துலிப் மலர்களின் அலுவலகம் – ஆஸ்பான் ஜோஷுவாஅலுவலகம்
துலிப் மலர்களால் நிறைகிறது
நீ அடியெடுத்து வருகையில் ..

முகப்பு அலுவலகம் ( front office )
மும்முரமாய் குளிர்கிறது
முகப் புன்னகை வீசி விட்டு செல்கிறாய் !

ஜன்னல் திரைகள்
ஆண்களாகி விடுகின்றன
உன் வெளிச்சப் பார்வை படுகிறதே .

சுணங்கும் வேலைகள்
சட் ,சட்டென முடிகின்றன
கோப்புகள்
பட ,படவென ஆடுகின்றன .
நீ புரட்டி ,பார்த்துவிட்டு
போயிருக்கிறாய் .

உனக்கு தெரியுமா ?
வண்ணத்துப் பூச்சிகள்
உனது இருக்கைக்கு அருகில் ..
நீ அமர்ந்த சூட்டில்
தேன்கொள்ள பார்த்து
அவை மலர்களாகி விடுகின்றன

மறு நாள் காலை
அலுவலகம் வருகிறாய்
நிறைந்த துலிப் மலர்கள்
அவ் வண்ணத்து பூச்சிகளே .

ஆஸ்பான் ஜோஷுவா