு கண்ணீரை வரவழைத்து போலி அழகுணர்ச்சியால் சாந்தப்படுத்த உதவும் சமசர நெறியுடையதே…
புளியமரத்தின் பழங்கள் யாவும் களவு (?) போகும் அத்தியாயம் புளியம்பழம் போல் புளித்து ருசிக்கத்தக்கதாகவே இனிக்கிறது.
புளியமரம் ஏலம் விடுதல் பற்றிய விளக்கங்கள்  நேரில் ஏலம் விடுதலைப் பார்ப்பது போலவே காட்சிப்படுத்தி கலவரப்படுத்தியுள்ளார் எழுத்தாளர்.
முனிசிபல் சிப்பந்தி வள்ளிநாயகம் பிள்ளையின் கதாபாத்திரம் காந்திரமான படைப்பாக அமைந்து புளியம்பழ களவை அம்பலப்படுத்த துணைபுரியும் வண்ணம் யதார்த்தமான நடையில் அமைந்துள்ளது.
ஏலம் கேட்க வரும் மூத்தபிள்ளையின் குணத்தோற்றம் சிந்திக்கத்தக்க வண்ணம் அமைந்த நேர்த்தியான படைப்பாகவே மிளிர்கிறது.
முனிசிபாலிட்டி சேர்மன் எம்.சி.ஜோசப்பின் பாத்திரப்படைப்பு கனக்கச்சிதம். இன்றைய அரசியல் சாணக்கியத்தனத்தின் துவக்கப்புள்ளியாக கருதும் மனநிலையில் பவனி வருகிறார்.
அப்துல் காதரின் வளர்ச்சி நிலை குறித்த கதைப் பகுதி ஏழ்மை நிலையிலிருந்து முன்னேறத் துடிக்கும் இளைஞனின் மனநிலையைத் தத்ரூபமாக பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
தாமோதரனின் கதாபாத்திரம் சற்று வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. சாதாரணமானவன் புரட்சியாளனாக மாறும் விந்தை பரவசப்படுத்தக் கூடியதே. புகழின் போதையில் கட்டுண்ட மோன மனநிலையை நேரில் காணும்விதமாகவே அமைந்திருப்பது சாலச்சிறந்தது.
புளியமரத்தைக் காப்பாற்ற அவனும் அவனது ஆட்களும் மேற்கொள்ளும் முயற்சி யூகிக்கக்கூடியதாக இருப்பினும் அதனை எழுத்தாளர் எடுத்தியம்பியவிதம் தத்ரூபமானதாகும்.
கோபால் அய்யர், வள்ளிநாயகம் பிள்ளை, கூலி ஐயப்பன், கம்பராமாயணம் அனந்தம் பிள்ளை மற்றும் கடலைத் தாத்தா என்று வரும் ஒவ்வொரு கதைமாந்தரும் கவனிக்கத்தக்கவர்களே.
ரிப்போர்ட்டராக வந்து சகுனி வேலை பார்க்கும் “இசக்கி” பாத்திரப்படைப்பு இன்றைய அரசியல் மற்றும் மீடியாக்களின் பிரதிபிம்பமாகவே உள்ளது எனில் மிகையன்று.
தேர்தல் நேரத்தில் நடைபெறும் அரசியல் அடாவடித்தனத்தைப் பகிரங்கப்படுத்தும் காட்சிகள் இன்றும் நிழலாடுவது போன்ற மாயத்தோற்றத்தை அன்றே எடுத்துக்காட்டிய பளிங்குக் கண்ணாடியாகவே இந்நாவல் உள்ளது.
ஒரு புளியமரத்தின் கதை | சுந்தர ...
நாவலின் முடிவை ஆரம்பத்திலேயே கூறிவிட்டாலும் அதனை அவர் காட்சிபடுத்திய விதமோ அலாதி அற்புதமானதே..‌.
ஆங்காங்கே பளிச்சிடும் வரிகள் ஒவ்வொன்றும் தித்திப்பானதே… “நாவலில்  ஓரிடத்தில் ‘புரட்சித் தீ, புரட்சித் தீ’ என்று அந்த இரண்டு பத்திகளில் எத்தனை தடவை தான் வரும்! ஒரு தீயணைக்கும் என்ஜினைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தான் அதுபோன்ற தலையங்கம் ஒன்றை எழுதியிருக்க முடியுமென்று தோன்றுகிறது”  என்று ஒரு இடத்தில் வருவது போல… அவர் எழுதிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம்கண்முன் விரியும் காட்சிகளாக பரிவர்த்தனை செய்கின்றன எனலாம்.
படித்து ரசித்த சில வாக்கியங்கள்:
” எதையேனும் ஒன்றை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விடுவது என்பது எப்போதுமே புத்திசாலித்தனமான காரியம்தானே?
பைத்தியம் என்பதும் ஒருவன் தன் அறிவை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதன் விளைவுதானே?”
“சொந்த விஷயம் பேசுவது என்றால் வெல்லம் தானே எல்லோருக்கும்”
“வாழ்வில் இன்பகரமான நாட்கள் மிகக் குறைந்த நாட்கள்தானே! வேகமாக மறைந்துவிடும் நாட்களும் அவைதானே”
கன்னியாகுமரி வட்டார வழக்கில் அமைந்த எழுத்துநடையே சிறிது அயர்ச்சியூட்டுவதாக இருந்தது எனலாம். எனக்கு பரிச்சயம் இல்லை என்பதால் இருக்கலாம். இருப்பினும் சில வார்த்தைகளுக்கு நூலின் பின்புறம் அர்த்தங்கள் (பொருள்) வழங்கியிருப்பது பாராட்டுதலுக்குரியதே…
இந்நாவலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் ஊரில் வாழ்ந்து அழிக்கப்பட்ட ஏதேனும் ஒரு மரத்தின் கதை மனதில் நிழலாடும் என்பதே நிதர்சனம்.
எனக்குள்ளும் அவ்வாறு “மதுரை ஆலமரம் பஸ் ஸ்டாப்பில் இருந்த ஆலமரமே” கண்முன் காட்சியாக ஓடிக் கொண்டிருந்தது.
வாழ்வில் தவறவிட இயலாத அற்புதமான நாவல்.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.
“ஒரு புளியமரத்தின் கதை”
சுந்தர ராமசாமி.
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்:220
₹.200
பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *