வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்பவர் தோழர் பி.ஆர்.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்தெடுத்த முன்னோடித் தலைவர்களில் முக்கியமானவர் தோழர் பி.ராமமூர்த்தி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – உருவாவதற்கு அடித்தளமிட்ட நவரத்தின தலைவர்களில் ஒருவராகவும், இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மகத்தான தலைவராகவும் அவர் திகழ்கிறார். தொழிற் தகராறு நீதிமன்றங்களில் தொழிலாளர்களுக்காக அவர் வாதாடிய வழக்குகள் இன்றைக்கும் தொழிற்சங்க இயக்கத்திற்கு வரலாற்றுப் பாடமாகத் திகழ்கின்றன.
இந்தியா சுதந்திரம் பெற்று மொழிவழி மாகாணங்கள் அமைக்கப்படுவதற்கு முன்னதாக, தமிழ்நாடு, ஆந்திரா, மலபார் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி இருந்த சென்னை மாகாணத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறவில்லை. மொத்தம் 375 இடங்கள் கொண்ட சென்னை சட்டமன்றத்திற்கான தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் பெற்ற இடங்கள் 152. பிரதான எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி 62 இடங்கள் பெற்றது. தோழர் பி.ராமூர்த்தி, ஆந்திர கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் நாகிரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸுக்கு மாற்றாக ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசை உருவாக்கிட முயற்சித்து 166 உறுப்பினர்கள் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க ஆளுநருக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுபெற்ற உறுப்பினர்கள் 70 பேர் இருந்தும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அன்று முதலமைச்சராக நாங்கள்தான் வருவோம் என்று நிர்பந்திக்காமல், 35 இடங்களைப் பெற்ற கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியின் தலைவர் டி.பிரகாசத்தை முதலமைச்சராக்கிட முன்மொழிந்தது.
‘ஐக்கிய ஜனநாயக முன்னணியின் அச்சாக இருப்பது கம்யூனிஸ்ட் கட்சியே. எனவே, கம்யூனிஸ்டுகளின் தலையீடு இல்லாத ஆட்சியை உறுதிசெய்ய வேண்டும்’ என்ற நோக்கில் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனநாயக முன்னணியை ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்திட, ஆளுநர் மூலமாக காய்நகர்த்தியது. அவசரகதியில் ராஜாகோபாலாச்சாரியாரை மேலவை உறுப்பினராக்கி, அவரை ஆட்சியமைக்க அழைத்தது. இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களே வாதாடினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும், தேர்தல் வாயிலாக வெளிப்பட்ட மக்களின் விருப்பம் என்பது, அரசாங்கம் அமைக்கப்படுவதில் பிரதிபலிக்க வேண்டும் என்று தோழர் பி.ஆர். அன்றைக்கு உயர் நீதிமன்றத்தில் செய்த வாதப்பிரதிவாதங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில் மிக முக்கியமானவை. அன்றைக்கு பத்திரிகைகளில் அவரது வாதங்கள் முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் பேசப்பட்டன.
சோஷலிச இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உயரிய லட்சியம் கொண்ட ஓர் கம்யூனிஸ்டாக, இந்திய, உலக வரலாற்றை அறிந்த ஓர் மேதையாக, தோழர் பி.ஆர்., சென்னை மாகாண முதல் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் எல்லாமே -கம்யூனிஸ்டுகளின் சமூக லட்சியம் என்ன என்பதை உலகுக்கே பறைசாற்றும் பேருரைகளாகத் திகழ்கின்றன. ஒரு கம்யூனிஸ்டாக, இந்திய அரசின் வர்க்கத்தன்மையை இவ்வளவு ஆழமாக, இவ்வளவு அப்பட்டமாக மக்கள் மன்றத்தில் தோலுரித்து அம்பலப்படுத்த முடியுமா என்று நம்மை அவருடைய உரைகள் அசரவைக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஆற்றிய நீண்ட, ஆழமான உரைகள், ஜனநாயகத்தை அனைத்து குடிமக்களுக்கும் உறுதிசெய்வதற்கு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன என்பதைக் குறித்து பாடமெடுக்கின்றன.
