ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக் – நூல் அறிமுகம்
ஏராளமான கவிதைப் புத்தகங்கள் எண்ணற்ற கவிஞர்களால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அவர்களின் ஆர்வமும் முதல் முயற்சியும் காரணமாக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மகிழ்வோடு பாராட்டி மகிழ்கிறோம். அவர்கள் இன்னும் நன்றாக கவிதை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக, பெருங்கவிஞர்களை சொல்லவே வேண்டியதேயில்லை. அவர்கள் எழுதுவதே எழுத்து வாசிக்க வேண்டியது நமது தலையெழுத்து என்று, பிடித்தால் படிக்க வேண்டியது கடித்தால் நகர்ந்து விட வேண்டியது. தேர்ந்தெடுத்த பல நல்ல கவிஞர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். தேடிப் படித்து மனதிற்கு தெம்பூட்டிக் கொள்ள வேண்டியதுதான்.
சமீபத்தில் நண்பர்கதை சொல்லி பசுமலை பாரதி அவர்கள் ஒரு சகலகலா சவரக்காரன் வருகிறார் பராக் பராக் எனும் இந்தக் கவிதைத் தொகுப்பை கையில் கொடுத்தார். வாசிப்பு இயக்கத்தில் மீசை என்பது வெறும் மயிர் எனும் எந்த வகைமைக்குள்ளும் சிக்காத ஆதவன் தீட்சண்யா அவர்களில் நூல் ஒன்றை வாசிக்க எடுத்திருந்தோம். அந்த நூல் குறித்த கூடுதல் தகவலுக்காகவும் தனது உரையை சுவாரசியப் படுத்துவதற்காகவும் துணை நூல்களை வாங்கி வாசித்து தனது உரையை மெருகேற்றி கொள்வார் அந்த தேடலும் கடின உழைப்புமே அவரின் பேச்சிற்கு பலத்த வரவேற்பு கிடைக்கின்றது. அவர் வாசித்து விட்டு எனக்கு கொடுத்த இந்த கவிதைப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் ஒரு கணம் திக்பிரமையில் நின்று விட்டேன்.
அன்று இரவு என்னால் சரியாக உறங்க முடியவில்லை. இப்படி கூட கவிதை எழுத முடியுமா அந்தக் கவிஞனை நினைத்து வியந்து போனேன். நாமெல்லாம் கவிதை யெனும் பெயரில் வெறுமனே கிறுக்கி கொண்டிருக்கிறோம் என்று விரக்தி கொள்ள வைத்து விட்டது. கவிதைகள் என்பது எங்கோ மாய உலகத்தில் இருந்து பிரசவிப்பது அல்ல. தன்னுடைய வாழ்க்கையை உற்று நோக்கினால் ஏராளமான கவிதைகள் வந்து விழும் என்பதற்கு ஏற்ப, சவரத் தொழிலாளியான கவிஞர் தனது தொழில் குறித்தும், அதன் சமூக நிலை குறித்தும், மிகவும் விசனப்பட்டு தனது பாதிப்பை மனக்குறைகளை இந்தச் சமூகம் தனது சாதீய மேட்டிமைத்தனத்தால் எவ்வாறு விளிம்புநிலை மக்களான நாவிதர்களை சொற்களால் மனச் சேதம் செய்கிறது என்பதை, பகடியாக அரசியலாக வேதனையாக துன்ப துயரமாக இழிவை சுமந்தழிய முடியாத கழிவிரக்கத்துடன் உங்கள் மனதை தைக்கும் எளிய சொற்களுடன் வலிமையான கருத்துக்களுடன் வந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவன் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகள் யாவும் வாதை மிகுந்தவை. பெருமதிப்புமிக்கவை என்பதை ஒவ்வொரு கவிதையும் ஊசி போல் நடுமண்டையில் நச்சென குத்தி இறக்குகிறார். மொத்தம் 70 கவிதைகள் 70 அனுபவங்கள் ஒரு மிகச்சிறிய தொகுப்பிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி செல்கிறார். அவரின் ஓரிரு கவிதைகள் உங்கள் பார்வைக்கு.
இட ஒதுக்கீட்டில் மிகவும் பாவப்பட்ட இரண்டு சாதிகளாக நாவிதர்களும், சலவைத் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கான சமூக மதிப்பு என்பது எள்ளளவும் இல்லை. ஒரு மனிதனை அழகாக்குவதும், அவன் உடைகளை தூய்மை படுத்தி மிக அழகு படுத்தும் இரண்டு தொழில் வயப்பட்ட இனங்கள், இழிசனங்களாக வீட்டிற்கு வெளியேயும், வசைச் சொற்களால் மனதிற்கு வெளியேயும், நிறுத்தப்படும் சாதீயத் தீண்டாமையில் விளிம்புநிலையில் நிற்போரை,
இடஒதுக்கீட்டு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்டோராக எவர் கொண்டு சேர்த்தது என்று தெரியவில்லை. சாதீய இழிவில் மிகக் கீழானவராகவும், சமூக மதிப்பில் மேலான நிலையில் வைத்த வஞ்சகர் சூழ் உலகை என்னவென்று சொல்வது. அந்த கேலிக்கூத்தான சமூக முரணை அழகாக கவிப் படுத்தியுள்ளார்.
“நாட்டாமை
எட்ன தூரத்தில் வரும் போதே எந்திரிச்சு நிக்கணும்
மேல் முடி செரைச்சிட்டு
அடிமுடியையும் வழிக்கணும்
எங்க வேணா தொட்டுக்கலாம்
தொடைச்சிக்கலாம்
மற்றபடி வாசல்படிதாண்டினா
வாயில வரும் நல்லா
ஆனா பாருங்க
அரசாங்க கெஜட்டு
அவரும் நானும் எம்.பி.சின்னு
சொல்லுது
அவருகிட்ட எப்படி சொல்றது
நீயும் நானும் ஒண்ணுதான்யான்னு
அரசிடம்
யார் சொல்வது
நானும் அவரும்
ஒன்னுயில்லையின்னு”
இந்தக் கவிதைக்கு விளக்கம் ஏதும் வேண்டுமா என்ன, முகத்தில் அறையும் உண்மையை வாசித்து விட்டு ஏதும் யோசிக்க தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். கவிஞனின் உள்ளக் குமுறலைக் கூட ஒரு தேவதையைப் போல நெற்றியில் அடித்து கேட்கிறான்.
“ஊரெல்லாம் என்னை
சாதியைச் சொல்லியும்
தொழிலைச் சொல்லியும்
திட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்
ஒரு அரசனைப் போல
நான்
கையில் ஆயுதங்களுடன்
மன்னித்துக் கொண்டேயிருக்கிறேன்
ஒரு
கடவுளைப் போல”
எளிய மக்களை எத்தனையெத்தனை சாதியின் பெயரால் அழைத்து மகிழ்கிறது
ஆதிக்கசாதித் திமிர்கள் இதோ அத்தனையும் ஆவணப்படுத்துகிறார்.
“நாவிதன்
பரியாரி
வித்துவான்
தொழிலாளி
குடிமகன்
அம்மட்டன்
என்று
என் சாதியின்
அனைத்து பெயர்களையும் தெரிந்து வைத்திருந்த அவர்
என்னை மனிதன் என்றோ எனக்கும் பெயர்
இருக்கின்றதென்றோ
நினைத்ததுமில்லை
சொல்லி அழைத்ததுமில்லை”
வீடுகளை மட்டும் அல்ல, தொழில் நடத்தும் கடைகளை கூட சாதிபார்த்து தான் வாடகைக்கு விடுகிறார்கள். அவர்களை பார்த்தும் கேள்விக்கணை தொடுக்கிறார்.
தனது கையாலாகாததனத்தையும் சேர்த்தே,
“கெஞ்சிக் கூத்தாடியும்
மயிறு வெட்ற கடைக்கு
வாடகைக்கு விடவே மாட்டேன்னு
அசிங்கப்படுத்திய
யோக்கியனுக்கும் சேர்த்து தான் இந்த அம்பட்ட ன்
அழகு படுத்த வேண்டியிருக்கிறது”
இழிவுபடுத்தப்பட்ட சாதியின் துயரக் குரல்களையும், உள்ளக் குமுறல்களையும் ஒரு முறை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும், எளிதாக கடந்து போகும் மேட்டிமை சாதிகளுக்கு என்ன தெரியும்.
“பிரசவம் பார்த்து விட்டு
வரும் அம்மாவும்
சவத்திற்கு
ஈமச்சடங்கு முடித்து வரும்
தகப்பனும் புணர்கையில்
எந்த வாடை தூக்கலாயிருக்கும்
பிரசவ வாடையா?
பொணவாடையா?
முகத்தில் அறையும் அத்தனை கோபங்களையும் கவிதையாக்கி நம்மை யோசிக்க வைத்திருக்கிறார். நம்மையறியாமல் எவரையாவது சாதியின் பெயரால், தொழிலின் பெயரால் இழிவுபடுத்திருந்தால் நம்மை திருத்திக் கொள்ளவும் சக மனிதரை அனைத்துக் கொள்ளவுமாக ஏராளமான கேள்விகளை எழுப்பிச் சென்றுள்ளார் கவிஞர் ப.நடராஜன் பாரதி தாஸ். ஒரு தொகுப்பில் ஓரிரு கவிதைகள் தேறினாலே அதிசயமான கவிச் சூழலில் 70 கவிதைகளும் கிரீடங்கள் சூட்டி நிற்கின்றன. கவிதை என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று எனக்குள் நெருக்கடியை ஏற்படுத்தி யிருக்கிறது. வாழ்த்துகள் கவிஞரே.
நூலின் தகவல்கள் :
நூல் : ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்
ஆசிரியர் : ப.நடராஜன் பாரதிதாஸ் (P. Natarajan Bharathidoss)
பக்கம் : 94
விலை : 100
ஆண்டு : 2021
வெளியீடு : ஆதி பதிப்பகம்
நூல் அறிமுகம் எழுதியவர் :
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.