இன்று ஒரு தொலைதூரப் பயணத்திற்குத் தயாராகிவிட்டோம்
நீங்களும் என் அருகில்தான் இருக்கிறீர்கள்
என்பதால்
எனக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!
கவிதையின் வெளிச்சத்தில்
கைப்பிடித்துச் செல்கையில்
காட்டுவழி கூட
அவ்வளவு பயங்கரமாகத் தெரிவதில்லை.
விலங்குகளின் ஆபத்தான கொம்புகள்
நம்மைக் குறிபார்த்துக் கொண்டிருக்கின்றன
அசாத்தியமான துணிச்சலுடன்தான்
முன்னேறிக்கொண்டிருக்கிறோம்
இவ்வளவு அருமையான பயணம்
வாய்த்திருப்பது
இந்தப் பிரபஞ்சத்தில் நமக்கான கொடுப்பினைதான்
ஒரு ஒளிமிகுந்த கவிதையின் பயணத்தில்
மகிழ்ச்சியின் எல்லையைத் தொட்டு
உண்மையான தொடர் வளர் இன்பத்தின் உணர்வுகளால்
திக்குமுக்காடிப் போகிறோம்
உயரிய கவிதையை எழுதுவதைப் போலவே
வாசிப்பதும்
அவ்வளவு முக்கியமானது
எப்படிச் சிறுநீரகம் நமது உடலின் அழுக்குகளையெல்லாம்
சுத்தப்படுத்துகிறதோ
அப்படியான ஓர் உறுப்பாகத்தான்
நமது கவிதை மாறிவிட்டிருக்கிறது!
இரத்தத்தில் குளித்து
இரத்தத்தையே சுத்தப்படுத்தும்
நம் இதயத்தைப் போலவே
நாமும் உலகிலிருந்து வரும் கெட்ட செய்திகளையெல்லாம்
நமது வென்டிரிக்கில்களின் மாயக் கரங்களால்
நல்ல செய்திகளாக்கி
உலகுக்குத் திருப்பி அனுப்புகிறோம்!
நமது வழியில் மையங்கொண்டிருந்த
ஒரு மோசமான
அரசியல் புயலால் அலைக்கழிக்கப்பட்டபோது
நமது வானூர்தி
நடுங்கத்தான் செய்தது
வானிலை அறிக்கைகளில் கூடப் பொய்ச் செய்திகளை
நிரப்பியிருக்கும்
சர்வாதிகாரத்தின் ஆட்சிக் கூடங்களின் கட்டளைகளால்
நாம் வழிமறிக்கப்படுவது உண்மைதான்.
முழுமையான இன்ப உலகத்திற்காக
தவிர்க்க முடியாமல்
நமது கவிதைப் பயணத்தை
நிகழ்த்தியே ஆகவேண்டும்.
எத்தனை மார்பகங்களை இழந்தபோதும்
நம் மடி வறண்டுவிடுவதில்லை
அடுத்தொரு குழந்தையைத்
தாய்ப்பாலுக்காக
மடியில் ஏந்திக்கொள்கிறோம்.
சுற்றியமர்ந்து ஒரே நேரத்தில்
அனைவரின் உதடுகளும் அழுந்தப் பதிந்து
அருந்தும்
மிகப் பெரிய பிரபஞ்சத் தேநீர்க் கோப்பைக்காக
நாம் கவிதைச் சவாரி செய்கிற வேளையில்
இரட்டைக் குவளைகளுடன்
ஒரு தேநீர் வியாபாரியைச் சந்திக்க நேர்ந்துவிடுவது
துர்ப்பாக்கியம்தான்.
எல்லோரும் சமமாக உட்காருவதற்காக
ஒவ்வொரு காட்டு மரத்தையும்
பரிசோதித்துப் பரீட்சித்துக்
கறுப்புக் கோட்டுக்காரன் ஒருத்தன்
கண்ணுறக்கம் தொலைத்துக் கண்டுபிடித்து
இழைத்து வைத்த
ஓர் உயரிய நாற்காலியைத்
தீட்டு மந்திரம் உச்சரித்தவன்
திருடிக்கொள்வது
தேசத் துரோகம்தான்.
ஒரு கோப்பை உப்புக்காக
கடலைத் தொலைத்த கதைகளை
ஞாபகப்படுத்தும் நமது கவிதைகளுடன்
செல்லுகிறபோது
பொய்களின் மலை முகடுகளில் நடைபெறும்
அலங்காரங்களின் பட்டாபிஷேகம்
அயர்ச்சியானதுதான்..
வழிப்பறிக்காரர்களின் உயிர் மிரட்டல்களைத் தாண்டி
நமது இலக்கை நோக்கிய பயணம்
எவ்வளவு முக்கியமானது
நீங்கள் என் அருகில் இருப்பது
எவ்வளவு ஆறுதலானது
தீட்டு மந்திரக்காரர்களால்
தொட முடியாத தூரத்திலிருக்கும்
விளிம்பு நிலையின் உச்சத்தில்
புறக்கணிப்பின் பள்ளத்தாக்குகளில்
இழிந்துகிடக்கும் பூமி
என்றாவது ஒருநாள்
புத்தர்களின் சிலைகளால் நிரம்பி வழியலாம்.
நாட்டையே தொலைத்துவிட்ட நம்மிடம்
எஞ்சியிருப்பது
ஒரு சட்டப் புத்தகத்தில்
ஒளித்து வைத்திருக்கும்
கவிதை மயிலிறகுதான்
அதையும்
குட்டிபோடும் கதைகள் சொல்லி
தொட்டெடுக்கும் ஒருவனின்
துரோக விரல்கள்
நீலக் கோட்டுக் காரனின் கனவுகளழிக்க
நீள்கிறது.
கனவுகளைச் சிதைக்க முடியாதது
நம் கவிதைப் பயணம்
சீட் பெல்ட்டை கவனமாகக் கட்டிக்கொள்
நாம் சேரவேண்டிய இடம்
வெகுதொலைவில் இருக்கிறது
–நா.வே.அருள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அபாரம் அண்ணா..மிகச்சிறப்பு.
நன்றி கண்ணா.
நா.வே. அருள் அவர்களின் கவிதை மிகச் சிறப்பு. . அரசியல் கவிதை ஒன்று பிரச்சார நெடி இன்றி அதே சமயம் கடுமையான விமர்சனத்தையும் கவிதை முன் வைக்கிறது நேர்த்தியான வரிகள் சமூகத்தின் யதார்த்த நிலையை பிரதிபலிக்கும் சிறந்த கவிதை
பாரதிக்குமார் நெய்வேலி
எழுத்தாளர் பாரதிக்குமார் அவர்களின் மனம் திறந்த பாராட்டில் மகிழ்கிறேன்.
அன்பும் நன்றியும்.