ஒரு புரட்சியாளனின் பயணங்கள் ( Oru Puratchiyalanin Payanangal) – நூல் அறிமுகம்
சௌகத் உஸ்மானி – மறக்கக்கூடாத பெயர். பயணங்கள் சுகமானது. ஆனால் எல்லா பயணங்களும் சுகமானது அல்ல. இதில் சாகசமான பயணங்கள் உண்டு சவாலான பயணங்கள் உண்டு ஆனால் சௌகத் உஸ்மானி யின் பயணம் என்பது உயிரை பணயம் வைத்து தேசத்தை காத்த மகத்தான விடுதலைப் பயணம்.
இந்தப் பயணங்கள் வெவ்வேறான மூன்று காலகட்டங்களில் வெவ்வேறான சூழலில் மேற்கொள்ளப்பட்டது. சோவியத் புரட்சியினால் உந்தப்பட்டு பலர் மாஸ்கோவினை சென்றடைந்தனர் அதில் சௌகத் உஸ்மானியும் ஒருவர்.
அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் அவருடைய சிந்தனையும் செயல்பாடும் அபரிமிதமான அளவில் வளம் பெற்றன. இதன் காரணமாக 1923 ஆம் ஆண்டு கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை கைதியாக ஒவ்வொரு நாளும் 15 மைல்கள் காலில் பூட்டிய விலங்குகள் இழுபட நடத்திய கூட்டிச் சென்ற போதும் அந்த துன்பங்கள் பெரிதாக தோன்றவில்லை என செளகத் உஸ்மானி முன்னுரையில் எழுதியதை வாசிக்கும் போது கண்கள் துளிர்க்கிறது.
புரட்சிகரமான வாழ்க்கை…
இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிக்கானீர் நகரில் ஒரு கலைக் குடும்பத்தில் மௌலா பக்ஸ் உஸ்தா (Maulla Bux Usta) என்ற இயற்பெயர் கொண்ட சௌகத் உஸ்மானி பிறந்தார்.
அவரே முன்னுரையில் கூறுவதுபோல, 1857 ‘சிப்பாய் கலகம்’ என அழைக்கப்பட்ட புரட்சியின்போது ஆங்கில ராணுவம் நடத்திய படுகொலைகளின் நேரடி சாட்சியாக இருந்த ஒருவர் அவரது பாட்டி, பாட்டியின் கதைகள் அவரிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பை ஊட்டி வளர்த்துள்ளன.
1920ல் பதவியிறக்கம் செய்யப்பட்ட உலக இஸ்லாமியர்களின் தலைவரான கலீபாவை மீண்டும் பதவியில் அமர்த்த, கிலாபத் இயக்கம் எழுந்தது அதன் பகுதியாக துருக்கிக்கு பயணமான ‘முஹாஜீர்’ படையின் இஸ்லாமியஇளைஞர்களில் ஒருவர்.
ரகசியமாய் நாடு திரும்பி பனாராஸ், கான்பூர், அலகாபாத் பகுதிகளில் இந்திய பொதுவுடமை இயக்கத்தினை உருவாக்கினார். பின்னர் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு பொதுச் செயலாளர்கள் (பி.சி.ஜோஷி, அஜாய்கோஷ்) இந்த நாற்றங்கால்களில் உருவானவர்கள்தாம்.
ஏகாதிபத்தியம் புனைந்த பெஷாவர் சதி வழக்கிலிருந்து மயிரிழையில் தப்பியவர். பின்னர் வந்த மீரட் சதிவழக்கு, கான்பூர் சதிவழக்கு இரண்டிலுமே தண்டிக்கப்பட்டு 16 ஆண்டுகால சிறைத் தண்டனை பெற்றவர். இறுதிவரை புரட்சிக் காரராய் வாழ்ந்து மறைந்த இந்திய பொதுவுடமை இயக்க முன்னோடி ஆவார்.
ஹிஜ்ரத் இயக்கம் என்றால் என்ன?
இஸ்லாமிய நாட்டிற்குள் பிரவேசித்து அங்கிருந்து கொண்டு பிரிட்டிசாருக்கு எதிரான போராட்டத்திற்காக தயாரிப்பு வேலைகளை செய்வது ஆகும்.
இந்த இயக்கத்தால் ஆப்கானிஸ்தானத்திற்குள் வந்தவர்களின் எண்ணிக்கை 36,000 திற்கும் மேலாகும்.
ஆப்கானிஸ்தானில் அமீர் ஹபிபுல்லாகான் கொல்லப்பட்டார். அதனால் அவரது மகன் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. இதனை இந்திய விடுதலை இயக்கம் நட்பு நாடாக அங்கீகரித்தது 1920 ஏப்ரலில் நடைபெற்ற டெல்லி மாநாட்டில் அமீர் அமானுல்லா காலனி அழைப்பினை ஏற்று பலர் ஹிஜ்ரத் இயக்கத்தில் இணைந்தனர். இந்திய விடுதலை இயக்கம் நட்பு நாடாக அங்கீகரித்தது.
ஆப்கானிஸ்தான் வழியாக இந்திய புரட்சி வீரர்கள் ஏராளமான பேர் சோவியத் யூனியனுக்கு சென்று பயிற்சி பெற்றனர். அவர்களில் சௌகத் உஸ்மானியும் ஒருவர்.
இன்றைக்கு போல போக்குவரத்து வசதியோ தொலைத்தொடர்பு வசதியோ இல்லாத ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் நடைபெற்ற பயணம் ஆகும்.
கடும் வெயிலில் வெள்ளம் ஓடும் ஆற்றில் பாலை நிலத்தில் என தீரமிக்க பயணத்தை மேற்கொண்ட அவரின் வார்த்தைகள் வலி மிகுந்தவை.மாஸ்கோவில் பயிற்சி பெற்று இந்தியாவிற்கு வந்து மீரட் சதி வழக்கில் பட்ட துன்பங்கள் அளப்பரியவை.
புரட்சிகரமான மாற்றங்கள்…
சுதந்திரத்திற்கு முன்னர் இரண்டு முறையும் சுதந்திரத்திற்கு பின்னர் ஒரு முறையும் என மூன்று முறை ரஷ்யாவிற்கு சென்று வந்தார். முதல்முறையாக சென்றபோது அவர் சந்தித்த சவால்கள், அங்கு பெற்ற பயிற்சிகள் ,அதில் ஏற்பட்ட உத்வேகத்தை ஓரடியும் பின்னே இல்லை, புரட்சிகர தோழமை ஆகியவை விரிவாக எழுதப்பட்டுள்ளது.
இரண்டாவது பயணத்தில் சோவியத் யூனியன் ஐந்தாண்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களையும் குறிப்பிடத்தக்க முறையில் வாசிக்க முடிகிறது.
விடுதலைக்குப் பின்பு 1974 களில் ஏற்கனவே சென்ற பல்வேறு இடங்களுக்கு அவர் செல்லும் போது ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கிடைத்த மரியாதையும் படிக்கும்போது மகத்தான புரட்சியின் மகிமையை அறிய முடிகிறது.
சோசலிச புரட்சி நடந்த பிறகு அதனை காப்பாற்றுவதற்கு இளம் கம்யூனிஸ்டுகளின் கம்யூனிஸ்ட் சப்போட்னிக்குகள்
ஆற்றிய தேசக்கட்டுமானத்தின் பணிகள் குறித்த செயல்பாட்டை வாசிக்கும் போது புரட்சிக்கு மட்டுமல்ல புரட்சிக்கு பின்னரும் அதனை பாதுகாக்க நடத்த வேண்டிய மகத்தான பணிகளை எடுத்துரைக்கிறது.
இந்திய விடுதலைக்குப் பின்னால் நடைபெற்ற மாற்றங்களில் பஞ்சம் பசி பட்டினி தொடர்ந்தது. அதே சமயத்தில் சோவியத் புரட்சி மக்களுக்கு சமத்துவத்தை கொண்டு வந்து கொண்டதையும் மனதிற்குள் விரிய வைக்கிறது. மகத்தான விடுதலைக்குப் பிறகும் இந்திய நாட்டின் மக்களுக்கான நலன்கள் இன்றைக்கும் புறக்கணிக்கப்படுகிறது இது போன்ற விடுதலையின் வரலாற்றை வாசிக்கும் போது போராட வேண்டும் என்கிற உத்வேகத்தை அளிக்கிற நூலாகும்.
நூலின் தகவல்கள் :
நூல் : ஒரு புரட்சியாளனின் பயணங்கள் (oru puratchiyalanin payanangal)
ஆசிரியர் : சௌகத் உஸ்மானி (Shaukat Usmani)
தமிழில் : ச.வீரமணி தஞ்சை ரமேஷ்
பக்கங்கள் : 232
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 240/-
நூல் அறிமுகம் எழுதியவர் :
எஸ். பாலா
நன்றி :
தீக்கதிர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