இந்திய அரசு எப்படி பிரிட்டிஷ் மூலதனம், பெருமுதலாளிகள், நிலச்சுவான்தாரர்கள் நலனை உறுதிசெய்வதற்காக, உழைக்கும் மக்களை இந்த ஆளும் வர்க்கத்தினர் வரன்முறையற்ற வகையில் சுரண்டுவதை அன்றைக்கு அனுமதித்தது என்ற வரலாற்றையும், அன்றைய காலகட்டத்தில் தொழிலாளிகள், விவசாயிகள் சந்தித்த கொடுமைகள் எத்தகையவை என்பதையும், இந்த உரைகள் நமக்கு விளக்குகின்றன. அதோடு இன்றைக்கு நவதாராளமய கார்ப்பரேட் மதவாத கூட்டு நாட்டின் வளங்களை எல்லாம் பெருமுதலாளிகளுக்கும், அந்நிய நிதிமூலதனத்திற்கும் தாரை வார்ப்பதற்கான அடித்தளம் எப்படி இந்திய நாடு உருவாக்கப்பட்ட காலத்திலேயே போடப்பட்டிருக்கிறது என்கிற விளக்கத்தையும், நமக்கு பி.ஆரின் உரைகள் வழங்குகின்றன.
இந்த நூலில் மொத்தம் 14 தலைப்புகளில் பி.ஆர். ஆற்றிய உரைகள் இடம்பெற்றுள்ளன.
மெட்ராஸ் நாடக நிகழ்ச்சிகள் மசோதா குறித்த விவாதத்தில், இந்தச் சட்டம் சென்னை நகரைப் பொறுத்த வரையில் போலீஸ் கமிஷனரோ, மாவட்டங்களைப் பொறுத்த வரையில் மாவட்ட ஆட்சியரோ, ஒரு நாடகம் ஆட்சேபகரமானது என்று கருதினால் உடனே அந்த நாடகத்தை நடக்காமல் தடை செய்துவிடலாம் என்று கூறுகிறது. கண்துடைப்பிற்காக தடை செய்யப்பட்டவர்கள் இந்த வழக்கை எடுத்துக்கொண்டு உயர் நீதிமன்றத்திற்குப் போகலாம் என்ற பிரிவை அரசாங்கம் வைத்திருக்கிறது. நாடகம் போடும் கலைஞர்கள் எளிய மனிதர்கள். அவர்கள் தொலைதூர மாவட்டங்களில் இருந்து பயணித்து சென்னைக்கு வந்து எப்படி வழக்குக்காக செலவழித்து வாதாட முடியும்? வன்முறையைத் தூண்டும் நாடகங்கள் என்ற காரணம் கூறி திரைவிலக்கப்படும் நேரத்தில்கூட நாடக அரங்கேற்றத்திற்கு தடைசெய்ய இந்த சட்டம் இடம் கொடுக்கிறது. ஆளும் கட்சியானது, தங்களை விமர்சிக்கும் வகையிலான கருத்துகள் நாடகங்களில் இடம்பெறவே கூடாது என்பதை உறுதிசெய்வதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தடுப்பது எவ்வளவு ஜனநாயக விரோதமானது என்பதை, மிகவும் நுட்பமாக தோழர் பி.ஆர். விமர்சிக்கிறார். “அதிகார வர்க்கத்தினரின் கையிலே மேலும் மேலும் பல அதிகாரங்களைக் கொடுத்து, அவர்கள் அதைத் துஷ்பிரயோகம் செய்யவும், அந்த அதிகாரத்தைக் கொண்டு பணத்தைச் சுரண்டும் வசதியைத்தான் செய்து கொடுப்பார்களே தவிர, மக்களுக்கு நல்ல முறையில் உதவி செய்யவேண்டுமென்ற கருத்தே இவர்களுக்குக் கிடையாது” என்று அரசின் வர்க்கத்தன்மையை விளக்கி இருக்கிறார்.
நில வருவாய் மானியக் கோரிக்கை மீதான விவாதம்-1955, மெட்ராஸ் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு மசோதா- 1955, மெட்ராஸ் பூமிதான யக்ஞ மசோதா- 1955 மீதான விவாதங்களில் அவருடைய உரைகள் – அன்றைக்கு நிலவுடைமைக்கு வரம்பு கட்டி, நிலக்குவியலைத் தடுத்து, நிலச்சீர்திருத்தத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும், நிலச்சீர்திருத்த சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பாக, உடனடியாக அரசு செய்ய வேண்டிய காரியம் குத்தகை விவசாயிகள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவதை குற்றமாக்கும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வருவதுதான் – என்பதை முன்வைத்து, அன்றைக்கு விவசாய சங்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னெடுத்த போராட்ட வரலாற்றை நம் கண்முன் கொண்டு வருகின்றன. எந்தெந்தக் கிராமங்களில் குத்தகை குறைப்புச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை, எந்த ஊரில் எந்த காங்கிரஸ் நிலச்சுவான்தாரர் விவசாயிகளைச் சுரண்டுகிறார், பொதுநிலத்தை அபகரிக்கிறார், அவர்களுக்கு உடந்தையாக இருந்த நிலவருவாய் அதிகாரிகள் யார் யார் என்கிற களநிலவரங்களை எல்லாம் சட்டமன்றத்தில் அம்பலப்படுத்தி வைத்திருக்கிறார். குத்தகை பங்கு கொடுக்கும் விவகாரத்தில் மக்கள் தாங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து போராடினால், மாவட்ட ஆட்சியர் தனக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் மாஜிஸ்டிரேட் அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரித்து, 145, 144 பிரிவுகளின் கீழ் தடை உத்தரவுகளைப் போடலாம், பிரச்சனையைத் தீர்த்த பிறகு விளைச்சலை பங்கிட்டுக்கொள்ளலாம் என்று கூறி விளைச்சலை அள்ளிக்கொண்டு போக முடிகிறது- இந்த அளவுக்கு நிர்வாக அதிகாரியாக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றத்திற்குள்ள அதிகாரத்தை வழங்கி, மக்களை வஞ்சிப்பது எவ்வகையில் நியாயம் என்று கேட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாய இயக்கமும் நாடு முழுவதும் முன்னெடுத்த நில உரிமைக்கான, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக, காங்கிரஸ் அரசாங்கம் 1946ஆம் ஆண்டிலிருந்து நிலச்சீர்திருத்தம் இதோ வருகிறது, அதோ வருகிறது என்று கூறிவந்தது. இதன் மூலம், குத்தகைதாரர்களை நிலச்சுவான்தாரர்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு போதிய அவகாசம் கொடுத்தது. கம்யூனிஸ்டுகள் நாங்கள் நிலவெளியேற்ற அவசரத் தடைச்சட்டம் கொண்டு வாருங்கள் என்று வலியுறுத்தினோம். நீங்களோ, அப்படிச் செய்ய வேண்டியதில்லை, நாங்கள் விரைவில் கொண்டுவரப் போகிற புதிய சட்டத்தில் கடந்தகாலத்தைப் போன்ற நிலையை உறுதிசெய்வதற்கான ‘ரெட்ரோஸ்பெக்டிவ் எஃபெக்ட்’ (Retrospective effect)-ஐ வைக்கிறோம் என்று சொன்னீர்கள். இந்தப் பிரிவைப் பயன்படுத்தி வஞ்சிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். நிலவெளியேற்றத்திற்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போய் விவசாயிகள் நிரூபிப்பது சாத்தியமா? சீட்டுக் கொடுத்தா வாரத்திற்கு நிலத்தை மிராசுதார்கள் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுகிறார்கள்? இந்த நிலைமையில் விவசாயிகளால் எப்படி தங்களது உரிமையை நிலைநாட்டிட முடியும்? கிராம அளவில் குத்தகை உரிமையை நிலைநாட்டுவதற்கான மக்கள் மன்றங்களை ஏற்படுத்தினால் யார் நிலத்தை யார் உழுது விவசாயம் பார்த்தார்கள் என்ற உண்மையை நிரூபிக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட அமைப்பை ஏன் அரசாங்கம் ஏற்படுத்த தயக்கம் காட்டுகிறது? நிலச்சுவான்தாரர்கள் பணம் படைத்தவர்கள், அவர்களால் உச்ச நீதிமன்றம் வரை சென்று வெற்றிபெற முடியும், பணவசதி இல்லாத ஏழை எளிய விவசாயிகள் தங்கள் வழக்கை நீதிமன்றத்துக்கு தான் எடுத்துச்செல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்குவது எவ்வளவு மோசமான சுரண்டல் என்பதை தன்னுடைய கர்ஜனை உரைகளால் தோழர் பி.ஆர். நிறுவுகிறார்.
நிலவுடைமைக்கு வரம்பு கட்டி உபரி நிலத்தைப் பறிமுதல் செய்து, நிலத்தை உழுதுவந்த விவசாயிகளுக்கு அவர்களுடைய உரிமையாக நிலவிநியோகம் செய்வதற்குப் பதிலாக, ‘பூமிதான இயக்கம்’ என்ற பெயரில் நிலச்சுவான்தாரர்களிடம் கெஞ்சி நிலத்தை வாங்குகிறீர்கள். நிலச்சுவான்தாரர்கள் தாராளமனம் படைத்தவர்கள் என்று விளம்பரம் செய்கிறீர்கள். அவர்கள் மனமுவந்து கொடுத்த எந்தப் பயனும் இல்லாத கரடு நிலத்தை எப்படி விநியோகம் செய்யப் போகிறீர்கள் என்று இடியென முழங்கி இருக்கிறார். “கிராமத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய விவசாயி, நிலமில்லாத விவசாயி, என்றைக்கும் தன்மானமில்லாமல், தன்நம்பிக்கையில்லாமல், மானத்தை விட்டுவிட்டு வாழ வேண்டுமா? தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் மந்திரியாக இருக்கக்கூடிய காலத்தில், அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் முன்னேற்றமடைய வேண்டாமா? அவர்கள் எப்பொழும் அடிமையாகவே வாழவேண்டுமா? இதில் என்ன நியாயமிருக்கிறது என்று கேட்கிறேன். என்றைக்கும் பணம் படைத்தவர்களுக்குக் கட்டுப்பட்டு தானம் வாங்கக்கூடிய ஒரு நிலையில்தான் இருக்க வேண்டுமா? இந்த தர்மகர்த்தாக்களுக்கு அடிமையாகவே இருக்கவேண்டுமா?” என்று கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறார்.
இரண்டாம் ஐந்தாண்டு திட்டம், பட்ஜெட் மீதான விவாதம், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான தோழர் பி.ஆரின் உரைகள் மூன்றும் – விடுதலை அடைந்த அடுத்த பத்தாண்டில், இந்திய, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கொள்கை யாருக்கு பலனளித்தது, யாரை சுரண்டியது என்பதை பதிவுசெய்கின்றன. தொழிற்துறை, விவசாயத்துறைகள் முன்னெடுத்த திட்டங்களை விமர்சனபூர்வமாக அலசுகின்றன. “முதலாம் ஐந்தாண்டு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அதேசமயத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டாலும் கூட, நமது நாட்டில் இருக்கக்கூடிய பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத்தரம் இன்னும் மோசமாகவே இருக்கிறது என்கிறீர்கள். அப்படியானால் என்ன அர்த்தம்? ‘ஆபரேஷன் நன்றாகத்தான் செய்தார் டாக்டர். ஆனாலும் நோயாளி இறந்து போய்விட்டான்’ என்று சொல்வதைப்போல, இவர்கள் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுத்தான் செய்திருக்கிறர்கள். இருந்தாலும் கிராமப்புறங்களிலுள்ள விவசாய மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. நகர்ப்புறங்களிலுள்ள மக்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்று சொல்லுகிறார்கள்.” என்று நயம்பட விமர்சித்துள்ளார்.
மாநிலங்கள் மறுசீரமைப்பு பிரச்சனையில், அலுவலக மொழிகள் பிரச்சனைகளில், மொழிவழி தேசிய இனங்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தீர்க்கமாக முன்வைத்துள்ளார். மாநிலங்கள் மறுசீரமைப்பு பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவர்கள் சார்ந்த வர்க்கத்தைப் பொறுத்து மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள். ஆனால், கம்யூனிஸ்டுகளோ எந்த வர்க்கத்தில் இருந்து வந்திருந்தாலும், பாட்டாளி வர்க்கத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்களாக செயல்படுகிறார்கள். கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே நிலைப்பாடுதான். அது பாட்டாளிவர்க்கத்தின் நலன்தான்.
இதனால்தான் மாநிலங்கள் மறுசீரமைப்புப் பிரச்சனையில், “கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுமட்டும் தான் நியாயமான கொள்கையை கடைபிடிக்கிறது… ஆந்திர மாகாணப் பிரச்சனை வந்தபோது கம்யூனிஸ்ட்டு கட்சி ஒன்றுதான் ஒன்றுபட்டு இருந்தது. அந்த சமயத்தில் காங்கிரசுக்குள்ளேயே பிளவு இருந்தது. சென்னை நகர விஷயமாக கேள்வி எழுந்தபோது காங்கிரஸ் உறுப்பினர்களிடையேயும், பிரஜா சோஷியலிஸ்டு உறுப்பினர்களிடையேயும் கருத்துவேறுபாடும், பிளவும் இருந்தன. ஆனால் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களிடையே ஒன்றுபட்ட ஒரு நிர்ணயமான கொள்கை இருந்தது. பம்பாய் விஷயத்தில் குஜராத்தி, மகாராஷ்டிரர்களிடையே கருத்துபேதம் ஏற்பட்டு பல தகராறுகள் நடப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இது விஷயமாக கம்யூனிஸ்டுக் கட்சிதான் ஒரே கொள்கையை கடைப்பிடிக்கிறது….
மக்கள் சம்பந்தப்பட்டமட்டில், அவர்களுடைய வாழ்வு சம்பந்தப்பட்டமட்டில், அவர்கள் எந்தப் பகுதி மக்களாக இருந்தாலும், மனித உணர்ச்சியோடு, இந்த நாட்டிலுள்ள எந்தப் பகுதி மக்களும் பாதிக்கப்படாமலிருக்கக் கூடிய முறையில் இப்பிரச்சனைக்கு முடிவு காண வேண்டுமென்பது தான் கம்யூனிஸ்டுக் கட்சியின் கொள்கை.” என்று கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டையும், செயல்பாட்டையும் கம்பீரமாகப் பதிவுசெய்கிறார்.
“மனிதனால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது மொழி என்பதை மனதில் கொண்டு, எந்த மனிதனாக இருக்கட்டும்; தமிழ்நாட்டில் பிறந்தவனாக இருக்கட்டும்; பம்பாய், மலபாரில் பிறந்தவனாக இருக்கட்டும்; அல்லது இங்கிலாந்து, அமெரிக்கா தேசங்களில் பிறந்தவனாக இருக்கட்டும்; உலகத்தில் இருக்கக்கூடிய மனித சமுதாயத்தை வணங்குகிறோம்; அவர்களுக்கு நாம் மதிப்பு அளிக்கிறோம் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டுமேயல்லாது, இந்தப் பிரச்சனையில் விருப்பு, வெறுப்பு என்பதற்கு இடமில்லை என்பதை நான் முதலில் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று அலுவக மொழி கமிஷன் குறித்த விவாதத்தில் பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்களை ஒன்றிய, மாநில அரசுகள் எப்படி அணுக வேண்டும் என்பதைப் பதிவு செய்தார். மொழிகளை வளர்க்கும் அரசின் பொறுப்பு குறித்த அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவில் உள்ள பாரபட்சமான தன்மைகளை சுட்டிக்காட்டி இத்தகைய பிரிவுகள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை, சிக்கல்களை நாட்டில் உருவாக்குகின்றன என்பதை விளக்கி இருக்கிறார். “இந்தியைப் பரப்புவதில் மத்திய அரசுக்கு ஒரு தனிப் பொறுப்பையும் உருவாக்குகிறார்கள். அதே நேரத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மொழிகளைப் பரப்பும் பொறுப்பு அந்தந்தப் பகுதிகளில் உள்ள மாநில அரசுகளுக்கு உண்டு என்று சொன்னார்களா? இல்லை. …இப்படி அடிப்படை மனோபாவத்திலேயே பெரும் தவறை இழைத்துவிட்டு, இந்தியைப் பரப்பவேண்டுமென்று அவர்கள் கிளம்பினால் அதற்கு எதிர்ப்பு ஏற்படாமல் எப்படியிருக்க முடியும்?” என்று இந்திமொழி திணிப்புக்கு எதிராக மக்கள் மத்தியில் கிளம்பும் எதிர்ப்புணர்ச்சிக்கான காரணங்களை அழுத்தமாக முன்வைக்கிறார்.
வெறும் ஒரு சதவிகித மக்களுக்கான ஜனநாயகமாக இந்தியா வளர்ச்சியடையாமல், தங்களுடையை வேர்வையைச் சிந்தி உழைத்து வளங்களை உருவாக்கும் 90 சதவிகித மக்களுக்கான ஜனநாயகமாக வளர்ச்சி அடைவதற்கு, மக்கள் நல அரசாக இந்திய அரசாங்கமும், சென்னை மாகாண அரசாங்கமும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு கம்யூனிஸ்ட் லட்சியவாதியாக தோழர் பி.ஆர். சென்னை மாகாண சட்டமன்றத்தில் சிம்ம கர்ஜனை செய்திருக்கிறார். 1952-56 காலகட்டத்தில் அவர் ஆற்றிய உரைகளில் சொல்லப்பட்ட கருத்துகள் இன்றைக்கும் பொருந்துகின்றன. ஏனெனில் அன்றைக்கு ஆளும்வர்க்கத்தால் அடித்தளம் போடப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும், இன்றைக்கு பாஜக கார்ப்பரேட் கூட்டு ஆட்சி செய்யும் காலத்தில், விஸ்வரூப வளர்ச்சி பெற்று இந்திய மக்களை, தமிழ்நாட்டு மக்களை- உழைக்கும் மக்களை, விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை, மத்திய வர்க்க மக்களை கொடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் நாம் வரித்துக்கொண்ட ஜனநாயக, சோஷலிசக் கடமைகளை நிறைவேற்றிட தோழர் பி.ராமமூர்த்தியின் இந்த சட்டமன்றப் பேருரைகள் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழும்.
நூலின் முன்னுரையிலிருந்து
நூலின் விவரங்கள்:
நூல்: ஒரு வரலாற்றுப் பதிவு : பி.ராமமூர்த்தி சட்டமன்ற பேருரைகள் (1954 – 56) தொகுப்பு – 2
தொகுப்பு: ஆர்.வைகை, நர்மதா தேவி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.250
புத்தகம் வாங்க:
எழுதியவர் :
✍🏻 பெ. சண்முகம்
மாநில செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

