Oru Varthai Poem By Ekadhasi ஒருவார்த்தை கவிதை - ஏகாதசி

ஒருவார்த்தை கவிதை – ஏகாதசி




அந்தரத்தில் தூறல் கொத்தித் தின்னும் பறவை ஒத்தவும்
புழுமேய செத்து நாறும்
அழுகிய நாயாகவும் ஒரு வார்த்தை
தாழ்ப்பாள் கம்பியில்லாத கழிப்பறை
கதவு மற்றும்
பெட்டிகள் க்யூவில் நிற்பதான
ரயில்போல ஒரு வார்த்தை
வாஞ்சை மிகுந்த காலை வெயில் மாதிரியும்
பூப்போன்று விரிந்திரிருக்கும் மீன் முள்ளழகிலும் ஒரு வார்த்தை
சுவர் பற்றி ஏறும் உடும்பின் கால்களெனவும்
காம்ப்பஸால் வரைந்தது மாதிரி
வட்டமாகவும் ஒரு வார்த்தை
தொட்டவருக்கு தானமிட இலையில் மழைத்துளியை வைத்திருப்பதும்
பாசி மணி விற்கும் சிறுமியின் பழுப்புநிற கண்களும் ஒரு வார்த்தை
குடித்து மட்டையானவனின் அருகில் கிடக்கும் புரோட்டா பார்சலும்
தூக்கம் வராமல் நள்ளிரவைப் பிராண்டும் தோற்றுப்போன வேட்பாளரும் கூட ஒரு வார்த்தை
அகமும் புறமும் வார்த்தைகளால் வேட்டையாடப்பட்ட இந்த மகா பூமியில் தன் அன்றாடத்தை வார்த்தைகளற்றுக் கடக்க ஒளிகிறவனும் ஒரு வார்த்தை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *