முன்னுரை என்கிற பெயரில் தனது மேதாவித்தனத்தை நிரூபிக்கும்படியாய்
ராக்கெட் சயின்ஸ்,நியூக்ளியர் சயின்ஸ் பேசும் சாகச முன்னுரைகளுக்கு மத்தியில்
கலை இலக்கிய விமர்சகர் ஐயா இந்திரன் அவர்களின் முன்னுரை அவரைப் போலவே எளிமையாய் நூலில் உள்ள கவிதைகளின் நுட்பத்தை மட்டுமே எளிமையோடும் அதே சமயம் வலிமையோடும் பேசித் தொடங்கி வைக்கிறது.
நானும் இந்த வரிகளில் இருந்தே தொடங்குகிறேன்…
“பிறருக்காக சிந்தும்
ஒரு துளிக் கண்ணீரில்
ஒரு சமுத்திரம் இருக்கிறது.”
பெருங்கருணையோடும் அதே சமயம் அநீதியின் போது பெருங்கோபத்தோடும் சமூகத்தை நோக்குகிற மனிதனால் மட்டுமே இம்மாதிரியான வரிகளை எழுத முடியும்.
சமூகத்தின் மீது பேரன்பு கொண்ட ஒரு சாமானியன் அநீதிகளை காணும் போது இப்படித்தான் இயலாமையால் தன்னை தானே கூரான சொற்களைக் கொண்டு சிலுவையில் அறைந்து கொள்கிறான்.
“பொருள் வயிற்று பிழைப்பிற்கும்
அதிகாரத்திற்கும் எதிராய்
நகரும் வாழ்வொன்றின்
உப்பேரிய காயங்களிலிருந்தும்
கசியும் துயரத்தின் வலிகள்
பருந்தின் கூறிய நகங்களில் வழியும்
வேட்டையாடப்பட்ட ஒரு
சிட்டுக்குருவியின் குருதி
கவிதையின் சொற்களாகிறது”.
என்று சிலுவையின் ரணத்தை காட்சிப்படுத்துகிறது.
மற்றுமோர் கவிதையில் இந்த வரிகள் மொழியின் உயரிய உன்னதத்தை பேசுகிறது…
“வரங்களையளிக்கும் கடவுளல்ல
கருவறையில் சுமந்து
தாய்ப்பாலூறிய பவித்திரம்
எனது மொழி”.
என்று நீள்கிறது மொழி குறித்தான அதிசயப் பட்டியல்.
ஊர் நாறாமல் இருக்க அசுத்தத்தை வாரும்
உன்னத மனிதர்களைப் போல, சமூகத்தின் அசிங்கங்களையும்,அநீதிகளையும், அள்ளி செல்கிறது நூலில் இருக்கும் இந்த கவிதைகள் அனைத்தும்.
அப்படி நீண்டகாலமாய் நாறிக்கொண்டிருக்கும் ஒரு அவலத்தை பேசுகிறது இந்த கவிதை….
“கடைசியாக
தற்கொலை செய்துகொள்வதற்கு
சற்று முன் எழுதிவைத்துவிட்டு
இறந்துபோனது பச்சோந்தி.
காசுக்கும் பதவிக்கும்
நிறம் மாறி பிழைக்கும் வாழ்வில்
மனிதர்களிடம் தோற்றுவிட்டேன் என்று”.
பணத்துக்கும் பதவிக்கும் பச்சோந்தியை மிஞ்சும் மனிதர்களை பரிகசித்து மலத்தை தொட்டு செருப்பால் அடிப்பது போல அடிக்கிறது இந்தக் கவிதை.
சமூகத்தின் பேரில் கொண்ட பேரன்புக்கும் பெருங்கோபத்துக்கும் இடையே ஊசலாடும் மனம் தனது மெல்லிய பக்கத்தை ஒரு கவிதையில் இப்படியாக வெளிக்காட்டிக்கொள்கிறது…
“ஒரு புன்னகைக்கும்
கண்ணீருக்குமிடையில்
எளிய மனமொன்று
செத்துப் பிழைக்கிறது”.
என்று அந்த கவிமனம் கரைகிறது.
உறவாலோ சமூகத்தாலோ நிராதரவாய் கைவிடப்படும் ஒரு மாற்று சிந்தனையுள்ள ஒரு மனிதன் நேசிப்பதை நிறுத்திக்கொள்ளாமல் தனது சுயபச்சாதாபத்தை வெறியேற்றி கோபமாக மாற்றிக்கொண்டு அறம் தவறி நடக்கும் மனிதர் மீது மட்டும் இரக்கமற்று சாட்டையை வீசி மற்றவர் யாவரையும் தனது அன்பால்
அரவணைத்துக்கொள்கிறான்.
அவனுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது தான் யாரென்றும்,தனது பிறவியின் நோக்கம் என்னவென்றும்.அதனை அவன் உணர்ந்ததோடு மட்டுமின்றி இப்படியாக இந்த உலகத்தின் முன்னால் பிரகடனப்படுத்தவும் செய்கிறான்.
“விலக்கப்பட்ட கனியொன்றின்
விதை நான்
எல்லா வகையிலும் கைவிடப்பட்டு
அற்றவைகளாலான வாழ்வின்
முற்றத்தில் நின்றபோது
ஒரு சாத்தானின் விரல் பற்றி
அழித்தொழிக்கப்பட்ட நிலத்தில்
ஒரு சிறு தானியமென
முற்றி வெடித்திருக்கிறேன்”.
இந்த வாழ்தலில்;சூழ்ச்சிகளும் சுயநலமும் மிகுந்துவிட்ட இந்த காலத்தில்; கடவுளின் கரங்களை விட, சாத்தானின் கரங்களே நம்பிக்கையானவை, பலமானவை என்று எனக்கும் நம்பிக்கை உண்டு.அப்படி பாரதியும் சாத்தானின் விரல்களை பற்றிக்கொண்டுள்ளார்.
நூல் முழுக்க எந்த கவிதையையும் எளிதாய் கடந்து போய்விடவும் முடியவில்லை
எந்த கவிதைக்குள்ளும் தேங்கி நிற்கவும் முடியவில்லை.
நம்மையும் அந்த பேரன்பால் விளைந்த பெருந்தீயில் கருக செய்கிறது,அந்த சுழலில் சிக்கிக்கொள்ள வைக்கிறது.
ஆனால் இந்த வாசக மனம் அங்கேயே நின்று நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியுமென்று யோசிக்க வைக்கிறது.
அப்படியான யோசிக்க வைக்கும் சில வரிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.
ஒவ்வொரு வரிகளும் வாழ்வின் ஒரு அத்தியாயத்தை பேசுகின்றன.
“எளியதுகளின் வசமாகும்
வலியதுகளின் அதிகாரமென்பது”.
“நான் வந்து இறங்க வேண்டிய
நிலையமொன்றில்
சாதியை சுமந்தபடி போய்க் கொண்டிருக்கிறது
அந்த ரயில்.”
“மனிதனைத் தவிர
மற்ற எல்லா உயிர்களுக்கும் இடையில்
இருக்கத்தான் செய்கின்றன
நமக்குள்ளிருந்து
தொலைத்துக்கொண்டிருக்கிற
தோழமை என்கிற சொல்”.
இம்மாதிரியான சுட்டெரிக்கும் வெய்யில் வார்த்தைகளுக்கு இடையே கோடை மழையாய் வருகிறது சில காதல் கவிதைகள்.
சாத்தான் யாரை விட்டது எல்லோருக்கும் ஒரு ஆப்பிளை வைத்திருக்கிறது அல்லவா; அப்படி எனது சக சாத்தானின் விரல் பிடித்து நடந்த இந்த கவிஞனுக்கும் ஒரு ஆப்பிளை வழங்கியிருக்கிறது அந்த சாத்தான்.அதன் சாட்சியாய் சில கவிதைகளை நீங்கள் இந்த தொகுதியில் காணலாம்.
நோய்மைப்பட்ட சமூகத்திற்கு மேலும் நலிவுறச் செய்யும் சர்க்கரை சொற்கள் தேவையில்லை இந்த தொகுதியில் தரப்பட்டிருக்கும் நோய் தீர்க்கும் கசப்பான வார்த்தைகளே தேவை.
நவீன கவிதைகள் அரசியல் பேசுவதில்லை அநீதியை பாடுவதில்லை என்று குற்றச்சாட்டு வைப்பவர் முகத்தில் ஞான செறுக்கோடு இந்த தொகுதியை விட்டெறியலாம்.
கோபம் கொப்பளிக்கும் இந்த கசப்பான சொற்களுக்கு பின்னால் கொஞ்சம் உற்று நோக்கினால் காண முடியும் சமூகத்தின் பேரில் பேரன்பின், பெருங்காதலின், பெருங்கருணையின் விசுவரூபத்தை.
அந்த விசுவரூபம் அதிகாரத் திமிரோடு,அநீதியின் துணையோடு மேலெழும்பும் கதிரவனை தனது அச்சுப்பாதையிலிருந்து விலகி நடக்க சொல்லும் கர்வத்தையும் காண முடியும்.
தொகுதி முழுவதும் பேரன்பு சமுத்திரம் ஒன்று அநீதிகளை கண்டு கொந்தளிப்பதை
காண முடிவதோடு மட்டுமல்லாமல் நம்மையும் அந்த பேரலைகளுக்குள் இழுத்துச் செல்கிறது.
பத்திரமாக பயணப்படுங்கள் பயமாயிருந்தால் இந்த நூலின் ஆசிரியர் பாரதி கவிதாஞ்சன் அவர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள் நூலுக்குள் அவர் அலைபேசி எண் உள்ளது.
நூல் கவிதை தொகுப்பு
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு 
ஆசிரியர் பாரதி கவிதாஞ்சன்
பதிப்பகம் பரிசல்
நிறை நேசங்களுடன்
வழிப்போக்கன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *