பெரும்படவம் ஸ்ரீதரன் எழுதிய ஒரு சங்கீர்த்தனம் போல (Oru Sankeerthanam Pole) - நூல் அறிமுகம் | தமிழில் : சிற்பி - https://bookday.in/

ஒரு சங்கீர்த்தனம் போல (Oru Sankeerthanam Pole) – நூல் அறிமுகம்

ஒரு சங்கீர்த்தனம் போல (Oru Sankeerthanam Pole) – நூல் அறிமுகம்

 

பெதாஸ்யா, எங்கள் மதிப்புக்குரியவரே, இன்னும் கெட்டியான கருப்புத் தேநீரைத் தயாரியுங்கள்!

இன்று அன்னாவிடம் தன்னுடைய காதலைத் தெரிவித்து விட்டார் எங்கள் பிரியத்துக்குரிய தாஸ்தயேவ்ஸ்கி. பெதோஸ்யா! எங்கள் மதிப்புக்குரியவரே! சீக்கிரம்.. சமையலறைக்குச் சென்று தாஸ்தயேவ்ஸ்கிக்கு மிகவும் பிடித்த கெட்டியான கருப்புத் தேநீரைத் தயாரியுங்கள்! நாம் எல்லோரும் அருந்துவோம். சற்றுப் பொறுங்கள்! என்று சைகை செய்வது புரிகிறது. அந்தக் காட்சியிலிருந்து இன்னும் நீங்கள் வெளியே வரவில்லை. உங்களுடைய சொந்த மகனின் வாழ்வில் போல கிடைத்த நற்பேறான கணங்களைத் தரிசிக்க விரும்பினீர்கள் இல்லையா? புரிந்து கொள்கிறேன்.

தாஸ்தயேவ்ஸ்கி எப்போதும் உட்கார்ந்து எழுதும் நாற்காலியில் அன்னா உட்கார்ந்திருந்தார். தாஸ்தயேவ்ஸ்கி அன்னாவின் முகத்தைப் பார்க்கவில்லை. முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தார். அவருடைய கையில் அன்னா அறைக்குள் வந்ததிலிருந்து புகைக்கும் ஐந்தாவது சிகரெட். அன்னா வருவதற்கு முன்பு அவர் புகைத்துப் போட்ட சிகரெட்டுத் துண்டுகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அறைக்குள் சிகரெட் புகையிலை நாற்றம். பொதுவாக தீவிர்மாக எழுதும்போது மட்டும் தான் தாஸ்தயேவ்ஸ்கி அவ்வளவு சிகரெட்டுகளைப் புகைப்பார். அவர் எழுதும் நாவலின் சம்பங்களிலும் கதாபாத்திரங்களிலும் ஆழ்ந்து போய் விடுவார். சில நேரம் கோபமாகப் பேசுவார். அழுவதைப் போல முகம் கோணும். உறுமுவார். யாரையோ திட்டித்தீர்ப்ப்பார். சிரிப்பார்.

1866 – ஆம் ஆண்டு எழுத்தாளர்களைச் சுரண்டிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் எல்லாப்பதிப்பாளர்களையும் போல டெல்லோவ்ஸ்கி என்ற வஞ்சகமான பதிப்பாளரும் தாஸ்தயேவ்ஸ்கியின் அவரசத்தைத் தெரிந்து கொண்டு அவருக்குப் பண உதவிச் செய்வது போல செய்து வேண்டுமென்றே சாதாரணமாகச் செய்யமுடியாத சில நிபந்தனைகளை விதித்தான். ஒரு மாத காலத்துக்குள் ஒரு நாவலை எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்க முடியாவிட்டால் அந்த நாவலுக்கான உரிமை மட்டுமல்ல: அவருடைய மொத்தப்படைப்புகளின் உரிமையையும் அவனுக்கு எழுதித் தரவேண்டும். பாவம்! தாஸ்தயேவ்ஸ்கி.. என்ன செய்வார்? அந்த ஏற்பாட்டுக்கு சம்மதித்தார்.

நாவல் எழுதும்பணிக்காகத் தான் சுருக்கெழுத்து தெரிந்த அன்னாவை அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் முறையாகச் சந்திக்கிறார். அப்போதெல்லாம் அவருடைய மனதில் வேறெந்த சிந்தனைகளுமில்லை. நாவலை முடித்துக் கொடுத்து அவருடைய படைப்புகளைக் காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

அக் 4 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிவரை இருபத்தியாறு நாட்களில் சூதாடி நாவல் முடிந்தது. அதன் பிறகு அன்னாவை நவம்பர் மூன்றாம் தேதி தான் சந்திக்கிறார். இப்போது அறை ஒழுங்கில்லாமல் கலைந்து கிடந்தது. படுக்கையிலுறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த அடையாளங்கள் தெரிந்தன. தாஸ்தயேவ்ஸ்கியின் முகத்தைப் பார்க்க்க வேண்டுமே. நாற்பந்தைந்து வயது மனிதரைப் போலவா தெரிந்தார். வாழ்க்கையில் மரணத்தின் விளிம்புவரை சென்று, வாழ்வின் அனைத்துத் துயரங்களையும் அனுபவித்த, ஆன்மாவில் காயங்களினால் ஏற்பட்ட தளர்ந்த பலவீனமான இதயத்தைக் கொண்டவராகவா தெரிந்தார். இருபந்தைந்துவயதில் வாழ்வின் வசந்தத்தை அள்ளியள்ளைப் பருகத்துடிக்கும் ஒரு வலிமை மிக்க இளைஞனாக அல்லவா தெரிந்தார்.

அந்த அறையில் அவரையும் அன்னாவையும் தவிர வேறு யாரும் இல்லை என்று தாஸ்தயேவ்ஸ்கி நினைத்திருந்தாரில்லையா? காதலிக்கும் போது எல்லோருக்கும் அப்படித்தானே எண்ணத்தோன்றும். அவர்களிருவரையும் தவிர இந்த உலகத்தில் யாருமே இல்லை. ஏன் உலகமே இல்லை என்று கூடத் தொன்றும். அப்படித்தான் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் எத்தனையோ காதல்களைச் சந்தித்துக் கடந்திருந்தாலும், ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்வதென்பது லேசான காரியமா? அப்போது தோன்றும் உணர்ச்சிச்சுழிப்புகளை எந்த எழுத்தாளராலும் எழுதி விட முடியுமா? முகத்தில் ரத்தம் பாய்ந்து சிவந்து எதிர்கொள்ளப்போவது ஆனந்தத்தையா அவமானத்தையா என்று தெரியாமல் மரணத்தின் முன்னால் கையாலாகாமல் நிற்பதைப் போன்றல்லவா நின்று கொண்டிருந்தார் எங்கள் அருமை தாஸ்தயேவ்ஸ்கி.

முகத்தில் வழியும் அசட்டுத்தனத்தை மறைக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தும் முடியவில்லை. எத்தனையோ பெண்களைச் சந்தித்தவர் தான். சூதாடியில் வரும் பொலீனாவுக்காக சூதாட்டவெறியில் ஒரு போதும் மீளமுடியாதபடி வீழ்ந்தவர் தான். ஆனால் இப்போது அந்தச் சின்னஞ்சிறுபெண், அவரை விட இருபத்தைந்து வயது குறைந்த, வசந்தத்தின் வாசலில் நின்று கொண்ட ஒளிவீசும் எதிர்காலத்தைக் கனவு கண்டு கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் சொல்லும்போது ஏன் இந்தத் தடுமாற்றம்? ஏன் இந்தத் தயக்கம்? குரலில் ஏன் நடுக்கம்?

“தைரியமாகச் சொல்லுங்கள் தாஸ்தயேவ்ஸ்கி! இது தான் சமயம்.. இவள் தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்ட உண்மையான காதல்.. தைரியமாகச் சொல்லுங்கள் தாஸ்தயேவ்ஸ்கி “ என்று அறையின் வாசலில் ஓரமாக இப்படித்தான் நடக்கும் என்று முன்னுணர்ந்தவராக தாஸ்தயேவ்ஸ்கியை உள்ளும்புறமும் அறிந்த பெதோஸ்யா நின்று மானசீகமாக வேண்டிக் கொண்டிருந்தார். அவர் அப்படி நின்று கொண்டிருப்பது தாஸ்தயேவ்ஸ்கிக்குத் தெரியாது. அன்னாவுக்கும் தெரியாது.

உங்களுக்கு மட்டும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். ஆமாம. பெதோஸ்யாவுக்குப் பின்னால் நிழலாய் ஒரு உருவத்தைப் பார்த்தீர்களா? இந்த அமர கணத்தை எதிர்காலத்தில் ஒரு சங்கீர்த்தனம் போல என்ற நாவலாக எழுதி மலையாள இலக்கியத்தில் சாதனை படைக்கப்போகும் பெரும்படவம் ஸ்ரீதரன் தான் அது.

ஏன் பெதோஸ்யாவின் கண்களில் கண்ணீர் கரை புரண்ட ஓடுகிறது? தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஏதாவது அற்புதம் நிகழ்ந்து விடாதா என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கும் பெதோஸ்யாவுக்கு இதை விட ஆனந்தம் இருக்கிறதா என்ன? எப்போதும் கெட்டியான தேநீர் தயாரித்துக் கொடுக்கும் வேலைக்காரி மட்டுமல்ல. சமையல்காரி மட்டுமல்ல. தாஸ்தயேவ்ஸ்கியின் ஒவ்வொரு அசைவுக்கும் தெரிந்தவர். அவருடைய இருமலுக்கும் செருமலுக்கும் கோபத்துக்கும், மகிழ்ச்சிக்கும், என்ன காரணம் என்று தெரியும்.

அவ்வளவு ஏன் ? சிறுவயது முதலே தாஸ்தயேவ்ஸ்கியைத் துன்புறுத்தும் அந்தப் பரவச வலிப்பு நோய் எப்போது வரும்? என்பதைக் கூட அறிந்தவர் தான் பெதோஸ்யா. தாஸ்தயேவ்ஸ்கி நேரிடையாகச் சொல்லவில்லை. அடுத்த நாவலுக்கான கதைச்சுருக்கத்தைச் சொல்வதைப் போலச் சொன்னார். அவர் சொன்ன கதையைக் கேட்டதும் உள்ளுக்குள் அன்னாவின் இதயம் துடித்தது. உணர்ச்சியால் கொந்தளித்தது. உடலில் ஒரு பரவசம் தோன்றி மறைந்தது. ஆனாலும் அன்னா தாஸ்தயேவ்ஸ்கியைப் போல உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவரல்ல. அமைதியாக இருந்தார். இன்று இப்போது இந்த அறையில் நடக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் அவருக்கு அர்த்தம் தெரிந்தாலும் தாஸ்தயேவ்ஸ்கியின் வாயினால் அதைச் சொல்லவேண்டுமென்று நினைத்தார். அந்த வார்த்தைகளுக்காகவே அமைதி காத்தார்.
தாஸ்தயேவ்ஸ்கி சொல்லியே விட்டார்.

“அந்த ஓவியன் நான் தான் என்று நினைத்துக் கொள். நான் உன்னிடம் என் காதலைச் சொல்லவும் செய்கிறேன். நீ வாழ்வு முழுவதும் என்னுடன் இருப்பாயா? சொல். உன் பதில் என்னவாக இருக்கும்? “

“என் பதில் இதுவாக இருக்கும். நான் உங்களை நேசிப்பேன். அந்த நேசம் வாழ்வின் முடிவு வரை நிலைத்திருக்கும்..” அதன்பிறகு என்ன நடந்திருக்குமென்பதைச் சொல்ல முடியுமா? தாஸ்தயேவ்ஸ்கியின் கண்கள் கசிந்தன. அன்னா தன் மகிழ்ச்சியை மறைக்க முகத்தை மூடிக் கொண்டாள். அறை வாசலில் நின்ற பெதோஸ்யாவுக்குத் தன் கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைக்கத் தோன்றவில்லை. பின்னால் இலக்கியச்சாட்சியாக நின்ற பெரும்படவம் ஸ்ரீதரன். அட! அவர் கண்களிலும் கண்ணீர் ஒடுகிறது.

அந்தக் கணத்தில் ஒரு சங்கீர்த்தனம் போல என்ற நாவலின் களம் முடிவாகி விட்டது. மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுக் கொண்டிருக்கும் அந்தப் புகழ்பெற்ற நாவலை எழுத முடிவு செய்கிறார். அதற்கு அன்னா தன்னுடைய நாட்குறிப்புகளின் வழியே வழி நடத்துகிறார். இது தான் இலக்கியத்தின் அற்புதம்!

அன்னாவும் தாஸ்தயேவ்ஸ்கியும் சந்தித்த முதல்நாள் முதல் அவர்கள் தங்களுக்குள் காதலைப் பரிமாறிக் கொண்ட கடைசிநாள் வரையிலான கதையைச் சொல்வதென்று முடிவு செய்கிறார் பெரும்படவம். எழுதத்தொடங்கிய நாள் முதல் நாவல் முடியும்வரை ஏதோ தாஸ்தயேவ்ஸ்கியின் ஆவி உள்ளே புகுந்ததைப் போல எழுதுகிறார். தாஸ்தயேவ்ஸ்கியின் நடை, உடை, பாவனை, அவருடைய பழக்கவழக்கங்கள், அவருடைய கடந்தகால வாழ்க்கை, நிகழ்காலவாழ்க்கை, அவரது முரண்பட்ட சிந்தனைகள், முரண்பட்ட ஆளுமையின் உள்ளுரு, எல்லாவற்றையும் அப்படியே கலையாக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 130 வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வை, அந்தக் காலச்சூழலை, கதாபாத்திரங்களை அப்படியே கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிற மகத்தான கலைஞனாகியிருக்கிறார் பெரும்படவம்.

பதினாறு அத்தியாயங்களில் ஒரு காதல் காவியத்தைப் படைத்திருக்கிறாரென்றால், அதுவும் தாஸ்தயேவ்ஸ்கி போன்ற உணர்ச்சிக்கொந்தளிப்பு மிகுந்த எழுத்தாளரின் வாழ்க்கையிலிருந்து முக்கியமான பகுதியை எழுதுவதென்பது எவ்வளவு பெரிய சவால்? தாஸ்தயேவ்ஸ்கியின் அனைத்து நூல்களையும் வாசித்து அவரைப் பற்றியே யோசித்து, அவரைப் பற்றியே சிந்தித்து, அவராகவே மாறியிருக்கிறார் என்று சொல்வது மிகையில்லை. பல அதிசயங்களைக் கொண்ட கேரளாவில் தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை மட்டுமே பதிப்பிக்கும் பதிப்பகம் இருப்பதும் ஆச்சரியமில்லை.

கடவுள் கையொப்பமிட்ட இதயத்துக்குச் சொந்தக்காரரான தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கையில் இந்த நாட்கள் மிக முக்கியமானவை. EVIL GENIUS என்று மாகிசிம் கார்க்கியால் அழைக்கப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி தன் படைப்புகளில் மனித மனதின் இருண்ட பகுதிகளை வெளிச்சமாக்கிக் காட்டியவர். தன்னையே வாழ்வுக்கும் இலக்கியத்துக்கும் ஒப்புக் கொடுத்து பரிசோதனை செய்தவரென்று கூடச் சொல்லலாம். எப்போதும் அதீத உணர்ச்சிகளிலெயே உழன்று கொண்டிருந்த தாஸ்தயேவ்ஸ்கியை வறுமையும், துரோகங்களும், தோல்விகளும், உறவினர்களின் சுரண்டலும் சேர்ந்து உழட்டின. அத்தனைக்கும் தன்னை ஒப்புக்கொடுத்து மேதைமை தாஸ்தயேவ்ஸ்கிக்கு அன்னாவின் காதல் ஒன்று கடைசிவரை கிடைத்த ஒரே ஆறுதல். தாஸ்தயேவ்ஸ்கி நிலைதடுமாறி நிற்கும்போது தன்னுடைய கைப்பணத்தைக் கொடுத்து அவரைச் சூதாட அனுப்புகிற அந்தக் காட்சி உண்மையில் நெகிழவைப்பது. ஏனெனில் சூதாட்டம் அவரைச் சமநிலைப் படுத்துகிறதென்பதை மிகக்குறைந்த நாள் பழக்கத்திலேயே தெரிந்து கொண்டவர் அன்னா.

உண்மையில் அன்னா உலக இலக்கியத்தில் சித்தரிக்கப்பட்ட எந்தக் கதாபாத்திரத்தையும் விட அற்புதமான மனுஷி.. தன்னைவிட இரண்டு மடங்கு வயதுடைய எப்போதும் அதீதங்களிலியே வாழ்ந்து கொண்டிருக்கும் தாஸ்தயேவ்ஸ்கியைக் காதலித்து மணம்முடித்து அவரையும் அவரது படைப்பு மனதையும் காப்பாற்றிய அன்னாவுக்கு மிகச்சிறந்த இலக்கியவெகுமதியைக் கொடுத்திருக்கிறார் ஒரு சங்கீர்த்தனம் போல நாவலில் பெரும்படவம்..

இந்தப் புகழ்பெற்ற நாவலை அதன் உணர்ச்சிவெள்ளத்தைச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே அழகாகத் தமிழில் தந்திருக்கிறார் கவிஞர் சிற்பி. அதோ.. பாருங்கள்! தாஸ்தயேவ்ஸ்கியின் சமையலறையில் பெதோஸ்யா அவருடைய இளமையில் அவர் காதலித்த அந்த முரடனை நினைத்து ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே கெட்டியான கருப்புத் தேநீரைத் தயாரிக்கிறார். இனி தினமும் தாஸ்தயேவ்ஸ்கிக்கு மட்டுமல்ல, அன்னாவுக்க்கும் சேர்த்துத் தேநீர் தயாரிக்கவேண்டும்.

அதை நினைக்கும்போதே பெதோஸ்யாவுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றுகிறது. ஏதோ ஒரு நிம்மதி. எப்போதும் கனவில் எதையோ தேடிக் கொண்டிருப்பார் தாஸ்தயேவ்ஸ்கி. ஆனால் இதுவரை கிடைத்ததில்லை. ஆனால் இப்போது அவர் தேடியது கிடைத்து விட்டது. அந்தச் சிறிய வைரம் தான் அன்னா.
இனி தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் வசந்தம் வீசும். அந்தப்பாவப்பட்ட ஆத்மா கொஞ்சமேனும் உண்மையான அன்பில் திளைக்குமென்று நினைத்த பெதோஸ்யாவுக்கு ஏனோ தன்னுடைய தாயின் நினைவுகள் பொங்கி வந்தன.

கெட்டியான கருப்புத்தேநீரைத் தயாரித்து முடித்து விட்டாள் பெதோஸ்யா. நான்கு கோப்பைகளில் ஊற்றினாள். இரண்டு கோப்பைகளை அன்புக்குரிய அன்னாவுக்கும், தாஸ்தயேவ்ஸ்கிக்கும் கொடுத்தாள்.

ஒரு கோப்பை கெட்டியான கருப்புத் தேநீரை நிழலாய் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பெரும்படவம் ஸ்ரீதரனிடம் கொடுத்தாள்.
மீதமிருக்கும் இன்னொரு கோப்பையை எடுத்து நீட்டுகிறாள் பெதோஸ்யா..
வாங்கி அருந்துங்கள்!

எங்கள் தாஸ்தயேவ்ஸ்கியையும் அன்னாவையும் வாழ்த்துங்கள்!

நூலின் தகவல்கள் :

நூல் : ஒரு சங்கீர்த்தனம் போல (Oru Sankeerthanam Pole)
மலையாளத்தில் : பெரும்படவம் ஸ்ரீதரன்
தமிழில் : சிற்பி
வெளியீடு : அருட்செல்வர்.நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
தொடர்புக்கு : 9976144451

நூல் அறிமுகம் எழுதியவர் :

உதயசங்கர்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *