முனைவர் மு. செந்தில்குமார் (Prof. M.Senthilkumar) எழுதிய ஒத்த வீடு (Otha Veedu) - நூல் அறிமுகம் சிறுகதைகள்- Short Story - https://bookday.in/

ஒத்த வீடு (Otha Veedu) – நூல் அறிமுகம்

ஒத்த வீடு (Otha Veedu) – நூல் அறிமுகம்

‛ஒத்த வீடு’ என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் நூலிற்கும் தனக்கும் துணைப்பெயர்களைச் சூட்டியுள்ளார். ஒத்த வீடு (Otha Veedu) என்ற தலைப்பின் கீழே அடைப்புக்குறிக்குள் கம்பம் பள்ளத்தாக்குக் கதைகள் என்ற பெயரையும் முனைவர் மு. செந்தில்குமார் என்ற பெயரின் கீழே அடைப்புக்குறிக்குள் கம்பம் புதியவன் என்ற பெயரையும் இணைத்துக் கொண்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் இன வரைவியலாக விரிந்துள்ள இச்சிறுகதைத் தொகுப்பின் ஊடே அவ்வாழ்வியலை நியாயப்படுத்தவோ, உயர்த்திப்பிடிக்கவோ செய்யாமல் வாசகனின் பார்வையில் நின்று கதை மாந்தர்களை விவரித்துச் செல்கிறார். கம்பம் பள்ளத்தாக்கில் மொய் விருந்து, சடங்கு, இழவு, திருவிழா ஆகியவற்றை வட்டார வழக்கில் பதிவு செய்யும் இவரது எழுத்து கண் முன் கதை மாந்தர்களை நிஜமான உரையாடல்களோடு உலவவிட்டிருப்பது சிறப்பு. சில இடங்களில் அவசரகதியில் சில கதைகள் முடிக்கப்பட்டிருந்தாலும் பல கதைகளில் நாம் அன்றாடம் பார்த்த நிகழ்வுகளின் பின்னணியோடு பொருந்திப் போகிறது.

தீர்வு

சமூகத்தில் மொறைதலை என்ற பெயரில்  புரையோடிக் கிடக்கும் பல்வேறு கலாச்சாரச் சீர்கேடுகளில் பல பொதுத்தளங்களில் பேசப்படுவன. சில ஊரோடு ஒத்தது நமக்கும் என்ற ரீதியில் பெரிதாகக் கண்டும் காணாமல் கடந்து போய்விடக்கூடிய அநியாயங்களாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் இந்த மொய்க் கலாச்சாரம். தேவைக்கதிகமாய் மொய் எழுதி அதை வட்டியோடு சேர்த்து எதிர்பார்க்கும் கலாச்சாரத்திற்கு சில பல உயிர்கள் பழியாவது பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் கடந்து போகும் விஷயமாய் உள்ளது. அது இந்தக் கதையில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. மொக்கராசு, விருமு, செவனு என்ற பெயர்களும் மச்சான், மாப்ள, மாமு, மதினி என்ற ஒறவு மொறைகளும் கதை நிகழும் களத்தினைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. கோயில் திருவிழா, குடமுழுக்கு, கொடை – ஆகியவற்றுக்கான செலவுகளும் எளிய மனிதர்களுக்கு கைக்குள் அடங்காத செலவாகவே ஆகிவிடுகிறது.

முடிவு

ஒரு சாவு வீட்டில் நடக்கும் வழக்கமான விசயங்கள் கண் முன்னே விரிகின்றன. இயல்பான  உரையாடல்களில் கதை எதை நோக்கிப் போகிறது என்பதை உணர முடிகிறது. எல்லா சாதியிலும் இருக்கும் வழக்கம்னாலும் திருமணம் என்ற உறவை மதித்து தன் வாழ்க்கைத் துணையாக வந்த பெண்ணின் சொல்லுக்கு மதிப்பளிக்காத கணவனுக்காகத் தான் தன் பூவையும் பொட்டையும் வளையலையும் இழக்கத் தயாரில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் தனம் கிராமங்களிலிருந்து தடைகளை உடைத்து வரும் புதுமைப் பெண் தான்.

கனத்த மனசு

பெரிய பெரிய மால்களிலும் நட்சத்திர ஓட்டல்களிலும் விலையேதும் கேட்காமல் பேரம் பேசி வாங்கும் தன் புத்திசாலித்தனத்தையெல்லாம் புறந்தள்ளி பார்கோட் சொல்லுகிற விலையையும் கொடுத்து அதற்கு மேலும் சேவைக்கட்டணம் கொடுத்து அழும் நடுத்தர வர்க்கம் தெருவோர வியாபரிகளிடமும் தலைச்சுமை வியாபாரிகளிடமும் தமது  அதிபுத்திசாலித்தனம் காட்டி பேரம் பேசும் நிதர்சனம் முருகன் பழம் விற்கும் மூக்கம்மா பாட்டியிடம் நடத்தும் உரையாடலின் மூலம் இந்தக் கதையில் விவரிக்கப்படுகிறது.

சப்போட்டா பழத்தை ஆசையாகப் பார்க்கும் சிறுவனிடம் வாஞ்சையாய் பழத்தை அள்ளிக் கொடுக்கும் தோரணையும் அதையொட்டி நடக்கும் உரையாடலும் இவ்வாறான மனிதர்களின் இயல்பைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
வியாபாரத்தைத் தாண்டி இந்த வெள்ளந்தி மனிதர்களிடம் தெரியும் அன்பு தான் இந்த உயர் நடுத்தர மக்களுக்கு அவர்களை ஏமாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறதோ என்னவோ?  அடக்க விலை, நடைபாதைக் கடை நடத்துபவரின் உழைப்பு, காலச் செலவு, போக்குவரத்து செலவு எல்லாவற்றையும் இழிவாக மதிப்பிட்டு நடத்தும் இத்தகைய பேரங்களும் கூட ஒரு வகையில் exploitation தான்.

தொத்தன்

ஒரு பேருந்து நிலையம். ஐந்தாறு டீக்கடைகள், திடீரென புதிதாய் கையேந்தி வந்து நிற்கும் ஒரு வாட்டசாட்டமான ஆள் எனத் தொடங்கும் கதை டீ, பீடி, பான்பராக்கிற்காக சொன்ன வேலைகளைச் செய்யும் அவன் எங்கிருந்தோ வந்து அனைவருக்கும் குறைவான கூலியில் வேலை செய்யும் ஒரு ஆளாய் மாறிப்போகிறான். திடீரென இறந்து விடும் தொத்தனுக்கு யார் காரியம் செய்வது என்பதில் நிற்கும் தயக்கத்தில் தொடங்கும் முடிச்சு, நல்லது செய்யணும்னு நெனச்சா அதை உடனே செய்துடணும்னு சொல்ற செய்தியோட முடியுது.  தொத்தனுக்கு காரியம் செய்ய முன் வருகிற விருமாண்டி தயங்கி நின்ற நிமிடங்களும்  அந்த முடிவை நோக்கிய மனப்போராட்டத்தில் வெற்றி பெறும் தருணங்களுமே மனிதர்கள் தங்கள் அசுரத்தனத்திடமிருந்து மனிதத்தன்மையை  வெளிப்படுத்திக் கொள்வதற்கான மகத்தான நேரமாக அமைகிறது. அந்த நேரத்தில் மனது சொல்லும் சேதியைப் புறந்தள்ளுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒத்த வீடு (Otha Veedu)

ஒரு பெண் பூப்படையும் போது அதை விழாவாகக் கொண்டாடும் அதுவும் பெருஞ்சீர் செனத்தி சகிதமாகக் கொண்டாடும் மனோபாவத்தையும் அதைப் பார்க்கும் ஒத்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தாயும் மகளும் என்ன விதமான எண்ண ஓட்டத்தில் இருந்தார்கள் என்பதையும் விவரித்துச் செல்கிறது கதை. தாய் தன் பெண் பூப்படைந்து விட்டாளா? என்பது தெரியாமல் அதற்காக வருத்தப்பட்டும் ஒருவேளை அவள் அவ்வாறு பருவமடைந்தால் அந்த நேரத்தில் தன் மகளுக்கு சீர், செனத்தி செய்ய யாரும் இல்லையே என்று புழுங்கி அழும் மனநிலையையும் படம்பிடித்துக் காட்டுகிறது கதை. தான் பருவமெய்தியதையே சொல்லாமல் மறைத்த ஒரு மனமுதிர்ச்சி பெற்ற பெண் இந்தச் சூழலில் தன் தாய்க்கு அறிவுரை வழங்குவதாயும் அதனால் அவள் மனமாற்றம் அடைவதாயும் முடிகிறது கதை.

மாற்றம்

ஒரு தவறான தொழிலில் ஈடுபட்டு அதில் பிடிபட்டுத் தப்பி ஓடிவந்த மணமகன் முருகன் மண நாளன்றே சருகாயியைப் பிரிந்து காவல் நிலையத்திற்குப் போகும் சூழல். சருகாயி தன் கணவனை மாற்றிவிட முடியுமென்ற நம்பிக்கையோடு அந்த வாக்குறுதியை சிறையிலிருக்கும் முருகனிடம் பெற்றுவிட்டு சிறையிலிருந்து வெளிவந்தபின் வாழப்போகும் நல் வாழ்க்கைக்காகக் காத்திருக்கிறாள்.

அன்பு 

இந்தக் கதையில் திருமணம் முடிந்து 7 வருடமாகத் தன் மகனுக்குக் குழந்தை இல்லாத தாய் தனது மருமகளைக் குற்றம் சொல்லி அழுகிறாள். கணவனிடம் மனைவி தன்னிடம் தான் குறை இருப்பதாகவும் தான் கூறுவது போல கணவனை இன்னொரு பெண்ணை மணந்து கொள்ளுமாறும் கூறுகிறாள். கணவனோ மனைவியைப் புரிந்தவனாக இன்னொரு திருமணத்திற்கு சம்மதிக்காமல் தத்து எடுக்கலாம் என்ற யோசனையை முன் வைக்கிறான். இதற்கிடையில் தன் தாயினையும் கடிந்து கொண்டு தன் மனைவியையும் புரிந்து கொண்டு அன்பாய் தன் தாயிடம் தன் நிலைமையைப் புரிய வைக்கலாம் என்ற முடிவோடு கதை முடிகிறது. கிராமமோ, நகரமோ குழந்தை பிறப்பின்மைக்குப் பெண்களையே பலிகடாவாக்கும் பெண்களின் மனநிலை வில்லத்தனமாக விசுவரூபமெடுக்கிறது.

பயம்

இக்கதையும் வழக்கமாக கிராமத்தில் நடக்கும் ஒன்று தான். கிராமத்தில் காத்து, கருப்பு, பேயி, பிசாசுன்னு ஏராளமான கதைகள் உலவும். எதார்த்தமாக நிகழும் நிகழ்வுகளோடு இந்த அமானுஷ்யம் சார்ந்த பய உணர்வுகள் அனைவரது மண்டைக்குள்ளும் நன்கு ஏற்றி விடப்பட்டிருக்கும்.  ஒரு சரியான சூழ்நிலையில் எப்போதும் பயப்படாதவர் கூட தனது நம்பிக்கையை இழந்து சூழலின் தீவிரத்தில் பயத்துக்கு ஆளாகி விடுவது தவிர்க்க முடியாததாகி விடும். அப்படியான ஒரு உணர்வோட்டமே கதையாக மாறியிருக்கிறது.

தப்பு

இத்தலைப்பே இரு பொருள் தருவதாக அமைந்துள்ளது. ஒரு கிராமத்தில் நடக்கும் திருவிழா கண் முன்னே காட்சியாக விரிகிறது. தப்படிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் புனிதமாக இத்தொழிலை மதித்து விரதமிருக்கிறார்கள். ஒரு சூழலில் எப்போதும் போல் ஊர்க்காரர்களில் ஒருவன் துடுக்குத்தனமாக பேசி தப்படிக்கும் சூரியன் என்ற தொழிலாளியைக் கன்னத்தில் அறைந்து விடுகிறான். ஊர் நாட்டாண்மை சற்று நீளமாகப் பேசி நகர்மயமாதலில் தொழில் எவ்வாறு குலத்தோடு சார்ந்திரமால் தேவையைச் சார்ந்து அமைகிறது என்பதை விவரித்து நிலைமையை இயல்பாக்குவதாகக் கதை முடிகிறது.

பட்ட மரம்

முன்னாள் காதலர்களான புகழேந்தியையும் பாக்கியத்தையும் பாக்கியத்தின் மகனும் மகளும் மருமகளும் மருமகனும் இணைந்து பேசி சேர்ந்து வாழ எடுக்கும் முயற்சியே பட்ட மரம் கதை. புகழேந்தியிடமும் பாக்கியத்திடமும் பாக்கியத்தின் உறவுகள் உரையாடி அவர்களைச் சம்மதிக்கச் செய்யும் உரையாடல்களே கதையின் பலம்.

பார்ட்டி

பள்ளி வயதுப் பையன்கள் எவ்வாறு பார்ட்டி கலாச்சாரத்தால் குடிபோதைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற விவகாரம் பள்ளியில் சிறந்த தமிழாசிரியராக இருக்கும் குமார் ஐயா விடுமுறை நாள்களில் குடிகாரனாய் இருக்கும் நிகழ்வோடு முடிச்சுப் போடப்பட்டு முடிகிறது.

காலம் மாறுது

படிக்கிற காலத்தில் அண்ணன், அண்ணி, அம்மாவுடன் வாழ்ந்து வரும் இரவி தன்னையும் தன் அம்மாவையும் திட்டும் போதெல்லாம் கவலைப்படுகிறான். காதலிக்கும் பெண்ணைத் திருமணம் செய்து வாழ்வைத் தொடங்கும் போது அண்ணியைப் போலவே தனது மனைவியும் மாறுவதைப் பார்த்துக் கோபப்படுகிறான். பின்னர் மனைவியின் சொல்லுக்கு மறுபேச்சு பேசாதவனாக மாறும் மாறுதல் தான் கதை.

மனிதம்?

மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சனைகளுக்கு ஊடாக மனிதம் வெளிப்படும் நிகழ்வொன்று கதையில் குறிப்பிடப்படுகிறது. அரசியல்வாதிகள் எவ்வாறு தம் வாக்கு அரசியலுக்காக  நியாயமற்றுச் செயல்படுகின்றனர் என்பதை நேரடியாகச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது இக்கதை. இவ்வாறான பிரச்சனைகளில் மக்களின் உணர்வுகளுக்கெதிரான தவறான பொதுக்கருத்தொன்று உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படுகிறதோ என ஐயுறவும் வைக்கிறது.

வெளிச்சம்

அம்மா இறந்து போன பிறகு சித்தியின் கொடுமையை அனுபவிக்கும் இராகவனின் வேதனைகளுமாக விவரிக்கப்படுகிறது கதை.  தற்கொலைக்கு முயலும் போதெல்லாம் ஆள் முழுங்கிக் கிணற்றில் விழுந்து செத்துப் போன அம்மா பேச்சி சாகும் முன் சொன்ன வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு கல்வியின் துணை கொண்டு வாழ முடியும் என்ற நம்பிக்கையோடு தொண்டு நிறுவனமொன்றின் உதவியோடு கல்வியைத் தேடி வெளியூர் செல்வதாக முடிகிறது.

புதிய நம்பிக்கை

குடிகார அப்பா, கஷ்டப்படும் அம்மா, வறுமையின் கொடூரம் என்ற சூழலில் சுரேஷின் வகுப்பறை வித்தியாசமாய் நகர்கிறது. குழந்தைகளின் குடும்பப் பின்னணியையும் உளவியல் சிக்கல்களையும் புரிய முன்வராத பள்ளியில் ஜோதி டீச்சர் வழியாக புதிய நம்பிக்கை பிறக்கிறது. இவ்வாறே பொதுப் பள்ளிகளில் நிறைய குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து நல்ல வழிகாட்டுதல் கிடைக்காத நிலையில் நல்ல ஆசிரியர்களின் கனிவான கவனத்தால்  மலர்கிறார்கள்.

பாசம் 

தங்கள் சுய தேவைகளுக்காக தாயைப் பயன்படுத்திக் கொள்ளும் மகன்கள், மருமகள்களுக்கு மத்தியில் பேரக்குழந்தைகளின் தூய்மையான பாசம் வெற்றி பெறுவதைக் காட்டும் கதை.  சமகாலத்தில் கிராமம் விட்டு நகர்ப்புறங்களுக்கு வாழச்சென்றுள்ள இளைய தலைமுறையினரின் வாழ்க்கையில் நடக்கும் ஊசலாட்டத்தைப் பதிவு செய்கிறது.

வினை 

ஒவ்வொரு கிராமத்திலும் பணத்திமிரிலும் காமத்திமிரிலும் ஆடி ஆடி அலுத்துப் போனவர்களின் வாழ்வு இருக்கத்தான் செய்கிறது. வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு பல விதமான யுக்திகளைக் கையாண்டு தன் சபலத்தைத் தீர்த்துக் கொண்ட ஆசாமிகள் முந்தைய தலைமுறைகளில் ஏராளம். ஆனாலும் பேயாண்டியின் மரணப்படுக்கையில் சிந்தும் கண்ணீர் ஒரு போதும் அவனின் பாவத்தைக் கழுவி விடாது. படைப்பாளி, வாழ்ந்த மனிதரின் கதையை ஒரு வேளை பதிவு செய்திருக்கலாம். ஆனால், இவ்வாறான நபர்களுக்கு இந்த பாவ மன்னிப்பு வகை முடிவு சரியானதாய் இல்லை.

ஒரு நிமிடம் 

கம்பம் பள்ளத்தாக்கின் நொடி நேர முரட்டு வீரம் இங்கு அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் ஒரு வன்முறையாய் மாறியிருக்கிறது. நேசமும் பாசமுமாய் இருந்த அண்ணன் தம்பியினரிடையே ஒருவரின் மனைவியின் கெடுமதியால் சொத்துப் பிரச்சனையில் தொடங்கும் கைலப்பு இரட்டைக் கொலையாக மாறிவிடுவதைப் பதிவு செய்கிறது இச்சிறுகதை.  மரபும் சூழலும் கலந்து உணர்வுகளின் மேலோங்கிய ஆதிக்கத்தால் எளிதில் மதி இழக்கும் மனிதர்களின் வாழ்வியல் கண் முன் காட்சியாய் விரிகிறது.

நூல் பற்றிய விவரங்கள்:

தலைப்பு: ஒத்த வீடு (கம்பம் பள்ளத்தாக்குக் கதைகள்)
ஆசிரியர்: முனைவர் மு. செந்தில்குமார் (கம்பம் புதியவன்)
பதிப்பகம்: வேரல் புக்ஸ்
முதற்பதிப்பு:சூலை 2024
விலை: ரூ.130/-
மின்னஞ்சல் முகவரி: [email protected]
அலைபேசி எண்:957764322

நூலின் அறிமுகம் எழுதியவர் :

 

நா. ரெ. மகாலிங்கம்

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *