ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – "ஒரு துலுக்கப் பரதேசியின் ஜீவிதக் கதை" - தயானி தாயுமானவன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “ஒரு துலுக்கப் பரதேசியின் ஜீவிதக் கதை” – தயானி தாயுமானவன்

 

 

 

இது சிறுகதைகளின் தொகுப்பு.யாருடைய அணிந்துரையும் எதிர்பார்த்து ஐந்து வருடங்கள் காத்துக்கிடக்காமல் (பெண் மனம் கனிவதற்க்காக தன் ஆயுளையே தொலைத்தவன்) தான் துணிந்து இப்படி ஒரு நூலை படைக்க முடியும். வாழ்வின் சீரையே அணியாக்கிய நூல் இது. உண்மைகளின் ஓலையை இழுத்துப் பின்னி பின்னி முதுகும் வளைந்த வாழ்வு. இது உழைப்பின் கதை. நடு நடுவே எல்லோருக்குமான கூடிருப்பும்.

கொஞ்சம் அன்பும்….
கொஞ்சம் வானம் பார்த்த நிம்மதியும் ….
மனதுக்கினியாளின் புடவை முந்தியில் வேர்வை துடைக்கும் பாக்கியமோ அற்றவனின் உதிரக்கதைகள்.
அன்புசெய்தல் என்பதை மானுடம் விட்டு விட்டு ,நமக்கு ஓர் அடிமை கிடைத்துவிட்டான் என்று….
குனியக் குனியக்கொட்டி
நீ சாதித்தது தான் என்ன? மக்களின் வியாபரத் தந்திரங்களில்
கருணை கையேந்தி நிற்கிறதா?
என்ற கேள்வி முதலாளித்துவ மீசைகளுக்கும்.,
வாரிசுகளுக்கு கள்ளப்பணத்தில் கோட்டை கட்டுபவனும் இதே சமூகத்தில்
நம்மை கடந்துபோகிறான். சுரண்டிச் சுரண்டி மற்றவர் உழைப்பும் தனது கஜானாவில் தங்கக்காசாக சேர்த்தாலும் உலகம் உங்களை மன்னிக்காது என்பதற்கான அறைகூவல் இந்த நூல்.

யாரைப்பற்றியும் கவலை கொள்ளாத தலைப்புகள்…( படலம் – 1)

ஏழு கழுதை வயசு:

முதல் தலைப்பு.

காதலில் அதுவும் முதல் காதலை மறக்க முடியாத ஒரு வெள்ளந்தி இளைஞனிடம் இந்த சமுதாயம் திணிப்பது திருமணம்,பிள்ளைப்பேறு,படிப்பு வேலை,பிள்ளைக்கு கல்யாணம் என பாசம் கொண்ட தாய் நடித்து நாவின் நரம்பற்ற வார்த்தைகளால் அவர்களை சீண்டிப்பார்ப்பது இந்த குடும்பிகளின் குசும்பு. வாழ்வை வாழ்ந்து முடிப்பதும் அவர்களின் விதிவசம் விட்டு யாருமற்ற சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பது
என்ன நியாயம்.?
சூழல் அறியாத
சமூகம்.
வாழ்வு என்பது
உனக்கு வேறு….
எனக்கு வேறு…..
நாட்கள் ஒன்றுதான்…
நண்பா.
என்பதை எப்போது அறியும் இந்த மானுடப்பிறவிகள்.
ஏழ்மையில்
பிறந்துவிட்ட குற்றத்திற்கா
இத்தனை கேள்விகள்….?
அடடா பெற்றோரும்….
ஊரார் பழி சுமத்துவார்களே
என கேள்வி கேட்ட ஊரானின்
கிளிப்பிள்ளையை அப்படியே
கைத்தலம் பற்ற
மேடைபோட
ஒத்துக்கொள்வானா? என்றால் இல்லை. அப்போது முதலில் வந்துவிடும் சாதியும் இன்னபிறவும்.
ஊருக்கு உபதேசம்…
ஏழ்மைக்கு
அறிவுரைகள்.

முதல் சந்திப்பு (படலம் – 2)

என்பது இவரைப் பொறுத்தவரை ஒரு மனதுக்கு பிடித்த (முதல் பார்வை) தேவதையின் பார்வை பட்டுவிட்டதே முதல் சந்திப்பு.
அது ரம்யமான சந்திப்பா?
ரம்யாவுக்கான காத்திருப்போ?
ஆயுள் முடியும் வரை.
காதல் இரசனையுடையது. என்றோ பார்த்த ரம்யா
இப்போது ….
பார்வை படும் தூரம்தான். மூன்று வருடங்களுக்குப் பிறகு
ஆனால் இளம் வயது, அவளின் பதிலுக்கான கேள்வியை ஈமெயில் மூலம்
கேட்பது என முடிவு எடுத்த மனது…
இளமையும் வெட்கம்
கொள்ளும் மனது. நேரடியாக கேட்கும் காலம்
மலையேறிவிட்டது.
காதல் துணிவு கொண்டது.
அது துயரத்தின் கண்ணீரையும் தாங்குமா தெரியாது. அதுவும் காதல்
கத்தரிக்காய் எல்லாம் கிடையாது. நட்பாய் போதும் என்பதுதான்
பெண்மையின் மனம்.
நட்பே என்றாவது மனது மாறிவிடமாட்டாளா? என்ற எதிர்பார்ப்புதான்
என்று சொன்னால் ரம்யா ஒருசமயம் என்னை மறுதலிப்பாள்.
இரண்டு மனங்கள் காதலிக்கலாம்.
சமூகம் மற்றொரு சமூகத்தை ஒருபோதும் காதலிப்பதில்லை என்பதே இங்கு
குழுமனப்பான்மையும் அதைச் சார்ந்த அரசியலும்…
கோலோச்சிக்கிடக்கிறது.
தேவதையோடு பழகிய பொக்கிஷமான நாட்கள் – பார்த்தவுடன் தொற்றிக்கொள்ளும் ரோமியோக்களின் காதல்.சடசடத்து முடிந்துவிடும்
ஒரு மின்னல் போல.
நீண்டு பெய்யும் மழைபோல காதலின் கருணையை எந்தப் பெண்ணும் உணருவதில்லை என்கிறார் நௌஷாத்கான்.
இந்த உலகத்தின் துருவப்பகுதியில் இரண்டே பேர்
மட்டும் வாழ்த்திருந்தால்
அவர்களுக்கிடையேதான்
காதல் பூ பூத்திருக்கும்.
அங்கு ஏற்றத்தாழ்வு
இல்லை.
கெக்கலித்து
கேலி செய்து
பிரித்து விடும்
துரோகம் இல்லை. வயதும் தடையில்லை. முக்கியமாக சாதி இல்லை.
தீராக் காதல் அந்த நதிபோல
முற்றுப்பெறுவதில்லை.

(படலம்-5)
ரம்யாக்கள் தங்கள் சொப்பனங்களின் பொருளாதார…
பாதுகாப்பு கூட்டில் முட்டையிட்டு… சிறகு முளைத்த பறவைக்கு அதே
“பரணி” பெயரை வைத்து தங்கள்
உண்மையான அன்பை, மறவாது இருக்க துருப்புச்சீட்டாக மகனுக்கு-
பரணி -என்ற பெயரை வைத்து நட்சத்திர கூடாகி விட்டது அது. உண்மையான பரணியோ முப்பத்தேழு வயது முடிந்தும்
இன்னும்…காத்திருப்பதை…காலம் கண்டும்
காணாததுபோல ஒரு குறிஞ்சிப்பூ
அரிதாக பூத்து,
தற்செயலாகவே உதிர்கிறது. அதில் எந்த வேலிகளும் இல்லை. வானம் எனது எல்லை. மண் எதுவும்.., நேசம்- என்பதே சுவாசம்…அதில் எந்த மண்ணோ…
தூரதேசம்…போனாலும், இளையராஜாவின் பாடல் இருக்கிறதே… ஆறுதலுக்கு.
அபிநயங்கள் பேசும் காதல்.
கும்பகோணத்தின் நெய் விளக்கு, ராமசாமி கோயில், குளக்கரையின் நீரோசை, பில்டர் காபியின் மணம், சுட்ட அப்பளத்தின் வாசனையோடு திரிந்த ஷாநவாஸ்க்கு அறிமுகமாகும் அபிநயா வாணி விலாஸ் சபா கற்றுக்கொடுத்த பாடம் ஏராளம்.
யாரையும் தப்பாக பேசாதே.
என போதித்த அந்த சுட்டும் விழிச்சுடர்தான் – கண்ணம்மா…
புத்தராக உபதேசம் வழங்கியிருக்கலாம்….. தி.நகர் ஐஸ் கோல்டு காபி குடித்த படி ஒரு எழுத்தாளனுக்கு உண்மை இருக்க வேண்டும்.
கிசுகிசுக்களை நம்பாதே. பெண்களை தவறாக பேசாதே. கண்டவன் எழுதுவதை நம்பி என்று உபதேசம் செய்தது இப்போது பலித்தும் விட்டது. ஆம்
பாரதி கண்ட காதலைத் தான் நௌஷாத்கான்
எழுதியிருக்கிறார்.
சமூகங்கள் ஒத்துக்கொள்ளாத காதலில்…
“காதல் வாழ்க்கையின் ஒருபக்கம். அந்த கிழிந்துபோன பக்கத்தை கிழித்து போட்டுவிட்டு உன் வாழ்க்கையை தொடர் “என்று சொன்னவளுக்கு….
சந்தர்ப்பம் வந்ததும் இதயத்தையே
கொடுக்கத்துணிந்த ஷாநவாஸ் இப்போதுதான் நினைத்ததுபோலவே சுடராக இணைந்து விட்டான் தன் அபிநயாவோடு.
தன் இதயத்தை கொடுத்து.
காதல்- கருணையென்பது யாரையும்
கேட்டுவருவதல்ல. சாதி பார்ப்பதில்லை.
காதலும் ஏழைதான்.
அதனால்தான் அது தன்னை நிரூபித்துக்கொள்ள தன் உயிரையும் வைத்து சொக்கட்டான் ஆடுகிறது.
அபிநயா வாழ்வு சிறந்துவிட்டது.
காதல் இன்னும்
தன் அங்கீகாரத்திற்கு அனுமதி கேட்டபடி…
இன்னும் பேனாவோடு திரிகிறது.
முடிவு பெறாத காதலின் பந்தம் தொடரும்.

உண்மையான நூலின் கதை இங்கேதான்
தொடங்குகிறது.(பாகம்- 1) பக் – 47.
வாழ்வின் சூழல்
நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
சகுனிகளற்ற கதைகள் ருசிக்காது…. மக்களே.
ஆடிட்டர் முருகன் அவர்களிடம் வேலைக்கு சேர்ந்து கற்றுக்கொண்ட அக்கௌண்ட்ஸை -விட எடுபிடி வேலைகள் தந்த ராஜதந்திரி. அவரின் நண்பன் படத் தயாரிப்பாளர்.
வைரமுத்துவிடம் பாடல் எழுத வாய்ப்பு என
கொஞ்சம் பிஸ்கட் வில்லைகள் போட்டு
துரோகத்தில் சதிராடும்
அவர்களின் முகங்களுக்கு
நான் அனுபவ வெளிச்சம்போட்டு வைத்திருக்கிறேன்.என் மனத்திரையில்.
மிர்சாவிடம் (எம்.பி.ஏ-பட்டதாரி )சினிமா வெளிச்சத்தின் இருட்டுத்திரைகளின் படுதாக்களை…
விரித்துக்காட்டிய கடவுள்.

இரவு நேர ஹோட்டல் வெயிட்டராக வேலை செய்யும் ஜஸ்டின் அண்ணா.பசி – என உண்மையை சொல்லி, நூறு ரூபாய் கடனாய் வாங்கிச் செல்லும் நாளில் முடிவு செய்கிறான், மிர்சா. ஒரு பி.ஜி.டிகிரியை முடித்து விட்டு வருகிறேன் என்று கிளம்பிய போது படிப்புக்கான செலவுகளை சமாளிக்க மெடிக்கல் கம்பெனி வேலை..பார்த்தபடி மேன்ஷனின் தங்கிய படி அம்மாவின் ஏச்சுக்கு பயந்து, சென்னைவாசம்.
திறமை இருந்தாலும் நல்ல மனிதர்களின் நட்பு தான் உன்னை மேலேற்றும் என்று போதனை செய்த உப்புமா கம்பெனியால் ஏமாந்த பஞ்சபாண்டவர்களின் உபதேசம்… புத்தன் சொல்லாதது.அவமானங்கள்
அனுபவமாகும் காலம்…
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்தானே.
முருகன் ஆடிட்டர் ஆடிட்டிங் செய்த கம்பெனி சினிமா தயாரிக்கும் கம்பெனி – அதுவும்… சென்னை.

வைரமுத்துவை சந்திக்கும் ஆவல் …கூடிவர விடுமுறை நாட்களையும் நாயாக அலைந்து வேலை செய்தும் மிர்ஸா துயரத்தை தவிர எதையும் அனுபவிக்கவில்லை தன் பிறந்தநாளான ஜன-27 அன்றும்…. அவமானத்தின் உச்சங்களை சந்தித்துக்கொண்டிருந்தான் மிர்சா.
கிருஷ்ணவேணி தியேட்டர்-வீரமும் ஈரமும் படம்.கூடவே குமட்டி எடுக்கும் இடைவேளை சிறுநீர் கழிக்கவும் முடியாத இடைவேளை – அசோக் பில்லர் – மெரினா பீச், – நீளும் இடங்களின் முடிவில் ஆறுதலுக்கு ஒரு ஜீவன் .அது…
சுஜாதா மேடம்.

நிவின்பாலி கதையான – பிரேமம் – மலர் டீச்சர் கதையெல்லாம்
மிர்சாவிடம் இருந்து திருடியதுதான் போல. அத்தனை சுவராஸ்ய சம்பவங்கள். ஹீரோ வில்லனாக மாறும்போது….
நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
மிர்சாவுக்கு நடந்தது அல்ல இது.
காதலுக்கு ஈரமுண்டு.
வீரமுமுண்டு.
வருங்கால கனவு இப்போது குணம் ,அறிவு , மெத்த படிப்பு, அறிவார்ப்பேச்சு- கல்யாணம் பண்ணினா “சுஜாதா மேடம்” போல ஒரு பெண்தான் வாழ்க்கை துணையாக….
இமைக்குள் பூ பூத்தது.
சுஜாதா மேடம் நல்லபடியாக
பாடம் எடுக்கும்போது ஓவர் சவுண்ட்விட்ட காட்டுமன்னார்குடி சந்தோஷ்க்கு “என்னையும் மீறி அடித்துவிட்டேன்” எனும்போது…
வில்லன் -காட்டு பயலுகளுக்கு நமக்கு மிர்சா ஹீரோதான்.
சுஜாதா மேடம்,
“எனக்கு திருமணம்- “என பத்திரிகை வைத்தபோது
கண்ணீர்துளிகள். ஆனால் இது காதலில்லை.
மனம் பக்குவப்பட்டதன்
மனதை செங்கல்சூளையில் புடம்போட்ட
காதல்.அதுதான் கடைசியாக
பார்த்தது. பட்டுபுடவை-மாலை சகிதமாக சுஜாதா மேடம்.
தன் நீண்ட கூந்தலில் ஒற்றைப் பூவும்
வைக்காத அந்த மலர்… மலர்களால் தன்னை அலங்கரித்து..
பார்த்த நினைவு.
துவைத்து காயப்போட்ட
ரீகல் சொட்டு நீலம் பிரகாசிக்க மனது நீலவானமாக.
ஆடிட்டிங் ஆபிஸ் முதல்நாளே …
உங்க பேருமேடம்.
“சுஜாதா.” – என்றாள் அவள்.
உடைந்தது எது என அறியேன்.

(பாகம் – 6)
ஒரு தமிழனைப் பார்த்தால் எந்த ஈகோவும் இல்லாமல் பேசுவேன் என்பதே என் நிறையும்,குறையும் கூட.
குழந்தை போல எல்லாவற்றையும் ஒளிவுமறைவின்றி பேசுவது என்னியல்பு. – எனும் வரிகள் மிர்சாவின் குணம்.
தாம்பரத்திலிருந்து பேருந்தை பிடித்து வரும் சுஜாதா என்னை விட ரெண்டு மூன்று வயது மூத்தவர், எனினும் அக்கா எனக் கூப்பிட்டது கிடையாது. அவர்களோ பெயர் வைத்து கூப்பிடாமல் ….
தங்கம், தங்கம் என்றே அழைத்தது மிகவும் மகிழ்வு. மிர்சாவுக்கு.
வீட்டு சாப்பாடு கிடைக்காத அந்த நாட்களில் … நிறைய படித்தும்
ஆங்கிலம் பேசத் தெரிந்தும். குடும்ப பாரம் – இந்த ஆபீஸ் வேலை – சுஜாதா அக்காவுக்கு வாய்த்த,வரம். ஆபீஸ் ஆட்களுக்காக, மூன்று பேருக்கு ரைஸ் குக்கர் வைப்பார் சுஜாதா.மாமி மெஸ்வத்த குழம்பும் சாம்பார் கூட்டும்
ரெண்டு கரண்டி நெய்யும் உணவை தேவார்மிதமாய் மாற்றியிருந்தது.
சுஜாதாவின் காதல் கதை மிர்ஸாவினுடையது போலல்லாமல்
வலிமிகுந்தது.

இல்லாத காதலுக்காக-பின் தொடர்ந்தவன், திருமணத்திற்கு சம்மதிக்காவிட்டால் கையை அறுத்துக் கொள்வேன் என்று அறுத்துக்கொண்டதும்….
எனக்கு அவன் மேல் காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை, என்பதற்காக
எலிமருந்தை குடித்து நிரூபித்த பின்னேதான் நம்பியது – சுஜாதாவை சுஜாதா குடும்பம். இங்கு நெருப்பு குண்டங்களே தேவையில்லை சீதைக்கு. வாழ்வதே அங்குதான். பேர் தான் வேறு போல – நிறைய சுஜாதைகள்.
காதல் வெறும் மூணு வார்த்தையில்லை…என ஒரு நான்கு வரிகள்.
மிர்ஸாவின் காதல் வரிகள் அவை. இதை இன்றைய ஆசிட் முரட்டு சிங்கிள்களும்
நான்கெத்து – எனத் திரியும்
காதல் அந்நியன் -களுக்கு இந்த
நூல் சமர்ப்பணம்.

(பாகம் – 7) -கூல் சுரேஷ் என்ற
சித்தார்த்தன்.
சினிமாவில் வரும் பிரம்மாண்டங்களில் அவர்களின் வாழ்வு இல்லை.
துணை நடிகனுக்கும் வாழ்வு உண்டு.
அவனுக்கும் குழந்தைகள் உண்டு கனவுகள் உண்டு.
காமெடி – வில்லன் என கலக்கும் அவர்
சாதாரண பெட்டிக் கடையில் வியாபாரம் செய்ததுதான் வாழ்வியல்.
பட்டப்படிப்பை விட மனிதர்கள் கற்றுத்தந்த பாடம் ஏராளம்.
வாழ்வை – சினிமாவை நம்பி தொலைத்துவிடாதே…

(பாகம் – 8)
நண்பன் கேட்டானே….
என்று சாப்பிடத்தந்த ஈனோ…வாயில் நுரைக்க (ஜீரணத்திற்கான லெமன் கலவை) ஏதோ
மரணம் நடந்துவிடுமோ என பயத்தில்
ஆசிரியர் என்னை அடித்து துவைத்த அடி….சொன்ன வார்த்தைகள் (எல்லா ஆசிரியர்களும்கூட இந்த புத்தகத்தை படிக்கவேண்டும்) இயல்பாய் அந்த வார்த்தை இருந்தாலும்…
சாதீயத்தின் கொம்பை கூர்தீட்டும் மனிதர்கள். பிறந்தநாளும் அதுவுமாக….
அதிலிருந்து மிர்ஸா வீட்டோடு பிரியாணி செய்து தரும்
அம்மாவோடு கொண்டாட்டம் முடிந்துவிடும்.
இந்தியாவில் ஈனோ ஏனோ பிரபலமில்லை. அப்போது.
என் கடவுள் நம்பிக்கைக்கு காரணம் அம்மாதான்.
பெரியவனானதும் “நமக்கு கீழ உள்ளவங்களுக்கு உதவு. இறைவன் உன் வாழ்வை பார்த்துக் கொள்வார் “_ என்பதுதான் அந்த தாயின் பொற்பதங்கள்.
அப்படிப்பட்ட பிறந்தநாளன்று…குட்டி பாரதி – ஒரு கவிதை சொல்லுங்க என்று கிண்டல் செய்துவிட்டு. மொத்த ஆடிட்டர் சகாக்களும்..
அவர்கள் கொட்டிய அமில வார்த்தைகள் இன்னும் காதில் ஒலிக்கிறது.
என் நண்பன் (புதிதாக வேலைக்கு சேர்ந்த)அருண் தந்த ஆறுதல்
வார்த்தைகள் அம்மாவுக்கு யாருமில்லையே என்ற வருத்தம்தான் என்னை உயிரோடு வைத்தது என்பதை
மிர்சாவின் இதயத்தை துண்டாடியவர்கள் அறியவில்லை.
பணம் – பதவி – திமிர்-இது தான்
வாழ்வு என நினைப்பவர்களை… பெருமாளும்
மன்னிக்கமாட்டார் வேதமும் மன்னிக்காது.
எனும்போது ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது.
ஆடுமாடுகள் சாது. அதை சாப்பிட்டால்
சிங்கம் – புலி
சாதுவாகுமா என்ன?
உணவில் இல்லை எதுவும்.
குணத்தில் இருக்கிறது எல்லாம்.

(பாகம் – 9) ஆடிட்டரை கழற்றிவிட்ட புத்தன்.(மிர்சா )
நல்லபடியாக சொந்த காரணங்களைச் சொல்லி ஆடிட்டிங் கம்பெனிக்கு குட்பை….. சொல்லியாயிற்று. இவர்கள் அடிமைகளை உருவாக்கவே துடிப்பவர்கள்.
சரியான இடத்தில் உட்கார வைப்பவர்கள் அல்ல. ஒரு கிளார்க் வேலை கூட வாங்கித் தராத அந்த ஆடிட்டர். இடைவெளியில் வங்கி வேலைகளுக்கும் தேர்வுகள் எழுதியாயிற்று.வேலைவாய்ப்பு அலுவலகம் ஒரு நல விசாரிப்பு கூட கிடையாது.
ஐநூறு இடம்- வேலை வாய்ப்பு – பதிமூணு லட்சம் பேர் தேர்வு எழுதுவது எதில் சேர்த்தி.?

நம் நாட்டின் இளைஞர்-சக்தி பெரியது. வேலையின்மையோ ஒரு சாபம்.
யானைக்கு சோளப்பொறி.

மதம் சார்ந்த கல்விக்கூடங்களில், வேலையும் மதம் சார்ந்தே மாறிப்போனது அபத்தம். குறியாடுகள் + வெள்ளாடுகள் + சிலுவை போட்ட ஆடுகள் + பட்டை போட்ட ஆடுகள் – என எந்தக் குறியுமற்ற ஆடுகள் எங்கு வேலை செய்யும்? சமூகத்தை பிரித்து கையாளும் தந்திரம்….இன்றைய அரசியலுக்கு இலாபம். படிக்கும் பிள்ளைகள் எந்த சாதியானாலும்
கட்டும் பணத்துக்கு சாதியில்லை- எந்த மானுடம்
யாதும் ஊரே
யாவரும் கேளிர் என்று எழுதிவைத்துவிட்டு போனதோ….
அதை படிக்க
நம்ம சாதிக்காரன் கல்லூரி என்பதால் இலவசமாகத் தருவானா?
கல்வியை.
சாதி ஒரு மாயை அதை ஒழிப்பதே கல்வி.சமத்துவம் பேசுபவனுக்குத்தான்….
அவனுக்குத்தான் இனி எதுவுமில்லை.
செயல்பாடு வேறாக.சொந்த தொழில் செய்து
நஷ்டப்பட்டு நிற்கும்….நண்பர்கள் வாழ்வு…
மீண்டும் அந்தத்தவறை
செய்யவிடவில்லை.
இதோ….
உயிர் கனவை உதறிவிட்டு
உயரப்பறக்கிறேன்.
இரைதேடும் பறவையாக….
விமானத்தில்.

(பாகம் – 10)
தாயின் அறிவுரையும் வாப்பாவின் கஷ்டங்களும் முள்ளாய் தைக்க குடும்பத்தை கஷ்டப்படாம… பார்ப்பது மட்டுமே, கிடைத்த வேலையை பார்ப்பது, புத்திசாலித்தனமும் கூட.

விசாக்களின் கதைகளில் உதிரம் வழிகிறது.
ஒரு வெண்ணை தடவிய ரொட்டியும் ஒரு தேநீரும் இலவசம். குடிக்கும் தண்ணீரோ விலை.

அற்ப பணத்திற்காக கேடு கெட்ட சுவையற்ற ரொட்டிகளை (கபூஸ்) சாப்பிட்ட காலம். இந்த பணம்தானே சாப்பிட வைத்தது.

வலிகள் தாங்கும் இதயம்- இருந்தால் எங்கும் வாழலாம். தேதி பார்க்காத வாழ்வு. வெள்ளிக்கிழமை மட்டுமே வாப்பாவிடம் பேசும் நேரம் – உரையாடலில் தெம்பு ஏறும். மனசு லேசாகும் என்பது தந்தை தன் கஷ்டங்களை சொல்லாது ஏன் என இப்போது புரிகிறது….மகன் படும் துன்பம் அறிந்த ஆறுதல் போதும் .வேறு எதுவுமே வேண்டாம். காதலிக்காதவர் யாருமில்லை.
காதல் மெளனம்
காக்கும்…. துயரத்தில்.

(பாகம்-11)
சொல்லப்படாத காதல் அத்தியாயம்

இந்த உலகத்தில் மிக விருப்பமான நபர் என்றால் – அது வாப்பா தான்.
அவர் எங்களுக்காக அரபுதேசத்தில் உழைத்தார்.அவரின் நேசம் தொலைபேசியின் வாசம். பாசம்
என்பது உணரப்பட்டதில்லை – இளமைகாலம்.
வீடு விட்டால் காலேஜ்.
காலேஜ் விட்டால் வீடு.
விடுமுறை நாட்களில் கூட கிளை நூலகமே கதி. நண்பர்கள் குறைவு.
அம்மா, – பிறகு
சுஜாதா மேடம்,
பிறகு
பேபி என்ற தேவதை. விடலைகள்…. கடலை போட்ட பேபிக்கு காத்துக்கிடப்பேன் ,என் பேருந்து கடந்து சென்றலும்….
அவள் ஏறும்
பேருந்து வரும்வரை
காதலும் கால்கடுக்க.
ஆனாலும் பேபி – அசோக் – காதல் பட்சிகள் என்பதாக என்னிடம் சொல்லப்பட்ட புனைவுகள் வேறு சமூகம் என்பதால் – “நட்பு என்றாலும் நீ நம்புவாய் தானே” என்ற விஷமக்கார நண்பர்கள்.”அவசரி-பட மாட்டா-மச்சான்” என பஞ்சாயத்து செய்த நண்பர்கள். ஏற்றி விட்ட கதைகள் – அவளை வெறுக்க ஆரம்பித்தேன்.
பேபி சிங்கப்பூர் மாப்பிள்ளைக்கு வாழ்க்கை பட்டு திருமணம் முடிந்த சேதி கேட்டு முதல்முறை குடித்தேன். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நீ…….. மன்னிச்சுடு மச்சான் – இனி குடிக்காதே.
காட்டுமன்னார் பசங்க கேட்டபோது கூட குடிக்காத நீ..
இப்போ ஏன்….?
I am really Sorry என்று அவன் போன பிறகும்
சாலையை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

(பாகம் – 12)
சொல்லப்பட்ட காதல் அத்தியாயம்-ரெண்டு
பறவைகள் றெக்கையை
சுமையாக நினைக்குமா?
காயங்கள் வடுவானாலும்
நதி போல் ஓடிக்கொண்டேயிரு.

அருவியென்பது கூட ஏற்றம் இறக்கம் – என்றால் ஜெயிப்பது நிச்சயம்.
எத்தனையோ அலைகழிப்புகளுக்கு இடையே மெடிக்கல் ரெப் வேலை. சைக்கிள் – பஸ் பயணம் – ஆனாலும் வெற்றி. தேர்வுகளுக்காக தராசுரம் கைலாசநாதர் கோவில் வெளிப்பிரகார மரங்களின் நிழலில் படிப்பேன். – ஆனால் பேபியின் சாயலில் ஒருத்தி அனிதா பக்தி – அமைதி_ ஸ்கூட்டியில் பிள்ளையார் படம் (காதலுக்கு
கண்ணில்லை என்பது நிஜம்)
அனிதாவுக்கு எழுதிய கடிதம்
மிக மிக அற்புதம்…
ஹஹஹா வாசகர்களே….
கவிதை வரம்
காதல் வரம்.
அது நமக்கான
பிரதிகளை தேடியபடியே கடக்கிறது முகங்களை.
உங்களுக்காக விட்டு வைத்திருக்கிறேன் (பக் -85) வரிகளை.
நண்பனின் பார்வையில்….
ஸ்கூட்டியும் -சைக்கிளும்
எப்படிடா
காதலிக்கும் மண்டு என்று
குட்டுவைத்த நண்பன் விஜய்.
சொல்லப்படாத – காதல் -கடிதத்தில் உறங்கியது. வளைகுடா நாடு வந்தபிறகு… முகநூலில் ஒரு வழியாக தேடி கண்டுபிடித்தபின்….இன்பாக்ஸில் விண்ணப்ப கடிதம் கொடுத்தாயிற்று.
“பிரியத்திற்காக மிகவும் மகிழ்ச்சி. போன வருடம் திருமணம் ஆகிவிட்டதே”
என்ற மாற்றான் தோட்டத்து மல்லிகையிடம்
மன்னிப்பு கேட்டேன்.
Its ok என்பதோடு
முடிந்தது
பெருங்காதல்.
ஒன்றாக வாழ முடியாவிட்டாலும்
நன்றாக வாழட்டும் என்று நினைப்பதுதான்
காதல்.

(பாகம்- 13)
திசை தெரியாத பறவை திரும்ப கூடடைதல்.
வாப்பா தன் மனைவியின் கனவை (வீடு) கட்டி விட வேண்டும் என்ற …
உறுதியில்…(தன் மகனை புதுவீட்டில் குடித்தனம் வைக்கும் கனவு)
அறிமுகமான நல்ல பையன் (வாப்பாவுக்கு) இன்ஜுனியர்
கடைசியில் ஐந்து லட்சத்தில் ஆரம்பித்து
இரண்டு லட்சம் தந்தால் வேலை நடக்கும் என்று
வஞ்சகமாய் உள்ளூர் சிமெண்ட் கடைகாரனுக்கு உறுதி தந்த வாப்பாவை ஏமாற்றி மூட்டைகள் கைமாறின. பனிரெண்டு இலட்சம் கை மாறிய பிறகும்
சாவி கைக்கு வரவில்லை.
அவன் உள்ளூர்காரன் இல்லை என்பதால் உள்ளூர் பஞ்சாயத்திலும் முறையிட முடியாது… போலிஸ் நமக்கு ஒத்துவராது என்ற வாப்பாதன் மகனை குடும்பமும் குடித்தனமுமாய் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மண்ணள்ளிப் போட்ட வேதனையில்..
வாப்பா நோயில் படுக்க – உலகமறியாத அம்மா ஏறி இறங்கியபடிக்கட்டுகள் ஏராளம்.
அரைகுறையாய் கட்டப்பட்ட வீட்டில் வாப்பாவின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. சூழல் சரியில்லை. நீ ஊருக்கு வர வேண்டாம் என்ற கண்டிப்பை மீற முடியாத மகனின் மனம்
வாப்பாவின் முகத்தையே எண்ணி அழுது துடித்தது கண்காணாதேசத்தில்.
நான்கு வருட போராட்டத்திற்கு பிறகு வேறு மேஸ்திரியை வைத்து வீட்டை கட்டிமுடித்தான் மிர்சா.
என் அம்மா வாப்பாவின் வலிகளுக்கு முன்னால் நான் பட்டது கஷ்டமல்ல.
இனி அம்மாவின் விழிகளில் கண்ணீரை காணாத மாதிரி செய்ய வேண்டும்.
என்னைப்போன்ற…… என்ற வரிகள்…படிக்க படிக்க….கண்ணீரை துடைத்துக்கொண்டேன் என்னையறியாது.
அம்மாவின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது — நபிகள் நாயகம்.
இறைசொல்லில் முடியும் வாழ்வு.
துணையாக
‘அவர் தந்திருக்கும் பொக்கிஷங்கள்…
அன்புள்ள புருஷா….
தமிழும் அவன் காதலியும் பரிசாக தந்த குழந்தையோடு நிற்கும் காதல்…
தனித்தே நிற்கிறது.அவளின் பார்வையோடு அநாதையாக வாழ்வு.
*முத்தத்தின் வாசனை….
காதலைப் பற்றிய வார்த்தைகள்.இரண்டுபேருமே
ஆத்மார்த்தமா-
எல்லாமே சரியா இருந்தா, கடவுளுக்கே பொறுக்காது-உண்மைதான்.
காதல் கை கூடினால்…
விதி வந்து சதி செய்யும் என்பதுதான் உண்மை.
லைலாவுக்கு ஆயிரம் காதல் கடிதங்கள்…
வளைகுடாவில் வேலை செய்யும் எல்லோருக்குமான வாழ்வு.
மனைவியின் ஏதோ ஒரு வளையல் – உடை – அவளின் பதிவு செய்யப்பட்ட குரல்-பர்ஸில் உள்ள மனைவி குழந்தைகளின் புகைப்படம்.
யாராவது ஊருக்கு வந்தா பேசி
கேசட் அனுப்பிவை- இவையெல்லாம்
கடைசியாக 45 – வயதில் மஞ்சள்காமாலை வந்து மரணித்தாலும் சுவற்றில் மாட்டப்பட்ட புகைப்படத்தில் புன்னகையோடு காட்சியளித்தலைலாவின் உள்ளம் கொள்ளை கொண்ட நாலரை அடி குள்ள மச்சான் சலீம் – என முடியும்போது வாப்பா வந்து போகிறார் கண்களுக்குள்.
காதல் கதி மோட்சம்-காதல் என்பது உடலல்ல…. மனோலயம்.
அது மனதின் லயம்….
தேவி எனும் தேவதையை
இழக்கத்துணியாத இராஜகுமாரனின் கதை.
தோட்டாக்களில் தொலைந்த ஒரு வண்ணத்துபூச்சியின் காதல் கதை – 2008ம் வருடம் நடந்தது. சேது- ஜானுவின் காதல் தொலையாமல்
வாசகர் மனதில் வாழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாளொன்று வரக்கூடுமோ?
சிலுவைகளுக்கு வலியை தந்துவிட்டு
வித்யாக்களே முந்திக்கொள்கிறார்கள் கடவுளாகி விடவும்.

-தயானி தாயுமானவன்

நூல் : ஒரு துலுக்கப் பரதேசியின் ஜீவிதக் கதை.
ஆசிரியர்: லி.நௌஷாத்கான்.
வெளியீடு: மௌவல் பதிப்பகம்
21/9 வரதர் மட விளாகம் தெரு ,
வலங்கைமான் -612-804
நூல் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 97877-09687

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *